Lekha Books

A+ A A-

மெயில் ரன்னர் - Page 4

mail runner

நீ என்ன சொல்றே?''

நீ இறங்கிப் போய் அந்த மரத்தின் கொம்பை ஒடித்து ப்ரேக் உண்டாக்கு.''

குஞ்ஞாலி கீழே இறங்கி, இடுப்பிலிருந்த கத்தியை எடுத்துக் கையில் பிடித்தாவறு, வண்டியின் அச்சுக்குள் கீழே கட்டப்பட்டிருந்த லாந்தர் விளக்கை அவிழ்த்துக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு "ப்ரேக்” கிற்கான மரக் கொம்பைத் தேடி காட்டிற்குள் சென்றான். போக்கர் இருட்டில் வண்டியில் உட்கார்ந்திருந்தான்.

அரை மணி நேரம் கடந்த பிறகும், குஞ்ஞாலி திரும்பி வரவில்லை. "ப்ரேக்” உண்டாக்கப் பயன்படும் மரக்கொம்பு கிடைக்காமல் நண்பன் காட்டிற்குள் சற்று உள்ளே போய் விட்டான் போலிருக்கிறது என்று போக்கர் நினைத்துக் கொண்டான். ஒரு மணி நேரம் கடந்தது. குஞ்ஞாலியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. போக்கர் ஒரு சுருட்டை வாயில் வைத்துக் கொண்டு இழுத்தான்.

அந்தச் சுருட்டு இழுக்கப்பட்டுத் தீரும் நிலைக்கு வந்தபோது, காட்டிலிருந்து லாந்தர் விளக்கின் வெளிச்சம் நகர்ந்து வருவது தெரிந்தது. போக்கர் சுருட்டுத் துண்டை வீசி ஏறிந்து விட்டு, "ப்ரேக்'கைச் சரி பண்ணுவதற்காக வண்டியை விட்டுக் கீழே இறங்கி, குனிந்து கொண்டு "ப்ரேக்'கை இணைக்கும் கயிறைப் பரிசோதித்துக் கொண்டே உரத்த குரலில் சொன்னான்: இந்தக் காட்டில் என்ன எடுத்துக் கொண்டு இருந்தாய்? முரடா... உன்னை காட்டு யானை குத்திக் கொன்னுருச்சுன்னு நினைச்சிட்டேன்.''

பதிலெதுவும் வரவில்லை. போக்கர் திரும்பிப் பார்த்தபோது கண்ட காட்சி... லாந்தர் விளக்கைத் தும்பிக்கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்தது குஞ்ஞாலி அல்ல- ஒரு முரட்டுத் தனமான காட்டு யானைதான். "என் கடவுளே...” என்று உரத்த குரலில் கத்தியவாறு போக்கர் ஒரு மரணப் பாய்ச்சல் பாய்ந்தான்- பெரும் நொண்டியாக இருந்த போக்கர் அரை நொண்டியாக மாறியது அன்றைய அந்த பாய்ச்சலின் காரணமாகத்தான்.

ஒரு பெரிய மரத்தின் மேலே உட்கார்ந்திருந்த காரணத்தால் ஒற்றைக் கண்ணன் குஞ்ஞாலியும் தப்பித்துக் கொண்டான். அவர்களுக்கு நஷ்டம் என்று ஆனது ஒரு லாந்தர் விளக்கு மட்டுமே. அந்த லாந்தர் விளக்கும் தும்பிக்கையுமாக சுற்றிக் கொண்டிருந்த அந்த சுவாரசியமான ஆண் யானையை அதற்குப் பிறகும் சிலர் பார்க்கத்தான் செய்தார்கள்.

அந்த சூரியகாந்தி மரத்திற்குக் கீழே உட்கார்ந்து கொண்டு ஒணக்கன் இப்படிப் பலவற்றையும் சிந்தித்துக் கொண்டிருந்தான். சம்பவங்கள் பலவும் நிறைந்த அந்தக் காடுகளில் இங்குமங்குமாக ஓடிக்கொண்டு அவன் தன்னுடைய வாழ்க்கையின் இருபத்தோரு வருடங்களைக் கழித்திருக்கிறான். அந்த வாழ்க்கை இன்று அவனிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

"ப்ரேம்... ப்ரோம்.. ப்ரேம்.. ப்ரோம்...”

பேருந்தின் "ஹார்ன்” சத்தம் அவனை சுய உணர்விற்குக் கொண்டு வந்தது. பேருந்து முக்கி முனகி குலுங்கியவாறு அஞ்சல் நிலையத்திற்கு முன்னால் வந்து நின்றது. சக்கரங்கள் இணைக்கப்பட்டிருந்த தேங்காய் கூட்டைப் போன்று இருக்கும் ஒரு பொருள்...

