அந்த செருப்பு - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7874
அவ்வளவுதான்.'' இதைக் கூறிவிட்டு அசாதாரணமாக எதுவுமே நடக்காததைப்போல அவர் பிளேடை கண்ணாடிக் குவளையில் உரசி கூர்மையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்.
சாயங்கால நேரம் ஆனதும் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் நடப்பதற்காகச் சென்றோம். இரவில் வேலை இருந்ததால் ஏழு மணிக்கு மாதவன் நாயர் நேராக அலுவலகத்திற்குச் சென்றான். அப்துல்லா திரைப்படம் பார்ப்பதற்காகச் சென்றிருந்ததால், இரவில் மிகவும் தாமதித்துதான் திரும்பி வந்தான். அதற்குள் நாங்கள் எல்லாரும் சாப்பிட்டு முடித்து உறங்கி விட்டிருந்தோம்.
மறுநாள் காலையில் கீழே பெரிய அளவில் ஒரு ஆரவாரம் உண்டாகிக் கொண்டிருப்பதைக் காதில் வாங்கிக் கொண்டே நான் கண் விழித்தேன். சென்று பார்த்தபோது அப்துல்லாவிற்கும் அனுபவத்திற்குமிடையே சண்டை நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “நான் விட மாட்டேன். நீ செருப்புக்கான விலையைத் தந்தே ஆகணும். உன் வார்த்தைகளை நம்பித்தான் நான் சோதனை செய்து பார்த்தேன்'' என்று கூறிக்கொண்டே அப்துல்லா அனுபவத்தின் சட்டையைப் பிடித்துக்கொண்டிருந்தான்.
விசாரித்துப் பார்த்தபோது தெரிந்துகொண்ட விஷயம் இதுதான். அப்துல்லா திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பி வந்தபோது நான்கரை ரூபாய் விலை இருக்கக் கூடிய நல்ல ஒரு புதிய ஜோடி செருப்பை வாங்கியிருக்கிறான். நாய்களின் மன அறிவியலைப் பற்றி அனுபவம் கூறியது தலைக்குள் குடைந்து கொண்டிருந்ததால், அதைச் சற்று சோதனை செய்து பார்ப்பதற்காக அப்துல்லா அந்த செருப்பை வாசலுக்கு வெளியே ஒவ்வொன்றும் முரண்பாடாக இருக்கும்படி வைத்திருக்கிறான். காலையில் சென்று பார்த்தபோது அந்தச் செருப்பு அங்கு இல்லை. தேடிப் பார்த்தபோது எந்தவொரு இடத்திலும் அவற்றைப் பார்க்க முடியவில்லை. தன்னுடைய புதிய செருப்பை நாய் கடித்து எடுத்துக்கொண்டு போய்விட்டதென்றும், அதற்கு மூல காரணமாக இருப்பவர் அனுபவம் என்றும், அதனால் செருப்பிற்கான விலையை அனுபவம் தந்தாக வேண்டுமென்றும் அப்துல்லா கூறிக்கொண்டிருந்தான். செருப்பை எடுத்துக்கொண்டு சென்றது நாய்தான் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், தன்னுடைய நாய்களைப் பற்றிய அறிவியல் படிப்பில் தவறு உண்டாவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அனுபவமும் தீவிரமாக வாதம் செய்தார்.
“உன்னிடம் ஒரு செருப்பு இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நாங்கள் யாரும் பார்க்கவில்லையே!'' பணிக்கர் அனுபவத்தின் பக்கம் சேர்ந்து கொண்டு ஒரு புதிய வாதத்தைக் கொண்டு வந்தார்.
கோபமே படாத அப்துல்லாவிற்குக்கூட வெறி வந்துவிட்டது. “நீ அந்த இடத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதும்.'' அவன் பணிக்கரைப் பார்த்து கோபத்துடன் சொன்னான்.
டாக்டர் கோயபெல்ஸ் மோட்டார் சைக்கிளை "ஸ்டார்ட்' செய்யும்போது உண்டாகக் கூடிய ஒரு சிரிப்பை மேலும் ஒரு முறை ஒலிக்கச் செய்து கொண்டே சொன்னார்: “டேய் முட்டாள்... இந்த மனிதனின் வார்த்தைகளை நம்பி உன்னைத் தவிர யாராவது நல்ல ஒரு செருப்பை இழப்பார்களா? இப்போது உனக்கு ஒரு செருப்பு தான் போயிருக்கு என்று மனதை சமாதானப்படுத்திக் கொள். இனி... இரண்டாவது தியரி... அந்த நரி விளையாட்டு வித்தை- அதைச் சோதித்துப் பார்க்க முயற்சித்திருந்தால், உன்னோட இரண்டு கால்களுமே போயிருக்கும்.''
