பூவன் பழம் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7171
பெண்களின் மூளையே இப்படித்தான் வேலை செய்யும் போலிருக்கிறது என்று மனதிற்குள் நினைத்த அப்துல்காதர் சாஹிப், மேஜை மேல் தலையை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஜமீலா பீபியை எழுப்பலாம் என்று அருகில் போனான். அப்போதுதான் அவன் இன்னொரு விஷயத்தைக் கவனித்தான். சமையலறை வாசல் கதவிலிருந்து வெளிச்சம் முற்றத்தில் விழுந்து கொண்டிருக்கிறது. அதெப்படி? அப்துல்காதர் சாஹிப் அங்கே போய் பார்த்தான். அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஜமீலா பீபி இருந்த பரபரப்பில்
சமையலறைக் கதவையே அடைக்க மறந்துவிட்டாள். உலகத்திலுள்ள எல்லாத் திருடர்களும் அந்தக் கதவின் மூலம் தாராளமாக வீட்டிற்குள் வரலாம். எல்லாவற்றையும் பார்த்த அப்துல்காதர் சாஹிப் உள்ளே வந்தான். எந்த ஓசையும் எழுப்பாமல் மெதுவாக- மிகமிக மெதுவாக வாசல் கதவை அடைத்தான். உள்ளே தாழ்ப்பாள் இட்டான். கையிலிருந்த கம்பை சமையலறையில் வைத்துவிட்டு, மெதுவாக உள்ளே இருந்த அறைக்குள் நுழைந்தான். உடம்பில் பல இடங்களிலும் காயம்... முள் குத்தி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. "ஜமீலா... கண்ணே... உனக்காக நான் எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கேன். பார்த்தியா?” என்று மனதிற்குள் கூறிக் கொண்டான் அவன். அப்துல்காதர் சாஹிப், ஜமீலா பீபி முகத்தில் எப்போதும் பூசும் பவுடரைத் தன் உடல் முழுக்க பூசினான். சட்டையும் வேஷ்டியும் எடுத்து அணிந்தான். தலைமுடியை ஒழுங்காக வாரினான். வாங்கி வந்திருந்த ஆரஞ்சுப் பழங்களை அங்கே வைத்தான். ஜமீலா பீபியை இனி எழுப்பலாம் என்று போனபோது- தான் இன்னும் ஆண்டவனைத் தொழவில்லை என்று விஷயம் அவன் ஞாபகத்தில் வந்தது. அதை முதலில் செய்யலாம் என்று தீர்மானித்த அவன் சமையலறைக்குள் நுழைந்து நீரை எடுத்து வைத்துக் கொண்டு ஆண்டவனைத் தொழுதான். ஜமீலா பீபிக்காக, தன் உயிரைக் காப்பாற்றியதற்காக ரப்புல் ஆலமீனாய தம்புரானுக்கு நன்றி சொன்னான். பிரார்த்தனை முடிந்ததும் ஆரஞ்சுப் பழங்களை இரண்டு பாத்திரங்களுக்குள் போட்டு மேஜை மேல் கொண்டு போய் வைத்தான்.
"மகாராணி...'' மெதுவான குரலில் அவன் அழைத்தான்.
அவ்வளவுதான்-
ஜமீலா பீபி திடுக்கிட்டு, பயந்துபோய் வெட்டரிவாளைக் கையில் வைத்தவாறு கண்களைத் திறந்தாள்.
"என்னை அவசரப்பட்டு வெட்டிராதே.'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: "நான் திருடன் அல்ல. உன் முன்னாடி நிக்கிறது அப்பாவியும் முட்டாளுமான அப்துல்காதர். தெரியுதா?''
"கண்ட கண்ட இடங்கள்ல எல்லாம் அலைஞ்சிட்டா வர்றீங்க?'' என்று கேட்ட அவள் கண்கள் வாசல் கதவைப் பார்த்தன. "ஆமா... நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?''
அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:
"நான் வந்தவுடன் எல்லாக் கதவுகளும் தானே வழிவிட்டுத் திறந்திடுச்சு. இதே மாதிரி நான் வர்றேன்னா எல்லா இதயங்களும் திறந்திடும்...''
"முட்டாள்தனமா எதையாவது பேசாதீங்க... எப்படி உள்ளே வந்தீங்க? சொல்லுங்க...''
அவன் சொன்னான்:
"சமையலறை வழியா...''
அவள் கேட்டாள்:
"கம்பு எதையாவது வச்சு உள்ளே நுழைச்சு தாழ்ப்பாளை நீக்கித்தானே உள்ளே வந்தீங்க? நீங்க செஞ்ச காரியத்தை யாராவது திருடன் பார்த்தா என்ன ஆவது? இதைப் பார்த்து அவங்களும் இதேகாரியத்தைச் செய்வாங்க. நான் எப்படி இந்த வீட்ல மன அமைதியோட இருக்க முடியும்?''
அப்துல் காதல் சாஹிப் சொன்னான்:
"ப்ளடி ஃபூலே! நீ சமையலறைக் கதவை அடைக்கவே இல்ல...''
