பூவன் பழம் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7171
வாங்கிய ஆரஞ்சுப் பழங்களை ஒரு பொட்டலமாகக் கட்டி கையில் வைத்தவாறு அவன் நடந்தான். மழை இன்னும் விட்ட பாடில்லை. நல்ல இருட்டு வேறு. எந்த இடத்திலும் மருந்துக்குக்கூட வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை. பூவன் பழமும் மழையும் சேர்ந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தனக்கு உண்டாக்கி இருப்பதாக உணர்ந்தான் அப்துல்காதர் சாஹிப். அவன்
மீண்டும் படகுத் துறைக்கு வந்தான். அங்கே யாருமே இல்லை. சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்தவாறு படகுக்காரனை அழைத்தான். அப்போதும் மழை விடுவேனா என்று பெய்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட இருபது தடவை படகுக்காரனை அவன் அழைத்திருப்பான். யாரும் வந்தால்தானே! அவனுக்கு அழைத்து அழைத்து தொண்டைத் தண்ணீர் வற்றிப்போனதுதான் மிச்சம்- படகோட்டியையே காணவில்லை. எங்கு போனானோ? விளைவு- என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்த அப்துல்காதர் சாஹிப் நதியில் நீந்திச் செல்வது என்று முடிவெடுத்தான். அடுத்த நிமிடம் சட்டையைக் கழற்றினான். துண்டில் ஆரஞ்சுப் பழத்தைக் கட்டி தலையில் வைத்தான். துண்டின் இரு முனைகளையும் தாடையில் முடிச்சுப்போட்டுக் கட்டினான். சட்டையை ஆரஞ்சுப் பழங்களுக்கு மேலே சுற்றினான். இப்போது அவன் ஜமீலா பீபியைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்: "இங்க பாரு ஜமீலா.. உன்னை மட்டும் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா.... நான் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதிருக்குமா? இந்த மழை நேரத்துல நான் நினைச்ச இடத்துல படுத்துக்கலாம். ஆனா உன்னைத் திருமணம் பண்ணினதுனால பார்த்தியா... ஒரு ஆண் நினைச்ச மாதிரி இருக்க முடியுதா?” ஜமீலாவைப் பற்றி தனக்குள் நினைத்துப் பார்த்த அவன் அடுத்த நிமிடம் கடவுளை மனதிற்குள் தொழுதவாறு நதியின் போக்கிலேயே கிட்டத்தட்ட ஒரு ஃபர்லாங் தூரம் நடந்தான்.
அதற்குப் பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நதியில் இறங்கினான். அப்படியே தண்ணீரில் மூழ்கி தான் இறக்க நேர்ந்தால்..? என்ன இருந்தாலும் எல்லா கஷ்டங்களும் ஜமீலா பீபிக்காகத்தானே! நதிநீர் இடுப்பு வரை இருந்தது. கால்களைக் கீழே வைக்க முடியவில்லை. அவன் நீந்த ஆரம்பித்தான். தலை மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்தது. கைகளால் நீரைக் கிழித்தவாறு அவன் வேகமாக நீந்தினான். இருட்டில் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. எந்தத் திசையில் போகிறோம் என்பதைக் கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவித யூகத்துடனேயே அவன் நீந்தினான். இன்னும் எவ்வளவு நேரம் நீந்த வேண்டியிருக்கும், எப்போது கரையை
அடைவோம் என்று எதுவுமே தெரியாமல் அவன் நீந்திக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் நீந்தியதால் கை, கால்கள் வலித்தன. சொல்லப்போனால் பலமிழந்து அவை துவண்டன. கடைசியில்- எதையோ அவன் கைகள் பற்றின. அதே நேரத்தில் அவனை நீர் கீழ்நோக்கி இழுத்தது. ஆனால் அவன் தன் பிடியை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டான். வாய்க்குள் தண்ணீர் போனது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இலேசாக எம்பிய அப்துல்காதர் சாஹிப் தான் பற்றிக் கொண்டிருந்தது என்னவென்று பார்த்தான். அது ஒரு முள்செடி. அந்த முள்செடியைப் பிடித்தவாறு மேலே ஏறினான். முள் ஆங்காங்கே குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் மேலே ஏறி கரையில் கால் வைத்தான் அவன். கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்தான். உடல் வெடவெடத்தது. அந்த இரவு நேரத்தில் மனதில் கொஞ்சம் பயம்கூட உண்டானது. வெறுமனே இப்படி உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி? காடு, முள் என்று பார்க்காமல் அப்துல்காதர் சாஹிப் நடக்க ஆரம்பித்தான் உடம்பில் துணியே இல்லாமல்- வேஷ்டி. சட்டை இரண்டும் நதி நீரோடு போய் விட்டிருந்தன. தாடையோடு சேர்த்துக் கட்டியிருந்ததால் துண்டும், ஆரஞ்சுப் பழங்களும் தப்பின. அருகில் இருந்த ஒரு மரத்தின் கொம்பொன்றை ஒடித்து கையில் வைத்தவாறு அவன் நடந்தான். அப்போது வானத்தில் மின்னல்! அந்த வெளிச்சத்தில் எதிரே இருந்த வாழைத்தோட்டம் அவன் கண்களில் பட்டது. பக்கத்திலேயே ஒரு வீடு இருந்தது. இன்னும் அவனுடைய வீடு இருக்கும் இடத்திற்குப் போக வேண்டுமானால் அரை மைல் தூரம் நடக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான்.
