பூவன் பழம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7179
"பூவன் பழம்” என்ற இந்தக் கதையை நான் மனப்பூர்வமாக முன்வந்து எழுதவில்லை. அப்துல்காதர் சாஹிப்பின் தொடர்ச்சியான தொந்தரவினால்தான் இந்தக் கதையையே நான் எழுதுகிறேன். "இதில் ஒரு பாடம் இருக்கிறது” என்று கூறுகிறான் அவன். அவன் மனைவி ஜமீலா பீபியைப் பற்றிய கதையே இது.
ஜமீலா பீபி பி.ஏ. படித்தவள். அப்துல்காதர் சாஹிப் பள்ளி இறுதி வகுப்புதான் படித்திருக்கிறான். நாட்டு நடப்புப்படி பி.ஏ. படித்த ஒரு பெண்ணை பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஒருவன் திருமணம் செய்ய முடியுமா? ஆனால் போராட்டம் பண்ணித்தான் அவளைத் திருமணம் செய்ததாக அப்துல்காதர் சாஹிப் பல நேரங்களில் கூறுவதுண்டு. அந்தக் காலத்தில் பெண்களை ஆண்கள் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள். நீளமான கயிற்றில் சுருக்குப் போட்டு, அதைத் தூக்கி எறிந்து பெண்களை அதில் சிக்க வைத்துப் பிடிக்கவும் செய்தார்கள். சில வேளைகளில் பலாத்காரச் செயல்களிலும் பெண்களிடம் ஆண்கள் ஈடுபடுவது உண்டு. அப்துல்காதர் சாஹிப் நாகரீகமான மனிதன் என்பதால், அந்த மாதிரியான கீழ்த்தரமான காரியங்களில் எல்லாம் அவன் ஈடுபடவில்லை. அவன் நகரத்தில் பெயர் பெற்ற ஒரு கேடி. பீடித் தொழிலாளிகள் சங்கத்தின் செயலாளராகவும், நல்ல ஒரு கால்பந்து வீரனாகவும்கூட அவன் இருந்தான். நான்காவது ஃபாரத்தில் இருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை ஜமீலா பீபியும் அவனும் ஒன்றாகவே படித்தார்கள். நான்காவது ஃபாரத்தில் இருந்தே ஜமீலா பீபிமீது அவனுக்கு ஒரு பிடிப்பு. இதை அவனே பல முறை சொல்லி இருக்கிறான். ஆனால், ஜமீலா பீபியோ அதை முழுப் பொய் என்கிறாள்.
எது எப்படியோ, ஜமீலா பீபி பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றாள். அவளுடைய தந்தையின் பீடி ஃபாக்டரியில் இருந்து விருப்பம் போல பணத்தை
எடுத்துக் கொண்டு பந்தாவாக அவள் நடந்து கொண்டிருந்த காலமது. ஊரில் இருந்த இளைஞர்கள் எல்லாருக்குமே ஜமீலா பீபி என்றாலே ஒருவகை ஈர்ப்புதான். ஜமீலா பீபியைப் பற்றி இளைஞர்கள் தங்கள் மனதில் கற்பனை பண்ணிக் கொண்டு வாழ்ந்தார்கள். அவளைப் பற்றி ஒருவரி சுலோகங்கள், காதல் காவியங்கள் என்று பலவற்றையும் இயற்றிக் கொண்டு இளைஞர்கள் பித்துப் பிடித்து அலைந்தனர்.
ஜமீலா பீபியின் இதயத்தை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்று அந்த ஊரின் மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பையன்கள் அனைவரும், சொல்லப்போனால் "க்யூ”வில் நின்று கொண்டிருந்தனர். அப்துல்காதர் சாஹிப் நிச்சயமாக அந்த வரிசையில் ஒரு மனிதனாக நின்று கொண்டிருக்கவில்லை. ஜமீலா பீபியைப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டும் என்றோ, அவளுக்குக் காதல் கடிதம் எழுத வேண்டும் என்றோ அவன் கொஞ்சம்கூட முயற்சி பண்ணிக்கூடப் பார்த்ததில்லை. அதெல்லாம் தனக்குத் தெரியவே தெரியாத விஷயங்கள் என்று அடித்துச் சொல்கிறான் அப்துல்காதர் சாஹிப். அவன் தன்னைப் பற்றிப் புகழ்ந்து ஒரு பாடல் எழுதியதாக ஜமீலா பீபி பலரிடமும் கூறுவதுண்டு.
அவள் சொல்வது சுத்தப்பொய் என்று அப்துல்காதர் சாஹிப் அதை மறுக்கிறான். அவன் உண்மையில் செய்தது இதுதான். ஒருநாள் ஜமீலா பீபியை பாதையில் வைத்து மறித்த அப்துல்காதர் சாஹிப் அவளிடம் கேட்டான்:
"உன் பேரு ஜமீலா பீபிதானே?''
