மெயில் ரன்னர் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7053
அவன் நிலம் முழுவதையும் மிதித்து ஒரு வழி பண்ணிவிட்டிருந்தான். தும்பிக்கையை அஞ்சல் பை தொங்கிக் கொண்டிருந்த மரக் கொம்பை நோக்கித் தூக்கி இடையில் அவ்வப்போது கோபத்துடன் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஒணக்கன் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். இதுவரை என்ன விளையாட்டு விளையாடினாலும் தோளிலிருந்து அஞ்சல் பையை அகற்றிய செயலை அவன் செய்ததில்லை. காட்டுப் போக்கிரியான ஒரு யானை அதைச் செய்ய வைத்து விட்டது. யானையை அந்த இடத்தை விட்டுப் போகச் செய்வதற்கு அந்த ஆபத்து நிறைந்த இடத்தில் தன்னுடைய வித்தைகள் எதுவும் உதவாது என்று அவனுக்குத் தெரியும். அந்த வகையில் அவன் தன்னைத் தானே திட்டிக் கொண்டு நின்றிருந்தபோது, சற்று தூரத்திலிருந்து ஒரு ஆரவாரம் கேட்டது. காட்டு யானைகளின் வருகை அது என்பதைப் புரிந்து கொண்டான். யானைகளைப் பார்த்து அவனுக்கு பயமில்லை. "ஒற்றை யானை'தான் ஆபத்து விளைவிக்கக் கூடியவன். எனினும், அந்த யானைகளின் ஊர்வலம் நடக்கும் பாதையிலிருந்து விலகி நின்றிருப்பதுதான் நல்லது என்று நினைத்து அவன் எங்கு போய் ஒளிவது என்று தேடினான். வானத்தைத் தொட்டுக் கொண்டு நின்றிருந்த மரங்களின் கூட்டத்தைத் தவிர, அந்தப் பகுதியில் வேறு எதுவும் இல்லை. இறுதியில் ஒரு அடர்ந்த புதருக்குள் சென்று ஒளிந்து கொள்வது என்று அவன் தீர்மானித்து, எப்படியோ அதற்குள் போய் மறைந்து கொண்டான்.
தூசிகளையும் ஆவி பறக்கும் சாணத்தையும் பின்னால் விட்டவாறு, யானைகளின் கூட்டம் கடந்து சென்றது. ஒரு முப்பது யானைகளாவது இருக்கும்.
ஒணக்கன் புதருக்குள் இருந்து வெளியே வருவதற்கு முயன்றபோதுதான், தான் ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதே அவனுக்குத் தெரிந்தது. வெளியே வருவதற்கு இடைவெளி தென்படவில்லை. புதர்கள் அவனைச் சற்று நெருக்கிக் கொண்டிருந்தன. அந்த புதரின் வலைக்குள் இருந்து உதறிக் கொண்டு வெளியே வருவதற்கு அவனுக்கு ஒரு மணிநேரம் சிரமப்பட வேண்டியிருந்தது. அதற்குள் நேரம் இருட்ட ஆரம்பித்தது.
ஒணக்கன் அஞ்சல் பையைச் சென்று பார்த்தான். யானை அதற்குக் கீழேயே நின்றிருந்தது.
நள்ளிரவு தாண்டும் வரை யானையும் ஒணக்கனும் அந்த அஞ்சல் பையைப் பார்த்துக் கொண்டே அந்த காட்டில் இருந்து கொண்டிருந்தார்கள். இறுதியில் அந்த வழியே வந்த ஒரு பெண் யானைதான் ஒணக்கனை காப்பாற்றினாள். யானை மோகினியைப் பார்த்ததும், ஆண் யானை மரக் கொம்பில் தொங்கிக் கொண்டிருந்த எதிரியை விட்டு விட்டு, அவளுக்குப் பின்னால் நடந்து மறைந்தது.
அஞ்சல் பையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒணக்கன் குத்தனூருக்குத் திரும்பி வந்தபோது, புலர் காலைப் பொழுது சேவல் கூவிக் கொண்டிருந்தது.
