நூற்றியொரு நாக்குகள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7959
“பரமு, உனக்குத் தெரியாதா எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு...?''
பைத்தியம் என்று நான் சொல்ல வருவது என்னவென்றால்- இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் பைத்தியம் என்ற ஒன்று இருக்கவே செய்கிறது. (ஸாரி.. பெண்களுக்கு இல்லை. இல்லவே இல்லை). ஒரே ஒரு நாக்கை வைத்திருக்கும் ஆண்களுக்கு நிச்சயம் பைத்தியம் இருக்கிறது. 5, 10, 25, 75- என்ற சதவிகிதத்தில்தான் அது வித்தியாசப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனக்கு 99 சதவிகிதம் பைத்தியம் பிடித்திருந்தது. என்னை காரில் ஏற்றி சிகிச்சைக்கு அழைத்துக்கொண்டு போனவர்கள் எர்ணாகுளத்தில் உள்ள கிருஷ்ணன் நாயர் வாட்ச் கம்பெனியின் உரிமையாளர் குட்டப்பன் நாயர், நர்மதா ராகவன் நாயர், எம்.பி. கிருஷ்ணபிள்ளை, பெருன்ன தாமஸ் ஆகியோர். (குட்டப்பனும், நர்மதா ராகவன் நாயரும், பெருன்ன தாமஸும் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார்கள். அவர்களின் ஆத்மாக் களுக்கு கடவுள் நிரந்தர அமைதியைத் தரட்டும்). வைத்தியர் வல்லப்புழ எனக்கு சிகிச்சை செய்தார். எனக்கு- சொல்லப் போனால்- பிரமாதமாக சிகிச்சை செய்தார்கள். எண்ணெய், களிம்பு, கஷாயம், நெய், மாத்திரைகள், குளியல்- இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது சிகிச்சை. நானே கிட்டத்தட்ட ஒரு வைத்தியன் மாதிரி ஆகிவிட்டேன் என்பதே உண்மை. அந்த வகையில் நானே ஒரு பைத்தியக்கார வைத்தியனாகவும் நோயாளியாகவும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சியாக நாட்களை ஓட்டிக்கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த திருமண விஷயம் என் முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிறது. "குரு, நீங்க கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும்.” இந்த வார்த்தைகள் எந்த நேரமும் என் காதுகளில் முழங்கிக் கொண்டே இருந்தன. என்னைச் சிலர் இப்படித்தான் குரு என்று அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். இதையே மதராஸ் போன்ற தமிழ் பேசும் இடங்களில் "உஸ்தாத்” என்று அழைப்பார்கள். என்னை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்பது எனக்கே தெரியாது. எனக்கு சிஷ்யர் களோ, சிஷ்யைகளோ கிடையாது. உண்டு என்று சொன்னால், அது எனக்கே தெரியாத ஒரு விஷயம். ஆனால், அதே நேரத்தில் சிலர் என்னை "குரு' என்று அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் என்ன செய்வது?''
“குரு...!'' பரமு சொன்னான்: “எனக்குத் தெரியும். இருந்தாலும் கட்டாயம் போகணும். ராமுவோட ஒரு விருப்பம் இது. நாம போகலைன்னா, ராமு கல்யாணம் பண்ணிக்கவே மாட்டான். அவனுக்கு நடக்கப் போறதே ஒரே ஒரு கல்யாணம்தான். நாம கட்டாயம் போகணும். குரு...''
“மருந்துகள், எண்ணெய், கஷாயம்...''
“எல்லாத்தையும் ஒரு பெட்டியில எடுத்துட்டுப் போயிடுவோம்.''
“இதை யாரு சுமந்துக்கிட்டு போறது? நீயா?''
“ஸ்டுடியோவுல இருந்து ஒரு பையனை வேணும்னா கூட அழைச்சிட்டுப் போவோம்!''
ரைட். இதை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால், அடுத்த காட்சி ஒரு பஸ் நிலையத்தில் நடக்கிறது. பையனும் பரமுவும் நானும் பஸ்ஸில் அமர்ந்திருக்கிறோம். நான் டிரைவருக்குப் பின்னால் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்குப் பக்கத்தில் பரமுவும். பஸ் "ஹார்ன்” அடித்தவாறு மெதுவாக நகர ஆரம்பிக்கிறது. நான் போக வேண்டிய இடத்தை நோக்கி அது தன் பயணத்தைத் தொடங்குகிறது. (நாங்கள் எவ்வளவோ உடல் வருத்தங்களையும் சகித்துக்கொண்டு ராமுவின் வீட்டிற்குப் போகிறோம். ராமுவிற்கு தூரத்தில் நின்றவாறு, என்னுடைய தலைமையில் அவனை முதலில் குளிப்பாட்டுகிறார்கள். தேங்காய்கள் எதுவும் இல்லாத ஒரு தென்னை மரத்திற்குக் கீழேதான் ராமுவை உட்கார வைத்திருந்தார்கள். இவ்வளவு நாட்களாக குளிக்காமல் ராமு தன் உடலில் சேர்த்து வைத்திருந்த எல்லாமும் தென்னை மரத்திற்கு உரமாகப் போய்ச் சேரட்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. குளியல் முடிந்து, ராமுவின் பல் தேய்க்கும் நிகழ்ச்சி. தொடர்ந்து முடிவெட்டு, சவரம். அதற்குப் பிறகு இன்னொரு குளியல். அதைத் தொடர்ந்து யுடிக்லோன் எடுத்து விருப்பப்படி ராமுவின் உடலில் பூசப்படுகிறது. பவுடர் போடுகிறார்கள். வெளியே சென்ட் தேய்ப்பு. திருமண ஆடைகள் அணிவித்து, பன்னீர் தெளித்து, மேள தாளங்கள் முழங்க அவனைக் கொண்டு சென்று முன்னால் சொன்ன சந்தன நிறம் கொண்ட இளம் பெண்ணுக்கு அருகில் நிறுத்த, ராமு கார்யாட் அந்த ஊர்க்காரர்களும், வெளியூர்களிலிருந்து வந்திருந்தவர்களும், ஏகப்பட்ட ஆண்களும் பெண்களும் சாட்சியாக இருக்க, அவளின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். பிறகு... ராமுவிற்கு ஐந்தாறு பிள்ளைகள் பிறக்கிறார்கள். சுபம்.) அப்படியானால்... முக்கிய கதை இது இல்லை என்பது புரிகிறது அல்லவா? திருமணத்திற்குப் போகிறபோதுதான் அந்த நாயர் துரோகம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நான்தான் சொன்னேனே, பரமுவும் நானும் பஸ்ஸில் அருகருகில் அமர்ந்திருக்கிறோம் என்று! நாங்கள் வெளியே நகர்கிற காட்சிகளைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக் கிறோம் (இப்போதைக்கு நாம் குழந்தைப் பருவத்திற்கு கொஞ்சம் போய் வருவோம். நான் இப்போது அமர்ந்திருப்பது மரத்தடிக்குக் கீழே. மாமரத்தின் ஒரு கிளையில் ஒரு மஞ்சள் நிற மாம்பழம். "அத முதல்ல பார்த்தது நான்தான்' என்று நான் மார் தட்டி சொல்லிக் கொள்கிற மாதிரி அந்த மாம்பழம் தொங்கிக் கொண்டிருக்கிறது. மற்ற ஆட்கள் யாருமே அந்த மாம்பழத்திற்குச் சொந்தம் கொண்டாட முடியாது. எந்த கோர்ட்டுக்குப் போனாலும் நான் சொல்வதைத்தான் யாருமே சொல்வார்கள். காற்று வீசுகிறது. மாம்பழம் கீழே விழுகிறது. மாம்பழத்தைத் தேடி யாரும் ஓடி வரவில்லை. நான் மெதுவாகச் சென்று மாம்பழத்தை எடுத்து இலேசாக முகர்ந்து பார்த்து அதையே ஸ்டைலாக வைத்த கண் எடுக்காது நோக்கிக் கொண்டிருக்கிறேன்.) இப்போது நான் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிறேன்.
“குரு...'' பரமு சொன்னான்: “முதல்ல பார்த்தது நான்தான்...''
நான் வெளியே பார்த்தேன். பஸ்ஸுக்கு நேர் எதிராக ஒய்யாரமாக ஒரு இளம் பெண் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். அவளை முதலில் பார்த்தது பரமுவாக இருந்ததால், நான் பதிலுக்கு ஒன்றுமே கூறவில்லை. அவள் பரமுவிற்குச் சொந்தமானவள்தான்! அவள் தன் போக்கில் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். பஸ் அது பாட்டுக்கு சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு எங்களின் முக்கிய வேலையே "முதல்ல பார்த்தது நான்தான்” என்று சொல்வதாக ஆகிவிட்டது. தூரத்தில் வருகின்றபோதே பெண்களைப் பார்த்து "முதல்ல பார்த்தது நான்தான்' என்று பரமுவால் சொல்ல முடிந்தது. நானும் அப்படி முதலில் பார்க்க முயற்சித்துப் பார்த்தேன். (இனி என்னுடைய தூரப் பார்வையைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். முன்பு எனக்கு பல புத்தகக் கடைகளும் சொந்தத்தில் இருந்தன.