அந்த நேரத்தில் ஒரு செருப்பின் அழுகைச் சத்தம் படிக்கு அருகில் கேட்டது. பார்த்தபோது, மாதவன் நாயர் இரவு வேலை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறான். எங்கள் எல்லாருடைய பார்வைகளும் அவனுடைய கால் பக்கம் திரும்பின. சாதாரணமாக மாதவன் நாயர் செருப்பு அணிவதில்லை. அவனுடைய காலில் ஒரு புதிய ஜோடி செருப்பு...
மாதவன் நாயர் மிடுக்காக வாசல் படிக்கு வெளியே செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு, உள்ளே சென்றான். அப்துல்லா குனிந்து நின்று அந்த செருப்பையே கூர்ந்து பார்த்தான். தொடர்ந்து அவனுடைய முகத்தில் வெற்றி பெற்றுவிட்டதற்கு அடையாளமாக ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது. “நண்பர்களே... இதோ என்னுடைய செருப்பு!''
அதைக் கேட்டு மாதவன் நாயர் வாசல் பக்கம் வந்தான்: “நீ என்ன சொன்னே? உன்னோட செருப்பா?''
“ஆமாம்... என்னோட காணாமல் போன செருப்பு. நான் நேற்று இரவு நான்கரை ரூபாய் கொடுத்து வாங்கிய புதிய மாடல் செருப்பு. அடியில் ஒற்றைத் தோல் உள்ள ஹை க்ளாஸ் செருப்பு.'' அப்துல்லா ஒரு பாட்டைப் பாடுவதைப்போல அதைச் சொன்னான்.
மாதவன் நாயர் அப்துல்லாவையே வெறித்துப் பார்த்தான். “இது எப்போ ஆரம்பமானது?''
“எது?''
“உன்னோட பைத்தியக்காரத்தனம்.''
“பைத்தியமா? நண்பனே, விளையாட்டெல்லாம் இருக்கட்டும். சொல்லு... இது எங்கேயிருந்து கிடைச்சது?'
மாதவன் நாயருக்கு கோபம் வந்துவிட்டது. “எங்கேயிருந்து கிடைச்சதா? நான் மூணு ரூபாய் கொடுத்து வாங்கினேன்.''
அப்துல்லாவின் முகம் கறுத்துவிட்டது. “சுத்த பொய். கடையில் இந்த செருப்பு ஒண்ணு மட்டுமே எஞ்சியிருந்தது. அதை நான் வாங்கிவிட்டேன். நண்பர்களே, நான் சத்தியம் பண்ணிக் கூறுகிறேன். இது என்னுடைய செருப்பு. இதோ பாருங்க... இந்த சிவப்பு பட்டைக்கு அருகில் சிலுவை அடையாளத்தைப் போன்ற ஒன்றும், அடுத்தடுத்து இரண்டு பெரிய கருப்பு நிறப் புள்ளிகளும் இருக்கின்றன. செருப்பை வாங்கி சோதித்துப் பார்த்தபோது விசேஷமாக நான் பார்த்த அடையாளம் இவை.''
மாதவன் நாயரின் முகம் ஒரு மாதிரி ஆகியது. அவன் கோபமும் கிண்டலும் கலந்த வெறித்த ஒரு பார்வையை அப்துல்லாவை நோக்கி செலுத்தினான்: “ஏய்... மிஸ்டர்... நீ என்னை அவமானப்படுத்துகிறாய். கவனமா பேசணும். தெரியுதா? உன் செருப்பை அணிந்து கொண்டு நடக்குற ஒரு பிச்சைக்காரப் பயல் நான் இல்லை.''
அப்துல்லாவும் விடவில்லை: “உன்னை அவமானப்படுத்த வில்லை. நான் என்னுடைய செருப்புக்கு உரிமை கோருகிறேன். அவ்வளவுதான்.''
“நான் நேற்று இரவு மூன்று ரூபாய் கொடுத்து வாங்கிய செருப்புக்கு உரிமை கோருவதற்கு நீ யார்?''
அவர்கள் இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். யாருடைய பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை முடிவு செய்ய எங்கள் யாராலும் முடியவில்லை. அப்துல்லாவின் செருப்பை அணிந்துகொண்டு நடக்கிற அளவிற்கு மரியாதைக் குறைவு உள்ள ஒரு மனிதன் அல்ல மாதவன் நாயர். சரியான ஆதாரமில்லாமல் ஒரு நல்ல நண்பனை செருப்பைத் திருடியதாக குற்றம் சுமத்தும் அளவிற்கு தைரியம் கொண்ட ஒரு முரட்டுத்தனமான மனிதன் அல்ல அப்துல்லா.
சுகுமாரன் தன்னுடைய சவரக்கத்தியின் முனையைப் போல மெலிதாக இருந்த மீசையைத் தடவிக்கொண்டே அப்துல்லாவிடம் சொன்னான்: “டேய், அவன் உன்னுடைய செருப்பை அணிந்து கொண்டு இங்கே தைரியமாக நுழைந்து வருவானா? அந்த அளவிற்கு மரியாதை தெரியாத மனிதனா மாதவன் நாயர்?''