பூவன் பழம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7171
"பூவன் பழமா? என்ன பூவன் பழம்?'' அவனுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை. அவன் கேட்டான்:
"நீ என்ன சொல்ற?''
"ரெண்டு பூவன் பழம் வாங்கிட்டு வர்றீங்களா?''
ப்பூ... இதுதானா விஷயம்? பூவன் பழம் வாங்கிக் கொண்டு வருவது பெரிய விஷயமா என்ன? போன கையோடு வாங்கிவிட்டால் போகிறது. ஆற்றங்கரையில் உள்ள கடையில் பூவன் பழம் இருக்கிறது. ஒருவேளை அங்கே இல்லாவிட்டால், படகில் ஏறி அக்கரைக்குப்போய் இரண்டு ஃபர்லாங் தூரம் நடந்தால் அங்கே ஒரு சிறிய கடை வீதி இருக்கிறது. அங்கே வாங்கலாம். அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:
"ஒரு குலை பூவன் பழம் கொண்டு வர்றேன், சரியா?''
"எனக்கு ரெண்டே ரெண்டு பழம் போதும்.'' ஜமீலா பீபி சொன்னாள்:
"தேவையில்லாம கண்ட இடத்துக்கெல்லாம் அலைஞ்சுக்கிட்டு இருக்கக்கூடாது. சீக்கிரம் இங்கே திரும்பி வரணும். சாயங்காலம் ஆகுறதுக்கு முன்னாடி வந்திடணும். தனியா இருக்க எனக்கு பயமா இருக்கு. நான் சொன்னது எதையும் மறந்திடக் கூடாது. தெரியுதா?''
"இல்ல...'' என்று சொன்ன அப்தல்காதர் சாஹிப் நடந்தான். பெண்கள் என்ன சொல்கிறார்கள். எங்கேயும் தேவையில்லாமல் நடந்து திரியக்கூடாதாம். இதை நினைத்து நினைத்துச் சிரித்தான் அவன். அதே நேரத்தில் அவள்மீது அவன் கொண்டிருக்கும் அளவற்ற காதலும் மனதில் வலம் வராமல் இல்லை. என்ன இருந்தாலும், ஜமீலா ஆசையுடன் கேட்ட முதல் விஷயமே பூவன் பழம்தான்! வேறொரு பெண்ணாக இருந்தால்... என்னவெல்லாம் கேட்டிருப்பாள்! அப்துல் காதர் சாஹிப் நினைத்துப் பார்த்தான். சில பெண்கள் தங்கள் கணவர்களிடம் என்னவெல்லாம் வாங்கித்தரச் சொல்லி நச்சரிப்பார்கள். தங்க நகைகள், பட்டுச் சேலைகள், தங்க வளையல்கள், கார், டகோட்டா விமானம்- இதெல்லாம் கூடப் பரவாயில்லை. பணம் இருந்தால் வாங்கிவிடலாம். வேறு சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கணவன்மார்களிடம் கேட்பது சாதாரணமாக வாங்க முடியாததாக இருக்கும். காட்டில் பிரசவமாகிக் கிடக்கும் பெண் சிங்கத்தின் இரண்டு மீசை! அதைக் காட்டில் போய் அலைந்து தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அவள் கையில் தரவில்லை என்றால் அவ்வளவுதான்! கேட்டால், "நான் என்ன பெரிசா சொல்லிட்டேன்! பூனை மாதிரி இருக்குற சிங்கத்தோட முகத்துல இருந்து ரெண்டு முடி வேணும்னு கேட்டேன். இதைக்கூட உங்களால கொண்டு வந்து தர முடியல. நீங்க என்ன ஆம்பள!” என்று ஒரு மூலையில் உட்கார்ந்து
அழ ஆரம்பித்துவிடுவாள். அப்போதைய சூழ்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வான்? இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டும் என்று கேட்பார்கள் தெரியுமா? எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி ஒரு சிறு பனிக்கட்டித் துண்டை எடுத்து வரச் சொல்வார்கள். அவர்கள் கேட்டபடி அவர்களின் கணவர்கள் கொண்டு வந்து கொடுக்கவில்லை என்றால், அடுத்த நிமிடம் அவர்களின் புலம்பலையும் கண்ணீரையும் பார்க்க வேண்டுமே! "நான் பெரிசா என்னத்தைக் கேட்டேன். ஒரு சின்ன பனிக்கட்டியை ஆசையா கொண்டு வரச்சொன்னேன். இதைக்கூட ஒரு பொண்டாட்டிக்கு உங்களால கொண்டு வர முடியல. நீங்க ஒரு கணவனா?” என்று பேச்சாலேயே கொன்று விடுவார்கள். மனைவி இப்படி அழும்போது ஒரு கணவன் என்னதான் செய்ய முடியும்? ஜமீலா பீபி இப்படியெல்லாம் கொண்டு வர கஷ்டமான விஷயங்கள் எதுவும் சொல்லிவிடவில்லையே! சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய இரண்டே இரண்டு பூவன் பழங்கள்! அவ்வளவுதானே. அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான். குளித்துவிட்டுப் போய் ஒரு குலை பூவன் பழம் உடனடியாக வாங்க வேண்டும். இதை நினைத்தவாறே அவன் ஆற்றைத் தேடிப் போனான்.
நதி காவி நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது. மழை பெய்திருந்த தால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இரு கரைகளிலும் தண்ணீரைத் தொட்டவாறு நின்றிருந்த மரங்களில் ஒன்றைக்கூடக் காணவில்லை. எல்லாவற்றையும் வெள்ளம் கொண்டு போயிருந்தது. வெள்ளத்தின் பெரும் போக்கிற்கு எந்தப் பொருள்தான் தப்ப முடியும்? மொத்தத்தில்- நதியின் போக்கைப் பார்த்து அப்துல்காதர் சாஹிப் ஒரு விதத்தில் பயப்படவே செய்தான்.
அவன் நதியில் இறங்கிக் குளித்தான். அதன் அர்த்தம் என்னவென்றால்- தலையை லேசாகத் தண்ணீருக்குள் நுழைத்தான். அவ்வளவுதான்- நதிநீர் பனியைப்போல படு குளிர்ச்சியாக இருந்தது. ஒருசில நிமிடங்கள் மட்டுமே நீருக்குள் நின்றிருந்த அப்துல்காதர் சாஹிப் சீக்கிரமே கரைக்கு வந்தான். தலையைத் துவட்டிவிட்டு படகுத் துறையில் இருக்கும் கடையைத் தேடிப் போனான். அந்தக் கடையில் கண்ணன் பழம் இருந்தது. வேறு சில வாழைப்பழங்களும் இருந்தன.
ஆனால் பூவன் மட்டும் இல்லை. இப்போது என்ன செய்வது? வேறு வழியில்லை. அவன் படகில் ஏறினான். படகு புறப்பட்டது. நடு ஆற்றில் படகு போய்க் கொண்டிருந்தபோது சுகமான காற்று வீசியது. சிறிது நேரத்தில் அவனைச் சுற்றிலும் இருள் கவியத் தொடங்கியது. எப்படியோ கஷ்டப்பட்டு படகை ஓட்டியவன் படகை மறுகரையில் சேர்த்தான். அடுத்த நிமிடம் அப்துல்காதர் சாஹிப் படகை விட்டு இறங்கி ஓடினான். அவன் பாதி தூரம்தான் போயிருப்பான். மழை மிகவும் பலமாகப் பெய்யத் தொடங்கியது.
அவன் வேகமாக ஓடி கடை வீதிக்குள் நுழைந்து ஒரு கடையின் முன் போய் நின்றான். உண்மையிலேயே மிகப் பெரிய மழைதான்! கடைகளில் விளக்கு எரியத் தொடங்கியது. மழை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்போடு அவன் அங்கு நின்றிருந்தான். காற்றும் பலமாக வீசியது. நேரம் போனதே அவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய பழைய நண்பர்கள் சிலருடன் அரட்டை அடித்தவாறு அவன் தன் நேரத்தைச் செலவிட்டான். எல்லாம் முடிந்து பார்த்தபோது மணி எட்டாகி இருந்தது. அவ்வளவுதான்- வெலவெலத்துப் போனான் அப்துல்காதர் சாஹிப். தன் அருமை மனைவி ஜமீலா பீபி இரவு நேரத்தில் தனியே வீட்டில் இருந்து பயந்து நடுங்கிக் கொண்டிருப்பாள். இதை நினைத்ததும் அவன் இருந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். வழியில் இருந்த ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கினான். ஆனால் எந்தக் கடையிலும் பூவன் பழம் மட்டும் இல்லை. இப்போது அவன் என்ன செய்வான்? அவனுக்கே சொல்லப்போனால் ஒருவித வெறுப்பு உண்டாகிவிட்டது. என்ன நினைத்தானோ, ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்கள் வாங்கினான். "என்ன இருந்தாலும், பூவன் பழத்தைவிட ஆரஞ்சுப் பழம் நல்லதுதானே” என்று அவன் மனம் நினைத்தது. ஆரஞ்சுப் பழத்தின் விலையும் அதிகம். அதில் இருக்கும் விட்டமின்னும் அதிகம்.