மெயில் ரன்னர் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7053
அவனைத் தேடிய அந்த யானை இன்றும் அங்கு வந்து நின்று கொண்டிருக்கும். ஒணக்கன் அந்த சூரியகாந்தி மரத்தின் வேரிலிருந்து மெதுவாக எழுந்து நடந்தான். தோளில் பையும் கையில் ஈட்டியும் இல்லாததால் நடை சரியாக வரவில்லை. எனினும், அது தெரியாமல் பழைய தாளத்தில் உள்ள கால் வைப்புகளுடன் அவன் நடந்தான்.
அவன் அந்தப் புதர்களை நெருங்கினான். எங்கும் பேரமைதி. இளம் காற்றில் புதர்களின் தலைப்பகுதிகள் அசைந்தன. ஒரு மரக் கிளையில் ஒரு மலைவாழ் மனிதன் ஆனந்தத்துடன் அமர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான். கீழே சாலையில், மெயில் பேருந்தின் சக்கரங்கள் உண்டாக்கிய கோடுகள் பதிந்து தெரிந்தன.
திடீரென்று புதர்களின் மறைவிலிருந்து கறுப்பாக ஏதோவொன்று அசைவது அவனுடைய கவனத்தில் பட்டது. சந்திரக் கலை அடையாளத்தைக் கொண்ட ஒரு காது தாளத்தில் அசைந்து கொண்டிருந்தது.
யானை!
அவன் அசையாமல் நின்றிருந்தான். ஆனால், யானை அளந்து வைத்த காலடிகளுடன் முன்னோக்கி நெருங்கி வந்தபோது, ஒணக்கனின் கால்கள் மண்ணிலேயே நிற்கவில்லை. அவன் ஓடுவதற்கு முயற்சித்தான். ஆனால், கால்களுக்கு வேகம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு கேடு- ஒரு தோல்வி உணர்வு- ஒரு பிடிவாதம்! நீச்சல் தெரியாத ஒரு மனிதன் நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டதைப்போல அவன் கைகளையும் கால்களையும் நீட்டித் தட்டி துடித்துக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் அப்படியே கடந்தது என்று தெரியவில்லை. ரப்பர் குழாயைப் போன்ற ஒரு பொருள் அவனுடைய முதுகைத் தொட்டது. அவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான்.
யானையின் தும்பிக்கை தன்னுடைய இடுப்பை இறுகச் சுற்றுவதை அவன் உணர்ச்சியே இல்லாமல் கூர்ந்து பார்த்தான். அது மட்டுமல்ல; அது உண்மைதானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ரப்பர் குழாயைப் போல இருந்த அந்தப் பொருளை அவன் சற்று தொட்டுப் பார்க்கவும் செய்தான். அவன் காற்றில் மேலே உயர்ந்து கொண்டிருந்தான். இரண்டு ஆட்களின் உயரத்தில் காற்றில் தலை குப்புறப் படுத்துக்கொண்டு அவன் அந்த காட்டின் பரப்பை முழுமையாகப் பார்த்தான். அடுத்த நிமிடம் தான் ஓங்கி நிலத்தில் வீசி ஏறியப்படுவோம்...
காற்றில் தங்கி நின்றிருந்த அந்த ஒரு நிமிடத்தில் அந்த காட்டுடன் உறவு கொண்ட தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்கள் அடங்கிய ஒரு முழு ஓவியம் அவனுடைய மூளையில் தோன்றி மறைந்து போனது. பாக்கெட்டிற்குள் நுழைத்து வைத்திருந்த புதிய பத்து ரூபாய் நோட்டுக்கள் காய்ந்த இலைகளைப் போல காற்றில் மிதந்து பறப்பதையும் அவன் தெளிவாகப் பார்த்தான்.
அவன் கீழே வந்து கொண்டிருந்தான். அவன் கண்களை மூடிக் கொண்டான். ஆனால், அந்த வருகையில் பலமும் வேகமும் இல்லை. யாரோ தன்னை மேலே தூக்கி அணைத்து மெதுவாகக் கீழே வைப்பதைப் போல தோன்றியது...
அசைவு நின்று விட்டது என்பது தெரிந்ததும் அவன் மெதுவாக கண்களைத் திறந்தான். அவன் நிலத்தில் மல்லாக்கப் படுத்திருந்தான். தும்பிக்கையை மடக்கி முன் பகுதியை உள்ளே சுருட்டி வைத்துக் கொண்டு, இடது பக்க முன் காலின் முட்டியை அசைத்து, பெரிய காதுகளை வீசி ஆட்டி, சட்டைய் பொத்தான்களைப் போல இருந்த கண்களை மின்னச் செய்து கொண்டு, யானை அவனுடைய கால் பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. அவன் உணர்ச்சியே இல்லாமல் யானையின் முகத்தையே சிறிது நேரம் பார்த்தான்.
காடு முழுவதும் குலுங்குவதைப்போல நிலத்தை மிதித்து யானை பிளிறியது. பிறகு... அந்த ஆண் யானை அலட்சியமாக கொம்புகளை ஆட்டி, தலையை கீழே தாழ்த்தி வைத்துக் கொண்டு, தும்பிக்கையை அசைத்துக் கொண்டே திரும்பி, காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தது.
சிறிது நேரம் சென்றதும் ஒணக்கன் எழுந்து உட்கார்ந்தான், அவனுக்கு எதுவுமே புரியவில்லை. தனக்கு ஒரு உடல் இருக்கிறது என்றே அவனுக்குத் தோன்றவில்லை. யானைச் சாணத்திலிருந்து ஆவி புறப்படுவதைப்போல அவனுடைய மூளையிலிருந்து ஆவியும் புகையும் பறந்து கொண்டிருந்தன. கண்களில் இருட்டு படர்ந்து விட்டிருந்தது. ஒரு கரிய நிழலைப்போல அவன் சாலையின் அருகில் ஒரு புதரின் மறைவில் நின்று கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் நின்றிருந்தோம் என்பதே உறுதியாகத் தெரியவில்லை.
"ப்ரேம்.. ப்ரோம்... ப்ரேம்... ப்ரோம்...”
பேருந்தின் இசை முழக்கம் அவனை சுய உணர்விற்குக் கொண்டு வந்தது. அஞ்சல் பையுடன் பேருந்து குத்தனூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
சிவப்புத் திலகம் வைத்த அந்த மெயில் பேருந்து முனகியவாறு நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. அவனுடைய வாழ்க்கையை தோல்வி நிலைக்கு கொண்டு வந்த எதிரி முனகிக் கொண்டு வருகிறது... அந்த செயலற்ற நிலையில் விரக்தியுடன் அவன் அந்த வாகனத்தையே வெறித்துப் பார்த்தான். அவன் சாய்ந்து நின்றிருந்த புதரை நோக்கிப் பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது.
"க்ரிக்...க்ரிக்...க்ரிக்...”
ஓட்டுனர் திடீரென்று பேருந்தை ப்ரேக் போட்டு நிறுத்தி விட்டு, வெளியே குதித்து சக்கரத்திற்குக் கீழே பார்த்தான். மண்டை ஓடு நசுங்கி மூளை வெளியே வந்து, ஒரு உடல் சக்கரத்திற்கு கீழே கிடந்தது. உடலில் கிழிந்த வேட்டியையும் காக்கிச் சட்டையையும் பார்த்தவுடன், இறந்தது மெயில் ரன்னர் ஒணக்கன் குறும்பன்தான் என்பது அவர்களுக்குப் புரிந்து விட்டது.