உள்ளம் கொள்ளை போகுதே... - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6355
"வேணாம்டா. காதலை பூவுக்கு ஒப்பிட்டுப் பேசாதே. எத்தனை அழகா பூ மலர்ந்தாலும், எத்தனை சுகந்தமா மணம் பரப்பினாலும், பூ வாடக் கூடியது. காதல் அப்படியில்லை. அது காற்று மாதிரி. இந்த பூமி முழுசும் நிறைஞ்சிருக்கற காத்து மாதிரி அது நிரந்தரமானது."
"அடேங்கப்பா… பூமிங்கற.. காத்துங்கற… எங்க இருந்துடா இந்த வசனமெல்லாம் உனக்கு வருது?"
"இதயத்துல காதல் உதயமாயிட்டா... வசனமென்ன?! கவிதை மழையே வரும்..."
"ஐயோ வேணாம்பா மழை... அது சரி… ப்ரியாவை நீ காதலிக்கற ஓ.கே. அவ உன்னைக் காதலிக்கற மாதிரி எனக்குத் தெரியலை. சாதாரணமா, ஃப்ரெண்ட்லியாத்தான் பழகறா..."
"ஃப்ரெண்ட்ஷிப் காதலா மாறலாமில்லயா?"
"நிறைய காதல் ஜோடிகள்தான் 'நாம இனி ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்’னு டைலாக் பேசறாங்களே..."
"நீ ஏண்டா இப்படி நெகட்டிவ்வாவே பேசற?"
"பின்ன என்னடா... நாலு வார்த்தை நல்லபடியா ஒரு நண்பன்ட்ட பேசற மாதிரி பேசியிருக்கா ப்ரியா. நீ என்னடான்னா அவ என்னமோ உன்னைக் காதலிக்கற மாதிரியே கனவு கண்டுக்கிட்டிருக்க?"
"என்னோட கனவு நிஜமாகும். கொஞ்சம் கொஞ்சமா அவ மனசைக் கலக்கி, அவளை என்னைக் காதலிக்க வைக்கறேன் பாரு.. ஆனா ஒரு சின்ன வருத்தம்டா... பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி வாங்கிப் போட்டுக்கிட்ட இந்த ட்ரஸ்ஸை அவ கவனிச்சுக் கூடப் பார்க்கலைடா..."
"உலகமகா வருத்தம்தான் போ. ஒழுங்கா படிச்சு முடிச்சு வாழ்க்கையில முன்னுக்கு வரணும். அதுக்கப்புறம்தான் காதல்... கத்தரிக்கா… புடலங்காயெல்லாம்…"
"காதல் இல்லாத கல்லூரி வாழ்க்கை என்னடா வாழ்க்கை? படிச்சு முன்னேறணும்னு சொன்னியே... அந்த முன்னேற்றத்துக்கு ஒரு தூண்டுகோலா காதல் இருக்கும். அதோட உணர்வுகள் இருக்கும். காதலியும் இருப்பா."
"எப்படியோ… உன் காதல் ஸக்ஸஸ் ஆக என் வாழ்த்துக்கள்!"
"நிச்சயமா ஸக்ஸஸ் ஆகும்டா."
"எப்பிடிடா அவ்வளவு நிச்சயமா சொல்ற?"
"ப்ரியாவை கவனிச்சியா? அவளுக்கு இளகின மனசு. வேற எதிலயும் அவ மசியலைன்னா, அவளுக்கு என் மேல இரக்கப்படற மாதிரி பேசுவேன். கொஞ்சம் கொஞ்சமா பேசி, அவ மனசுல இடம் பிடிப்பேன்."
"அவ மனசுல இடம் பிடிக்கறது இருக்கட்டும். இப்ப நாம கேன்ட்டீன்ல இடம் பிடிக்கணும். லஞ்ச் டைம் ஆச்சு. காலைல முழுசும் வெட்டி அரட்டை அடிச்சு க்ளாஸை கட் பண்ணியாச்சு. வா. வா…" இருவரும் கல்லூரி கேன்டீனுக்கு விரைந்தனர்.
2
"டேய் சித்தார்த்... உனக்காக நல்ல பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீ ஒரு வார்த்தை சரின்னு சொல்லு. பேசி முடிவு பண்ணிடறேன்." மாலினி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகனுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
திருமண வயதில் மகன் இருந்த போதும், மாலினி இளமை குறையாத தோற்றத்தில் காணப்பட்டாள். எலுமிச்சை நிறம். வலது பக்கக் கன்னத்தில் இருந்த பெரிய கறுப்பான மரு, சின்னத்திரை அம்மா நடிகை மீரா கிருஷ்ணனை நினைவு படுத்தியது. காதிலும், கழுத்திலும் வைர நகைகள் மின்னியது. தினந்தோறும் அவள் உடுத்துவது பட்டுதான். ஜரிகை அதிகம் இல்லாத அழுத்தமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையில், அழகுடன் கம்பீரமும் இணைந்து செல்வச் சீமாட்டியின் மிடுக்குடன் இருந்தாள் மாலினி.
கணவர் மனோகரன் பெரிய தொழிலதிபர். அவரது உழைப்பும், அறிவுத் திறனும் தொழில் நுணுக்கமும் அவரை அந்தஸ்து ரீதியாக உயர்த்தியது. பணமழை பொழிந்தது.
ஆஸ்திக்கு ஒரே மகனான சித்தார்த்துக்கு பாலுடன் பண்பாட்டையும் ஊட்டி வளர்த்தாள் மாலினி. பணம் தன் மகனின் வளர்ப்பை தவறான பாதைக்கு வழி வகுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். எனவே, சித்தார்த் அன்பும், பண்பும் ஒருங்கே இணைந்தவனாய் வளர்ந்தான். யாரையும் அதிர்ந்து பேச மாட்டான். இனிமையாக பேசுவான். எதற்கும் பிடிவாதம் பிடிக்க மாட்டான். உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர் மாலினியும் மனோகரனும்.
"என்னம்மா நீங்க, இப்பதான் இங்க ஒரு கோர்ஸ் படிச்சு முடிச்சிருக்கேன். இன்னும் படிக்கணும்... அதுக்குள்ள பொண்ணைப் பார்த்துட்டேன்னு சொல்றீங்க. ப்ளீஸ் மா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்மா..."
"ஏய்... அங்கே யாரையாவது லவ்ஸ் விட்டிட்ருக்கியா?... அப்பிடி இருந்தாலும் சொல்லுடா கண்ணா... நல்ல பொண்ணா இருந்தா....."
"அம்மா... அம்மா... ப்ளீஸ்மா உங்க கற்பனைக்கு ஒரு ப்ரேக் போடுங்கம்மா. நான் பாட்டுக்கு நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு இருந்தவன், மேல படிக்க ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். இப்போதைக்கு வேற எந்த ஐடியாவும் இல்லம்மா."
"நான் பார்த்து வச்சிருக்கற பொண்ணைப் பார்த்தின்னா… உன் ஐடியாவை மாத்திக்குவ."
"மாத்திக்கவே மாட்டேன்ம்மா. இன்னும் ரெண்டு வருஷம் இங்கே படிச்சு முடிச்சுட்டு அப்புறம்தாம்மா இந்தியா வரணும்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்…"
"இன்னும் ரெண்டு வருஷமா? அவ்வளவு நாளெல்லாம் உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாதுப்பா. நீ படிக்கப் போய் மூணு வருஷமாச்சு. கொஞ்ச நாளா 'உன்னை எப்போ பார்ப்போம்’னு இருக்கு. அப்பாவும் உன்னை மிஸ் பண்றாரு..."
"அது வந்தும்மா... எனக்கும் உங்களையும், அப்பாவையும் பார்க்கணும் போலத்தான் இருக்கு. ஆனா... இன்னும் ரெண்டு வருஷம் நான் படிச்சுட்டு, அப்புறம் இந்தியா வரலாம்னு இருக்கேன்மா. ப்ளீஸ் மா... நீங்களும், அப்பாவும் ஒரு ட்ரிப் இங்கே வந்துட்டுப் போங்களேம்மா..."
"உன்னை இங்க வரச் சொன்னா… நீ எங்களை அங்க வரச் சொல்றியா? படவா... நாங்க இப்போதைக்கு எங்கேயும் நகர முடியாதுப்பா. உங்க பாட்டிக்கு எண்பது வயசுக்கு மேல ஆச்சு. அவங்களை யார் பொறுப்பிலயும் விட்டுட்டு வர முடியாது. உங்கப்பா கூடப் பிறந்தவங்க யாரும் கிடையாது. எங்களுக்கு நீ ஒரே பையன் மாதிரி உங்க பாட்டிக்கு உங்கப்பா ஒரே மகன்தான? அதனால வேற யாரும் பார்த்துக்க வழியில்ல... அது மட்டும் இல்ல சித்தார்த்... உங்க பாட்டிக்கு எல்லாமே நானோ, உங்கப்பாவோதான் செய்யணும். ஒரு அவசரத்துல தப்பித்தவறி வேலைக்காரி கிட்ட சாப்பாடோ காபியோ குடுத்து விட்டுட்டேன்னா போச்சு... அன்னிக்கு முழுசும் பட்டினி கிடப்பாங்க. கோவிச்சுப்பாங்க. பாவம். வயசானவங்க. அவங்க ஆயுசு காலம் வரைக்கும் அவங்க மனம் கோணாம நடந்துக்கலாம்னு நானும், உங்கப்பாவும் அவங்களை விட்டுட்டு எங்கேயும் போறதில்லைப்பா. அதனால நாங்க வர முடியாது. நீ சீக்கிரமா வரப் பாருப்பா..."
"சரிம்மா. இன்னும் ஆறு மாசத்துல வந்துடறேன். அது சரி... பாட்டிக்கு ஞாபக சக்தியெல்லாம் எப்படி இருக்கு?"