அந்த செருப்பு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7874
ஒரு மிருகத்தின் மனதைக்கூட தொந்தரவு தருவதில் அவனுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். யார் என்ன கூறினாலும், ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்தி, தலையை ஆட்டியவாறு "உண்மைதான்' என்று பதில் கூறுவான். எவ்வளவு கோபத்தை வரவழைக்கக் கூடிய விஷயங்களைச் சந்திக்க நேரிட்டாலும், ஒரு கடுமை நிறைந்த மோசமான வார்த்தை அந்த எளிய மனம் கொண்ட மனிதனின் முகத்திலிருந்து வெளிவராது. பிறருக்காக மட்டுமே அவன் பிறந்தவன் என்று அந்த நல்ல மனிதனின் உதவும் குணத்தைப் பார்க்கும்போது தோன்றும். தன்னுடைய நண்பர்களுக்குத் தலைவலியைத் தாண்டிய காய்ச்சல் உண்டானால் போதும்... அப்துல்லா அன்று அந்த மனிதனை அருகில் அமர்ந்து கவனித்துப் பார்த்துக்கொள்வதற்காக அலுவலகத்தில் விடுமுறை எடுத்துவிடுவான். இறுதியில் தனக்கு ஏதாவது உடல் நலக்கேடு வரும்போது, விடுமுறை கிடைப்பதற்கு வழியில்லாமல் இருமிக்கொண்டும் முனகிக்கொண்டும் மூக்கைச் சிந்திக்கொண்டும் வேலைக்குச் செல்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். சம்பளமாகக் கிடைத்த பணம் முழுவதையும் செலவழித்துவிட்டு, இப்போது கையில் காசு எதுவும் இல்லாமல் முக்கிக்கொண்டும் முனகிக்கொண்டும் நடந்து செல்வதைப் பார்க்கலாம். இடையில் கண்களில் படும் நண்பர்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்து தேநீர் க்ளப்பிற்கு அழைத்துக்கொண்டு சென்று பெரிய ஒரு உபசரிப்பு நடத்தவில்லையென்றால் அப்துல்லாவிற்கு ஒரு மன அமைதியும் உண்டாகாது. "அப்துல்லாவின் மனநிலை' என்று கூறினால், எங்களுடைய லாட்ஜின் மொழியில் "அந்த அளவிற்கு அதிகமான உதவும் மனம்' என்று அர்த்தம். நாங்கள் மிகவும் அதிகமாக அன்பு வைத்திருக்கும் ஒரு மனிதன் அப்துல்லா என்ற விஷயத்தை பேச்சுக்கு மத்தியில் தனிப்பட்ட முறையில் கூறிக்கொள்கிறேன்... நாம், அனுபவத்தின் காப்பி சொற்பொழிவுக்குத் திரும்பிச் செல்வோம். அவர் தொடர்ந்து சொன்னார்: “என்ன சொன்னேன்? அழகான இளம் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய கணவன்மார்கள் அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவர் களாக இருப்பார்கள் என்பதை... உண்மைதானே? முன்பு நாம் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், வகுப்பறையின் தெற்குப் பகுதியில் போடப்பட்டிருந்த அந்த ஒற்றை பெஞ்சில் உட்கார்ந்திருந்த அந்த அழகான இளம் பெண் இருந்தாளே? அம்புஜம்... அவளுக்கு எப்படிப்பட்ட ஆணவம் இருந்தது! பஞ்சவர்ணக்கிளி என்று அவளுக்கு நாங்கள் செல்லப் பெயர் வைத்திருந்தோம். அவள் எப்படிப்பட்ட அழகான சாகசங்களையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிந்தாள். எந்த அளவிற்கு இளமையான சிந்தனைகளால் களிமண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தாள். இளம் உலகு முழுவதையும் தாண்டி செல்லக்கூடிய பார்வைகளையும் கழுத்து வெட்டலையும், மேலும் பல சேட்டைகளையும் வெளிப்படுத்தி அவள் எத்தனையெத்தனை காதல் செயல்களுக்கு நூல் திரித்துக் கொண்டிருந்தாள்? சமீபத்தில் ஒருநாள் அவளும் அவளுடைய கணவனும் புகைவண்டி நிலையத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த கணவன் பார்க்கப்பட வேண்டிய ஒரு பிணம்தான். ஒட்டிப் போன கன்னமும், வழுக்கைத் தலையும், நீண்டு வளைந்து காணப்பட்ட மூக்கும் உள்ள ஒரு மரங்கொத்தி அந்த பஞ்சவர்ணக் கிளிக்குக் கிடைத்திருந்தான். ஆனால், அவளுக்கு அந்த உறவில் எந்தவொரு அதிருப்தியும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? அந்தக் கதை இருக்கட்டும். முன்பு கல்லூரியில் எல்லாரின் கண்களிலும் தாண்டவமாடிக் கொண்டிருந்த அந்த பேரழகன் பாஸ்கரமேனன் இருக்கிறானே! அந்த விளையாட்டு வீரன்- அவனுடைய மனைவியைப் பாருங்கள். ஒரு பன்றியேதான். ஆனால், அந்த உறவில் அவன் எந்தவொரு குறைபாட்டையும் காணவில்லை. அதன் ரகசியம் என்னவாக இருக்கும்? பணத்திற்காக ஆசைப் பட்டோ, மனைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் மூலம் நல்ல ஒரு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோ, உறவினர்களின் வற்புறுத்தலாலோ, வயதான தாய் முன்பு செய்த ஒரு சபதத்தை நிறைவேற்றுவதற்காகவோ... பாவம்... தன்னைத்தானே இந்த திருமண வாழ்க்கைக்குள் இறக்கிக் கொண்டு விட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூளை, இதயம், கண்கள் ஆகியவற்றின் மதிப்பிற்குரிய செயல்பாடுகளைத் தாறுமாறாக ஆக்கக்கூடிய அந்த தனித்துவ குணம் கொண்ட நரம்பு நோய் இருக்கிறதே! காதல்- அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.''
சந்தோஷமாக ஒரு குளியல் முடித்துவிட்டு, கழுத்திலும் முகத்திலும் பவுடர் பூசிக்கொண்டு, சலவை செய்து இஸ்திரி போட்டு மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வெள்ளை நிற சில்க் சட்டையை அணிந்து, கழுத்திற்குப் பின்னால் இமயமலையின் சிகரத்தைப்போல சட்டையின் காலர் பகுதியை உயர்த்தி வைத்துக் கொண்டு, ஒரு சிகரெட்டை வாயில் வைத்துப் புகைத்தவாறு "ப்ரின்ஸ் சார்மிங்' சுகுமாரன் அங்கு காட்சியளித்தான். அவன் ஈ.சி சேரில் இருந்த தூசியை கவனமாகத் துடைத்து, மெதுவாக அதில் போய் உட்கார்ந்து, மெல்ல தன்னுடைய மார்புப் பகுதியைத் தடவியவாறு, சன்னமாக இருமிக்கொண்டு முகத்தைச் சுளித்துக்கொண்டு யாரிடம் என்று இல்லாமல் சொன்னான்: “நல்ல சுகம் இல்லை.''
குளியலறைக்குள்ளிருந்து உரத்த குரலில் ஒரு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது. மாதவன் நாயர் குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதற்கான அடையாளம் அது. குளிக்கும்போது தான் கட்டாயம் பாடியே தீர்வது என்ற கொள்கையை உடையவன் அவன்.
“பிறகு... நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?'' அனுபவம் இன்னொரு அத்தியாயத்தைத் திறந்தார்.
“மலையாள பண்டிதர்களின் பெண் பிள்ளைகள் பொதுவாகவே மிகுந்த அழகுடையவர்களாக இருப்பார்கள்.''
அனுபவத்தின் இந்த கண்டுபிடிப்பைப் பற்றி நாங்கள் தீவிரமாக விவாதிக்க முயற்சிக்கவில்லையென்றாலும், அந்த விஷயம் எங்களுடைய சில பழைய மலையாள பண்டிதர்களின் பெண் பிள்ளைகளைப் பற்றி இனிமையாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு வழி வகுத்தது. அப்போது எங்களுடைய மெஸ் மேனேஜர் சிவசங்கரப் பணிக்கர், “ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று'' என்றொரு கருத்தை உரத்த குரலில் வெளியிட்டார். இந்த சிவசங்கரப் பணிக்கர் பெரிய ஒரு பிடிவாதம் பிடித்த மனிதர். குணத்தில் அப்துல்லாவிற்கு நேர் எதிரானவர். யார் என்ன கருத்தைக் கூறினாலும், உடனடியாக அதற்கு எதிரான ஒரு கருத்தைப் பாய்ந்து கூறாமல் இருந்தால் அவளுடைய நாடி நரம்புகளில் ஒரு நடுக்கம் உணடாகி விடும். சிறிய முகம், பெரிய வயிறு- இதுதான் சிவசங்கரப் பணிக்கர். பணிக்கர் அனுபவத்தின் முகத்தையே கண்களை உருட்டிக்கொண்டு பார்த்தவாறு சொன்னார்: “என்னென்ன காரியங்களையெல்லாம் மனம் போனபடி நீ இங்கே சொல்லிக்கொண்டு இருக்கேடா? நீ சொன்னதை ஒத்துக்கொள்றதுக்கு உனக்கு முட்டாள்தனமான நண்பர்களும் கிடைச்சிட்டாங்களே? ஆனால், எனக்கு முன்னால் அவை எதுவும் செல்லுபடியாகும்னு நினைக்காதே, தெரியுதா?''
“அனுபவங்களின் மூலம் அப்படித்தான் பார்க்கிறேன்.'' அனுபவம் உறுதியான குரலில் கூறினார்.
“அனுபவம் தேங்காய் புண்ணாக்கு... கடைசியில் தூக்குல தொங்கி சாகுறதுதான் உன்னோட அனுபவமாக இருக்கும். எல்லாருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று கூற முடியுமா என்ன?''