அந்த செருப்பு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7874
“உனக்கு ஏன் இந்த அளவிற்கு கோபம் வர வேண்டும்? நாங்கள் உலக விஷயங்களைப் பற்றி அல்லவா பேசிக்கொண்டு இருக்கி றோம்?'' அனுபவம் மிடுக்கான குரலில் தலையை ஆட்டிக் கொண்டே கூறினார்.
“மலையாள பண்டிதர்களுக்கு உலகத்தில் இடம் இருக்கிறதா என்ன?'' பணிக்கர் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.
உஸ்மான் இந்த வாக்குவாதம் எதையும் கவனிக்காமல், கீழே போடப்பட்டிருந்த புல்லாலான பாயில் உட்கார்ந்து கொண்டு பச்சை நிறத்தில் இருந்த தாள்களைக் கொண்டு தைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தில், ஏதோ ஒரு நாட்டின் பட்ஜெட்டைத் தயார்' பண்ணிக் கொண்டிருந்தான். ஒரே சிந்தனையுடன் என்னவோ எழுதிக் கொண்டிருந்தான். அந்தச் சூழ்நிலையில் "டாக்டர் கோயபெல்ஸ்' என்ற பட்டப் பெயருடன் குறிப்பிடப்படும் சங்கரநாராயண மேனன் தனக்கு மிகவும் விருப்பமான ப்ளட்விட்டா டானிக் புட்டியுடன் அங்கு வந்தார். அனுபவத்திற்கும் பணிக்கருக்கு மிடையே நடந்துகொண்டிருக்கும் ஏசல் கலந்த உரையாடலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த டாக்டர் கோயபெல்ஸ் மோட்டார் சைக்கிளை "ஸ்டார்ட்' பண்ணுகிற குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். தொடர்ந்து ப்ளட்விட்டா புட்டியை மேஜைமீது வைத்துவிட்டு காலியாகக் கிடந்த கை இல்லாத நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
அப்துல்லாவின் மடியில் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பூனை ப்ளட்விட்டா புட்டியையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தது. பிறகு அந்த சிறிய பூனை எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், அந்த புட்டியை நோக்கி ஒரு பாய்ச்சல்... புட்டி கீழே விழுந்து அந்த திரவ ரத்தம் கொஞ்சம் மேஜைமீதும் கொஞ்சம் கீழே கணக்கு போட்டுக்கொண்டிருந்த உஸ்மானின் பச்சைத் தாள்களிலும், கொஞ்சம் சுகுமாரனின் சட்டை காலரிலும் தெறித்து விழுந்தது. கோயபெல்ஸ் முதலில் பூனையையும், பிறகு அதன் சொந்தக்காரனான அப்துல்லாவையும் கண்களை உருட்டி, மூக்கைச் சுளித்துக்கொண்டு பயமுறுத்துவதைப்போல வெறித்துப் பார்த்தார். உஸ்மான் கோபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தன்னுடைய மடியிலிருந்த பாக்கு அளவில் இருந்த ஒரு பொடி டப்பியை எடுத்து, சிறிது பொடியை உள்ளங்கையில் தட்டி, அதில் சிறிதளவை எடுத்து மூக்கிற்குள் நுழைந்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். என்ன செய்வது என்று தெரியாமல் சுகுமாரன் அதே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருந் தான். அப்துல்லா பாவம், செயலில் தீவிரமாக ஈடுபடுபவனைப்போல, பூனைக்குட்டியைத் தூக்கி கை இடுக்கில் வைத்துக்கொண்டு, ப்ளட்விட்டா புட்டியை நேராக நிற்கச் செய்து, சுகுமாரனின் கழுத்தையும் உஸ்மானின் பச்சை நிறத் தாளையும் சற்று வருடினான்.
சிறிது நேரம் அமைதி நிலவியது. மாதவன் நாயர் குளித்து முடித்து வந்தான். அப்புவின் காப்பியும் கொழுக்கட்டையும் வந்து சேர்ந்தன. நாங்கள் எல்லாரும் காப்பியைக் குடிப்பதற்காக உட்கார்ந்தோம்.
காப்பி பருகுவது முடிந்தது. மாதவன் நாயர் ஒரு புல்லாலான பாயை விரித்துப் போட்டு தூங்குவதற்காகப் படுத்தான். ஒரு நிமிடம் தாண்டுவதற்கு முன்பே அவன் குறட்டை விட ஆரம்பித்தான்.
அனுபவத்திற்குப் பேசுவதற்கு ஒரு புதிய விஷயம் கிடைத்தது. பூனைகளின் பழக்க வழக்கங்கள். அந்த விஷயத்திலிருந்து அவர் படிப்படியாக மாறி மாறி நாய்களின் மன அறிவியலுக்குள் நுழைந்தார். அனுபவம் பேசினார். “சந்தேகம் வரும் வண்ணம் எதையாவது பார்த்தால் நாய்களின் பழக்கம் முற்றிலுமாக மாறிவிடும். சாதாரணமாக- தோல் செருப்புகளை எங்காவது வைத்தால், கடித்துக் கிழிக்கக் கூடிய ஒரு பழக்கம் நாய்களிடம் இருக்கிறது. ஆனால், ஒரு ஜோடி செருப்பை சாதாரணமாக வைப்பதைப்போல் இல்லாமல் ஒன்றோடொன்று தலைகீழாக இருப்பதைப்போல வைத்தால், அதற்குப் பிறகு நாய்கள் அந்தச் செருப்புகளைத் தொடக்கூட செய்யாது.'' அவர் தொடர்ந்து சொன்னார்: “நள்ளிரவு நேரத்தில் எங்காவது ஒரு கடிக்கக் கூடிய நாயைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய கையில் ஒரு சிறு சுள்ளிக் கொம்புகூட இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?''
எங்களுடைய ஆர்வத்திற்குக் கூர்மை தீட்டுவதற்காக அனுபவம் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.
“என்ன செய்யணும்?'' அப்துல்லா பொறுமையை இழந்து கேட்டான்.
“அதுவா? கூறுகிறேன். உங்களுடைய தற்காப்புக்கு நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுதான். ஆடையை அவிழ்த்து தூரத்தில் வீசி எறிந்துவிட்டு, முடிந்த வரையில் நிர்வாண கோலத்தில் இருந்து கொண்டு, உடலை முன்னோக்கி குனிய வைத்துக்கொண்டு, முஷ்டியை சுருட்டி வைத்துக்கொண்டு கைகளை முன்னோக்கி நீட்டி, மொஹரம் காலத்தில் நரிகள் விளையாடுவதைப்போல தாளத்திற்கு ஏற்றபடி கால்களாலும் கைகளாலும் சில சேட்டை களைச் செய்து, நாயை நோக்கி நடந்து சென்றால், எப்படிப்பட்ட நரியைப் போன்ற நாயும் பின்னால் திரும்பி ஓடாமல் இருக்காது. அதுதான் என்னுடைய அனுபவம்.'' இப்படி நாயின் மன விஞ்ஞானத்தைப் பற்றிய சில புதிய தகவல்களைக் கூறிய பிறகு, அனுபவம் மனிதர்களின் அடி மனதின் செயல்களைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.
அந்த விஷயத்தையொட்டி ஒரு எளிய தகவலைக் கூறிய பிறகு, அவர் தொடர்ந்து சொன்னார்: “நாம் உறங்கும்போதுகூட நம்முடைய உள்மனம் அதாவது நன்க்ஷ ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ம்ண்ய்க் செயல்பட்டுக் கொண்டிருக்கும். நாம் நன்கு பழக்கத்திற்குள்ளாகி நம்முடைய ஒரு பகுதியாக மாறி விட்டிருக்கும் எண்ணங்களும் செயல்களும் நமக்கே தெரியாமல் திரும்பத் திரும்ப செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலம் ஆயுதப் பயிற்சி பெற்றுப் பழகிய ஒரு வீரன் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏதாவதொரு பொருளை அவனை நோக்கி எறிந்தால், உடனடியாக அவனுடைய கைகள் அசையவோ அந்தப் பொருளைத் தடுத்து வீசி எறியவோ செய்யும்.''
கோயபெல்ஸ் சவரம் செய்வதற்காக ஒரு கண்ணாடிக் குவளையில் நீருடன் வந்திருந்தார். அனுபவத்தின் உள் மனதின் செயல்பாடுகளைப் பற்றிய சொற்பொழிவைப் பற்றி ஏதோ ஆழமாகச் சிந்தித்துக் கொண்டே அவர் குவளையில் இருந்த குளிர்ந்த நீர் முழுவதையும் கீழே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த மாதவன் நாயரின் மார்பின்மீது ஊற்றிவிட்டார். மாதவன் நாயர் திடுக்கிட்டு வேகமாக எழுந்து எதுவும் புரியாமல் நான்கு பக்கங்களி லும் பார்த்தவாறு விழித்துக் கொண்டிருந்தான். கோயபெல்ஸின் அந்த செயலைப் பார்த்து நாங்களும் ஆச்சரியப்பட்டோம். “நீ என்ன வேலைடா செஞ்சே?'' சிவசங்கரப் பணிக்கர் உரத்த குரலில் கத்தினார். கோயபெல்ஸ் முகத்தைச் சுளித்துக்கொண்ட சொன்னார். “நான் உள் மனதின் செயல்பாட்டைப் பற்றி ஒரு சோதனை செய்து பார்த்தேன். அனுபவத்தின் தியரியின்படி நீர் மேலே பட்டால், இந்த மனிதன் பாட்டு பாடத் தொடங்குவானோ என்பதைச் சோதித்துப் பார்த்தேன்.