நூற்றியொரு நாக்குகள் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7959
பரமு சற்று தூரத்தில் இன்னொரு இருக்கையில் அமர்ந்து அவனின் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியவாறு என்னைப் பார்த்து சிரித்தான். அதைப் பார்த்து எனக்கு வந்ததே கோபம்! நாயர்கள் எல்லாரையும் (ஸாரி... ஆண்களை மட்டும்) கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும்போல் இருந்தது எனக்கு.
நான் எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். கோபம், அவமானம்.. எல்லாம் என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தது. கடவுளே... இந்த பாதிரியார் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? கடவுளே... பஸ் வேகமாக ஓடக் கூடாதா? பஸ் நின்றவுடன் இந்த நல்ல மனிதரின் முகத்தையே பார்க்காமல் ஓடி ஒளிந்து கொள்ளலாமே! இந்த பாதிரியாருக்கு நான் யார் என்பது தெரியாது. தெய்வமே! என்னைக் காப்பாற்று, என்னையும் என் நிலையையும் பார்த்த பாதிரியார் மெல்ல சிரித்தார். பிறகு சொன்னார்: “பரவாயில்ல... மிஸ்டர் பஷீர்... பரவாயில்லை. நான் உங்களோட ரசிகன். பொற்றெக்காட், பொன்குன்னம் வர்க்கி, கேசவ தேவ், தகழின்னு எல்லாருடைய புத்தகங்களையும் நான் படிப்பேன். நீங்க சொல்ற பல விஷயங்கள்லயும் எனக்கு சில நேரங்கள்ல உடன்பாடு இல்லாமப்போகும். இருந்தாலும் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உங்க அறிமுகம் கிடைச்சதுக்காக, நான் மிகவும் சந்தோஷப்படுறேன்....''
நான் சொன்னேன்: “மன்னிக்கணும் ஃபாதர்... வர்க்கி, தேவ், பொற்றேக்காட், தகழி- அவங்கள்லாம் என்னைப்போல இல்ல. அவங்கள்லாம் ரொம்பவும் நல்லவங்க!''
பாதிரியார் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
“எனக்குத் தெரியும்.'' அவர் சொன்னார்: “அவங்களைப் பற்றி நான் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கேன். இருந்தாலும் எனக்கு அவங்களையும்... பஷீர், உங்களையும் ரொம்பவும் பிடிக்கவே செய்யுது.'' அவர் தொடர்ந்து சிரித்தவாறு சிவந்த முகத்துடன் சொன்னார்:
“என் தொடையை- பஷீர்... உங்களைத் தவிர வேற யாரும் இதுவரை கிள்ளினது இல்ல...''
நான் சொன்னேன்:
“ஃபாதர், என்னை நீங்க மன்னிக்கணும்...''
“மன்னிக்க மாட்டேன்.'' பாதிரியார் சொன்னார்: “பஷீர், நான் இதை எப்பவும் நினைச்சுப் பார்த்து சிரிப்பேன்!''
பஸ் நின்றபோது நான் பாதிரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு நடந்தேன். எனக்குப் பின்னால் பரமு, பரமுவிற்குப் பின்னால் பெட்டியைச் சுமந்துகொண்டு வரும் பையன்.
“குரு...'' பரமு அழைத்தான். நான் வாயே திறக்கவில்லை. ஆனால், பரமு விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் அழைக்கவே நான் சொன்னேன்:
“உன்னைப்போல நாகரீகம் தெரியாத ஒரு முட்டாளை நான் வாழ்க்கையில பார்த்ததே இல்ல. அந்த நல்ல மனுஷனான பாதிரியாரை என் பக்கத்துல உட்காரச் சொன்ன விஷயத்தை என்கிட்ட நீ சொல்ல வேண்டாமா? "இது நான் கிடையாது. ஜாக்கிரதை! இது ஒரு பரிசுத்தமான, கத்தோலிக்க பாதிரியார். ரோட்ல போற பெண்களைப் பார்த்துட்டு, "முதல்ல பார்த்தது நான்தான்'னு சொல்லி தொடையைக் கிள்ளிடாதீங்க. உஷார்... உஷார்'னு என்னைப் பார்த்து முன்கூட்டியே நீ சொல்ல வேண்டாமா?''
“குரு...'' பரமு சொன்னான்: “பஸ் ஒரு இடத்துல நின்னப்போ ஒரு பீடி பிடிக்கலாம்னு நான் கீழே இறங்கினேன். கொஞ்ச நேரம் கழிச்சு நான் பஸ்ல ஏறினா அந்த பாதிரியார் குரு. உங்க பக்கத்துல
உட்கார்ந்திருக்கார். நான் போய் வேறொரு இடத்துல உட்கார்ந்துக்கிட்டேன். அது என்னோட தப்பா? நான் பார்க்குறப்போ குரு, நீங்க பாதிரியாரோட தொடையைக் கிள்ளிக்கிட்டு இருக்கீங்க. பாதிரியார் நெளிஞ்சுக்கிட்டு இருக்காரு. "பார்த்தேன்... பார்த்தேன்... ஆமா... ஆமா...”ன்னு பாதிரியார் சொல்லிக் கிட்டு இருக்காரு. நான் என்ன செய்யிறது? அந்தக் காட்சியைக் கண்ணால பார்க்குறப்போ நல்லாத்தான் இருந்துச்சு. குரு... என்னை மன்னிச்சிடுங்க. நான் இந்த விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லுவேன். குரு, உங்களுக்கு உண்டான இந்த தர்மசங்கடமான நிலைமையை நினைச்சுப் பார்த்து எல்லா காலத்துலயும் நான் சிரிப்பேன்!''
இவ்வளவையும் சொல்லிவிட்டு நான் மனைவியிடம் சொன்னேன்:
“அடியே... அந்தப் பாதிரியார்தான் இந்தப் பாதிரியார். அந்தச் சம்பவத்தை நினைச்சுப் பார்த்துதான் அவர் என்னைப் பார்த்து குலுங்கி குலுங்கிக் சிரிச்சது. புரியுதா?''
நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவள் எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்தாள். அவளின் முகத்தில்கூட எந்தவிதமான உணர்ச்சிகளையும் பார்க்க முடியவில்லை. அதற்குள் நாங்கள் விருந்துக்குப் போகிற வீடு நெருங்கிவிட்டது. மனைவியின் முகத்தில் இலேசான ஒரு சிறு புன்னகையை மட்டும் பார்க்க முடிந்தது.
விருந்து முடிந்தது. புதிய புடவையையும், புதிய ப்ளவுஸ்ஸையும், நகைகளையும் அங்குள்ள பெண்கள் நன்றாகப் பார்த்து முடித்தார்கள். பாராட்டினார்கள். பொறாமைப்பட்டார்கள். என்னவெல்லாமோ உட்கார்ந்து பேசினார்கள். பேச்சினூடே பெண்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நொறுக்குத் தினியும் தேநீரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்புகிறபோது, என் மனைவியும் விருந்து வீட்டைச் சேர்ந்த பெண்களும் சற்று தூரத்தில் போய் நின்று தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டார்கள். தொடர்ந்து அவர்களின் சிரிப்பு சத்தம். பிறகு என் மனைவியும், வேறு சிலரின் மனைவிகளும் சேர்ந்து பூச்செடி கொம்புகளையும் சின்னச்சின்ன பேப்பர் பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். செடிகள் வீட்டில் ஏற்கெனவே நிறைய இருக்கின்றன. வேண்டாம் என்று சொல்ல நினைத்தேன். ஆனால், நம் அக்னி சாட்சியின் முகத்தையும் பார்வையையும் பார்த்தபோது, எதற்கு வீண் வம்பென்று நான் அந்தப் பூச்செடிக் கொம்புகளையும் பேப்பர் பொட்டலங்களையும் கையில் எடுத்துக்கொண்டேன். என் செல்வ மகள் இரண்டு மூன்று பொட்டலங்களைக் கையில் எடுத்துக் கொண்டாள். படியை விட்டு இறங்கியபோது, என் மனைவி பின்னால் திரும்பிப் பார்த்து மற்ற பெண்களிடம் சொன்னாள்:
“இன்னைக்கே அனுப்பிருங்க...''
விருந்து வீட்டில் இருந்த நான்கு பெண்கள், தங்களின் நானூற்று நான்கு நாக்குகளாலும் சொன்னார்கள்.
“அதை இன்னைக்கு அனுப்பி வச்சிர்றோம். இன்னொன்னை நாளைக்கு...''
“மறந்திடக்கூடாது...''
வீட்டிலிருந்த பெண்கள் சொன்னார்கள்:
“எப்படி மறப்போம்?''
திரும்பி நாங்கள் வருகிறபோது, மர நிழலில் நின்று கொண்டிருக்கிறார் பாதிரியார்.
“பஸ் இன்னும் வரலியா?''
“வரும்...''
“நம்ம வீட்டுக்குப் போகலாமா, ஃபாதர்?''
பாதிரியார் சொன்னார்:
“நான் இன்னொரு நாளைக்கு வர்றேன்!''
நாங்கள் நடந்தோம். பாதிரியார் குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு என் மனைவியையும் மகளையும் பார்த்துச் சொன்னார்.
“நான்தான் பார்த்தேன்...''
நான் சொன்னேன்:
“முதல்ல பார்த்தது நான்தான்...''
சுபம்.
பின்குறிப்பு: ஸாரி. ஒரு சுபமும் இல்லை. தாம்பத்ய வாழ்க்கை என்று சொல்லப்படுகிற இந்தப் போராட்ட மைதானத்தில் சுபத்திற்கு எங்கே இடம்? நான் கையில் சுமந்துகொண்டு வந்த செடிக் கொம்புகளை மண்ணில் குழி தோன்டி நட்டு, நீர் ஊற்றினேன்.