மெயில் ரன்னர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7053
புதிய கிராம வளர்ச்சி திட்டங்கள் செயல்வடிவத்திற்கு வந்தபோது, வடக்கு வயநாட்டின் குத்தனூர் கிராமத்திலிருக்கும் கிளை அஞ்சல் அலுவலகம் ஒரு சப் அஞ்சல் அலுவலகமாக ஆனது. ஙஹண்ப் என்று எழுதப்பட்ட ஒரு சிவப்பு நிற அறிவிப்புப் பலகை நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த ஒரு பேருந்து அந்த கிராமத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது.
வழக்கம்போல அன்றும் காலையில் அஞ்சல் அட்டையைக் கொண்டு போவதற்காக வந்திருந்த மெயில் ரன்னர் ஒணக்கனைப் பார்த்து போஸ்ட் மாஸ்டர்ரைருக் குறுப்பு சொன்னார்: உன்னை வேலையிலிருந்து விலக்கியாச்சு. ஒரு மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு நீ இன்றே போகலாம். தலைமை அலுவலகத்திலிருந்து ஆர்டர் வந்திருக்கிறது.''
ஒணக்கனுக்கு எதுவும் புரியவில்லை. தொண்டைக் குழியில் அட்டை மாட்டிக் கொண்டதைப்போல வாயைத் திறந்து கொண்டு அவன் போஸ்ட் மாஸ்டரின் முகத்தையே பேந்தப் பேந்த பார்த்துக் கொண்டிருந்தான்.
டேய்... காதில் விழந்ததா? உன்னிடம்தான் சொன்னேன்.'' மாஸ்டர் உரத்த குரலில் கேட்கும்படி கூறினார்: இனிமேல் நீ இங்கு தேவையில்லை. இன்றிலிருந்து தபால் பையை மெயில் பேருந்தே கொண்டு போகப் போகிறது.''
ங்...'' ஒணக்கன் அதைக் காதில் வாங்கிக் கொண்டு மெதுவான குரலில் முனகினான். அட்டை அவனுடையை தொண்டைக் குழியில் மாட்டிக்கொண்டிருப்பதென்னவோ உண்மைதான். கழுத்தில் தாலி கட்டியிருக்கும் திருமணப் பெண்ணைப்போல உள்ளே மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அஞ்சல் பையையே பாசத்துடன் பார்த்துக் கொண்டே அதற்குப் பிறகும் அவன் அதே இடத்தில் நின்றிருந்தான்.
போஸ்ட் மாஸ்டர் அவனுடைய கையில் ஒரு துண்டு மஞ்சள் நிறத் தாளைத் தந்தார். தலைமை தபால் நிலையத்திலிருந்து வந்திருந்த ஆர்டர். தொடர்ந்து மாஸ்டர் ஒரு பெரிய புத்தகத்தை விரித்து வைத்து ஒணக்கனின் இடது கையைப் பிடித்து, பெருவிரலில் ஏதோ மையைப் புரட்டி, அந்தப் புத்தகத்தின் ஒரு மூலையில் அவனுடைய விரல் முத்திரையைப் பதியச் செய்தார். இரண்டு புதிய பத்து ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்தார்.
பிறகு எதுவும் பேசாமல் மாஸ்டர் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்.
அதற்குப் பிறகும் ஒணக்கான் அதே இடத்தில் நின்றிருந்தான். செய்வதற்கு எதுவும் இல்லை. தன்னுடைய இடது கை பெருவிரலையே அவன் வெறித்துப் பார்த்தான். பிறகு அந்த விரலை நெற்றியில் பதித்து ஒரு திலகத்தை வைத்தான். மஞ்சள் நிறத் துண்டுத்தாளை மடியில் சொருகி வைத்தான். நோட்டுகளைச் சற்று வாசனை பிடித்துப் பார்த்தான். நல்ல வாசனை. புதிய அரிசியின் வாசனை. அந்த நோட்டுகளை மடியில் சொருகி அவை சுருங்கி அழுக்காவதைப் பார்க்க அவனுக்கு மனம் வரவில்லை.
ஒணக்கன், நீ இன்னும் போகலையா?'' போஸ்ட் மாஸ்டர் முகத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு கண்ணாடித் துண்டுகள் வழியாக வாசலைப் பார்த்து அதிகாரத் தொனியில் கேட்டார். ஒணக்கன் சற்று அதிர்ச்சியடைந்து விட்டான். உள் மூலையில் திருமணப் பெண்னை இறுதி முறையாக ஒருமுறை பார்த்து விட்டு அவன் முற்றத்தில் இறங்கி நடந்தான்.
