மெயில் ரன்னர் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7053
மெயில் பையைத் தோளில் போட்டுக் கொண்டு, ஆவி பறக்கும் யானைச் சாணத்தை மிதித்துக் கொண்டு அந்த அடர்ந்த காடுகளின் வழியாக ஓடிக் கொண்டிருப்பதுதான் ஒணக்கன் வாழ்க்கையின் சந்தோஷமாக இருந்தது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகவும் வேலை பார்ப்தற்கான அடையாளச் சின்னமாகவும் அரசாங்கத்திடமிருந்து ஒரு ஈட்டி கிடைத்தது- தலைப் பகுதியில் சலங்கைகள் கட்டப்பட்டிருந்த ஒரு ஈட்டி. காட்டு மிருகங்களை பயமுறுத்தி ஓடச் செய்வதற்கும் அஞ்சல் ஊழியனின் வருகைகைய அறிவிப்பதற்கு... சலங்கையின் "க்லீம்...ப்லீம்...” என்ற சத்தம் உண்டாக்க ஒணக்கனின் வருகை. இல்லை... வேகமான பாய்ச்சல். பாய்ந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், பாய்ந்து செல்ல வேண்டும் என்ற அரசாங்கத்தின் கட்டளை இருக்கிறது என்று ஒணக்கன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். தன்னுடைய சலங்கைகளின் ஓசை கேட்ட பிறகு வழி மாறி ஒதுங்காதவர்களை அந்த ஈட்டியால் குத்திக் கொல்லக் கூடிய அதிகாரத்தையும் அரசாங்கம் தனக்கு அளித்திருக்கிறது என்று ஒணக்கன் ஊர்க்காரர்களிடம் கூறி, நம்பச் செய்திருந்தான். ஆனால், இன்று வரை அவன் யாரையும் குத்திக் கொல்ல வேண்டிய சூழ்நிலை வரவில்லை.
நகரத்தைப் பார்த்திராத அந்த அப்பிராணி மனிதனுக்கு பத்து ரூபாய் சம்பளம் என்பது மிகப் பெரிய ஒரு விஷயமாக இருந்தது. அரசாங்க ஊழியன் என்ற ஒரு மதிப்பு வேறு இருக்கிறதே! இடதுபக்கத் தோளில் அஞ்சல்கள் கொண்ட பையைத் தொங்க விட்டுக் கொண்டு அந்த தபால்காரன் தினமும் பத்து மைல்கள் ஓடுவான். அவனுடைய விரைப்பையும் குலுக்கலையும் பார்த்தால் மலைக் கடவுளின் அருள் உண்டாகியிருக்கிறதோ என்று தோன்றும். "ஹ்ஙீம்... ஹ்ஙீம்” என்றொரு முனகல் சத்தம் வந்து கொண்டிருக்கும். காட்டு யானைகள் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருக்கும் அந்த அடர்த்தியான காடுகளை நெருங்கும்போது அவனுடைய ஆவேசம் அதிகமாகும். வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது அங்கு காட்டு யானைகளைச் சந்திக்காமல் இருக்க மாட்டான். அப்போது ஓடித் தப்பித்துச் செல்ல முயற்சிப்பதற்கு பதிலாக அவற்றின் அருகில் சென்று சில வித்தைகளைக் காட்டி அவற்றை மெய் மறக்கச் செய்து, ஆபத்து நிறைந்த சில விளையாட்டுகளைச் செய்து காட்டுவதில்தான் அவனுடைய முழு கவனமும் இருக்கும். யானைகளின் நடவடிக்கைகளைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் அவன் தெரிந்து வைத்திருந்தான். அவற்றின் ஓட்டத்திலிருந்தும் பிடிப்பதிலிருந்தும் தப்பித்துச் செல்வதற்கான வழிமுறைகளையும் அவன் கற்று வைத்திருந்தான்.
காட்டு யானை அருகில் எங்கோ இருக்கிறது என்பது தெரிய வந்தால், அவன் மெதுவாக யானையுடன் ஒரு சந்திப்பை நடத்துவதற்காக மரங்கள் அடர்ந்த காட்டிற்குள் பதுங்கிப் பதுங்கிச் செல்வான். யானை தன்னைப் பார்க்கவில்லையென்றால், யானையின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவன் உடனடியாக ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவான். யானை திரும்பி நின்று அவனை ஆக்கிரமிப்பதற்காக வந்தால், அவன் தந்திரமாக வேறு எங்காவது விலகிச் சென்று, சிறிது நேரம் எந்த இடத்திலாவது மறைந்து இருந்து கொண்டு, பிறகு இன்னொரு பக்கத்தில் தோன்றி, யானைக்கு சலாம் அடித்து சில குறும்புத்தனங்களைக் காட்டுவான். யானை மீண்டும் ஆக்கிரமிப்பதற்காக ஓடி வரும். ஒணக்கன் ஓடி மறைந்த வழி தெரியாது. இப்படி யானையை முட்டாளாக்கி தவிக்க வைப்பது- இதுதான் அவனுடைய விளையாட்டாக இருந்தது. இதுவரை ஒரு காட்டு யானையாலும் தன்னைத் தொட முடியவில்லை- அதுதான் அவனுடைய வீர முழக்கமாக இருந்தது.
