நூற்றியொரு நாக்குகள் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7959
காலை ஒன்பது மணிக்கு கடையைத் திறப்பேன். இரவு ஒன்பது மணிக்கு அதை மூடுவேன். பகல் முழுவதும், இரவின் ஆரம்பத்திலும் நான் கட்டா யம் புத்தகக் கடையில் இருக்க வேண்டிய நிலை. தங்கியிருந்தது மேல் மாடியில் இருந்த குளியலறை இணைக்கப்பட்ட ஒரு அறை. அறையில் நான்கைந்து சாளரங்கள் உண்டு. நான்கு சாளரங்களுக்கு அப்பால் ஆறேழு அழகிய இளம் பெண்கள் இருந்தார்கள். அவர்களை நான் ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை. சைட்டடிக்கும் பழக்கமே இல்லாமல் நல்ல பண்பாடுள்ள மனிதனாக நான் இருந்தேன் என்பதைச் சுருக்கமாக எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல் காரணம்- அவர்களைப் பார்க்கிற அளவிற்கு எனக்கு நேரமில்லை. இரண்டாவது- அந்தப் பெண்களின் தந்தையையும் தாயையும் எனக்கு நன்றாகவே தெரியும். என்னையும் அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால் மிகவும் ஒழுக்கமான மனிதனாக நான் என் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். ஆனால், ஐந்தாவது சாளரம் இருக்கிறதே! அதுதான் என்னுடைய காதல் சாளரமாக இருந்தது. அதன் வழியாகப் பார்த்தால் தூரத்தில்... ரொம்பவும் தூரத்தில்... ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கலாம். நான் காலையில் புத்தகக் கடைக்குப் புறப்படுகிற அவசரத்தில் ஜிப்பா அணிந்து முகம் ஸ்டைலாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக காதல் சாளரத்தின் அருகில் இருக்கும் பெரிய கண்ணாடியை நோக்குவேன். அவளுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு, வாசல் கதவைப் பூட்டிவிட்டு வெளியே புறப்படுவது என்பது அன்றாட வழக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் என்னை "குரு' என்றழைக்கும் ஒருவன் என்னுடைய அறைக்கு விருந்தாளியாக ஒரு நாள் வந்தான். நான் புத்தகக் கடைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்ததால், அவனைப் பார்த்துச் சொன்னேன்:
“இங்க பாரு... முன் பக்கம் இருக்குற நாலு ஜன்னல்கள் வழியாகவும் பார்க்கலாம். எந்தவித தடையும் இல்லாம இளம் பெண்களை சைட் அடிக்கலாம். ஆனா, அஞ்சாவது இருக்கிற ஜன்னல் வழியா மட்டும் பார்க்கக்கூடாது. அது என்னோட சொந்த காதல் ஜன்னல். அது வழியா பாக்குறப்போ தெரியிற அழகியை முதல்ல பார்த்தது நான்தான்!''
நான் போய்விட்டு, திரும்பவும் இரவு ஒன்பதரை மணிக்கு அறைக்கு வந்தேன். குளியல், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் வந்திருந்த ஆள் கேட்டான்: “குரு... நீங்க எவ்வளவு நாளா அந்தப் பெண்ணைக் காதலிக்கிறீங்க?'' நான் சொன்னேன்: “ரெண்டு மூணு மாசமா இருக்கும். என்ன, பார்த்தியா? பெண் எப்படி இருக்கா?'' விருந்தாளி இளைஞன் சொன்னான்: “மான் கண்ணைக் கொண்டவ... அவளை இதுவரை ஒழுங்கா நீங்க பார்த்தது இல்லியா?'' நான் சொன்னேன்: “அதுக்கு எங்கே நேரம் இருக்கு? ஒரு காதல் கடிதம் எழுதி இருக்கலாம். அவளோட பேரு, முகவரி எதுவுமே எனக்குத் தெரியாது!'' விருந்தாளி சொன்னான்: “அப்படின்னா... ஒரு பூதக் கண்ணாடி வாங்கிக்கலாம்ல?'' நான் கேட்டேன்: “என்ன விஷயம் சொல்லு?'' அவன் சொன்னான்: “நான் அவளைச் சரியா பார்த்தேன். அவள் ஒண்ணும் கன்னிப்பெண் இல்ல. ஒண்ணோ ரெண்டோ பெத்தவ மாதிரிதான் தெரியுது.'' நான் சொன்னேன்: “சே.. அப்படியா? அவ ஏற்கெனவே கல்யாணம் ஆனவன்னு நான் நினைக்கவே இல்ல. கல்யாணம் ஆனவங்களை தாய் மாதிரி நினைக்கணும்னு சொல்லுவாங்க. இருந்தாலும்... இப்போ என்ன செய்றது? நான் அவளைக் காதலிக்கிறேனே!'' விருந்தாளி இளைஞன் சொன்னான்: “நீங்க காதலிக்கிறது சரி... ஆனா, அவளுக்கு ரெண்டு கொம்புகள் இருக்கு. அதாவது- நீங்க பார்த்தது ஒரு வெள்ளை நிற பகன்றதை முதல்ல புரிஞ்சுக்கணும்.'' இதைக் கேட்டதும் உண்மையிலேயே நான் ஆடிப் போனேன். இப்படித்தான் காதல் விஷயங்களில் திடீர் திடீர் என்று எனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். இதற்கு முன்பும் இத்தகைய சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அது இப்போதும் நடந்திருக்கிறது. இந்தக் காதலைப் பற்றி ஒரு காவியம் இயற்றிவிட்டு, மரத்தில் தூக்குப் போட்டு இறக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு விதத்தில் என் மனதை நான் சமாதானப்படுத்திக் கொண்டேன். என்ன இருந்தாலும், நான் பார்த்தது பசுதானே! நல்ல வேளை... பெண்ணைப் பார்த்திருக்கிறேன். இதுவே ஒரு காளையாக இருந்து, தினமும் அதைப் பார்த்து நான் சல்யூட் அடித்து காதலித் திருந்தேன் என்றால், நிலைமை எவ்வளவு மோசமாகப் போயிருக்கும்?).
இப்படி நானும் பரமுவும் எத்தனையோ பெண்களை முதல் முறையாகப் பார்த்திருக்கிறோம். என் தொடையை எத்தனையோ முறை பரமு கிள்ளியிருக்கிறான். பரமுவின் தொடையை எத்தனையோ முறை நான் கிள்ளியிருக்கிறேன். அவன் தொடையைக் கிள்ளியவாறு நான் சொல்வேன்.
“முதல்ல பார்த்தது நான்தான்... பாரு...''
இந்த வகையில் நான் பல மைல் கற்கள், சில ஆடுகள், பசுக்கள், ஒன்றிரண்டு காளைகள், சில கிழவிகள், சில இளம் பெண்கள் ஆகியோரைக் காதலித்து விடுவதையும் பரமுவின் தொடையில் ஸ்டைலாகக் கிள்ளுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தேன்.
பஸ் பல இடங்களிலும் நின்றது. எத்தனையோ பேர் ஏறினார்கள்; எத்தனையோ பேர் இறங்கினார்கள். இவற்றில் எல்லாம் நான் சிறிது கூட அக்கறையே எடுத்துக் கொள்ளவில்லை. பஸ் ஓடிக்கொண்டே இருக்கிறது. பல பெண்களைப் பார்க்கிறேன். அவர்களைப் பார்த்ததும் “முதல்ல பார்த்தது நான்தான்'' என்றேன் உரத்த குரலில். தொடையைக் கிள்ளுகிறேன். தொடை வலியால் நெளிகிறது. மீண்டும் கிள்ளுகிறேன். அப்போது, “ஆமா... ஆமா... நானும் பார்த்தேன்'' என்றொரு புதிய குரலும் தலையாட்டலும்! பரமுவின் குரல் இப்படி இருக்காதே! நான் பார்க்கிறேன். அவ்வளவுதான்- அடுத்த நிமிடம் என் முகமெல்லாம் வெளிறிப் போய்விட்டது. நான் அப்படியே சிலை என உட்கார்ந்துவிட்டேன். கடவுளே! ஓடுகிற பஸ்ஸில் இருந்து தப்பிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? ஒரு வழியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நடந்த சம்பவம் என்ன என்கிறீர்கள்? நான் கிள்ளிக் கொண்டிருந்தது பரமுவின் அழுக்கடைந்த தொடையை அல்ல- ஒரு சுத்தமான தொடையை. “முதல்ல பார்த்தது நான்தான்'' என்று டாம்பீகமாக நான் பெருமையடித்துக் கொண்டிருந்தது- எந்தக் காலத்திலும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று சபதம் போட்டிருக்கும் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியாரிடம். அவர் தான் இப்போது பரமு உட்கார்ந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தார். "ஆமா... ஆமா... நானும் பார்த்தேன்' என்று நெளிந்து கொண்டு சொன்னது அவர்தான். அதைப் பார்த்து நான் பேயறைந்தது போல் வெளிறிப் போய் உட்கார்ந்திருந்தேன். வாயே வறண்டு போய்விட்டது.