எங்கே போவது? எங்கும் போவதற்கில்லை. அந்தப் பகுதியை விட்டுப் போவதற்குச் சிறிதுகூட மனம் வரவில்லை. ஒரு ஆவியைப் போல அவன் சிறிது நேரம் அங்கேயே சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் அஞ்சல் நிலையத்திற்கு முன்னால், சாலையின் அருகிலிருந்த ஒரு பெரிய சூரியகாந்தி மரத்தின் தடித்த வேரின்மீது எற்கு என்று தெரியாமலேயே ஒரு அமர்ந்திருக்கும் சந்தியாகிரகத்தை அவன் ஆரம்பித்தான்.
தன்னுடைய இளமைக் காலத்தைப் பற்றியும் அஞ்சல் இலாகாவுடன் பிணைந்திருந்த தன்னுடைய நீண்ட வாழ்க்கையைப் பற்றியுமுள்ள கனவைப் போன்ற காட்சிகள் அவனுடைய கண்களுக்கு முன்னால் கடந்து போய்க் கொண்டிருந்தன.
தான் பதினான்காம் வயதில் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து மைசூரின் கெத்தய்க்குப் போனதும், மைசூர் குறும்பர்களுடன் சேர்ந்து ஆறு மாத காலம் காக்கன்கோடு காடுகளில் யானை பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தங்கியிருந்ததும், கெத்த ஆரம்பமானதும் யானைப் பாகன்களுடன் ஆரவாரம் எழுப்யிவாறு காடு முழுவதும் இங்குமங்குமாக நடந்து திரிந்ததும் அவனுக்கு நன்கு ஞாபகத்தில் இருந்தன. அவனுடைய தந்தை மைசூரிலேயே வயிற்று வலி வந்து மரணத்தை தழுவி விட்டான். ஒணக்கன் தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பி வந்தான். பிறகு ஐந்து... பத்து வருடங்கள் அவன் மலையில் இருக்கும் மரம் வெட்டுபவர்களுக்கும் யானைப் பாகன்களுக்கும் உதவியாக இருத்து ஒரு வகையில் வாழ்க்கையை ஓட்டினான். இதற்கிடையில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான், திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் ஆவதற்கு முன்பே அவனுடைய குறும்பத்தி இன்னொரு குறும்பனுடன் சேர்ந்து மைசூருக்கு ஓடிப் போய்விட்டாள். அதற்குப் பிறகு ஒணக்கனுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாகவில்லை. ஒரு யானைப் பாகனாக ஆக வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசையாக இருந்தது. அது நடப்பதைப்போல தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையில்தான் குத்தனூரில் இருக்கும் "ம” எஸ்டேட்டிற்கு அருகில் ஒரு புதிய அஞ்சல் நிலையம் வந்ததும், அஞ்சல் இலாகாவிற்கு அங்கு ஒரு மெயில் ரன்னரின் தேவை உண்டானதும்... குத்தனூரிலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருந்து சப் தபால் நிலையத்திற்கும் அங்கிருந்து இங்கும் அஞ்சல் பையைக் கொண்டு போய்ச் சேர்ப்பதும்தான் மெயின் ரன்னரின் வேலை. வேலைக்கு மனு போட்டவர்கள் என்று யாரும் கிடைக்கவில்லை. காரணம்- அந்த ஐந்து மைல் தூரத்தில் மூன்றரை மைல் தூரமும் ஆபத்துக்கள் நிறைந்த யானைக்காடுகளாக இருந்தன. காட்டு யானைகளின் கூத்தரங்கு. சம்பளமாக கிடைப்பதோ வெறும் பத்து ரூபாய்.
யாரோ ஒணக்கன் குறும்பனைக் கூறி போக வைத்தனர். ஒணக்கனுக்கு வேலை கிடைத்தது. ஆனால், ஒணக்கனை வேலைக்கு எடுத்தபோது, போஸ்ட் மாஸ்டருக்கு பல சந்தேகங்களும் இருந்தன. காடுகளுக்குள் சுற்றிக் கொண்டு திரிந்த ஒரு மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதனிடம் பொறுப்பு மிக்க ஒரு வேலையை ஒப்படைக்கிறோமே என்று அவர் நினைத்தார். அவன் ஒழுங்கு தவறாமல் வேலைக்கு வருவானா? ஒரு நாளைய கடிதங்கள் வராமல் போய் விட்டால், மேலதிகாரிகளிடமும் எஸ்டேட்டின் வெள்ளைக்காரர்களிடமும் விளக்கம் கூற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எஸ்டேட்டின் வெள்ளைக்காரர்கள் அரசாங்கத்தின் சொந்த ஆட்களாச்சே! ஆனால், போஸ்ட் மாஸ்டரின் சந்தேகங்களுக்கு அர்த்தமே இல்லாமல் போயின. ஒணக்கன் அந்த வேலைக்கு கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு மாஸ்டருக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை.