நூற்றியொரு நாக்குகள் - Page 8
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7959
இந்தப் புத்தகங்கள், மாத இதழ்கள் எல்லாமே இல்லத்தரசியின் இலாகாவாகிவிட்டது. பெண் பிள்ளைகளை நான் ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை. அவர்களுடன் மருந்துக்குக்கூட நான் பேசுவதில்லை. என்னுடைய காதுகள் சரியாகக் கேட்காது என்றும், கண்களுக்குப் பார்வை சக்தி சற்று குறைவு என்றும் என்னைப் பற்றிய ஒரு பரவலான கருத்து வெளியே நிலவிக் கொண்டிருந்தது. சொல்லப்போனால்- நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் குறை சொல்கிற அளவிற்கு ஒன்றுமே இல்லை. சில நாட்களுக்கு முன்பு கொஞ்சம் தகராறு இருந்ததென்னவோ உண்மை. நேரம் கிட்டத்தட்ட பாதி இரவைத் தாண்டிவிட்டது. உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வீட்டைச் சுற்றியிருக்கும் தோட்டத்தில் உள்ள சில பாம்புகளும் தேள்களும், சில நரிகளும் மட்டும் உறங்காமல் விழித்திருக்கிறார்கள். அவர்களும் பெரிய சத்தங்கள் எதுவும் எழுப்புவதில்லை. ஆனால் நான் உறக்கத்தில் இருக்கிறேன். அருகில் என் மனைவி படுத்திருக்கிறாள். சுற்றிலும் ஒரே நிசப்தம். அப்போது-
"நான் காண்பிக்கிறேன்...” என்று கூறியவாறு நம்முடைய பாதி துள்ளி எழுந்து என்னை மிதிக்கவும் அடிக்கவும் கடிக்கவும் ஆரம்பிக்கிறாள். என்ன இருந்தாலும் நான் கணவனாயிற்றே! திடுக்கிட்டு எழுந்து என்ன விஷயம் என்று அவளிடம் விசாரிக்க முற்படுகிறேன். விஷயம் சுவாரசியமானதுதான். அது என்னவென்றால், நம்முடைய அக்னிசாட்சி ஒரு கனவு கண்டிருக்கிறாள். அதில் என் பக்கத்தில் படுத்திருந்தது அவளல்ல- இன்னொரு பெண். அதற்காகத்தான் என்னை அப்படி மிதித்து கடித்து அவள் அடித்திருக்கிறாள்.
“நான் வேற யாரோ ஒரு பொண்ணுன்னு கனவு கண்டேன்!''
“சரிதான்... சுத்த பைத்தியமா இருப்பே போல இருக்கே! அதற்காக என்னை எதுக்கு நீ அடிக்கணும்? நீ வேற ஒரு பெண் கிடையாது. நீயேதான். சரி... இப்போ தூங்கு... குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்...''
சம்பவம் எப்படி பார்த்தீர்களா? பெண்ணிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்து என்ன பிரயோஜனம்? கடவுள் என்னவோ பெண்கள் பக்கம்தான் நின்று கொண்டிருக்கிறது. ரத்த சாட்சி என்று சொன்னால் ஆண் என்று அர்த்தம். அதனால் பஷீர் என்று சொல்லப்படுகிற இந்த ரத்த சாட்சி சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. "பிரபஞ்சத்திலுள்ள ரத்த சாட்சிகளே!
உஷார்... உஷார்... ஜாக்தே ரஹோ!'
இப்படி எச்சரிக்கையுடன நான் நடந்துகொண்டிருக்க, ஒரு நாள் என்னில் பாதி சொல்கிறாள்:
“ஒரு தையல் டீச்சர் இருந்தாங்கன்னா, நிறைய அவுங்கக்கிட்ட இருந்து நான் கத்துக்க வசதியா இருக்கும்!''
பஹுத்தச்சா ஹெ! இப்படித்தான் சௌபாக்கியவதி மிஸ். வாசந்தி வீட்டுக்கு வந்தாள். எப்போது பார்த்தாலும் ஒரே பேச்சுத்தான். சிரிப்புதான். ஆர்ப்பாட்டம்தான். வெட்டு, தையல்... எல்லாமே பஹுத் குஸி ஹெ! மாதங்கள் வேகமாக நீங்குகின்றன. நம்முடைய குடும்ப நாயகி சௌபாக்கியவதி ஃபாபி தையலில் ஒரு எம்.ஏ.பி.எச்.டி. ஆகி டாக்டர் ஃபாபியாக மாறுகிறாள். அப்படி யென்றால் கிம் பஹுனா! ஒரு சிறு இடைச்செருகல். எனக்கு நான்கைந்து நாளிதழ்களும், சில வார இதழ்களும், சில மாத இதழ்களும் பதிவாக வருகின்றன. இவற்றைப் படித்து உத்தமன் ஆகப் போகிறோமா என்ன? மூன்று மாதம் கழித்து, இவற்றை விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். ஓ... இந்த இரண்டு சௌபாக்கியவதிகளும் சேர்ந்து என் வயிற்றில் அடித்திருக்கிறார்கள். பத்திரிகைகள் அனைத்தையும் வெட்டி ப்ளவஸுகளாக்கி இருக்கிறார்கள். இங்கிலீஷ் மார்புக் கச்சைகளாக மாற்றி இருக்கிறார்கள். நான் இது பற்றிக் கேட்டதற்கு சௌபாக்கியவதிகள் இரண்டு பேரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்:
“அது அப்படித்தான்!''