ஜமீலா பீபி சொன்னாள்:
"என்ன பேசுறீங்க? கதவை நானில்ல அடைச்சவ!''
"யாரப்புல் ஆலமின்!'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: "பொம்பளைங்க அவங்க செஞ்ச தப்பை எந்தக் காலத்துல ஒத்துக்கிட்டிருக்காங்க நீ ஒத்துக்கிறதுக்கு... நீ தொழுகை பண்ணிட்டியா?''
"பண்ணியாச்சு...'' என்று சொல்லியவாறு எழுந்த ஜமீலா பீபியின் கண்கள் மேஜையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்தன. அவ்வளவுதான்- முகம் சுருங்கிப் போனது. அடுத்த நிமிடம் அவள் முகம் கோபத்தால் சிவந்தது. "ஆரஞ்சுப் பழம்! யார் இதைத் தின்பது?” மனதிற்குள் அவள் நினைத்தாள்.
அந்த ஆரஞ்சுப் பழங்களையே சில நிமிடங்கள் வைத்த கண் எடுக்காது பார்த்தாள். பார்வையிலேயே அந்தப் பழங்களை அழித்து விடுவாள் போலிருந்தது. இருந்தாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:
"பூவன் பழம் ஒரு இடத்துலகூட கிடைக்கல...''
ஜமீலா பீபி அதற்கு ஒன்றுமே பேசவில்லை. அவள் என்ன பேசுவாள்? அவன் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு வந்து வைத்திருக்கிறான்.
கை கழுவ அவள் தண்ணீர் கொண்டு வந்தாள். இரண்டு பேரும் கை கழுவி, சாப்பிட்டார்கள்.
"கூட்டு நல்லா இருக்கு!''அப்துல்காதர் சாஹிப் சொன்னான். உண்மையாகச் சொல்லப்போனால் அவள் சமைத்திருந்த கூட்டு சுவையாகவே இல்லை. உப்பு இல்லை. காரம் அதிகமாகச் சேர்த்திருந்தாள். அதற்காக மனைவியைக் குறை சொல்ல முடியுமா என்ன?
ஜமீலா பீபி சொன்னாள்:
"நான் தூங்கப் போறேன்!''
அவன் சொன்னான்:
"ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டுத் தூங்கு. பூவன் பழம் எங்கயும் கிடைக்கல. நான் ஆத்துல நீந்தி இந்தப் பழங்களை இங்கே கொண்டு வந்தேன்.''
அவள் சொன்னாள்:
"சும்மா வாய்க்கு வந்தபடி பொய் சொல்லாதீங்க. எனக்கு ஆரஞ்சுப் பழம் பிடிக்கவே பிடிக்காது. நீங்கதானே கொண்டு வந்தீங்க. நீங்களே சாப்பிடுங்க!''
ஜமீலா பீபி முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு -பந்தாவாக நடந்து சென்று படுக்கையில் விழுந்தாள்.
அப்துல்காதர் சாஹிப் ஆரஞ்சுப் பழத்தை உரித்து சுளை சுளையாகப் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டான். சிறிது நேரம் கழித்து அவளை அழைத்தான்.
"ஜமீலா...''
"எனக்கு வேண்டாம்...''
"என்ன வேண்டாம்?'' அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான். "நிக்காஹ் முடிஞ்ச உடனே இவளை அடிச்சு, பயமுறுத்தி வச்சிருக்கணும்!”
"ஜமீலா... சீக்கிரம் எந்திரி...''
"எனக்கு தூக்கம் வருது...''
"அப்படியா?'' அப்துல்காதர் சாஹிப் மென்மையான குரலில் சொன்னான்: "ஜமீலா... நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்தப் பழங்களைக் கொண்டு வந்திருக்கேன். இங்க பாரு... நான் ஆத்துல நீந்தி வர்றப்போ அதுல முங்கி செத்துப் போயிருந்தா என்ன ஆயிருக்கும்?''
ஜமீலா பீபி படுக்கையில் குப்புறப்படுத்து தலையணையில் முகத்தைப் புதைத்தாள்.
"ஜமீலா...''
அவள் லேசாக முகத்தைத் திருப்பினாள்.
"நான்... உங்ககிட்ட வாங்கிட்டு வரச்சொன்னது பூவன் பழம்தான்..''
"ஏய்... பூவன் பழம் ஒரு இடத்துலயும் கிடைக்கலன்னு நான்தான் சொல்றேனே! நான் நாளைக்கு எங்கேயாவது பார்த்து வாழைக்கன்றுகளைக் கொண்டு வர்றேன்.''
"நீங்க வாழைக்கன்றுகளைக் கொணடு வந்து நட்டு, அது வளர்ந்து, குலை தள்ளி, காய் காச்சு, பழுத்து, நான் சாப்பிடணுமா?''
"சரி... இப்போ இந்த ஆரஞ்சுப் பழத்தைத் தின்னு. இதுல நிறைய வைட்டமின் இருக்கு.''