எட்டுக்காலி மம்மூஞ்ஞு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8554
ஸ்ரீஜித் தங்கச் சிலுவை தோமா, ஜனாப் மண்டன் முத்தபா, ஜனாப் ஒற்றைக் கண்ணன் போக்கர், மரியாதைக்குரிய இரண்டு போலீஸ்காரர்கள், இந்த வரலாறை எழுதிக் கொண்டிருக்கும் நான்- நாங்கள் இல்லாமல் வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் இப்போது அண்டர்கிரவுண்டில் இருக்கிறார்கள்.
இந்த அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன், அதை ராமன் நாயரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. எட்டுக்காலி மம்மூஞ்ஞை கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்தால் என்ன என்ற அளவுக்கு அவர் மனதில் ஆத்திரம் உண்டானது. ஆனால், அப்படியொரு பயங்கரமான காரியம் நடைபெறுவதற்கு முன்பு எட்டுக்காலி மம்மூஞ்ஞு யானைவாரி ராமன் நாயரின் அருகில் போய் கேட்டான்: “உங்களுக்கு விஷயம் தெரியுமா?”
யானைவாரி ராமன் நாயர் எட்டுக்காலி மம்மூஞ்ஞை ஏதாவது செய்வதற்கு முன்பு, அவன் அந்த பயங்கர ரகசியத்தை அவரிடம் சொன்னான். யானைவாரி ராமன் நாயரால் அவன் சொன்ன விஷயத்தை நம்பவே முடியவில்லை. வியப்பு மேலோங்க அவனைப் பார்த்து யானைவாரி கேட்டார். “உண்மையாவா சொல்ற?”
எட்டுக்காலி மம்மூஞ்ஞு மீசை இரண்டையும் தடவியவாறு பந்தாவான குரலில் சொன்னான்: “ஆமா...”
அப்படியே அவர்கள் மண்டன் முத்தபாவின் தேநீர் கடையை நோக்கி நடந்தார்கள். வழியில் நம் தங்கச் சிலுவை தோமாவைப் பார்த்தார்கள். அவரைப் பார்த்தவுடன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு கேட்டான்: “டேய் தங்கச் சிலுவை! உனக்கு விஷயம் தெரியுமா?”
அடுத்த நிமிடம் எட்டுக்காலி மம்மூஞ்ஞின் பிடரியைப் பிடித்து ஓங்கி ஒரு அடி கொடுத்தால் என்ன என்று நினைத்தார் தங்கச் சிலுவை தோமா. காரணம் தங்கச் சிலுவை தோமாவை, “டேய் தங்கச் சிலுவை” என்று பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ, இல்லா விட்டால் ராஜ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் முக்கிய பிரமுகரோ அழைத்தால்கூட அவருக்குப் பிடிக்காது. அவர் அப்படி நினைப்பதற்குக் காரணம்- அவர்கள் யாரும் அவரைப் பொறுத்த வரை அவருக்கு இணையானவர்கள் இல்லை. யானைவாரி ராமன் நாயரை யாரெல்லாம் “டேய் யானைவாரி” என்று அழைக்கலாமோ, அவர்களெல்லாம் தங்கச் சிலுவை தோமாவையும் “டேய் தங்கச் சிலுவை!” என்று அழைக்கலாம். அந்தப் பட்டியலில் நம்முடைய எட்டுக்காலி மம்மூஞ்ஞின் பெயரே இல்லையே! தங்கச் சிலுவை தோமா எட்டுக்காலி மம்மூஞ்ஞைப் பிடித்து அடிப்பதற்கு முன்னால் யானை வாரி ராமன் நாயர் தங்கச் சிலுவை தோமாவிடம் அந்த ரகசியத்தைக் காதில் சொன்னார். அதைக் கேட்டதும் தங்கச் சிலுவை தோமா ஆச்சரியம் மேலோங்க கேட்டார்: “டேய் எட்டுக்காலி, இது உண்மையா?”
அப்போது எட்டுக்காலி மம்மூஞ்ஞு தன் மீசையைத் தடவியவாறு சொன்னான்: “இது என்ன? இதையும் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் செய்றதுக்காகப் பிறந்தவன்தான் நான்.”
அவர்கள் பேசியவாறு மண்டன் முத்தபாவின் தேநீர் கடையை அடைந்தார்கள். அப்போது அங்கே மண்டன் முத்தபா, ஒற்றைக் கண்ணன் போக்கர், அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு போலீஸ் காரர்கள் ஆகியோர் இருந்தார்கள். அவர்களிடமும் அந்த ரகசியச் செய்தியை மம்மூஞ்ஞு மெதுவான குரலில் சொன்னான். எல்லாருமே அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டார்கள். எல்லாரும் அவனைப் பார்த்துக் கேட்டார்கள். “இது உண்மையா? உண்மையா?”
எட்டுக்காலி மம்மூஞ்ஞு அதற்கு பதிலாக எதுவும் கூறவில்லை. மிகவும் மிடுக்காக மீசையைத் தடவி விட்டுக்கொண்டே சிரிக்க மட்டும் செய்தான். உடனே மண்டன் முத்தபா சொன்னான்: “என் சார்பா எட்டுக்காலி மம்மூஞ்ஞுக்கு ஒரு சாயா தர்றேன்.” அதோடு நிற்காமல் ஒற்றைக் கண்ணன் போக்கர் சார்பாக இரண்டு துண்டு புட்டு, யானைவாரி ராமன் நாயர் சார்பாக அவித்த வேர்க்கடலை, தங்கச் சிலுவை தோமா சார்பாக இரண்டு பழங்கள், இரண்டு போலீஸ்காரர்கள் சார்பாக ஒரு வடையும் ஒரு சுசியமும் என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்து, தேநீர் அருந்தி, பீடியை உதட்டில் வைத்துப் புகைத்தவாறு அந்த ஊரின் முக்கிய நபர்களில் ஒருவனாக ஆனான் எட்டுக்காலி மம்மூஞ்ஞு.
அடுத்த சில நிமிடங்களிலேயே எட்டுக்காலி மம்மூஞ்ஞு செய்த வீரத்தனமான செயலைப் பற்றி ஊரில் இருந்த எல்லாருமே அறிந்து கொண்டார்கள். மிகவும் தைரியமான ஆண் என்று எல்லாருமே எட்டுக்காலி மம்மூஞ்ஞைப் பற்றி நினைக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பெண்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களின் பேச்சு எட்டுக்காலி மம்மூஞ்ஞைப் பற்றியும், அவனின் வீரபராக்கிரம செயலைப் பற்றியுமாகத்தான் இருக்கும். “என்ன இருந்தாலும் எட்டுக்காலி மம்மூஞ்ஞு பெரிய ஆளுதான்!” இதுதான் பெண்கள் சொன்ன கருத்து.
இப்போது நான் சொல்லப்போவது எட்டுக்காலி மம்மூஞ்ஞு எப்படி வீரப்பிரதாபன் ஆனான் என்ற விஷயத்தைத்தான். அது ஒரு ரகசியமான சமாச்சாரம் என்பதை எல்லாரும் இதுவரை புரிந்துகொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அதனால் இந்தச் சரித்திரத்தின் வேகத்தைச் சற்று குறைக்கப் போகிறேன். இப்போது நாம் இந்த சரித்திரத்தில் இருந்து இரண்டரை மைல் தூரத்திற்குப் போக வேண்டி இருக்கிறது. மலையோரத்திற்கு நாம் போகிறோம். குண்டுகளையும் குழிகளையும் தாண்டி அங்கு நாம் போனால் நம் கண்களில் வைக்கோல் வேய்ந்த ஒரு சிறிய வீடு படுகிறது. அந்த வீட்டில்தான் ஊரிலேயே பெரிய கஞ்சனான முட்டைக் கண்ணன் அந்த்ரு வசிக்கிறான். அவனுக்கு சந்தையில் ஒரு கடை இருக்கிறது. அங்கு சர்க்கரை, கருப்பட்டி ஆகியவற்றை அவன் விற்பனை செய்கிறான். முட்டைக் கண்ணன் அந்த்ரு அந்த ஊரில் இருக்கும் பணக்காரர்களில் ஒருவன். அவன் யாருக்கும் உதவி செய்வதில்லை. கடன் கொடுப்பதில்லை. வட்டிக்குப் பணம் கேட்டால் கொடுப்பதில்லை. தன் பணத்தை எல்லாம் இந்த மனிதன் எங்கு காப்பாற்றி வைத்திருக்கிறான் என்ற விஷயம் யாருக்குமே தெரியாது. யானைவாரி ராமன் நாயரும் தங்கச் சிலுவை தோமாவும் இரண்டு முறை இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தும் விட்டார்கள். அந்த வீட்டில் பெட்டி என்று எதுவும் இல்லை. பணத்தை பூமிக்கு அடியில் ஒருவேளை அந்த ஆள் குழி தோண்டிப் புதைத்து வைத்திருப்பானோ என்று அந்த ஊர் மக்கள் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எங்கே அவன் பணத்தைப் புதைத்து வைத்திருப்பான் என்பதைத்தான் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பணத்தின் விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நமக்கு பணம் ஒரு பிரச்சினையா என்ன? முட்டைக் கண்ணன் அந்த்ருவின் தாய் இறந்து போனபிறகு, வீட்டில் சோறும் குழம்பும் கூட்டும் வைப்பதற்கும், வீட்டைச் சுத்தம் பண்ணி பெருக்குவதற்கும் யாரும் இல்லை என்ற நிலை உண்டானது. இந்த கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக முட்டைக் கண்ணன் ஒரு இளமையான வேலைக்காரியைக் கொண்டு வந்தான். அவளின் பெயர் கதிஜும்மா. அவளுக்கு பல வசதிகளும் தந்து மாதமொன்றுக்கு இரண்டணா சம்பளம். (இரண்டணா என்றால் பன்னிரண்டு பைசா. அன்று அந்த சம்பளம் போதும் என்ற நிலை இருந்தது. தொழிலாளிகளின் ஒற்றுமை எல்லாம் இல்லாமல் இருந்து காலம் அது). இரண்டு மாதங்கள் கடந்த பிறகு முட்டைக் கண்ணன் அந்த்ருவின் மனதில் ஒருவகை எரிச்சல் உண்டானது. அது அந்த வேலைக்காரிக்குக் கொடுக்கும் சம்பளம் பற்றியது. அவன் அவளுக்குத் தரும் சம்பளத்தைக் கணக்கு போட்டுப் பார்த்தான். ஒரு வருடத்திற்கு ஒன்றரை ரூபாய் வருகிறது. அப்படியென்றால் பத்து வருடத்திற்கு பதினைந்து ரூபாய். நூறு வருடத்திற்கு நூற்று ஐம்பது ரூபாய். இந்தக் கணக்கைப் பார்த்ததும் முட்டைக் கண்ணன் அந்த்ரு நடுங்கிவிட்டான். அடுத்த நிமிடமே அவன் ஒரு முஸ்லிம் பெரியவரை வரவழைத்து “நிக்காஹ்” நடத்தி அந்த வேலைக்காரியைத் தன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொண்டான். அவர்களுக்கிடையே திருமணம் இனிதாக முடிந்தது. அவள் மனைவியாக மாறிவிட்டதால் அவளுக்குச் சம்பளம் தரவேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டது. தேவைப்படுகிற போது, அவளின் தலைமுடியைப் பிடித்து, அவளுக்கு இரண்டு அடிகள் கொடுக்கலாம். யாராவது வந்து இது பற்றிக் கேட்டால், “போடா கழுதை... நான் என் பொண்டாட்டியை அடிக்கிறேன். உனக்கு என்னடா” என்று தைரியமாகக் கேட்கலாம். அதோடு அந்த விஷயம் நின்று போய்விட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கதிஜும்மா பிள்ளை பெறத் தொடங்கினாள். இரண்டு மூன்று முறை தொடர்ந்து குழந்தைகள் பெற்ற அவளுக்கு, பிரசவ காலத்தின்போது சோறு சமைக்கவோ, குழம்பு, கூட்டு ஆகியவை வைக்கவோ முடியவில்லை என்ற நிலை உண்டானது. இதை முட்டைக் கண்ணன் அந்த்ருவும் புரிந்து கொள்ளாமல் இல்லை. இந்தத் தர்மசங்கடமான நிலையில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பது பற்றி அவன் சிந்திக்க ஆரம்பித்தான். அதற்கும் ஒரு வழிபிறக்காமல் இல்லை. கதிஜும்மாவின் உறவுக்காரப் பெண்ணான- இன்னும் திருமணம் ஆகியிராத ஒரு பத்தொன்பது வயதுடைய தாச்சி என்ற பெண்ணை வேலைக்காரியாகக் கொண்டு வந்தான் முட்டைக் கண்ணன் அந்த்ரு. அவளுக்கு மாதச் சம்பளம் ஒன்றரையணா. தாச்சி வந்ததென்னவோ வேலைக்காரியாகத்தான். ஆனால், இரண்டு மாதங்கள் கழித்தபிறகு பார்த்தால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள். அதாவது அவள் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தாள். இது எப்படி என்று யாருக்குமே புரியவில்லை. இந்தக் கர்ப்பம் சம்பந்தமாகத்தான் எட்டுக்காலி மம்மூஞ்ஞு கண்களில் படுபவர்களிடமெல்லாம் “அது நான்தான்...” என்று சொல்லித் திரிந்தது. இப்போது புரிகிறதா?