அது அப்படித்தான் என்றால் அது அப்படித்தான். இதற்கு அப்பீலோ வேறு ஏதாவதோ இருக்கிறதா என்ன?
“சார்... உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.'' சௌபாக்கியவதி மிஸ். வாசந்தி சொன்னாள்: “கொஞ்ச நாட்களாகவே நான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்!''
நான் நம்முடைய சௌபாக்கியவதியின் முகத்தைப் பார்த்தேன். "நான் நிரபராதி. எனக்கு எதைப் பற்றியும் எதுவும் தெரியாது' என்பது மாதிரி அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
சௌபாக்கியவதி மிஸ். வாசந்தி சொன்னாள்: “சார் இந்த மெஷின் ஒரு ஓட்டை வண்டி மாதிரி ஆயிடுச்சு. இவங்க இனிமேலும் இந்த மெஷினை மிதிச்சாங்கன்னா, கட்டில்ல படுத்துக் கிடக்க வேண்டியதுதான். சார்... அதனால புதுசா ஒரு மெஷினை வாங்கிக் கொடுங்க!''
நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். எதுவுமே தெரியாதது மாதிரி- ஒருவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவள் அமர்ந்திருந்தாள். ஒன்றுமே தெரியாத அப்பாவி! அடடா...!
நான் சொன்னேன்: “இப்போ அதுக்கு என்கிட்ட பணம் இல் லியே! புது மெஷின் வாங்குறதுன்னா நிறைய பணம் வேணுமே!''
அதற்குப் பிறகு தையல் மிஷின் சம்பந்தமான தலையணை மந்திரங்கள்... இப்போது என் வலது காதிலிருந்து இடது பக்க காதுக்கு ஒரு லாரியே ஓட்டிப் போகலாம். அந்தச் சமயத்தில் என்னிடம் இருபது ஜிப்பாக்கள் இருந்தன. ஒவ்வொரு குற்றம் குறையாகச் சொல்லி அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வெட்டி, என் மனைவிக்கு ப்ளவுஸ், மகளுக்கு உடுப்பு, மனைவியின் தங்கைகளுக்கும் சினேகிதிகளுக்கும் ப்ளவுஸ் என்று தைத்துவிட்டாள் என் உடலில் பாதியானவள். எவ்வளவு பெரிய தடிச்சியாக இருந்தாலும், இல்லாவிட்டால் ஒல்லிக்குச்சியாக இருந்தாலும் ஒரு ப்ளவுஸ் தைப்பதற்கு போஸ்ட் ஸ்டாம்ப் அளவு துணி இருந்தால் போதும்! அந்தச் சமயத்தில்- அதாவது பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை என்னிடம் அருமையான ஒரு பேன்ட் இருந்தது. நல்ல வெண்மை நிறம். வெள்ளைப் பட்டு போன்ற துணியால் ஆனது. சூப்பர் பேன்ட் அது. அவன் மதராஸ், கோயம்புத்தூர், மைசூர், எர்ணாகுளம், பெங்களுர் போன்ற பல இடங்களுக்கும் போய் விட்டு வந்திருக்கிறான். அவனின் ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு குறையும் சொல்வதற்கில்லை. நன்றாகத் தோய்த்து இஸ்திரி போட்டு மடித்து பெட்டியில் அது வைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் நான் அதைப் பார்த்தால், ஆட்டை அறுத்து முண்டமாகத் தொங்கவிட்டிருப் பதைப்போல ஒரு காலும் இன்னும் கொஞ்சம் துணியும் தையல் மெஷின் இருக்கும் அறையில் ஒரு ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பேன்ட்டின் இன்னொரு கால் இரண்டு மூன்று இங்கிலீஷ் மார்புக் கச்சைகளாக மாறி மேஜை மேல் கிடக்கிறது.
“அடியே... நான் ஆசையா வச்சிருந்த பேன்ட்தானே இது?''
“ஆமா... ஆனா இது ரொம்பவும் பழசாயிடுச்சு. இப்போ உங்களுக்கு எதுக்கு பேன்ட்? உங்களுக்குத்தான் வயசாயிப் போச்சில்ல...!''
“சரிதான்...''