புகழின் நிமிடங்கள் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6346
இல்மார்க்கை விட்டு இன்னொரு இடத்திற்குச் சென்று எல்லா விஷயங்களையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவளுக்கு மனம் வரவில்லை. அலைந்து அலைந்து அவள் தளர்ந்து போய் விட்டாள். அவள் அம்பி தேய்ப்பதை நிறுத்திவிட்டாள். பணம் முழுவதும் செலவாகிவிட்டது. கண்ணாடியில் அவளுக்கு மிகவும் அதிகமான வயது தெரிந்தது. கொடுப்பினைகளில் இருந்து அவள் வழி தவறிப் போய் விட்டிருக்கிறாள். காதலர்களைக் கவர்ந்து இழுப்பதற்கும் தன்னுடைய சரீரத்திற்கு விலை கூறுவதற்கும் அவளுக்கு மிகுந்த பயம் தோன்றியது. ஒரு ஆணோ, பல ஆண்களோ தன்னைப் பொருட்படுத்தும் கௌரவமுள்ள ஒரு வேலைக்காக அவள் ஏங்கினாள்.
ஒரு ஆணுக்காக மட்டும் படுக்கையைப் பங்கு போட்டுக் கொள்ளலாம். ஒரு வீட்டுக்காக... ஒரு குழந்தைக்காக... ஆனால், பரிமாறுபவர்களிடமிருந்து வேறு விஷயங்களை எதிர்பார்ப்பவர்களை அவளுடைய தேவை அதிர்ச்சியடையச் செய்தது. இரவு நேரத்தில் இருண்ட நிமிடங்களில் அவள் அழுது கொண்டிருந்தாள். கிராமத்திலிருந்த தன்னுடைய வீட்டைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். அந்த நிமிடங்களில் நாயேரியில் இருக்கும் தன்னுடைய தாயின் கிராமம் பூமியிலேயே மிகவும் அழகான இடமாக அவளுக்குத் தோன்றியது. விவசாயிகளான தாயுடனும் தந்தையுடனும் கனவுகளையும் நினைவுகளையும் ஆழமான அமைதியின் குளிர்ச்சியையும் நட்புகளையும் பங்கு போட்டுக் கொண்டு அவள் அங்கு வாழலாம். வீட்டுக்கு திரும்பிச் சென்று அவர்களைப் பார்க்க வேண்டும் என்று அவள் ஏங்கினாள். ஆனால் எதுவுமே இல்லாத கைகளுடன் எப்படி திரும்பிச் செல்வது? கிராமம் நினைவில் ஒரு மங்கலான ஓவியத்தைப் போல இருந்தது. பாரில் அவளுடைய வாழ்க்கை அறிமுகமில்லாத மனிதர்களின் தேவையற்ற ஆரவாரங்களுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருந்தது... கருணையிலிருந்தும் வரங்களில் இருந்தும் நழுவி நழுவி- எந்தக் காலத்திலும் மண்ணுடனும் காற்றுடனும் விளைச்சலுடனும் நிலவுடனும் சேர்ந்து நிற்காத தலைமுறையின் பகுதியாக அவள் இருந்தாள். இருண்ட வேலியில் படர்ந்திருக்கும் கொடிகளின் முணுமுணுப்புகளும் வானத்தைத் தொடும் அளவுக்கு வளர்ந்திருக்கும் டுமுடு மலைத் தொடர்களும் அவளுக்காக இருப்பதல்ல. நிலவின் நிழலில் நடைபெற்ற நடனங்களும் காதல்களும் அவளுக்காக நடக்கவில்லை. அழகானவளாக இருந்தும், லிமிருவிலிருந்து பணக்காரர்களின் வைப்பாட்டியாக வாழ்ந்த, அன்னையின் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்களைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். இறுதியில் தற்கொலையின் குளிர்ச்சியான கரங்களில் நிம்மதி தேடிய... வாழ்க்கையின் இனம்புரியாத ஆழங்களைவிட, இந்தத் தலைமுறை மரணத்தின் இடுக்குகளில் அபயம் தேடுகிறது. எத்தனை எத்தனை திருமணமாகாத அன்னைகள் தங்களுடைய குழந்தைகளைக் கழிப்பறையில் எறிந்து விட்டிருக்கிறார்கள்! பெண் குழந்தைகளின் மரணம் இப்போது தமாஷாக எண்ணக்கூடிய ஒரு விஷயமாகி விட்டிருக்கிறது. "அவள் வேதனையே இல்லாமல், மரணத்தை நோக்கிப் போகிறாள்." அவர்கள் தமாஷாக கூறினார்கள். தொடர்ந்து, பியாட்ரீஸின் சிந்தனை மரணத்தை நோக்கிச் செல்லும் பயணத்தைப் பற்றியதாக இருந்தது. ஆனால், அது அவளால் முடியாது.
அவள் அன்புக்காக ஏங்கினாள்.
அவள் வாழ்க்கைக்காக ஆசைப்பட்டாள்.
