புகழின் நிமிடங்கள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6346
வெளுத்த பேய்க்கும் அவனுடைய குழந்தைகளுக்காகவும்- ஒரு ஆணும் அவனுடைய பிள்ளைகளும் வியர்வை, கடுமையான உழைப்பு ஆகியவை நிறைந்த துயரமான எதிர்காலத்தை நோக்கி அடித்து அழுத்தப்பட்டார்கள். அவன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றான். மற்றவர்களுடன் சேர்த்து அவனையும் சிறையில் அடைந்தார்கள். சிறைக்குள்ளிருந்து வெளியே வந்தது, முன்பு அவனுடைய தாய் முதன்முறையாக உலகிற்கு அனுப்பி விட்டதைப்போல இருந்தது. மொத்தத்தில சுற்றிலும் சூழ்ந்து கொண்டிருந்த வெறுமை மட்டும். உயர்ந்த பதவிகளில் நியமிக்கப்பட உதவக்கூடிய கல்வியைப் பெறுவதற்கு தன்னால் இயலாது என்பதை சுதந்திரத்திற்குப் பிறகு அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவனாக பணியாற்றினான். பிறகு... ஒரு கசாப்புக்காரன்.. ரிஃப்ட் அடிவாரத்திலிருந்தும் சிரி மாவட்டத்திலிருந்தும் நைரோபிக்கு காய்கறிகளையும் உருளைக்கிழங்கையும் ஏற்றிக்கொண்டு செல்லும் ஒரு சரக்கு கொண்டு செல்லும் மனிதனாக மெதுவாக வளர்ந்தான். தன்னுடைய வளர்ச்சியைப் பற்றி அவன் பெருமைப்பட்டான். செல்வச் செழிப்பு நிறைந்த உலகத்திற்கு சாதகமான படிகளைக் கடந்து போய்ச் சேர்ந்த மற்றவர்களை அவன் வெறுத்தான். தனக்கு எந்தச் சமயத்திலும் கிடைக்காமல் போய்விட்ட கல்வியைப் பற்றி மனதில் கவலைப்பட்டு புலம்பினான். தன்னுடைய குழந்தைகளுக்கு கிடைக்கப் போகிற கல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். தொடர்ந்து பணத்தை மிகுந்த கவனத்துடன் எண்ணி தலையணைக்குக் கீழே வைத்துவிட்டு, பியாட்ரீஸைப் போகும்படி கூறினான். இடையில் அவளுக்கு பீர் வாங்கிக் கொடுத்தாலும், ஆண்களின் பணத்தைத் தின்னும் பெண்களை அவன் சந்தேகப்பட்டான். அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஒரு இரவு நேரத்தில் அவளுடன் சேர்ந்து உறங்கிவிட்டு, மறுநாள் அவளுக்கு இருபது ஷில்லிங் நோட்டை அவன் பிதுக்கி எடுத்துக் கொடுத்தான். ஏற்கெனவே அனுபவித்த ஒரு குற்ற உணர்வுடன் அவள் பணத்தை வாங்கினாள். அடுத்து வந்த வாரங்களிலும் அதுவேதான் திரும்பத் திரும்ப நடந்தது. உதவுகிற மாதிரி இருந்தாலும், பணம் அவளிடம் சந்தோஷத்தை உண்டாக்கவில்லை. ஒரு மூட்டை முட்டைக்கோஸுக்கோ ஒரு மூட்டை உருளைக் கிழங்குக்கோ பணம் தருவதைப்போல அவன் அவளுடைய சரீரத்திற்கு பணம் தந்தான். கேட்டுக் கொண்டிருந்தவள் என்ற வகையில் அவளுடைய சேவைக்கு, அவனுடைய குறைகளை வாங்கிக்கொண்ட பெட்டி என்ற நிலையில், ஒரு இரவு வேளையின் சுமை தாங்கி என்ற முறையில்... அவளுக்கு ஒரு பவுண்ட் பணமாவது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவனுடைய ஆணவத்தைப் பார்த்து, விஷயங்கள் மாறாத வழக்கமான கதைகளைக் கேட்டு அவள் மிகவும் வெறுப்படைந்தாள். ஆனால், அவனுடைய மனதின் அடித்தளங்களில் எங்கோ இனம்புரியாத ஏதோவொன்று இருக்கிறது என்பதை அவள் தெரிந்துகொண்டாள். ஒரு நெருப்புக் கொழுந்து... ஒரு வித்து... மலர ஆரம்பித்திருக்கும் ஒரு மொட்டு... அவள் அவனுடைய வருகைக்காக காத்திருந்தாள். யாரிடமாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்- தன்னை அறிந்திருக்கும் ஏதாவதொரு மனிதப் பிறவியில் நம்பிக்கை வைப்பதற்கு.
