தீனாம்மா - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8897
“அழகியா?” அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். அவள் பகல் கனவிலிருந்து கண்விழித்தாள்: “நான் அழகான பெண்ணாக ஆகிவிட்டேனா?” அவள் சாராம்மாவின் அறைக்குள் ஓடி கண்ணாடியை எடுத்துப் பார்த்தாள். அந்த சப்பையான மூக்கும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பல்லும், கறுத்து தடித்த உதடுகளும்! “இல்லை... அதற்கான அதிர்ஷ்டம் எனக்கு இல்லை...” அவள் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.
அதற்குப் பிறகும் ஒரு வருடம் கடந்தோடியது. தீனாம்மாவிற்கு இருபத்து இரண்டு வயதுகள் ஆயின. சித்தப்பாவின் மகள் அன்னக்குட்டி- அவளுடைய திருமணமும் நடந்து முடிந்தது. அந்தத் திருமணத்திற்கும் தீனாம்மா சென்றிருந்தாள். “என் வாழ்க்கையிலும் இப்படியொரு நாள் வருமா?” அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். ஒரு மனைவியாக ஆவதற்கு- ஒரு கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு- அவளுக்கும் உயர்ந்த ஆசை இருந்தது. அதற்கும் மேலாக, ஒரு குழந்தையின் தாயாக ஆவதற்குத்தான் அவள் விரும்பினாள். கணவனின் மார்பின்மீது சாய்ந்து ஓய்வு எடுப்பதற்கு அவளுடைய இதயம் குதித்து பாய்ந்து கொண்டிருந்தது. தன்னுடைய குழந்தையின் கன்னத்தில் சற்று முத்தமிடுவதற்கு அவளுடைய கறுத்து தடிமனாக இருந்த உதடுகள் ஏங்கிக் கொண்டிருந்தன. அவள் எதிர்காலத்தின் தூரத்தைப் பார்த்தாள். வெறுமை! வெறுமை!
தன்னுடைய வாழ்க்கையில் காதல் கலந்த ஒரு பார்வையை அவள் அனுபவித்ததே இல்லை. அவள் உலகத்தைக் காதலித்தாள். உலகம் அவளை வெறுத்தது.
அவள் உலகத்தின் அழகை வழிபட்டாள். உலகம் அவளிடம் அவலட்சணம் இருப்பதாகப் பார்த்தது. அவள் யார்மீதும் வருத்தப்படவில்லை. யாரிடமும் முறையிடவுமில்லை. தன்னுடைய அழகற்ற முகம் உலகத்தை தன்னிடமிருந்து தூரத்தில் நிற்கச் செய்கிறது என்ற விஷயத்தை அவள் தெரிந்து வைத்திருந்தாள்.
மேலும் ஒரு வருடம் கடந்து சென்றது. சாராம்மாவிற்கு திருமண ஆலோசனைகள் பலவும் வந்தன. “மூத்தவள் இருக்குறப்போ இளையவளை எப்படி அனுப்ப முடியும்?” இப்படிக் கூறி அவளுடைய தந்தை திருமணத்தை நடத்தாமல் இருந்தார். தீனாம்மாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்கு பல முயற்சிகளும் நடைபெற்றன. அனைத்தும் வீணாயின. தீனாம்மாவிற்காக சாராம்மா திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டியதிருந்தது.
அவளுடைய தாய் ஒருநாள் அவளின் தந்தையிடம் கூறினாள்: “இப்படி வர்றதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பது சரியான விஷயமா? தீனாவிற்கு யாராவது வர்றப்போ அனுப்புவோம். அவளுக்காக இளையவள் ஏன் கஷ்டப்பட வேண்டும்?.”
சாராம்மாவிற்கு தீனாம்மாவின்மீது இருக்கும் வெறுப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது. அவள் தீனாம்மாவிடம் பேசக்கூட செய்வதில்லை.
அவளுடைய சந்தோஷத்திற்கு எதிராக நின்று கொண்டிருக்கும் ஒரு எதிரி என்பதைப்போல அவள் தீனாம்மாவை நினைத்தாள்.
ஒருநாள் தீனாம்மா சமீபத்தில் தனக்குக் கிடைத்த ஒரு ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே தன்னுடைய அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். ஒரு ரோஜா மலரைப் பறித்தெடுப்பதற்காக கையை நீட்டிக் கொண்டிருக்கும் மிகவும் அழகு படைத்த ஒரு இளம்பெண்... அவள் அந்த ரோஜா மலரின் அழகில் தன்னை முழுமையாக மறந்து நின்று கொண்டிருந்தாள். மலரைப் பறித்தால் அதற்கு வேதனை உண்டாகுமோ என்ற கவலையில் அவளுடைய கை மலரைத் தொடுவதற்குத் தயங்குகிறது. அதுதான் அந்த ஓவியத்தின் சாராம்சம். ஓவியத்திற்கு அடியில் “ஓவியர் ஸி.எம். தாமஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஓவியனை அவள் அதற்கு முன்னால் கேள்விப்பட்டதில்லை. ஓவியத்தின் அழகும் அதன் கவித்துவத் தன்மையும் அவளை மிகவும் ஈர்த்தன.
