பூவன் பழம் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7171
"எனக்கு வேண்டாம்...''
"நீ இதைச் சாப்பிட்டே ஆகணும்...''
ஜமீலா பீபி எழுந்து உட்கார்ந்தாள். பந்தாவாக முகத்தை உயர்த்திக் கொண்டு, ஒருவித மிடுக்குடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்:
“இதைத் தின்ன மாட்டேன்னு சொன்னா, பேசாம விட வேண்டியதுதானே! அடிச்சுத் தின்ன வைப்பீங்க போலிருக்கே!''
அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான்: "இதுகூட நல்ல ஐடியாவாத்தானே இருக்கு!'
அடுத்த நிமிடம் அவன் சமையலறைக்குள் நுழைந்து இரண்டு சிறு குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்தான்.
ஜமீலா பீபி அவன் கையிலிருந்த குச்சிகளைப் பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, ஒரு ஓரத்தில் ஒடுங்கியவாறு போய் அமர்ந்தாள்.
அவன் சொன்னான்:
"எழுந்திரு...''
"எனக்குப் பிடிக்கல...''
"பிடிக்கலியா?'' அவன் எழுந்துபோய் ஒரு வெட்டரிவாளுடன் திரும்பி வந்தான்.
"புஸ்க்...” என்று சொல்வது மாதிரி ஜமீலா பீபி அமர்ந்திருந்தாள்.
"வா...'' அவன் அழைத்தான்.
அவள் சொன்னாள்:
"எனக்குப் பிடிக்கல...''
"அப்படியா?'' அவன் ஜமீலா பீபியின் தொடையில் குச்சியால் இரண்டு அடிகள் கொடுத்தான். தொடர்ந்து வெட்டரிவாளை உயர்த்திக் காட்டினான்.
"அடுத்தது இதுதான்!''
அவள் பயந்துபோய் கலங்கிய கண்களுடன் எழுந்து நின்றாள்.
அவள் கண்களில் இருந்து வழிந்த நீரைப் பார்த்ததும்... என்ன சொல்வது? அப்துல்காதர் சாஹிப்பின் இதயமே நொறுங்கிப் போனதுபோல் ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் அவன் ஆண் அல்லவா? பெண்ணின் கண்ணீரைப் பார்த்தால் அவனால் தாங்க முடியுமா என்ன? இருந்தாலும் சிறிது நேரத்திற்கு வேண்டுமென்றே தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான் அப்துல்காதர் சாஹிப். சில நிமிட இடைவெளிக்குப்பிறகு அவன் சொன்னான்:
"ஜமீலா... இங்க பார்... சும்மா கண்ணீர் விடாதே... வேணும்னா ஒண்ணு செய். உன் கண்ணீர் முழுவதையும் ஒரு அண்டால பிடிச்சு வை. நான் பிறகு அதுல குளிச்சிக்கிறேன். தெரியுதா?''
ஜமீலா பீபி முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டாள்:
"என்னைக் கொல்லப் போறீங்களா?''
"ஆமா...'' அவன் சொன்னான்: "உன்னை அறுத்து சின்னச் சின்ன துண்டா நறுக்கிப் போட்டு பிரியாணி தயாரிக்கப் போறேன்.''
அடுத்த நிமிடம் அவன் அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் பக்கத்து அறையில் அவளை நிறுத்தினான். அவளுக்கு முன் ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன.
"ஒழுங்கா எடுத்துத் தின்னு.'' அப்துல்காதர் சாஹிப் கட்டளையிட்டான்.
ஜமீலா பீபி அசைவே இல்லாமல் அப்படியே நின்றிருந்தாள். "புஸ்க்” என்று அவனைப் பார்த்துச் சொல்வது மாதிரி இருந்தது அவள் நின்றிருந்த கோலம்.
கணவன் சொல்லும் கட்டளைப்படி ஒரு மனைவி நடக்க வேண்டுமா இல்லையா? எதுவுமே பண்ணாமல் வெறுமனே நின்றிருந்தால் அவனுக்குக் கோபம் வருவது இயல்புதானே! கையில் இருந்த குச்சியால் அவளின் பின்பாகத்தில் லேசாக அடித்தான்.
அவ்வளவுதான்.
மெதுவாக முன்னால் வந்த ஜமீலா பீபி ஒரு ஆரஞ்சு சுளையை எடுத்து வாயில் வைத்தாள்.
"இது போதாது. இனியும் எடுத்துத் தின்னணும்...'' கட்டளைக் குரலில் சொன்னான் அப்துல்காதர் சாஹிப். தொடர்ந்து கையில் இருந்த வெட்டரிவாளையும் காட்டினான்.
"கையில என்ன இருக்கு பார்த்தியா? இத வச்சு ஒரு போடு போட்டா எப்படி இருக்கும் தெரியுமா?''
இதை அவன் சொன்னதுதான் தாமதம்- பயந்துபோன ஜமீலா பீபி வேகமாக ஆரஞ்சுச் சுளைகளை எடுத்து வாயில் போட்டுத் தின்றாள்.
அவன் சொன்னான்:
"தோலை உரிச்சு மெதுவா தின்னு...''
கண்களில் நீர் வழிந்தவாறு, ஜமீலா பீபி தோலை உரித்து ஆரஞ்சுச் சுளையைச் சாப்பிட்டாள்.
அப்துல்காதர் சாஹிப் அவளைப் பார்த்துக் கேட்டான்:
"நான் உனக்கு யாரு சொல்லு...''
அவள் சொன்னாள்:
"யார்னே எனக்குத் தெரியாது...''
"இந்த வெட்டரிவாள் தெரியுதா? உனக்கு நான் யாரு?''
"கணவன்...''
அவன் கேட்டான்:
"கையில இருக்குற வெட்டரிவாள் தெரியுதா? நீ என்னைத் திருத்தணும்னு நினைப்பியா? இனி மாட்டேன்னு சொல்லு. கையில இருக்குற அரிவாள் தெரியுதுல்ல?''
"நிச்சயமா இனி உங்களைத் திருத்தணும்னு நினைக்க மாட்டேன்.''
அவன் கேட்டான்:
"இப்ப நீ என்னத்தைச் சாப்பிடுறே?''
"ஆரஞ்சுப் பழம்.''
அப்துல் காதர் சாஹிப் அவளின் பின்பாகத்தில் ஒரு அடி கொடுத்தான்:
"வெட்டரிவாள் தெரியுதா? சொல்லு... நீ இப்போ சாப்பிடுறது பூவன் பழம்...''
"பூவன் பழம்!''
"சமையல்காரி வேணுமா? வேண்டாம்னு சொல்லு. வெட்டரிவாள் தெரியுதா?''
"வேண்டாம்...''
"நீ நினைச்சுக்கிட்டு இருக்குற மாதிரி நீ என்ன பெரிய இவளா? வெட்டரிவாள் தெரியுதா? நீ என்னோட பொண்டாட்டிதானே?''
"ஆமா...''
"டிரைவர்கள், ரிக்ஷாக்காரர்கள், கவிஞர்கள், சுமை தூக்குபவர்கள், அரசியல் தொண்டர்கள், பீடி சுற்றுபவர்கள்- எல்லார்கூடயும் நான் சரிசமமா பழகலாம்லயா? வெட்டரிவாள் கையில இருக்கு. தெரியுதா? பழகலாம்னு சொல்லு...''
"பழகலாம்... பழகலாம்...''
"இப்போ தின்றது என்ன?''
"பூவன் பழம்...''
கையில இருந்த வெட்டரிவாளையும் குச்சியையும் கீழே போட்டுவிட்டு, "எண் கண்ணே...” என்று ஆசையுடன் கூறியவாறு அப்துல்காதர் சாஹிப் ஜமீலா பீபியை இறுகக் கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவளின் பின்பாகத்திலும் தொடையிலும் அடி வாங்கிய தடங்கள்! அதைத் தன் கைகளால் தொட்டபோது அவன் இதயம் வேதனையால் அழுதது.
"என் கண்ணு... உனக்கு வலிக்குதாடா?'' அவன் கேட்டான்.
அவள் நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னாள்:
"இல்ல..''
இருந்தாலும் அப்துல்காதர் சாஹிப்பின் இதயம் மிகவும் அதிகமாக வருந்தியது. ஆயிரம்தான் இருக்கட்டும்... அவன் ஆணாயிற்றே!
அன்றைய இரவு முடிந்தது. பகல் வந்தது. நாட்கள் வருடங்களாக மாறின. நதியில் எத்தனையோ முறைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜமீலா பீபி ஒன்பது தடவை பிரசவமானாள். உலகத்தில் எவ்வளவோ மாறுதல்கள் உண்டாயின. சாம்ராஜ்ஜியங்கள் தகர்ந்தன. கிரீடங்களும்
செங்கோல்களும் சிம்மாசனங்களும் பறந்தன. புதிய ஆட்சிகள் வந்தன. புதிய கொள்கைகள் வந்தன. புதுப்புது சித்தாந்தங்கள் அரங்கேறின. மனித சமுதாயம் பல வகைகளிலும் வளர்ச்சியை நோக்கி நடைபோட்டது. அப்துல்காதர் சாஹிப்பிற்கும் ஜமீலா பீபிக்கும் வயது ஏறின. அவர்களின் பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டன. இரண்டு பேருக்கும் கூன் விழுந்துவிட்டது. தலை முழுவதும் இருவருக்குமே நரை முடி. படுகிழவனும் கிழவியுமாய் இருவரும் ஆனார்கள். அவர்களின் குழந்தைகளுக்கும் குழந்தைகள் பிறந்தன. என்னதான் வருடங்கள் பல கடந்தாலும், கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் சில விஷயங்களை மறக்க முடியுமா? அப்துல்காதர் சாஹிப் சிரித்தவாறே ஜமீலா பீபியைப் பார்த்துக் கேட்பான்:
"மகாராணி... பல வருஷங்களுக்கு முன்னாடி நீ பூவன் பழம் வேணும்னு கேட்டப்போ, ஆத்துல நீந்தி வந்து உனக்கு நான் என்ன கொண்டு வந்தேன்?''
ஜமீலா பீபி சிரித்தவாறே சொல்லுவாள்:
"பூவன் பழம்!''
அவன் கேட்பான்:
"அது எப்படி இருந்துச்சு?''
அவள் கூறுவாள்:
"ஆரஞ்சுப் பழம்போல உருண்டையாய்...''
"ஹா...ஹா...ஹ...'' என்று சிரித்தவாறு அவன் கேட்பான்:
"என்ன கொண்டு வந்தேன்?''
அவள் சொல்லுவாள்:
"பூவன் பழம்! பூவன் பழம்!''