புகழின் நிமிடங்கள் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6346
கண்ணீரை அடக்குவதற்கு பியாட்ரீஸ் மிகவும் சிரமப்பட்டாள்.
நைரோபிக்குச் செல்லும் ஒரு பேருந்தில் மறுநாள் காலையில் அவள் ஏறினாள். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, அவள் பஜார் தெருவின் வழியாக நடந்தாள். பிறகு அரசாங்க தெருவில் ஹுசன் சுலைமான் தெருவிற்கு அருகில் இருந்த ஒரு கடையில் அவள் சில காலுறைகளை வாங்கினாள். அவற்றில் ஒரு ஜோடியை அணிந்தாள். ஒரு புதிய ஆடையையும் வாங்கி அணிந்தாள். பேட்டா காலனி கடைக்குள் நுழைந்து, பெரிய கீழ்ப்பகுதியைக் கொண்ட ஒரு செருப்பு வாங்கினாள். தேய்ந்து போயிருந்த பழைய செருப்பைத் தூக்கியெறிந்து விட்டு புதிய செருப்பை அணிந்தாள். காதில் வளையங்களை அணிந்தாள். கண்ணாடியில் அவள் தன்னுடைய புதிய உருவத்தைப் பார்த்தாள். திடீரென்று வாழ்க்கையில் அன்று வரை அனுபவித்தே இராத ஒரு கடுமையான பசியை அவள் உணர்ந்தாள். மோத்தி மஹாலுக்கு முன்னால் தயங்கி நின்றாள். பிறகு... நடந்து ஃப்ரான்ஸேக்குள் நுழைந்தாள். ஆண்களின் பார்வை அவளை நோக்கித் திரும்புவதற்கு போதுமான ஒரு பிரகாசம் அவளின் கண்களில் தெரிந்தன. அது அவளை உணர்ச்சிவசப்படச் செய்தது. மூலையிலிருந்த ஒரு மேஜையில் போய் உட்கார்ந்து, அவள் இந்தியன் உணவிற்கு ஆர்டர் கொடுத்தாள். ஒரு மனிதன் தன்னுடைய மேஜையிலிருந்து எழுந்து, அவளுடன் வந்து சேர்ந்து கொண்டான். அவள் அந்த மனிதனைப் பார்த்தாள். அவனுடைய கண்கள் நன்கு பிரகாசித்துக் கொண்டிருந்தன. கறுப்பு நிறத்தில் சூட் அணிந்திருந்த அவனுடைய கண்கள் மிகவும் ஆர்வத்துடன் உரையாடிக் கொண்டிருந்தன. மது வாங்கிக் கொடுத்து அவளுடன் உரையாடலில் ஈடுபடுவதற்கு அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவன் மேஜைக்கு அடியில் அவளுடைய முழங்காலைத் தொட்டான். பிறகு... மேல் நோக்கி... மேல் நோக்கி... தொடை வரை... அவள் அதற்கு அவனை அனுமதித்தாள். பிறகு... திடீரென்று அவள் தன்னுடைய முழுமையாக சாப்பிடாத உணவையும் தொட்டுப் பார்க்காத மதுவையும் பொருட்படுத்தாமல், வெளியேறி நடந்தாள். அவன் பின் தொடர்ந்து வருவதை திரும்பிப் பார்க்காமலே அவள் தெரிந்துகொண்டாள். சிறிது தூரத்திற்கு அவன் அவளைப் பின்தொடர்ந்தான். சிரிப்பு வந்தாலும், ஒரு முறைகூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுக்கு நம்பிக்கை விட்டுப் போய்விட்டது. அவனை ஒதுக்கிவிட்டு, அவள் ஒரு கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு நின்றாள். திரும்பிச் செல்லும்போது, இல்மார்க்கிற்குச் செல்லும் பேருந்தில், ஆண்கள் அவளுக்கு இருப்பிடம் அளித்தார்கள். ஒரு உரிமை என்பதைப் போல அவள் அதை ஏற்றுக்கொண்டாள்.
ட்ரீ டாப் பாரில் அவள் நேராக கவுன்டரை நோக்கிச் சென்றாள். பணக்காரர்களின் வழக்கமான ஆரவாரங்கள் சுற்றிலும் பலமாக கேட்டுக்கொண்டிருந்தன. அவளுடைய வருகையைக் கண்டதும், சிறிது நேரத்திற்கு அவர்களுடைய உரையாடல்கள் நின்றுபோய்விட்டன. அவர்களுடைய ஆபாசம் நிறைந்த கண்கள் அவளைப் பின் தொடர்ந்து பயணித்தன. இளம்பெண்கள் அவளையே வெறித்துப் பார்த்தார்கள். ந்யாகுத்தியால்கூட தன்னுடைய சொந்த வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. அவர்கள் எல்லாருக்கும் பியாட்ரீஸ் மது வாங்கிக் கொடுத்தாள். மேனேஜர் ஆர்வத்துடன் அவளுக்கு அருகில் வந்து ஒரு உரையாடல் நடத்துவதற்கு முயற்சித்தான். அவள் எதற்காக வேலையை விட்டாள்? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? கவுன்டரில் ந்யாகுத்திக்கு உதவியாக இருந்து கொண்டு வேலை செய்வதற்கு அவள் தயாரா? ஒரு பரிமாறும் பெண் ஒரு குறிப்புடன் வந்தாள். தங்களுடைய மேஜையில் பங்குகொள்ள அவள் தயாராக இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு பணக்காரன் விரும்புகிறான். அந்த இரவு வேளையில் அவள் சுதந்திரமாக இருக்கிறாளா என்ற ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு ஏராளமான கடிதங்கள் அவளைத் தேடி வந்தன. நைரோபிக்கு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பயணமாவது... ஆனால், கவுன்டரை விட்டு பியாட்ரீஸ் அசையவே இல்லை. அவர்கள் அளித்த குளிர்பானங்களை ஒரு உரிமையைப் போல அவள் அனுபவித்தாள். புதிய தைரியமும் நம்பிக்கையும் அவளிடம் வந்து சேர்ந்தன.