பக்கத்து அறையில் தந்தையும் தாயும் திருமண விஷயத்தைப் பற்றி என்னவோ உரையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அவள் இருந்த அறைக்குள் அவளுடைய தந்தை நுழைந்து வந்தார். ஓவியத்திலிருந்து கண்களை எடுக்காமலே அவள் எழுந்து நின்றாள். அவர் நாற்காலியில் உட்கார்ந்தார். “தீனா...” பாசமும் அதைவிட இரக்கமும் கலந்த குரலில் அவர் இப்படி அழைத்தார். தீனாம்மா முகத்தை உயர்த்தி தன் தந்தையைப் பார்த்தாள். அவர் என்னவோ கூறுவதற்கு முயன்றார். அதை அடக்கிக் கொண்டு இப்படி கேட்டார்: “தீனா, நீ தினமும் பிரார்த்தனை செய்கிறாயா?”
“ஆமாம்....” ஒரு சிறிய வட்டமான மேஜையின்மீது வைக்கப் பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் படத்தைச் சுட்டிக் காட்டியவாறு அவள் தொடர்ந்து சொன்னாள்: “அந்த படத்திற்கு முன்னால் நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.”
“கர்த்தர் வாழ்த்தப்படட்டும்...” ஆழமான பார்வைகளுடன் அவர் தொடர்ந்து சொன்னார்: “மகளே, கர்த்தரின் சட்டம் நடக்கும். கர்த்தரின் கருணை நம்மை காப்பாற்றும். கர்த்தரின் ராஜ்ஜியம் வரும்.”
தீனாம்மா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவர் தொடர்ந்து சொன்னார்: “ஏற்கெனவே நடைபெற்றவை எதுவும் பெரிதல்ல, மகளே. கர்த்தரின் திருச்சந்நிதியில் நாம் எல்லாரும் கணக்கு கூற வேண்டும். அதற்குத் தயாராகிக் கொள். தந்தையோ தாயோ குழந்தைகளோ மனைவியோ கணவனோ அன்று உதவி செய்வதற்கு வரமாட்டார்கள். நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் நாம்தான் பதில் கூற வேண்டும்.”
அவர் இடது கையால் தலையைத் தாங்கிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார். தன் மகளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே அவர் மீண்டும் சொன்னார்: “தீனா, நீ பாவம் செய்வதற்காகப் பிறந்தவள் இல்லை. புனித மரியத்தைப்போல என் மகளான நீ என்றும் புனிதமானவளாக இருக்க வேண்டும். கன்னிகளின் மடம்தான் என் குழந்தையான உனக்கு ஏற்ற இடம்.” அவருக்கே தெரியாமல் அவரிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளியே வந்தது.
தீனாம்மாவின் கவலை நிறைந்த அந்த புன்னகை அவளுடைய முகத்தில் தோன்றியது. “அப்பா, எனக்கு அதற்கான தகுதி இல்லை. எனக்கு அதற்கான புனிதத் தன்மை இல்லை.” அவள் அமைதியானாள். அந்த புன்னகை மறைந்து போனது. கவலை மட்டும் எஞ்சி நின்றது. “நான் எப்போதும் ஒரு கன்னியாக இருந்து கொள்வேன். கன்னிகளின் மடத்தில் அல்ல. அதற்கு வெளியே இருக்கும் விசாலமான, அழகான உலகத்தில்- நான் எப்போதும் கன்னியாக இருப்பேன்.” அவள் சிறிது நேரம் மவுனமாக நின்று கொண்டிருந்தாள். அந்த முகத்திலிருந்து கவலையும் மறைந்து விட்டது. அவள் உற்சாகமடைந்தவளைப்போல காணப்பட்டாள். பாதியாக மூடியிருந்த அந்தக் கண்கள் விரிந்தன. நாசியின் நுனிப்பகுதி உயர்ந்தது. அவளிடமிருந்து வார்த்தைகள் வெளியே வர ஆரம்பித்தன. “இங்கு பார்ப்பவை அனைத்தும் பெரிதானவை யாக இல்லாமலிருக்கலாம். ஆனால், அவை அனைத்திலும் அழகு என்ற ஒன்று இருக்கிறது. அவை எல்லாவற்றிலும் வாழ்க்கை இருக்கிறது. நான் அழகை ஆராதனை செய்பவள். வாழ்க்கையைக் காதலிப்பவள். கர்த்தரின் படைப்பான பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் நான் அழகை ஆராதிக்கக் கூடியவளாக, வாழ்க்கையை நேசிப்பவளாக, நித்யகன்னியாக வாழ்வேன்.”