பேருந்திற்குள் ஐந்தாறு பயணிகள் இருந்தார்கள். முன்னால் இருந்த இருக்கையில் இரண்டு பேர் நெளித்து கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒரு கறுத்து மெலிந்த வழுக்கைத் தலைக் கிழவன், கண்ணன் நாயர் என்ற அதிகாரி. இன்னொரு ஆள்... ஓ... நம்முடைய யானை ஹாஜி. யானை ஹாஜியைப் பற்றிய அந்தப் பழைய கதையை மனதில் நினைத்து ஒணக்கன் மெதுவாகச் சிரித்துக் கொண்டு, முகத்தை மூடிக் கொண்டான்.

போஸ்ட் மாஸ்டர் அந்த அஞ்சல் பையை-தாலி கட்டிய திருமணப் பெண்ணைப் போல இருந்த அவனுடைய செல்லமான மெயில் பேக்கை வெளியே எடுத்துக் கொண்டு வந்து, நடத்துனரின் கையில் ஒப்படைத்தார். நடத்துனர் அதை வாங்கி பேருந்தின் பின்னால் ஒரு மூலையில் வைத்தான். "ப்ரேம் ப்ரோம் ப்ரேம் ப்ரோம்” என்ற இசை முழக்கத்துடன் பேருந்து முன்னோக்கி நகர்ந்து சிறிது நேரம் ஆன பிறகு, பார்வையிலிருந்து மறைந்தது.

அவனுடைய உயிரையும் பிடித்து இழுத்துக் கொண்டுதான் அந்த பேருந்து பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

அவனுடைய சிந்தனைகள் தொடர்ந்தன. சிறிது நேரத்தில் அந்தப் பேருந்து யானைக்காட்டிற்குள் நுழையும். புதர்களும் பாறைகளும் கொடிகளும் நிறைந்த விசாலமான காட்டின் வழியாக அந்த வாகனம் போகும்போது அட்டகாசங்கள் செய்யும் யானைகள் வெறுமனே விடுமா? யானை சீறிக் கொண்டு ஆக்கிரமிப்பதற்கு நெருங்கும்போது, புதர்களுக்குள் போய் ஒளிந்து கொள்வதற்கு அந்தத் தேங்காய் கூடால் முடியுமா? பயங்கரமான ஆண் யானையைப் பற்றி அவன் குறிப்பாக நினைத்துப் பார்த்தான். வலது பக்க செவியில் சந்திரக் கலையைப் போல பெரிய ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கும் அந்த இளம் யானையை ஒரு மாத காலமாக அவன் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறான். மெயில் ரன்னரின் போக்குவரத்து இருக்கக் கூடிய சரியான நேரம் அந்த ஆண் யானைக்கு நன்கு தெரியும் என்று தோன்றுகிறது. அந்த நேரம் பார்த்து யானை அவனை எதிர்நோக்கி கொண்டு அங்கு எங்கேயாவது மறைந்து நின்று கொண்டிருக்கும். ஆனால், சாமர்த்தியங்கள் நிறைந்த குறும்பன் ஆண் யானையை வாசனை பிடிந்து அறிந்து, அதைப் பின்னால் இருந்து கொண்டு ஒரு வழி பண்ணக் கூடிய எல்லா வித்தைகளையும் பயன்படுத்துவான். ஒன்றிரண்டு தடவைகள் அவன் யானைக்குப் பின்னால் பதுங்கிச் சென்று அதன் துடைப்பத்தைப் போல இருக்கும் வாலைப் பிடித்து ஆட்டி ஓடவும் செய்திருக்கிறான். யானைக்கும் அவனுக்குமிடையே பல நேரங்களில் ஓட்டப் பந்தயம் நடந்திருக்கிறது. ஆனால், நேற்று அந்த விளையாட்டு கொம்பின்மீது ஏறி விட்டது. யானை அவனைப் பிடித்து விட்டது, பிடிக்கவில்லை என்ற நிலையில் இருந்தது. திடீரென்று புதர்களுக்கு மத்தியில் மறைந்து கொள்ள எப்படியோ அவனுக்கு முடிந்தது. கூர்மையான கற்கள் நிறைந்திருந்த ஒரு மூலை அது. வளைந்தும் திரும்பியும் கொண்டிருந்த அந்த ஒற்றையடிப் பாதைகளின் வழியாக குறும்பனைப் பின் தொடர்ந்து செல்ல தடிமனான யானையால் முடியாது. யானைக்கும் ஒணக்கனுக்கும் இடையே நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு ஒரு மணி நேரம் தொடர்ந்தது. இறுதியில் தோல்வியை தழுவியதென்னவோ யானைதான். அஞ்சல் நிலையத்தை அடைவதற்கு நேரமாகி விட்டது என்று தோன்றியதும் ஒணக்கன் விளையாட்டை நிறுத்தி விட்டு பாதைக்கு வந்தான். அவன் எங்கே மறைந்து கொண்டிருக்கிறான் என்பதை தேடியாவறு தும்பிக்ûகையை காற்றில் தூக்கிவைத்துக் கொண்டு நான்கு பக்கங்களிலும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த யானையில் அந்த இறுதி நிற்பை அவன் தனக்க முன்னால் பார்த்தான்.

 

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel