தீனாம்மா
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8895
அவள் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். சப்பையான மூக்கு, கறுத்து தடித்து மலர்ந்து காணப்படும் உதடுகள், பாதி முடிய கண்கள், மெலிந்த கழுத்து, கரிக்கட்டையைவிட கருத்த நிறம்- இதுதான் அவளுடைய உருவம். அந்த அவலட்சணத்திற்கு மத்தியில் அழகின் அம்சம் ஏதாவது மறைந்திருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்வதைப்போல அவள் நீண்ட நேரம் அப்படியே கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“தீனாம்மா அக்கா... அந்த கண்ணாடியை ஏன் அசிங்கமாக்குறீங்க?” வாசலில் எட்டிப் பார்த்துக் கொண்டே சாராம்மா கேட்டாள்.
“உனக்கு பாதிப்பு எதுவும் இல்லையே?” ஒரு வெளிப்படையான சிரிப்புடன் தீனாம்மா பதில் சொன்னாள்.
“பாதிப்பு இல்லைன்னாலும், பார்த்ததைச் சொல்ல வேண்டாமா?”
அதற்கு தீனாம்மா எந்த பதிலும் கூறவில்லை. சாராம்மா குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே அங்கிருந்து ஓடினாள். அவளுடைய குரல் வடக்கு திசையில் இப்படிக் கேட்டது: “அம்மா, இங்கே பாருங்க... தீனாம்மா அக்கா கண்ணாடியைக் கீழே போட்டு உடைக்குறாங்க.”
தீனாம்மா கண்ணாடியை மேஜை மீது எறிந்தாள். அவளுடைய கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அவள் கட்டிலில் போய் உட்கார்ந்து, தேம்பித் தேம்பி அழுதாள். ஒவ்வொரு நாளும் அவள் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள். அவலட் சணத்திலிருந்து அழகை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளக் கூடிய திறமை அவளுக்கு இருந்தது. அந்த காரணத்தாலேயே அவள் தன்னுடைய முகத்தை மிகவும் அதிகமாக வெறுத்தாள். ஒரு பெண் அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவளாக இருப்பது- அவளுடைய அழகற்ற தோற்றத்தைப் பற்றி அவளே நன்கு புரிந்து கொண்டிருப்பது- அதைவிட தோல்வியானதும் சோகம் நிறைந்ததுமான ஒரு வாழ்க்கை வேறு இல்லை.
தீனாம்மா கண்ணாடியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அவள் அதை கிணற்றில் வீசி எறிந்தாள். எப்போதும் அவளுடைய அவலட்சணமான தோற்றத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் கண்ணாடி- இதற்குமேல் அதை பார்ப்பது இல்லை என்ற முடிவை அவள் எடுத்தாள்.
ஆனால், உயிருள்ள ஒரு கண்ணாடி அந்த வீட்டிலேயே இருந்தது- சாராம்மா. அவள் எப்போதும் தீனாம்மாவின் அவலட்சணத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள்.
“கொக்கைப் போன்ற கழுத்து, ஒட்டிய
மூக்கு பாதி மூடிய கண்கள்,
யானையின் உதடுகளைப் போன்ற அதரங்கள்
மான்மணி இவள் அல்லவா தீனாம்மா?”
இப்படி சாராம்மா எப்போதும் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்கலாம். தீனாம்மா மாணவியாக இருந்தபோது, குறும்புத்தனம் கொண்ட ஒரு மாணவன் அவளைப் பற்றி எழுதிய ஒரு தமாஷான கவிதை அது. தீனாம்மா எங்கேயாவது அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டால் போதும்- சாராம்மா அந்த பாடலைச் சத்தம் போட்டுப் பாட ஆரம்பித்து விடுவாள். சில நேரங்களில் இசை நாடகத்தில் பாடுவதைப்போல அவள் தீனாம்மாவின் முன்னால் போய் நின்று கொண்டு, “மான்மணி இவள் அல்லவா தீனாம்மா!” என்று பாடுவாள்.
ஆரம்பத்தில் தீனாம்மா சாராம்மாவைப் பார்த்து கோபப்பட்டாள். பிறகு தன்னுடைய அவலட்சணமான தோற்றத்தைப் பற்றி அவளுக்கே புரிதல் உண்டானபோது, பிறர் அவளைப் பார்த்து கிண்டல் பண்ணுவது அவளுடைய அவலட்சணமான தோற்றத்திற்கு எதிராக மட்டுமே என்பதை அவள் புரிந்து கொண்டாள். அதற்குப் பிறகு அவள் ஒரு மேலோட்டமான சிரிப்பை வெளிப்படுத்தியவாறு வெறுமனே உட்கார்ந்திருப்பாள்.
தீனாம்மாவின் அவலட்சணமான தோற்றத்தை நினைத்து, அவளைவிட அதிகமாக அவளுடைய தந்தையும் தாயும் கவலைப்பட்டார்கள். சாராம்மா தீனாம்மாவைக் கிண்டல் பண்ணும்போது, அவளுடைய தாய் அவளைத் திட்டுவாள். “என்னடி, இப்படி நடந்துக்குறே? அவளுக்கு என்ன குறை?”
“அய்யோ! அந்த மூக்கின் அழகு இருக்கே!” சாராம்மா ஒவ்வொரு குறைகளையும் கூற ஆரம்பிப்பாள்.
“அவளுடைய மூக்குக்கு அப்படி என்ற குறை இருக்கு? சப்பி இருக்குறதுதான் அழகு...!”
“அந்த உதட்டின் அழகு! யானையின் உதட்டைப்போல இருக்கு...”
“அவளுடைய உதடு கொஞ்சம் பெரியதாக இருந்தாலும், அது அவளுக்கு அழகுதான்!”
“அழகு? காக்கா குறத்தியின் அழகு...”
“உன் அழகு எதையும் அவளுக்குத் தரவேண்டாம். இனிமேல் அவளைக் கேலி பண்ணுவதைக் கேட்டால், உனக்கு உதைதான் கிடைக்கும்.”
சாராம்மா வேகமாக அங்கிருந்து ஓடிவிடுவாள்.
“கொக்கைப் போன்ற கழுத்து, ஒட்டிய மூக்கு, பாதி மூடிய கண்கள்,
யானையின் உதடுகளைப் போன்ற அதரங்கள்
மான்மணி இவள் அல்லவா தீனாம்மா!”
அவளுடைய தாய் பிரம்பை எடுத்துக் கொண்டு அவளுக்குப் பின்னால் ஓடுவாள். தீனாம்மா கவலை நிறைந்த ஒரு புன்னகையுடன் கூறுவாள்: “அம்மா, அவள் பாடிவிட்டுப் போகட்டும். அவள் கிண்டல் பண்ணட்டும். அவளுடைய தப்பு இல்லல.... என்மீது விரோதம் இல்ல... என் முகத்தைப் பார்த்தால் யாராக இருந்தாலும் கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க.”
சாராம்மா அவலட்சணமானவள் அல்ல என்றாலும், அழகி என்று கூற முடியாது. ஆனால், தீனாம்மாவிற்கு முன்னால் அவள் ஒரு தேவதைதான். அக்காவின் அவலட்சணம் தங்கையின் அழகை அதிகப்படுத்திக் காட்டியது.
அதேபோல தங்கையின் அழகு அக்காவின் அவலட்சணமான தோற்றத்தை அதிகப்படுத்தியது.
தீனாம்மாவிற்கு எங்கும் எப்போதும் தனியாகச் செல்வதற்கு அனுமதி இருந்தது. அவளுடைய அழகற்ற தன்மை இளைஞர்களின் படையெடுப்பிலிருந்து அவளைக் காப்பாற்றி விடும் என்ற உறுதியான தீர்மானம் அவளுடைய தாய், தந்தைக்கு இருந்தது. ஆனால், படிப்பை நிறுத்திவிட்ட பிறகு அவள் வெளியே எங்கும் செல்வதில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேவாலயத் திற்கு மட்டும் செல்வாள். அவள் எங்கு சென்றாலும், கேலி செய்யப் படுவாள். அவள் எல்லாராலும் வெறுக்கப்படுவாள். அதனால் பிறரிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும் என்று அவள் எப்போதும் விரும்பினாள்.
அவலட்சணமான தோற்றத்தைக் கொண்ட தீனாம்மா, அழகை ஆராதிக்கக் கூடியவளாக இருந்தாள். அழகற்ற தோற்றம், இனிமையற்ற குணம், கவிதை இல்லாத உரையாடல்- இவை அனைத்தும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாதவையாக இருந்தன. ஆனால், அவளுடைய முகத்தின் அழகற்ற தன்மையைப் பற்றி அவளுக்கே தெளிவான புரிதல் இருந்ததால், மற்றவர்களை ஆராய்ந்து பார்ப்பதற்கான தைரியம் அவளுக்கு இல்லாமல் போய்விட்டிருந்தது. அவளுடைய சித்தப்பாவின் மகளான அன்னக்குட்டியையும், பக்கத்து வீட்டிலிருக்கும் தங்கம்மாவையும் மட்டும் அவர்களுக்கு வெறுப்பு உண்டாகாத வகையில்- அவள் விமர்சனம் செய்வாள். அன்னக்குட்டியிடம் அவள் கூறுவாள்: “அன்னக்குட்டி, நீ உன் கூந்தலை இப்படி கட்டக்கூடாது. இங்கே வா... நான் கட்டிவிடுறேன்.” அவள் அன்னக்குட்டியின் கூந்தலை அழகாக சீவி, கட்டிவிடுவாள். அதில் மலர்களை அணிவிப்பாள். பிறகு, கூறுவாள்: “இப்படி கூந்தலைக் கட்டி இருப்பதுதான், உனக்கு அழகு! தலை முடியைக் கட்டி, மலர்களைச் சூடணும். அழகாக நடக்கணும்.”