அவன் அப்படிக் கேட்டதே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன்னையும் தன் பெயரையும் தெரியாத ஒருவன் இந்த ஊரில் இருக்கிறானா என்ன என்று அதிசயித்த ஜமீலா பீபி பந்தாவாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்:
"ஆமா... அதுக்கென்ன?''
அதைக் கேட்டு அப்துல்காதர் சாஹிப் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு அழகு இருந்தது. அந்தச் சிரிப்பை ஜமீலா பீபியும் கவனித்தாள். அவளுக்கும் அது பிடித்திருந்தது. ஆனால், அவன் கேள்வி கேட்ட முறை- தன்னையே தெரியாது என்பது மாதிரி காட்டிக் கொண்ட விதம்- அந்தப் போக்குதான் அவளுக்குப் பிடிக்கவில்லை.
"உங்களுக்கு என்ன வேணும்?''
"விசேஷமா ஒண்ணும் வேண்டாம்.'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: "ஜமீலா பீபி, உன்னோட வாப்பாவோட பீடித் தொழிற்சாலை இருக்குல்ல? அங்கே மொத்தம் நூற்றி இருபது தொழிலாளர்கள் வேலை செய்றாங்க. நான் அவங்களோட செயலாளரா இருக்கேன். என்னோட பேர் அப்துல்காதர்!''
"ரொம்ப சந்தோஷம்'' ஜமீலா பீபி சொன்னாள்: "நீங்க நகரத்துலயே ஒரு பெரிய கேடின்னும் கேள்விப்பட்டிருக்கேன்.''
"நீ கேள்விப்பட்டது ஒரு விதத்தில் உண்மைதான். பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் திட்டமிட்டிருக்காங்க. நாங்க உங்களோட தொழிற்சாலையை மூடப்போறோம்!''
ஜமீலா பீபி கேட்டாள்:
"இதை எதற்கு என்கிட்ட சொல்லணும்? என்னோட வாப்பா கிட்ட போய்ச் சொல்ல வேண்டியதுதானே!''
"உன்கிட்ட ஏன் சொல்றேன்னா அதுக்குக் காரணம் இருக்கு...''
"என்ன காரணம்?''
அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:
"நான் உன்னை ஆழமா காதலிக்கிறேன்.''
இதைக் கேட்டதும் ஜமீலா பீபியின் இதயம் குளிர்ந்ததென்னவோ உண்மை. இருந்தாலும், அவனை அவமானப்படுத்த வேண்டும்! ஜமீலா பீபி வேண்டுமென்றே சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஏளனம் கலந்திருந்தது.
"ரொம்ப சந்தோஷம்...'' ஜமீலா பீபி சொன்னாள்: "பிறகு... வேற என்ன நாட்டுல நடக்குற விசேஷங்கள்?''
அவள் அப்படிக் கேட்டதற்கு, "க்யூ”வில் சாதாரணமாக நின்று கொண்டிருக்கும் ஒரு இளைஞனாக இருந்தால் நிச்சயம் அவன் வெலவெலத்துப் போயிருப்பான். ஆனால், அப்துல்காதர் சாஹிப் சவால் விடுவது மாதிரி சொன்னான்:
"ஜமீலா, நீ மட்டும் என்னைக் கல்யாணம் பண்ணல...?''
அந்தச் சவாலைச் சந்திக்கிற தைரியத்துடன் ஜமீலா பீபி கேட்டாள்:
"கல்யாணம் பண்ணச் சம்மதிக்கலைன்னா, என்ன பண்ணுவீங்க?''
"நான் தூக்கு மாட்டி செத்துடுவேன்'' என்றெல்லாம் அப்துல்காதர் சாஹிப் சொல்லவில்லை. அவன் சொன்னான்:
"ஜமீலா, நான் உன்னோட எலும்பை உடைச்சிடுவேன்.''
ஜமீலா பீபி பதிலொன்றும் சொல்லவில்லை.
அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:
"ஜமீலா... என்னோட வாழ்க்கையை நீ பாழ் பண்ணிடாதே. நான் உன்னை ரொம்ப ரொம்ப ஆழமா காதலிக்கிறேன். உன்னோட ஆடைகளைக் காதலிக்கிறேன். உன்னை அங்குலம் அங்குலமா நான் காதலிக்கிறேன். நீ நடந்துபோற சாலையைக்கூட நான் காதலிக்கிறேன்!''
அவனுக்கு என்ன பதில் கூறுவது? ஜமீலா பீபிக்கும் அவன் அப்படிப் பேசியது மிகவும் பிடித்திருந்தது. அதற்காக உடனே அதை வெளிக்காட்டிக் கொண்டால் நன்றாகவா இருக்கும்? ஜமீலா பீபி கேட்டாள்:
"ரோட்ல பார்க்குற எல்லாப் பெண்களையும் இதே மாதிரி தடுத்து நிறுத்தி காதல் வசனங்கள் பேசுறது உங்களோட பழக்கம்னு நினைக்கிறேன்!''