தீனாம்மா - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8897
தங்கம்மா வெள்ளை நிறத்தில் சட்டையை அணிந்து வரும்போது, தீனாம்மா கூறுவாள்:
“தங்கம்மா, இளம் பச்சை நிறத்திலிருக்கும் சட்டையைப் போட்டுக்கணும். அதுதான் உனக்குப் பொருத்தமானது.”
தங்கம்மா கேட்பாள்: “நிறத்தைக் கொண்ட சட்டையை அணியலாமா, தீனாம்மா?”
“அணிந்தால் என்ன? உனக்கு அதுதான் பொருத்தமாக இருக்கும். அது உன்னுடைய அழகை அதிகப்படுத்தும்.”
“ஓ! அழகு!” தங்கம்மா அலட்சியமான குரலில் கூறுவாள்: “அழகு என்பது கடவுள் தருவதுதானே தீனாம்மா?”
தீனாம்மாவின் முகத்தில் ஒரு கவலையின் சாயல் நிழலாடும். உண்மைதான்... அழகு என்பது கடவுள் தருவதுதான். அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. கடவுள் அளிக்கும் அழகை நாம் பத்திரமாகக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் நம்முடைய கடமை.
அழகை வெறுக்கக் கூடிய மூடத்தனமான நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சட்டங்களையும் அவள் மதிப்பதே இல்லை. மனிதர்களின் தோற்றத்திலும் செயலிலும் அழகு மிளிர வேண்டும் என்று அவள் விரும்பினாள். அழகு முழுமையாக நிறைந்திருக்கும்- கலைத்தன்மை கொண்ட ஒரு உலகத்தை அவள் கற்பனை செய்து பார்த்தாள். அவளுடைய அறை அழகான ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு நல்ல ஓவியமோ, அழகான ஒரு மலரோ தீனாம்மாவின் இதயத்தைக் கவர்ந்துவிடும். அவளுடைய கட்டிலில் மல்லாக்கப் படுத்தவாறு சுவரில் இருக்கும் ஓவியங்களில் மறைந்திருக்கும் அமைதியான கவிதையில் மூழ்கிப் போய் விடுவது என்பது அவளுடைய வாடிக்கையான செயலாக இருந்தது.
வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் அவள் ஒரு பூந்தோட்டம் அமைத்திருந்தாள். மிகவும் சிறப்புத் தன்மை கொண்ட செடிகளையும் கொடிகளையும் அவள் அந்தத் தோட்டத்தில் நட்டு வளரச் செய்திருந்தாள். அதன் நடுப்பகுதியில் மிகவும் அழகான கொடிகளாலான ஒரு குடிலையும் அமைத்திருந்தாள். அவள் பாடல்களைக் கற்கவில்லையென்றாலும், அந்த கொடிகளாலான குடிலில் உட்கார்ந்து மெதுவான குரலில் பாடிக் கொண்டிருப்பாள்.
எல்லா அதிகாலைப் பொழுதிலும், தீனாம்மா குளித்துவிடுவாள். அது எதுவும் சாராம்மாவிற்குப் பிடிக்கவே பிடிக்காது. ஒருநாள் தீனாம்மா குளித்து முடித்து வரும்போது, சாராம்மா கிண்டலான குரலில் கேட்டாள்: “தீனா அக்கா, காக்கா குளித்தால் கொக்காகி விடுமா?”
தீனாம்மா அவளுடைய எப்போதும் இருக்கக்கூடிய சோகம் நிறைந்த புன்னகையுடன் பதில் சொன்னாள்: “காக்கா குளித்தால் கொக்காகாது. ஆனால் காக்காவும் குளிக்கும். குளிக்காத கொக்கை விட, குளிக்கக்கூடிய காக்கா நல்லது அல்லவா?”
ஒருநாள் தீனாம்மா தன்னுடைய அறையில் ஓவியங்களைப் பார்த்துக்கொண்டு மனதில் சந்தோஷப்பட்டவாறு படுத்திருந்தாள். சாராம்மா மெதுவாக அந்த அறைக்குள் வந்தாள்.
ஒரு ஓவியத்தைப் பார்த்தவாறு அவள் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தாள். ரவிவர்மாவின் “ஹம்ச தமயந்தி” என்ற ஓவியமே அது. சாராம்மா அந்த ஓவியத்தின் அழகைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அதைச் சுவற்றிலிருந்து கையில் எடுத்தாள்.
அவள் மெதுவாக மேஜையின் அருகில் போய் உட்கார்ந்தாள். தீனாம்மாவிற்குத் தெரியாமல் மேஜைக்குள்ளிருந்து பவுண்டன் பேனாவை எடுத்து அந்த ஓவியத்தில் வரைய ஆரம்பித்தாள். மிகவும் அழகாக இருந்த அந்த ஓவியத்தின் பல பகுதிகளிலும் அவள் மையைத் தேய்த்தாள். தமயந்தியின் கண்களில் இரண்டு துளி மை... மூக்கில் தடிமனான ஒரு கோடு... உதடுகளில் தேய்ப்பு... சாராம்மா ஓவியத்தை எடுத்து தூக்கிப் பிடித்தாள். அவளுக்கு முழுமையான சந்தோஷம் உண்டானது. தன்னுடைய ஓவியம் வரையும் திறமையைப் பற்றி அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அந்த ஓவியத்தை தீனாம்மாவிற்கு முன்னால் உயர்த்திப் பிடித்துக் கொண்டே அவள் சொன்னாள்: “இங்கே பாருங்க... இப்போ இது உங்களைப்போலவே இருக்கிறது அல்லவா?”
கொலைகாரி! தீனாம்மா அதிர்ச்சியடைந்து விட்டாள்.
“அய்யோ!” அவள் வேகமாக எழுந்தாள். “சாராம்மா... நீ என்ன துரோகச் செயலைச் செய்திருக்கே?”
அவளுடைய தொண்டை இடறியது. “நீ அழகைக் குத்திக் கொன்று விட்டிருக்கிறாய். நீ அவலட்சணமானவள்.”
சாராம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.
“கொக்கைப் போன்ற கழுத்து, ஒட்டிய-
இதுவல்லவா தீனாம்மா?”
இப்படி பாடிக்கொண்டே அவள் ஓடினாள். தூரத்தில் அவளுடைய குரல் இப்படிக் கேட்டது: “அம்மா, இங்கே பாருங்க. தீனாம்மா அக்காவின் முகம் இப்படித்தானே இருக்கும்?”
2
பக்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கம்மாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அவளும் தீனாம்மாவும் சமவயதைக் கொண்டவர்கள். திருமண நாளன்று தங்கம்மாவிற்கு ஆடைகளை யும் நகைகளையும் அணிவித்தது தீனாம்மாதான். தீனாம்மா தங்கம்மாவின் கூந்தலை அழகாக சீவி, கட்டிவிட்டாள். தலைமுடியை வாரிக் கட்டுவதில் தீனாம்மாவிற்கு சிறப்புத் திறமை இருந்தது. ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்ற வகையில் அவள் கூந்தலை வாரிக் கட்டுவாள். பிறகு தங்கம்மாவிற்கு ஆடைகளை அணிவித்தாள். அந்த விஷயத்திலும் அவளுக்கு ஒரு தனிப்பட்ட ரசனை இருந்தது. எல்லாரும் அணிவதைப் போலத்தான். ஆனால், தீனாம்மாவின் கைகளால் அணிவிக்கப்படும்போது, அதற்கு ஒரு தனியான அழகு உண்டாகும் மிகவும் குறைவான நகைகளை அணிவதற்கு மட்டுமே அவள் அனுமதிப்பாள். இவ்வாறு அலங்காரங்கள் அனைத்தும் முடிவடைந்தவுடன், தங்கம்மா கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றாள். “தீனாம்மா, எனக்கு இந்த அழகெல்லாம் எங்கேயிருந்து வந்தது?”
“இந்த அழகு உனக்கென்று இருப்பதுதான். அழகு என்பது எல்லாருக்கும் இருக்கிறது. அதை எல்லாராலும் கண்டுபிடித்து தெரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவுதான்...”
“தீனாம்மா, உனக்கும் அழகு இருக்கிறதா?”- அவள் அலட்சியமான குரலில் கேட்டாள்.
“இருக்கு. என்னுடைய முகம் அழகற்றதாக இருந்தாலும், நான் அழகிதான்.” அவள் அழுத்தமான குரலில் இவ்வாறு கூறினாள். அவள் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தாள். அவளுடைய முகத்தில் சோகம் கலந்த புன்னகை நிழலாடியது! “ஆனால், என்னுடைய அழகை யாரும் பார்க்காமல் இருக்கலாம். யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறலாம். அது எனக்குள்ளேயே இருந்து அழிந்து போகலாம்.”
அவள் என்ன கூறுகிறாள் என்பதை தங்கம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லை.
திருமணம் முடிந்து மணமகனையும் மணமகளையும் வாழ்த்திவிட்டு அவள் திரும்பிச் சென்றாள். அவள் தன்னுடைய கட்டிலில் போய் படுத்தாள். மிகவும் இனிமையான ஒரு பகல் கனவில் அவள் மூழ்கிவிட்டாள். அவளுடைய திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. மணமகன் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் நல்ல குணங்களைக் கொண்டவனாகவும் நிறைய படித்தவனுமான ஒரு இளைஞனாகவும் இருந்தான். அவளுடைய இல்லம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாத்தியங்களின் இசைப்புகள் ஆரம்பமாயின. அவள் வேகமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அலங்கரிப்பு முடித்து, அவள் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றாள். அவள் மிகவும் அழகான தோற்றம் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள்.