அந்த யானைகள் இருக்கும் காட்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்களைப் பற்றிய கதைகள்தான் ஒணக்கனின் அறிவியல் சொத்துக்களாக இருந்தன. எஸ்டேட்டின் மூலையில் பலசரக்கு வியாபரம் செய்யும் வடகரையைச் சேர்ந்த மொய்து ஹாஜிக்கு "யானை ஹாஜி” என்ற பெயர் வந்ததற்கு, அந்தக் காட்டில் இருந்த ஒரு அட்டகாசம் செய்யும் ஆண்யானைதான் காரணம். ஒணக்கன் அந்தக் கதையை விளக்கிக் கூறுவான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவமது. ஒரு நாள் மதிய நேரத்தில் ஹாஜி தன்னுடைய விவசாயம் இருந்த நிலத்தைப் பார்த்து விட்டு கடைக்கு அந்த யானைகள் இருக்கும் காட்டின் வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார். ஒற்றையடிப் பாதையின் வழியாகத் திருப்பத்தை அடைந்தபோது, திடீரென்று ஒரு ஒற்றை ஆண் யானை ஹாஜியை நோக்கிப் பாய்ந்து வந்தது. தடிமனான உடலைக் கொண்ட ஹாஜி "அல்லா” என்று உரத்த குரலில் கத்திக் கொண்டே உடலைக் குலுக்கியவாறு ஓட ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் யானையும் ஓடியது. யானைக்கு பார்வை சக்தி குறைவாக இருக்கும் என்பதையும் மனிதர்களின் சத்தத்தைத் தெரிந்து கொண்டுதான் அது பின் தொடர்கிறது என்பதையும் கேள்விப்பட்டிருந்த ஹாஜி, தன்னுடைய தொப்பியை எடுத்துப் பின்னால் ஏறிந்தார். யானை தொப்பியினையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் அதே இடத்தில் நின்றிருந்தது. பிறகு தொப்பியை மிதித்துத் தேய்த்து முன்னோக்கித் தாவியது. ஹாஜி சட்டையை அவிழ்த்து எறிந்து விட்டு ஒட்டத்தைத் தொடர்ந்தார். யானை சிறிது நேரம் அந்தச் சட்டையுடன் ரகசிய உரையாடல் நடத்தியது. அதோ வருகிறது... அதற்குப் பிறகும் யானை. இறுதியில் அவர் அணிந்திருந்த துணியை அவிழ்த்துக் கீழே போட்டு விட்டு ஒளிந்து கொண்டார். சிறிது நேரத்திற்கு யானையின் காலடிச் சத்தம் கேட்கவில்லை. இப்போது தப்பித்து விட்டோம் என்று ஹாஜி முடிவுக்கு வந்து விட்டார். திரும்பிப் பார்த்தபோது, ஹாஜியின் கட்டங்கள் போட்ட துணியைக் கொம்பில் தூக்கிப் பிடித்துக் கொண்டு கொடி போல பறக்கவிட்டவாறு வந்து கொண்டிருந்த யானையைப் பார்த்தார். பிறகு உடலிலிருந்து அவிழ்ப்பதற்கு எதுவும் இல்லை என்ற சூழ்நிலை வந்ததும், ஹாஜி உள்ளுக்குள் இருந்த சிலவற்றை வெளியேற்றியவாறு ஓடினார் என்று ஒணக்கன் கூறினான். எது எப்படி இருந்தாலும், ஹாஜி கடைக்குத் திரும்பி வந்தது நல்ல ஒரு கோலத்துடன்தான்.
இரவில் லாந்தர் விளக்கைப் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் யானைகளும் அந்தக் காட்டில் இருந்தார்கள்.
ஒருமுறை எஸ்டேட்டிற்குக் கொண்டு செல்லக் கூடிய அரிசியையும், மசாலா பொருட்களையும் ஏற்றிக்கொண்டு தலசேரியிலிருந்து திரும்பி வந்த ஒரு மாட்டு வண்டி அந்த யானைகள் இருக்கும் காட்டை நெருங்கியபோது, பொழுது இருட்டி விட்டிருந்தது. ஒற்றைக் கண்ணன் குஞ்ஞாலியும் நொண்டிபோக்கரும்தான் வண்டியில் இருந்தார்கள். போக்கர் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். குஞ்ஞாலி அரிசி மூட்டையின்மீது சாய்ந்து படுத்துக் கொண்டு "கெஸ்” பாடிக் கொண்டிருந்தான். மாட்டு வண்டியின் அச்சின் முனையில் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டிருந்த பித்தளையில் இருந்த மணிகள் "க்லீம் க்ணும்' என்று தாளத்துடன் ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. திடீரென்று வண்டியின் ப்ரேக் பிரிந்து கீழே விழுந்தது. போக்கர் காளைகளைப் பிடித்து நிறுத்தினான்.
ப்ரேக் போயிருச்சே, குஞ்ஞாலி.'' போக்கர் உரத்த குரலில் சொன்னான். குஞ்ஞாலி பாட்டை நிறுத்தி விட்டு, மெதுவான குரலில் முனகினான்.
ப்ரேக் போனால் போகட்டும், வண்டியை ஓட்டு.'' குஞ்ஞாலி சொன்னான்.
முடியாது. யானைக் காட்டைத் தாண்டி விட்டால் அதற்குப் பிறகு வருவது குளியம்பாறை இறக்கம். வண்டியில் ப்ரேக் இல்லையென்றால் அரிசி மூட்டையும் வண்டியும் காளைகளும் நாமும் அந்தப் பள்ளத்தில் தலை கீழாக விழுந்து கிடப்போம். அதுதான் நடக்கும்.''