பூவன் பழம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7171
"நிச்சயமா இல்ல... என் ஜமீலா, உன்னைத்தவிர நான் இதுவரை இன்னொரு பெண்ணிடம் பேசினது கிடையாது. ஏன்- பார்த்தது கூடக் கிடையாது. பேசினதும் இல்ல... பார்த்ததும் இல்ல... நீ மட்டுமே என் கண்ணுல தெரியிற...''
ஜமீலா பீபி பந்தாவாக அவனைப் பார்த்தவாறு கேட்டாள்:
"பிறகு...?''
அவன் சொன்னான்:
"உனக்கு நானும் எனக்கு நீயும்.''
"ஓ... ரொம்ப சந்தோஷம்'' என்று கூறியவாறு ஜமீலா பீபி அந்த இடத்தைவிட்டு அகன்றாள். இப்படித்தான் போர் ஆரம்பித்தது. வார்த்தைச் சண்டைகள்... பல நாட்கள் நடந்தன. ஜமீலா வீட்டில் பயங்கர எதிர்ப்பு! அதை எதிர்த்து ஊர் மக்கள்! வேலை நிறுத்த அறிவிப்பு! கடைசியில்... ஜமீலா பீபியை அப்துல்காதர் சாஹிப் திருமணம் செய்தான். அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்தபோது- வருகிறது "பூவன் பழம்” பிரச்சினை!
நேரம் சரியாக ஐந்தரை மணி.
மழைக்காலம். வெயிலும் இருந்தது; மழையும் இருந்தது. சில நேரங்களில் இப்படித்தான் அதிசயமாக ஏதாவது நடக்கும். ஆற்றில் நீர் "கும்”மென்று பொங்கி வெள்ளமாகப் பெருக்கெடுத்து வந்தது. வெறுமனே அதைப் பார்ப்பதோடு நிற்காமல் கொஞ்சம் குளிக்கவும் செய்யலாம் என்று நினைத்த அப்துல்காதர் சாஹிப் சட்டை போடாமல் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு முற்றத்தில் இறங்கியபோது, ஜமீலா பீபி மெல்ல வாசல் கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்று அவனைக் கூப்பிட்டாள்:
"என்ன... ஏய்...''
அப்துல்காதர் சாஹிப் நினைத்தான். ஒருவேளை தன்னை சட்டை போட்டுக் கொண்டு போகச் சொல்கிறாளோ என்று. ஏனென்றால், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்தவுடன், ஜமீலா பீபி அவனுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டாள்.
அப்துல்காதர் சாஹிப் நாகரீக மனிதனாக உடனே மாற வேண்டும். நல்ல ஆடைகள் அணிந்தே அவன் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். யாருடன் பேசினாலும், அதில் ஒரு மிடுக்கு இருக்க வேண்டும். நடந்துபோகும் பாதையில் பழைய நண்பர்களையும் பிரச்சினை பண்ணக்கூடிய ஆட்களையும் பார்க்க நேர்ந்தால், அவர்களுடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் பேசக் கூடாது. பீடி சுற்றுபவர்கள், கவிஞர்கள், சுமைத் தொழிலாளர்கள், அரசியல் காரியங்களில் ஈடுபடுபவர்கள், டிரைவர்கள், ரிக்ஷா வண்டி ஓட்டுபவர்கள்- இவர்களுடன் சரி நிகராக அமர்ந்து கொண்டு பேசக்கூடாது. வீட்டில் கட்டாயம் ஒரு வேலைக்காரியை வைக்க வேண்டும். அப்துல்காதர் சாஹிப் சாதம் ஆக்குவதோ, கூட்டு சமைப்பதோ செய்யக்கூடாது. தனக்கென்று ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி அவன் நடக்க வேண்டும். சுருக்கமாகச்
சொல்லப்போனால்- அவன் தன்னை முழுக்க முழுக்க மாற்றிக் கொள்ள வேண்டும். நாகரீக மனிதனாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
எந்தப் பெண் எந்த ஆணைக் கல்யாணம் பண்ணுவதாக இருந்தாலும் அவளின் முதல் வேலை தன் கணவனை முழுமையாக வேறொரு
மனிதனாக மாற்றுவதாகத்தான் இருக்கும். பெண் தான் நினைக்கிறபடி தன் கணவனை நூறு சதவிகிதம் மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறாள்- உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும். அவன் இதுவரை கைக்கொண்ட எல்லா விஷயங்களிலும் உள்ளே நுழைந்து, அவனை இதுவரை இல்லாத நேர்மாறான ஒரு மனிதனாக மாற்றுவது என்பது சாதாரண விஷயமா என்ன! கட்டாயம் இது ஒவ்வொரு பெண்ணின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகிறாள் ஜமீலா பீபி. அவள் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லாப் பெண்களுமே இந்தக் கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். அழகான தன் மனைவி கூறிய எந்தக் காரியத்திற்கும் எதிர்வாதம் கூறவில்லை அப்துல்காதர் சாஹிப். அவன் என்ன சொல்லுவான்? திருமணம் முடிந்து அப்படியொன்றும் அதிக நாட்கள் ஆகவில்லையே! திருமணக்களை இன்னும் அவனை விட்டு நீங்காமலே இருந்தது. அவன் ஜமீலா பீபியைப் பார்த்துச் சொன்னான்:
"என் ஜமீலா... நான் குளிக்கப்போறேன். சட்டை போட்டுக்கிட்டு போகச் சொல்றியா?''
"ஓ...'' ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஜமீலா சொன்னாள்: "நான் சொன்னா நீங்க கேட்கவா போறீங்க!''
"ஜமீலா... அப்படிச் சொல்லாதே... நீ சொல்லி எந்த விஷயத்தை இதுவரை நான் கேட்காம இருந்திருக்கேன்?'' என்று சொன்ன அவன் உள்ளே ஓடி சட்டையை அணிந்தவாறு வெளியே வந்தான். ஆனால், அவன் போட்டிருந்த சட்டையில் ஒரு பட்டன்கூட இல்லை.
"ஒரு ஆண் இதில் கூடவா கவனம் இல்லாம இருப்பது?'' ஜமீலா பீபி மூன்று பட்டன்களை சட்டையில் வைத்துத் தைத்தாள்.
அப்துல்காதர் சாஹிப் வேகமாக நடந்தான்.
ஜமீலா பீபி மீண்டும் அவனை அழைத்தாள்:
"இங்க பாருங்க... ஏய்...!''
அப்துல்காதர் சாஹிப் திரும்பிப் பார்த்தான். அவன் நினைத்தான்- சமையல்காரியைப் பற்றித்தான் அவள் பேசப்போகிறாள் என்று! என்ன செய்வது? சமையல்காரி இல்லாமலே நாம் வாழ்க்கையை நடத்த முடியாதா என்ன? நம்முடைய விஷயத்தை நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண் பி.ஏ. படித்திருக்கிறாள் என்பதற்காக,
அவள் சமையல் பண்ணக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது? பி.ஏ. என்றில்லை- எம்.ஏ., பி.எச்.டி. படித்த பெண்ணாக இருந்தால்கூட இனிமேல் சாதம் ஆக்கு வதையும் கூட்டு வைப்பதையும் குழம்பு வைப்பதையும் கட்டாயம் தெரிந்தே இருக்க வேண்டும். அப்படி அவளுக்குத் தெரியாமல் இருந்தால், அப்துல்காதர் சாஹிப் அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித் தருவான். அவன் நிச்சயம் அதைச் செய்யத்தான் போகிறான். பிரியாணி தயாரிப்பதிலிருந்து தேநீர் உண்டாக்குவது வரை அவனுக்கு எல்லாமே தெரிந்த விஷயங்கள்தாம்.
"என்ன ஜமீலா?'' அப்துல்காதர் சாஹிப் கேட்டான்: "சமையல்காரி விஷயமா?''
"இல்ல...'' முகத்தைக் கோண வைத்துக் கொண்டு அவள் சொன்னாள். "நான் பி.ஏ. பாஸ் ஆனது சமையல்காரி ஆகுறதுக்கா?''
"முத்தே...'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: "என் அருமை மனைவி சமையலறைக்குள் நுழைவதா? எல்லாம் நான் பாத்துக்கிறேன். போதுமா?''
"ஒரு... போதும். இதைத்தான் ஒவ்வொரு நாளும் சொல்றீங்க.''
"இன்னைக்கு மட்டும் மகாராணி.... நீ சமையலறை வேலைகளைக் கவனி. நாளை முதல் உன்னோட இந்த தாசன்...''
"சும்மா ஏதாவது பேசிக்கிட்டே இருக்காதீங்க...''
"சரி... இப்போது எதற்கு என்னைக் கூப்பிட்டே?'' அவன் நினைத்தான்- ஒருவேளை ஒழுங்காகத் தலைமுடியை வாரி, முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்பதைக் கூறுவதற்காக இருக்குமோ? ஆனால் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்த ஜமீலா பீபி வெட்கத்துடன் தலையைக் குனிந்தவாறு காதல் மேலோங்கச் சொன்னாள்:
"பூவன் பழம்..."