அவள் ஒரு ஷில்லிங் எடுத்து க்ராமஃபோனின் நீளமான ஊசிக்கு அருகில் போட்டாள். ராபின்ஸன் மவான்கியின் "ஹன்யுவா மஷாம்பானி" என்ற பாடல் சத்தமாகக் கேட்க ஆரம்பித்தது. நகரத்திலிருக்கும் பெண்களிலிருந்து வேறுபட்டு, வயல்வெளிகளில் வேலை செய்யும் ஒதுக்கப்பட்ட பெண்களுக்காக அவன் பாடினான். தொடர்ந்து அவள் ஒரு காமரூவையும், டிகெயையும் பாடச் செய்தாள். ஆண்கள் அவளுடன் சேர்ந்து நடனமாட விரும்பினாலும், பியாட்ரீஸ் அவர்களைச் சட்டை செய்யாமல் இருந்தாள். ஆனால், தன்னை நோக்கி இருந்த அவர்களுடைய காம வெளிப்பாடுகளை அவள் முழுமையாக ரசித்தாள். இன்னொரு பாடலின் இசையுடன் சேர்ந்து அவள் தன்னுடைய இடுப்பை அசைத்தாள். அவளுடைய சரீரம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமலிருந்தது. அவள் சுதந்திரமானவளாக இருந்தாள். அவள் உணர்ச்சிகளையும் சந்தோஷங்களையும் முழுமையாக ருசித்து சுவைத்தாள்.
ஆறு மணி ஆனபோது அந்த லாரிக்காரன் திடீரென்று பாருக்கு இரைச்சலுடன் வந்தான். அப்போது அவன் தன்னுடைய மிலிட்டரி ஓவர்கோட்டை அணிந்திருந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் நின்றிருந்தான். அவர்கள் சுற்றிலும் பார்த்தார்கள். எல்லாரின் கண்களும் அவனை நோக்கிச் சென்றன. பியாட்ரீஸ் தன்னுடைய நடனத்தில் மூழ்கிவிட்டிருந்தாள். க்ராமஃபோனில் தன்னுடைய சந்தோஷம் நிறைந்த நிமிடங்களில் மூழ்கிப்போயிருந்த இளம்பெண்ணைப் பார்த்தபோது, முதலில் அவனுக்கு அவள்தான் பியாட்ரீஸ் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவன் வெறி பிடித்தவனைப்போல கத்தினான். "அதோ... அவள்தான் அந்தப் பெண்... திருடி... திருடி...''
மனிதர்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த இடங்களுக்குச் சிதறினார்கள். போலீஸ்காரன் விலங்கை மாட்டியபோது, பியாட்ரீஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாசல் கதவிற்கு அருகில் சென்றபோது மட்டும் அவள் தலையைத் திரும்பி, நாக்கை நீட்டி துப்பினாள். பிறகு... போலீஸ்காரனுக்குப் பின்னால் வெளியேறி நடந்தாள்.
பாரில் எந்தவித சத்தமும் இல்லாத பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. ரத்தமே சிந்தாமல், அருமையாக நடந்து முடிந்த கொள்ளையைப் பற்றி யாரோ சொன்ன தமாஷ், சிரிப்பலைகளாக மாறியது. அவர்கள் அவளைப் பற்றி பேசினார்கள். அவளுக்கு சரியான தண்டனை கிடைக்கும் என்று சிலர் கூறினார்கள். "இந்த மாதிரியான பெண்களைப் பற்றி" சிலர் வெறுப்புடன் பேசினார்கள். "எல்லா வகையான சொத்து திருட்டுகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூடாதா?" சிலர் குற்றச்செயல்கள் அதிகமாக நடந்தது கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டார்கள்.
மெதுவாக, லாரிக்காரன் நாயகன் இடத்திற்கு உயர்ந்தான். பலர் பல வகையான கேள்விகளுடன் அவனைச் சூழ்ந்தார்கள். கதை முழுவதையும் கூறும்படி அவர்கள் அவனிடம் கேட்டுக்கொண்டார்கள். சிலர் அவனுக்கு மது வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களுடைய கவனம் நிறைந்த பேரமைதி அங்கீகரித்ததை வெளிப்படுத்தக்கூடிய சிரிப்பாக மாறியது. சொத்துகளுக்கு எதிராக அடக்கப்பட்ட வன்முறை, தற்காலிகமாவது அவர்களை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக மாற்றியது. அன்று முதல்முறையாக அந்த மனிதனின் கதையைக் கேட்பதற்கு அவர்கள் தயாரானார்கள்.
ஆனால், கவுன்டருக்குப் பின்னால் ந்யாகுத்தி அழுதுகொண்டிருந்தாள்.