இந்த யானை விளையாட்டின் விளைவாக ஒரே ஒரு முறைதான் அவன் வேலைக்கு வராமல் இருந்திருக்கிறான். ஒரு நாள் சாயங்காலம் அஞ்சல் பையும் ஒணக்கனும் குத்தனூருக்கு வந்து சேரவில்லை. போஸ்ட் மாஸ்டர் இரவு ஒன்பது மணி வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஒணக்கனின் சத்தமோ அசைவோ எதுவுமில்லை. என்னதான் நடந்தாலும், சாயங்காலம் ஐந்து மணிக்கு முன்பே அஞ்சல் அலுவலகத்திற்கு திரும்பி வரக் கூடிய, நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்க கூடிய மனிதனாக ஒணக்கன் இருந்தான்.
போஸ்ட் மாஸ்டர் பதைபதைப்பிற்குள்ளானார். காட்டு யானைகளின் தொந்தரவுகள் அதிகமாக இருந்த காலம் அது. மக்களின் பேச்சுக்கான விஷயமே அவற்றின் பராக்கிராமங்கள் பற்றிய கதைகளாகத்தான் இருந்தன. ஒணக்கனை காட்டு யானைகள் குத்திக் கொன்று விட்டன என்று எல்லாரும் முடிவு செய்து இரங்கல் செய்தி வெளியிடவும் செய்தனர்.
மறுநாள் காலையில், அதோ வந்து கொண்டிருக்கிறான் ஒணக்கன். அஞ்சல் பையும் சலங்கைகள் கட்டப்பட்ட ஈட்டியும் தோளில் இருந்தன.
நேற்று எங்கே போயிருந்தாய்?'' போஸ்ட் மாஸ்டர் கேட்டார்.
யானை...'' அவ்வளவுதான் அவனால் கூற முடிந்தது. அஞ்சல் பை பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது அல்லவா? போஸ்ட் மாஸ்டர் அதை மட்டும் பார்த்தால் போதாதா என்பதைப்போல ஒணக்கன் மவுனமாக நின்று கொண்டிருந்தானே தவிர, வேறு எதுவும் பேசவில்லை.
ஒன்றிரண்டு வருடங்கள் கடந்த பிறகுதான் ஒணக்கன் அந்த கதையையே வெளியே கூறினான். நடந்தது இதுதான். ஒணக்கன் ஒரு காட்டு யானையை ஏமாற்றிக் கொண்டு ஓடும்போது போய் நின்றது இன்னொரு பெரிய காட்டு யானைக்கு முன்னால்... உடல் முழுவதும் செம்மண் புரண்டு மலையைப்போல நின்றிருந்த ஒரு முரட்டுத்தனமான ஆண் யானை... ஒணக்கனால் முன்னோக்கியோ திரும்பிப் பின்னோக்கியோ ஓடுவதற்கு வழியில்லாத நிலை உண்டானது. இறுதியில் இடது பக்கத்தில் ஒரு இடைவெளி இருப்பதைப் பார்த்து அந்த பக்கமாக வேகமாக சென்று மாட்டிக் கொண்டது கோட்டையைப்போல அடர்ந்து கிடந்த புதர்களாக இருந்தன. திரும்பிப் பார்த்தபோது ஆண் யானை பின்னால் உரத்து சத்தம் உண்டாக்கியவாறு வந்து கொண்டிருந்தது. ஒணக்கன் புதருக்கு உள்ளே மறைந்து இருப்பதற்கு ஒரு தீவிரமான முயற்சி செய்தான்; முடியவில்லை. திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. தோளில் இருந்த அஞ்சல் பையை யானையின் கவனத்தில் படுகிற மாதிரி ஒரு மரக்கொம்பில் எறிந்து தொங்கவிட்டான். பார்வை சக்தி குறைவாக இருந்த யானை தன்னுடைய எதிரி மரக் கொம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து, தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு அந்த புதருக்கு வெளியே காவல் காத்துக் கொண்டு நின்றிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒணக்கன் தரையின் வழியாக ஊர்ந்து சென்று வந்த பாதையிலேயே திரும்பி ஓடித் தப்பினான்.
ஆனால், அஞ்சல் பை கிடைக்காமல் போய்விடக் கூடாதே? அரை மணி நேரம் கடந்தபிறகு, ஒணக்கன் மொதுவாக அந்த இடத்திற்கு பதுங்கிச் சென்று பார்த்தான். யானை அந்த புதருக்கு வெளியே சுற்றிச் சுற்றி காவலுக்கு நின்று கொண்டிருந்தது.