இல்மார்க்கில் புதிதாக ஒரு பார் திறக்கப்பட்டது. லாட்ஜும் உணவு விடுதியும் உள்ள ஒரு "ட்ரீ டாப் பார்". என்ன காரணத்திற்காக அதை "ட்ரீ டாப்பார்" என்று அழைக்கிறார்கள் என்று பியாட்ரீஸுக்குப் புரியவில்லை. கீழே உணவு சாப்பிடும் இடமும், மேலே மது அருந்தும் இடமும், மீதி இடத்தில் சில நிமிடங்களோ ஒரு இரவு வேளையோ தங்கக் கூடியவர்களுக்கான அறைகளும் இருந்தன. இப்போது அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்- ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்க அதிகாரிதான் அதன் உரிமையாளராக இருந்தார். கென்யாவில் இருக்கும் முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும் வர்த்தக மையங்களையும் வியாபாரங்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய பணக்காரராக அவர் இருந்தார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் அனைவரும் அவருடைய பாருக்கு வந்தார்கள். விலை மதிப்புள்ள கார்களில் வந்து சேரும் பணமூட்டைகள். சீருடை அணிந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஓட்டுநர்களை காத்திருக்க வைக்கும் புகழ்பெற்ற மனிதர்கள். பெரிய மனிதர்களை வணங்குவதற்காக பணக்காரர்களாக அல்லாதவரும் வருவதுண்டு. அவர்களுடைய முக்கிய விஷயமே அரசியல்தான். பிறகு... தொழில்... மற்றவர்களைப் பற்றி மோசமான வார்த்தைகளில் பேசுவது சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக அங்கு நடைபெற்றது. "உங்களுக்குத் தெரியாதா? அந்த ஆளுக்கு பணியில் உயர்வு கிடைத்தது. உண்மையா? அவளை வேண்டாமென்று விலக்கிவிட்டார். பொதுப் பணத்தை அபகரித்து... நீங்கள் எந்த அளவுக்கு முட்டாள் தெரியுமா? அந்த அளவுக்கு திறமையானவர் இல்லை." அவர்கள் விவாதிப்பார்கள். சண்டை போடுவார்கள். முஷ்டியைச் சுருட்டி, ஒருவரோடொருவர் அடித்துக் கொள்வார்கள்- குறிப்பாக தேர்தல் நேரங்களில். லுவோ இனம்தான்- அதிகாரங்கள், அகங்காரங்கள் நிறைந்த தந்த கோபுரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த பல்கலைக்கழக மாணவர்கள்தான் கென்யாவின் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பவர்கள் என்ற ஒரேயொரு விஷயத்தில் மட்டுமே அவர்கள் ஒரே கருத்தைக் கொண்டவராக இருந்தார்கள்.
பிறகு... அவர்கள் விமர்சிப்பார்கள்- "வளர்ச்சியின் பெரும்பகுதி க்யாம்புவிற்குத்தான் கிடைக்கிறது. நைரோபியின் முழு வர்த்தகத்தையும் அவர்கள்தான் செய்கிறார்கள். சிரி மாவட்டத்திற்குள்கூட அவர்கள் பலவந்தமாக உள்ளே நுழைகிறார்கள். அந்த ஆப்பிரிக்கன் தொழிலாளிகள்- குறிப்பாக வயல்களில் வேலை செய்பவர்கள் சோம்பேறிகளாகவும் பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்." தொடர்ந்து ஒவ்வொருவரும் புகழ்ச்சியுரைகளில் இறங்குவார்கள். இல்லாவிட்டால்- பாராட்டு மழைகளைப் பொழிவார்கள். புகழ்ச்சியுரைகள், பொங்கி வழியும் மது வகைகள் ஆகியவற்றின் நிமிடங்களுக்கு மத்தியில் ஒருவர், பாரில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாருக்கும் திரும்பத் திரும்ப மது வாங்கிக் கொடுப்பார். இல்மார்க்கில் ஏழையாக இருப்பவர்கள்கூட புதிய பணக்காரர்களின் அடைக்கலமாக இருக்கும் இல்மார்க்கில் உணவு சாப்பிடுவதற்காக வந்து சேர்வார்கள்.
அங்கு பியாட்ரீஸுக்கு ஒரு துப்புரவு செய்யும் பெண்ணின் வேலை கிடைத்தது. குறுகிய சமயத்திற்குள்ளேயே அவள் பெரிய பணக்காரர்களை நெருக்கமாகத் தெரிந்து கொண்டாள். முன்பே கேட்டுக் கொண்டவர்களுக்காக, படுக்கையைத் தயார் பண்ணி வைத்தாள். ஏழைகள் பணக்காரர்களுக்கு முன்னால் பெரிய மனிதர்களாக நடக்க முயற்சிப்பதை அவள் பார்த்தாள். ஆனால், விதி அவளை அங்கும் வேட்டையாடியது. மற்ற மது விடுதிகளில் இருந்து "ட்ரீ டாப்"பிற்கு இளம் பெண்கள் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். இல்மார்க்கிலும் லிமிருவிலும் அவளுக்கு நன்கு அறிமுகமான இளம் பெண்கள்... அவர்கள் பணக்காரர்களிடம் மிகவும் எளிதாக ஒட்டிக் கொள்வார்கள். பல காதலர்களுடனும் அவர்கள் ரகசியமாக சல்லாபம் நடத்திக் கொண்டிருந்தார்கள். பணக்காரர்கள், ஏழைகள் எல்லாரின் கண்களையும் பார்த்துக் கொண்டே கவுன்டரில் ந்யாகுத்தி உட்கார்ந்திருந்தாள். அவள் தன்னுடைய மலர்ந்த கண்கள், வளையல்கள் அணிந்த கைகள், காதில் அணிந்த வளையங்கள் ஆகியவற்றுடன் வெறுமை நிறைந்த நிமிடங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தாள்.