அந்த வீட்டைத் தாண்டி ஒரு சிறு தென்னைமரப் பாலத்தைக் கடந்து அவன் வேகமாக நடந்தான். அப்போது ஒரு நாய் குரைத்தது. அடுத்து இன்னொரு நாய். சிறிது நேரத்தில் அங்கிருந்த பல நாய்கள் குரைத்தன. ஒரு நாய் குரைத்தவுடன் தொடர்ந்து எல்லா நாய்களும் குரைப்பது என்பது அவற்றின் வழக்கமாக இருக்கும் போலிருக்கிறது! இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒற்றையடிப் பாதைகளைத் தாண்டி, பாலங்கள், பாதைகள் எல்லாம் கடந்து தன்னுடைய வீட்டை அடைந்தான் அப்துல்காதர் சாஹிப். வீட்டிற்குள் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. ஜமீலா இன்னும் உறங்காமல்தான் இருக்கிறாள். "ஜமீலா... கதவைத்திற...” என்று அவன் வாயைத் திறந்து சொல்லவில்லை. "முதலில் உடம்பில் ஏதாவது ஒரு சிறு துணியையாவது சுற்றிக் கொள்வோம்” என்று எண்ணியவாறு வராந்தாவில் கால் வைத்தான். அப்போது அவன் தன்னையும் மீறி ஜன்னல் வழியே பார்த்தான். குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தாலும் தன்னையே மறந்து அவன் சிரித்துவிட்டான். அடடா என்ன காட்சி அது!
மேஜையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் இரண்டு தட்டுகள். அவை வேறு இரண்டு தட்டுகளால் மூடப்பட்டிருக்கின்றன. அதற்குப் பக்கத்தில் நான்கைந்து சிறு தட்டுகள். அவையும் மூடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சாதமும் குழம்பும் கூட்டும் இருக்கின்றன. கணவனை எதிர்பார்த்து மனைவி இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாள். அவள் கையில் பயங்கரமான ஒரு வெட்டரிவாள். அந்த அரிவாளைக் கையில் வைத்தவாறு ஜமீலா பீபி நாற்காலியில் அமர்ந்தவாறு தலையை மேஜைமேல் வைத்து தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.
அதோடு நிற்கவில்லை. இன்னும் சில காரியங்களையும் அவள் செய்திருந்தாள். முன்பக்கக் கதவை உள்பக்கமாகப் பூட்டியிருந்தாள். ஆனால் வெளியில் இருந்து யாராவது திருடர்கள் கதவை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு உள்ளே பூட்டியிருந்த தாழ்ப்பாளை உடைத்து விடலாம் அல்லவா? அப்போது என்ன செய்வது? ஒரு மேஜையை எடுத்து உள்ளே கதவோடு சேர்த்துப் போட்டிருந்தாள். மேஜைக்கு இருக்கும் கனம் போதாது என்று நினைத்தாளோ என்னவோ அதன்மேல் ஒரு தலையணையை வேறு வைத்திருந்தாள். அவளின் இந்தச் செயலை என்னவென்பது?