உயர்ந்த நிலையை அடைவதற்காக தாங்கிக் கொள்ள வேண்டியிருந்த சிரமங்கள் நிறைந்த வழக்கமான கதைகளை திடீரென்று ஒதுக்கிவிட்டு, ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் அவள் அதை அடைந்தாள். அதை எப்படிச் செய்தோம் என்று அவளுக்கே தெரியவில்லை. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது காரணமாக இருக்க வேண்டும். இரும்புக் கம்பிகளில் மழையின் மென்மையான ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. மழையின் தாள கதியில் இருந்த ஓசை, புத்துணர்ச்சியும் மந்தத் தன்மையும் கொண்ட ஒரு அலட்சிய உணர்வை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. அவன் அவள் கூறுவதைக் கேட்பதற்குத் தயாரானான். த்யேரியாவைச் சேர்ந்த கராற்றினாவிலிருந்து அவள் வந்திருந்தாள். பிரிட்டிஷ் பட்டாளக்காரர்கள் அவளுடைய இரண்டு சகோதரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இன்னொரு ஆள் சிறையில் கிடந்து இறந்துவிட்டான். அவள் மட்டும் இறுதியில் எஞ்சினாள். வறுமையின் பிடியில் சிக்கியவர்களாக இருந்தாலும், அவளுடைய பெற்றோர்கள் தங்களுக்கென்று இருந்த சிறு நிலத்தில் சிரமப்பட்டு வேலை செய்து ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் அவளுடைய ஃபீஸைக் கட்டினார்கள். முதலில் சிறிது காலம் மிகவும் சிரமப்பட்டாள். ஏழாம் வருடம் சற்று நிம்மதி உண்டானது. உயர்ந்த கிரேடு எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. அரசாங்க பள்ளிக்கூடத்திற்கு அழைக்கப்பட்ட தன்னுடைய அதே தகுதிகளைக் கொண்ட சிலரை அவளுக்குத் தெரியும். சொந்தக்காரர்களின் வசதி படைத்த சூழ்நிலைகளால் நல்ல பள்ளிக்கூடங்களில் போய்ச் சேர்ந்த வேறு சிலரையும் தெரியும். ஆனால், தாங்கக் கூடிய ஃபீஸைக் கொண்ட ஒரு பள்ளிக்கூடத்திற்கு அவளை மட்டும் யாரும் அழைக்கவில்லை. ஹாரம்பி பள்ளிக்கூடத்தின் கல்விக் கட்டணம் அவளுடைய பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. ஏழாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர்வதற்கு அவளால் முடியவில்லை. அவள் வீட்டிலேயே இருந்துவிட்டாள். விவசாயம் செய்வதிலும், வீட்டு வேலைகள் செய்வதிலும் அவள் அவர்களுக்கு உதவினாள். அது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. காரணம்- கடந்த ஆறு வருடங்களாக அவள் தன்னுடைய பெற்றோரிடமிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையை அல்லவா வாழ்ந்தாள்? கிராமத்து நாட்கள் இருள் நிறைந்ததாக இருந்தன. இடையில் அவ்வப்போது கராற்றினாவுக்கும் ந்யேரிக்கும் சென்று அவள் வேலை தேடிக் கொண்டிருந்தாள். "உனக்கு என்ன வேலை வேண்டும்? உனக்கு என்ன தெரியும்? டைப் அடிக்க தெரியுமா? ஷாட் ஹேண்ட் தெரியுமா?" -அலுவலகங்களில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கேள்விகள். அவள் ஏமாற்றத்திற்குள்ளானாள். ந்யேரியில்தான் அவள் அவனைப் பார்த்தாள்- கறுப்பு நிற சூட்டும் சன் க்ளாஸும் அணிந்த நல்ல தோற்றத்தைக் கொண்ட ஒரு இளைஞன். ஒரு கடையில் நின்று கொண்டு அவன் ஃபான்டா குடித்துக் கொண்டிருந்தான். கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்த முகத்தையும் அவளுடைய பரிதாபமான நிலையையும் அவன் பார்த்தான். அவளிடம் உரையாடினான். அவன் நைரோபிலிருந்து வந்திருந்தான். வேலை தேடி விசாரிப்பது என்பது மிகவும் எளிதான வேலை. பெரிய நகரங்களில் வேலைக்கு எந்தவொரு பஞ்சமும் இல்லை. அவனால் உண்மையாகவே உதவ முடியும். அங்கு பயணம் செய்வது என்றால்...? சந்தோஷமான விஷயம்தான். அவனுக்கு க்ரீம் நிறத்தைக் கொண்ட ஒரு கார் சொந்தத்தில் இருந்தது. விடியும் நேரத்தைப் பற்றிய சந்தோஷமான எதிர்பார்ப்புகள் இருந்ததால், அந்த பயணம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. அவர்கள் நைரோபியை அடைந்தார்கள். அவன் அவளை ஒரு டெரஸ் பாருக்கு அழைத்துச் சென்றான். பீர் பருகிக் கொண்டே அவர்கள் நைரோபியைப் பற்றி உரையாடினார்கள். நியான் விளக்கின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்த நகரத்தை அவளால் சாளரத்தின் வழியாகப் பார்க்க முடிந்தது. இங்குதான் எதிர்பார்ப்புகள்- அவள் நினைத்தாள்.