
அவளுடைய வார்த்தைகளின் பெருவெள்ளத்தில் தன்னைத்தானே ஒன்றி விட்டதைப் போல அவள் சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்துவிட்டு தொடர்ந்து சொன்னாள்: “அப்பா, என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம். திருமணத்தை நான் வெறுக்கவில்லை என்பது மட்டுமல்ல. அதை நான் விரும்பவும் செய்கிறேன். ஆனால் ஒரு நித்யகன்னியாக வாழ்வதற்கு, கன்னியாக இருந்து கொண்டே அழகை ஆராதனை செய்வதற்கு என்னால் முடியும். சாராம்மாவோ கன்னியாக இருப்பதற்காக உள்ளவள் அல்ல. அவளுக்கு வாழ்வதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் இன்னொரு ஆளின் உதவி வேண்டும். எனக்காக அவளை கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்.”
அவர் அவளுடைய முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய விரிந்த கண்கள் மீண்டும் பாதியாக அடைந்தன. நாசி கீழே இறங்கியது. அவள் தன் கையிலிருந்த ஓவியத்தையே அலட்சியமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவர் எழுந்து வாசலை நோக்கி நடந்தார். வாசலின் அருகில் திரும்பி நின்று கொண்டு அவர் சொன்னார்: “சாராம்மாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது.” அவர் வேகமாக அங்கிருந்து புறப்பட்டார்.
மீண்டும் அந்த சோகமான புன்னகை! அவள் வட்ட வடிவ மேஜையின் அருகில் சென்று நின்றாள். இயேசு கிறிஸ்துவின் படத்தில் பார்வையைப் பதித்து அவள் முழங்காலிட்டாள்.
சாராம்மாவிற்கு திருமணம் முடிந்தது. ஓரளவு பண வசதியைக் கொண்டவனும் விளையாட்டு வீரனுமான ஒரு இளைஞன் அவளுக்கு கணவனாகக் கிடைத்திருந்தான். திருமணம் முடிந்து அவள் தன் கணவனின் வீட்டிற்குப் புறப்பட்டாள். தீனாம்மா வழியனுப்புவதற்காக வாசற்படி வரை சென்றாள். புதுமணத் தம்பதிகள் எல்லாரிடமும் விடை பெற்று விட்டு, காரில் ஏறிப் புறப்பட்டார்கள். அவர்கள் மறைவது வரை தீனாம்மா அங்கேயே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளுடைய தந்தையும் தாயும் அவளைப் பார்த்து என்னவோ கூறினார்கள். அவளுடைய தந்தை நீளமான பெருமூச்சை விட்டார். தாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
தீனாம்மா தன்னுடைய பூந்தோட்டத்திற்குச் சென்றாள். அவள் மிகவும் வேகமாக மலர்களின் நறுமணத்திலும் கொடிகளின் அழகிலும் பறவைகளின் சலசலப்பிலும் மூழ்கிவிட்டாள்.
மேலும் சில வருடங்கள் கடந்தோடின. தீனாம்மாவிற்கு இருபத்தெட்டு வயதுகள் ஆயின. அவள் பகல் முழுவதும் தன்னுடைய பூந்தோட்டத்தில் இருப்பாள். அங்கே இருந்தவாறு அவள் இனிமையான கனவில் மூழ்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பாள். சாயங்கால நேரத்தில் அவளுடைய தந்தையும் அங்கு வந்து அமர்ந்திருப்பதுண்டு. அவர்கள் ஓருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்வதில்லை. தந்தையின் உலகத்திலிருந்து எந்த அளவிற்கு வேறுபட்ட ஒரு உலகத்தில் மகள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்- இயற்கையின் அம்சங்களால் முழுமையான அழகும் கலைத் தன்மையும் கொண்ட ஒரு உலகம்! அபூர்வமாக சில நேரங்களில் மட்டுமே அந்த உலகத்தை விட்டு அவள் கீழே இறங்கி வருவாள். அப்போது சந்தோஷமற்ற, நிலைகுலைந்து போயிருக்கும் அவளுடைய பெண்மைத் தனம் அவளைத் தொல்லைப் படுத்தும். ஆணின்- கணவனின்- காதல்வயப்பட்ட ஒரு பார்வை... ஒரு வார்த்தை... ஒரு தொடல்... அதற்காக அவளுடைய இதயம் குதிக்கும்... தான் வேதனையுடன் பிரசவித்த பச்சிளங் குழந்தையின் அழகான புன்சிரிப்பிற்காக அவள் ஏங்குவாள். ஒரு நொடி நேரத்திற்கு மட்டும்- அவை அனைத்தையும் அசாதாரணமான பக்குவத்துடன் அவள் கட்டுப்படுத்திக் கொள்வாள். ஆனால், அவளுடைய இதயத்தின் அடித்தட்டில் அந்த சந்தோஷமற்ற தன்மையும் அமைதியற்ற நிலையும் தங்கி நின்று கொண்டிருந்தன.
ஒரு சாயங்கால நேரத்தில் அவள் செடிகளுக்கு மத்தியில் மறைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்த்து ஆனந்தம் அனுபவித்துக் கொண்டிருந்தாள். மேகங்களின் பல வகைப்பட்ட வண்ணங்களையும் அந்த வண்ணங்கள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டிருப்பதையும் பார்த்துப் பார்த்து அவள் தன்னையே மறந்து விட்டிருந்தாள்.
“தீனா!” அந்த அழைப்பு அவளை சுய உணர்விற்குக் கொண்டு வந்தது. எப்போதும் இல்லாத ஒரு மலர்ச்சியுடன் நின்று கொண்டிருக்கும் தன் தந்தையை அவள் பார்த்தாள். அவள் எழுந்து நின்றாள்.
“உட்காரு... நானும் உட்காருகிறேன்.” அவளும் அவரும் அமர்ந்தார்கள்: “தீனா, நீ எப்போதும் இப்படி கன்னியாகவே இருக்க வேண்டும் என்றா விரும்புகிறாய்?”
அவள் பதில் கூறவில்லை. மேற்கு திசையின் விளிம்பைப் பார்த்தவாறு அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
“உனக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது.”
அவளுடைய உடன்பிறப்பான அந்த சோகம் கலந்த புன்னகையுடன் அவள் சொன்னாள்: “அப்பா, நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஏராளமான ஆசைகளின் கரியும் சாம்பலும் குவியல் குவியலாக கிடக்கின்றன.”
“தெய்வத்திற்கு கருணை இருக்கிறது, மகளே”.
“இருக்கலாம்...” அவள் ஓவியத்தில் மூழ்கிவிட்டதைப்போல தோன்றினாள்.
அவர் என்னவோ கூற முயற்சித்தார். தயக்கத்துடன் அவர் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டார். சிந்தனையிலிருந்து விடுபடாமலே, தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல அவள் சொன்னாள்: “எப்போதும் கன்னியாகவே இருப்பது- அதிலும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. இந்த மலர்களும் கொடிகளும் சூரியோதயமும் அஸ்தமனமும்- அதற்கும் மேலாக ஆனந்தத்தை யாரால் தர முடியும்?” அவள் மீண்டும் சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.
“மகளே, உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு ஆள் இருக்கிறார்.”
தமாஷான குரலில் அவள் கேட்டாள்: “என்னையா?”
“ஆமாம்... இந்த விஷயத்தைக் கூறுவதற்காகத்தான் நான் இங்கே வந்தேன்.”
“என்னையா?” அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை.
“ஆமாம்... உன்னைத்தான்... அவர் இப்போதுதான் கிளம்பிப் போனார்.”
“யார்?”
“தாமஸ்...”
“எந்த தாமஸ்?”
“ஸி.எம். தாமஸ்.”
ரோஜா மலரைப் பறிப்பதற்காக கையை நீட்டிக் கொண்டிருக்கும் அழகியின் ஓவியம் அவளுடைய ஞாபகத்தில் வந்தது. அவள் ஆர்வத்துடன் கேட்டாள்: “ஓவியர் ஸி.எம். தாமஸ்... அப்படித்தானே?”
“ஆமாம்...”
அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு கேட்டாள்: “அவர் என்னைப் பார்த்திருக்கிறாரா?”
“பார்த்திருக்கிறார்.”
“என்னுடைய முகத்தை?”
“ம்...”
“அதற்குப் பிறகும்...?” அவள் பாதியில் நிறுத்திக் கொண்டாள்.
“ஆமாம், மகளே... அதற்குப் பிறகும் அவர் உன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். பிறகு... ஒரு விஷயம்... மூவாயிரம் ரூபாய் தருவதாக ஒப்பந்தம்.”
“மூவாயிரமா? எதற்கு?” அவள் நெற்றியைச் சுளித்தாள்.
“மூவாயிரம் அல்ல... அய்யாயிரம் கேட்டாலும் நான் தருவேன். மகளே... என் மகளான உனக்கு திருமணம் செய்து வைத்து பார்த்து விட்டுத்தான் சாகணும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கு.”
அடி வாங்கிய சர்ப்பத்தைப்போல அவள் சற்று அதிர்ச்சி யடைந்து விட்டாள். “வேண்டாம், அப்பா. அது வேண்டாம். என் அவலட்சணமான தோற்றம்... என் அதிர்ஷ்டமற்ற தன்மை... அது என்னுடனே இருந்து விட்டுப் போகட்டும். அதை ஒரு வியாபாரப் பொருளாக ஆக்க வேண்டுமென்று நான் நினைக்கவில்லை.”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook