எட்டுக்காலி மம்மூஞ்ஞு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8560
எங்கேயாவது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் அது நம்மாலதான் என்று எட்டுக்காலி மம்மூஞ்ஞு அப்போது கூறிக் கொண்டிருக்காத காலம். அன்று அதற்கான தைரியம் எல்லாம் மேலே சொன்ன நபருக் குக் கிடையாது. பிரபல திருடர்களான யானை வாரி ராமன் நாயர், தங்கச் சிலுவை தோமா ஆகியோ ருடன் நெருங்கிய உறவு வைத்திருக் கக் கூடிய ஒரு மனிதன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு. இருந்தாலும் அவர் கள் அவனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. பிக்பாக்கெட் அடிப்பதில் வல்லவனான மண்டன் முத்தபா, மூன்று சீட்டு விளையாடுவதில் கில்லாடியான ஒற்றைக் கண்ணன் போக்கர் ஆகியோர்கூட எட்டுக்காலி மம் மூஞ்ஞை எப்போதுமே பெரிதாக எடுத்துக்கொள்வ தில்லை.
முன்பு உண்மையாகவே ஒரு எட்டுக்கால் பூச்சி யாகத்தான் மம்மூஞ்ஞு இருந்திருப்பான் என்றுதான் பலரும் நினைப்பார்கள். காரணம்- அவனின் தோற்றம். தலை மிகவும் சிறியதாக இருக்கும். குள்ளமான உருவம். மொத்தத் தில் மம்மூஞ்ஞிடம் பளிச்சென்று தெரிவது அவனின் மீசைதான். அது இரண்டு பக்கங்களிலும் ஒரு முழம் அளவிற்கு நீளமாக இருக்கும்படி அவன் வளர்த்து விட்டிருந்தான். தெருக்களில் நடந்து போகும்போது பெண்களின் உடம்பில் எட்டுக்காலி மம்மூஞ்ஞு தன் மீசை படுமாறு செய்வதாக ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு பரவலாகக் கூறப்படுவதுண்டு. எட்டுக்காலி மம்மூஞ்ஞைப் பற்றி உள்ள இன்னொரு தகவல்- அவன் ஆணே அல்ல என்பது. அதே நேரத்தில் பெண்ணும் அல்ல. இரண்டுக்கும் நடுவில் ஆனவன். இந்த ரகசியம் அந்த ஊரில் உள்ள எல்லா பெண்களுக்கும் நன்றாகவே தெரியும். இந்த விஷயம் அவர்களுக்கு எப்படி தெரிய வந்தது என்பதுதான் யாராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு சமாச்சாரம்.
எட்டுக்காலி மம்மூஞ்ஞை, கோட்டு மம்மூஞ்ஞு என்றும் அழைப்பதுண்டு. நான்கோ ஆறோ ஆட்கள் அமர்ந்து சீட்டு விளையாடிக்
கொண்டிருக்கும்பொழுது, மம்மூஞ்ஞு அவ்வப்போது எழுந்து “கோட்டு இருக்கா?” என்று கேட்பான். அதனால் அவனுக்கு இப்படியொரு பட்டப்பெயர் வந்து சேர்ந்தது. மம்மூஞ்ஞை வைத்து ஏதாவது காரியம் சாதித்துக் கொண்டவர்கள் மரியாதையுடன் கோட்டு சாஹிப் என்றும் அவனை அழைப்பார்கள். இருந்தாலும் எல்லாருக்கும் நன்கு தெரிந்த பெயர் எட்டுக்காலி மம்மூஞ்ஞு என்பதுதான். பொதுவாக அவனுக்கு எல்லாரையும் மிகவும் பிடிக்கும். யார் எது சொன்னாலும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் அதைச் செய்யத் தயங்க மாட்டான் மம்மூஞ்ஞு. மண்டன் முத்தபாவின் தேநீர் கடையைப் பெருக்கிச் சுத்தப்படுத்துவது, பாத்திரங்கள் கழுவுவது, விறகு பிளந்து தருவது, அந்த ஊரில் இருக்கும் இரண்டு போலீஸ்காரர்களின் காலணிகளுக்குப் பாலிஷ் போட்டு விடுவது, அவர்களின் தொப்பியில் இருக்கும் எண்களை மண்ணால் துடைத்து தங்கம்போல மின்னச் செய்வது, போலீஸ் ஸ்டேஷனில் லாக்-அப் அறையைப் பெருக்கி சுத்தம் பண்ணுவது- இப்படி யாருக்கும் எந்த உதவியையும் செய்யத் தயங்காத மனிதன் மம்மூஞ்ஞு. இருந்தாலும் அவன்மேல் யாருக்குமே விருப்பம் கிடையாது. அதோடு நின்றால் பரவாயில்லை. அவனைப் பற்றிப் பேசுகிறபோது கிண்டலாக “ஓ... எட்டுக்காலி மம்மூஞ்ஞா?” என்பார்கள். இருந்தாலும், எட்டுக்காலி மம்முஞ்ஞு எல்லாரையும் விரும்பினான்.
இப்படி நாட்கள் நீங்கிக் கொண்டிருக்க, ஊரில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது.
ஒருநாள் யானைவாரி ராமன் நாயர் (மூன்று சீட்டுக்காரனின் மகள், தங்கச் சிலுவை, ஊருக்கு முக்கிய மனிதன் ஆகிய வரலாறு களைப் படிக்கவும்) மண்டன் முத்தபாவின் தேநீர் கடைக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்து அவரை யாரோ “டேய் யானைவாரி” என்று அழைத்தது அவர் காதில் விழுந்தது. ஸ்ரீஜித் யானைவாரி ராமன் நாயர் பின்னால் திரும்பிப் பார்த்தபோது, அங்கே நம் எட்டுக்காலி மம்மூஞ்ஞு நின்று கொண்டிருந்தான். அவரைப் பார்த்ததும் யானைவாரி ராமன் நாயருக்கு பயங்கரமான கோபம் வந்தது என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே! யானைவாரி ராமன் நாயரைப் பார்த்து, “டேய் யானைவாரி” என்று அழைக்கக்கூடிய உரிமை அந்த ஊரில் இதுவரை யாருக்குமே இல்லை. நமது பிரதம மந்திரியும் ஜனாதிபதியும் அப்படி அவரை அழைத்தால்கூட ராமன் நாயரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. காரணம் அவர்கள் யாரும் யானைவாரி ராமன் நாயருக்கு இணையானவர்கள் இல்லை. மேற்படி நபரை, “டேய் யானைவாரி” என்று கீழே கூறப்படுபவர்கள் மட்டுமே அழைக்கலாம்.