தீனாம்மா - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8898
அவள் இரண்டு மூன்று அடிகள் முன்னோக்கி எடுத்து வைத்தாள். அவளுடைய உடல் நடுங்கியது... அந்தப் புன்னகை! அதன் போதையில் அவள் தன்னையே மறந்துவிட்டாள்.
தாமஸின் “ஸ்டூடியோ” உள்ளேயிருந்து தாழ்ப்பாள் போடப் பட்டிருந்தது. தீனாம்மா பல முறை கதவில் காதுகளை வைத்து கவனித்துப் பார்த்தாள். ஒரே அமைதி! ஒரு மெல்லிய சுவாச சத்தம் மட்டுமே அவளுக்கு கேட்டது.
“இதற்குள் அவர் என்ன செய்கிறார்?” அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். கதவுக்கு அருகில் நின்று அவள் சிறிது இருமினாள். உள்ளேயிருந்து பதிலெதுவும் வரவில்லை. கதவை சற்று தள்ளி பார்த்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அதற்கான தைரியம் அவளுக்கு வரவில்லை.
வேலைக்காரி, தாமஸுக்கு சில நேரங்களில் அப்படியொரு குணம் உண்டாகும் என்று சொன்னாள். “எங்கேயிருந்தாவது ஓடி வந்து அதற்குள் நுழைந்து கொள்வதைப் பார்க்கலாம். பிறகு... ஒன்றிரண்டு நாட்களுக்கு வெளியே வருவதே இல்லை. இப்போ சில நாட்களாக அப்படி எதுவும் நடக்காமலிருந்தது. மகளே, நீ வந்த பிறகு இதுதான் முதல் முறை.”
தீனாம்மாவின் பதைபதைப்பு அடங்கியது. அவளுக்கு நிம்மதி உண்டானது. அதற்குப் பிறகு அவள் அந்த கதவுக்கு அருகில் செல்லவில்லை. பொய்கையின் எதிர் கரையிலிருந்து தெரிந்த அந்த புன்னகை - அதன் நினைவில் அவள் நிமிடங்களைச் செலவிட்டாள். இரவு வேளையில் அவள் தூங்கவேயில்லை. அந்தப் புன்னகையின் இனிமையை அனுபவிப்பதற்கு அவள் கண் விழித்து உட்கார்ந்திருந்தாள்.
மறுநாள் காலையில் அவள் ஸ்டூடியோவின் கதவுக்கு அருகில் சென்று பார்த்தாள். திறந்திருக்கவில்லை. அவள் அன்றாடச் செயல்களைச் செய்வதற்காகச் சென்றாள். அன்று அவள் வேலைக்காரியிடம் எப்போதும் இல்லாதது மாதிரி அதிகம் பேசினாள்- அவளுடைய வீட்டுக் காரியங்களைப் பற்றியும் கல்யாணத்தைப் பற்றியும். கிடைக்காத ஏதோ ஒன்று கிடைத்ததைப் போல, அடைய முடியாத ஒன்றை அடைத்துவிட்டதைப்போல தீனாம்மாவிடம் ஒரு புதிய உற்சாகம் தவழ்ந்தோடிக் கொண்டிருந்தது. அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டானது.
ஸ்டூடியோவுக்கு எதிரில் இருந்த அறையில் கவனத்தை ஒரு பக்கம் செலுத்தியவாறு தீனாம்மா உட்கார்ந்திருந்தாள். நேரம் நான்கு மணியைத் தாண்டி விட்டிருந்தது. அன்று அவள் பூந்தோட்டத்திற்குச் செல்லவில்லை. செடிகளுக்கு நீர் பாய்ச்ச வில்லை. எதிரிலிருந்த அறையின் கதவு திறக்கப்படுவதை எதிர்பார்த்து அவள் காத்திருந்தாள். அவள் பொறுமையை இழக்க ஆரம்பித்தாள்.
திடீரென்று கதவு திறக்கப்பட்டது. தீனாம்மாவின் இதயம் சற்று இழைந்தது. அவள் எழுந்தாள். தாமஸ் ஸ்டூடியோவை விட்டு வெளியே செல்வதை அவள் சாளரத்தின் வழியாகப் பார்த்தாள்.
அவள் ஸ்டூடியோவுக்குள் நுழைந்தாள். கவனக் குறைவாக வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியக் கூடம் அது. சாயங்களும் ப்ரஷ்களும் இங்குங்குமாக சிதறிக் கிடந்தன. முழுமையடையாத ஓவியங்கள் மேஜையின் மீதும் நாற்காலிகளிலும் தரையிலும் அலட்சியமாக போடப்பட்டிருந்தன. அனைத்தும் தூசி படிந்து அங்கே கிடந்தன. அறையின் மத்தியிலிருந்த ஸ்டாண்டில் ஒரு புதிய ஓவியம் வைக்கப்பட்டிருந்தது.
மெல்லிய ஒரு துணியால் அது மூடப்பட்டிருந்தது. அதை யொட்டி அருகில் ஒரு நாற்காலியும் ஒரு ஸ்டூலின்மீது சாயங்களும் ப்ரஷ்களும் இருந்தன. ஓவியத்தை மூடியிருந்த துணியை அவள் மிகுந்த கவனத்துடன் எடுத்தாள். அவள் சற்று அதைப் பார்த்தாள். ஓவியத்தில் அவள் மூழ்கிப் போனாள்.
மிகவும் அழகான ஒரு பொய்கை. பிரகாசமான மேற்கு திசை வானத்தின் விளிம்பு அந்த பொய்கையின் நீரில் தெரிந்தது. ஒரு வண்டு ஒரு தாமரையில் போய் அமர்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தது. பொய்கையின் கரையிலிருந்த கொடிகளாலான குடிலில் ஒரு பெண் பொய்கையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பாதி மூடியிருந்த கண்கள்... சப்பையான மூக்கு... வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பற்கள்... மெல்லிய கழுத்து- அதுதான் அவளுடைய தோற்றம். கொடிகளாலான குடிலுக்குப் பின்னால் ஒரு பூந்தோட்டம் தெளிவற்று தெரிந்தது. அதுதான் ஓவியம்.
தீனாம்மா ஓவியத்திலேயே பார்வையைப் பதித்தவாறு அதே இடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்தாள். ஒரு மெல்லிய சுவாசம் அவளுடைய கன்னத்தில் பட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள்... தாமஸ்! திடீரென்று அவள் ஒரு பக்கம் விலகி நின்றாள். அவள் எதுவும் பேசவில்லை. அவன் அவளை ஆர்வத்துடன் பார்த்தான். அவர்களுடைய கண்கள் சந்தித்தன.
அவளுக்கு சுவாசம் அடைப்பதுபோல தோன்றியது. அவள் பார்வையைப் பின்னோக்கி திருப்பி சில நிமிடங்கள்.... அவள் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். “அந்த பெண்ணின் அவலட்சணமான முகத்திற்கும் கீழே ஒரு இதயம் இருக்கிறது. அதை வரைவதற்கு அந்த தூரிகைக்கு பலமில்லை.” அவளுடைய தொண்டை இடறியது.
“அந்த ஓவியம் முழுமையடையாத ஒன்று.” அவள் தூரிகையைக் கையிலெடுத்துக் கொண்டு ஓவியத்தை நெருங்கினாள். அவள் மேலும் ஒருமுறை பார்த்தாள்... அவன் சிந்தனையில் மூழ்கி விட்டான்.
நிமிடங்கள் பல கடந்தன. தீனாம்மா அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அந்த முகம் படிப்படியாக பிரகாசமும் கம்பீரமும் கொண்ட ஒன்றாக மாறியது. திடீரென்று அவன் தூரிகையைச் சாயத்தில் தோய்த்தான். ஓவியத்தின் சில பகுதிகளில் மெல்லிய சில தொடல்கள் மட்டும்.... அவன் தூரிகையை மாறி மாறி எடுத்தான். அவனுடைய கை வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.
அவன் தூரிகைகளைக் கீழே வைத்து விட்டு, பின்னால் விலகி நின்றான். ஒரு புன்னகை! பொய்கையின் மறுகரையில் பார்த்த அதே புன்னகை! அவன் சொன்னான்! “பார்... அந்தப் பெண்ணின் அழகான இதயத்தை நான் பார்க்கிறேன்!”
தீனாம்மா ஓவியத்தைப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் கண்கள் மலர்ந்திருந்தன. அதிலிருந்து அழகு வெளிப்படுவதைப்போல தோன்றியது. அந்த நாசியின் நுனிப்பகுதி சற்று உயர்ந்து தெரிந்தது. உதடுகளில் ஒரு மங்கலான பிரகாசம் தவழ்ந்து கொண்டிருந்தது. “எனக்கு திருப்தி.” - அவள் உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள்.
அவன் அவளின் அருகில் வந்தான். அவனுடைய கை அவளுடைய தோளைத் தொட்டது. “தீனா, இந்த அளவுக்கு அழகான ஒரு இதயம் உனக்குள் இருக்கிறது என்பது எனக்கு தெரியாமல் போய் விட்டது.”
அவனுடைய கைகள் அவளை வளைத்தன. அன்று முதல் முறையாக அவள் தன் கணவனின் மார்பின்மீது தலையைச் சாய்த்தாள்.
“இந்த உலகத்தின் அழகான சொத்து முழுவதும் என்னுடைய கைகளுக்குள் இருக்கிறது.” அவனுக்கு மூச்சு அடைத்தது.
“நாதா!” அவள் மயக்கமடைந்தாள்.