எட்டுக்காலி மம்மூஞ்ஞு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8554
ஊர் முழுக்க எட்டுக்காலி மம்மூஞ்ஞு இப்படிக் கூறித் திரிந்தாலும், தாச்சியைப் பொறுத்தவரை இதை ஒப்புக் கொள்ளவே இல்லை. அவள் “இந்தக் கர்ப்பத்திற்குக் காரணம் யாருமே இல்லை” என்றாள். இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலை வருகிறபோது பெண்களிடமிருந்து எப்படி உண்மையை வரவழைப்பது என்பதற்கான ரகசிய வழிமுறைகளை உலகத்தில் பல மகான்கள் ஏற்கெனவே கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் “பெண்களை உண்மை பேச வைக்க வழிகள்” என்றொரு புத்தகமே இருக்கிறது. அதில் 33, 33, 333 வழிகள் சொல்லப் பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வழிகளில் முட்டைக் கண்ணன் அந்த்ரு தேர்ந்தெடுத்தது மூன்றே மூன்று வழிகளைத்தான்.
1. மிளகைப் பொடிப் பொடியாக்கி பெண்ணின் கண்ணில் தூவுதல்.
2. கத்தியால் பெண்ணின் உடலில் கீறி சின்னச் சின்ன காயங்களை உண்டாக்கி அதன்மேல் மிளகாயையும் உப்பையும் அரைத்துத் தேய்ப்பது.
3. தீக்கனலை எடுத்து பெண்ணின் உள்ளங்கையில் வைப்பது.
இந்த மூன்று வழிகளில் முட்டைக் கண்ணன் அந்த்ருவுக்கு சரியான வழியாகப் பட்டது மூன்றாவது இருந்ததுதான். காரணம்- அதில் செலவு என்று ஒன்றும் வராது. அதன்படி தாச்சியின் உள்ளங்கையில் முட்டைக் கண்ணன் அந்த்ரு தீக்கனலைக் கொண்டு வந்து வைத்தான். என்ன இருந்தாலும் அவள் பெண்தானே! உண்மையை உடனே கூறிவிட மாட்டாளா? ஆனால் அவள் உண்மையைக் கூறவே இல்லை. அவள் உறுதியான குரலில் சொன்னாள்: “இதுக்கு யாருமே காரணம் இல்ல...”
விஷயம் இப்படிப் போய்க் கொண்டிருந்தபோது, முட்டைக் கண்ணன் அந்த்ருவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. உடலில் வேறு ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று சொன்னாள் முட்டைக் கண்ணன் அந்த்ருவின் மனைவி. இப்படி உடல்நலக் குறைவு பற்றியும், கர்ப்பத்தைப் பற்றிய சிந்தனையிலுமே முட்டைக் கண்ணன் அந்த்ருவின் பல நாட்கள் ஓடி மறைந்தன. அதற்குப் பிறகு அவன் இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லை. காரணம்- அவனின் சர்க்கரை வியாபாரம். பொதுவாக நல்ல லாபம் கிடைக்கக்கூடிய வியாபாரம் அது. இதில் லாபம் கிடைப்பதிலும் ஒரு ரகசியம் இருக்கவே இருக்கிறது. சர்க்கரை வியாபாரம் செய்து பணக்காரனாக வேண்டும் என்று மனதில் ஆசைப்படுபவர்களுக்காக இந்த சரித்திர எழுத்தாளனாகிய நான் அந்த ரகசியம் என்னவென்று இப்போது கூறப் போகிறேன். உடைந்து போனதும், நொறுங்கிப் போனதுமான நல்ல சர்க்கரையை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும். அதைப் பெரிய ஒரு இரும்பு அண்டாவில் போட்டு தண்ணீரை ஊற்றி, பெரிய அடுப்பில் வைத்து நெருப்பை எரியச் செய்ய வேண்டும். பிறகு... அந்த அண்டாவில் கொஞ்சம் தாராளமாகவே தவிட்டையும் புண்ணாக்கையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது நெருப்பின் உதவியால் இளகி களி மாதிரி ஆகிறபோது, அதை சிறிய சிரட்டைகளில் ஊற்ற வேண்டும். அது ஆறியவுடன் அதைச் சிரட்டையில் இருந்து எடுத்து கூடையின் அடியில் வைக்கோலைப் போட்டு, அதற்குமேல் அதைக் கொட்டி அடுக்க வேண்டும். பிறகென்ன? “ஹாய்.. அச்சுவெல்லம்!” பந்தாவாக சொல்லிக்கொண்டு விற்பனையை ஆரம்பிக்க வேண்டியதுதான். இந்த வழிமுறையை மட்டும் ஒருவன் கையாண்டால் மிகவும் குறுகிய காலத்தில் அவன் பணக்காரனாகி விடலாம். இதுபோக, வேறு பல வழிகளையும்கூட என்னால் சொல்லித் தரமுடியும். சரி... நாம் இதுவரை பேசிக் கொண்டிருந்தது தாச்சியின் கர்ப்பம் குறித்த விஷயத்தைப் பற்றி அல்லவா? மாதங்கள் பதினொன்று ஆகியும், அவள் பிரசவமாக வில்லை. இந்த விஷயம் இப்படி இருக்க, பல மாதங்களாக ஒரு வைத்தியன் முட்டைக் கண்ணன் அந்த்ருவுக்கு பதினொன்ற ரையணா தரவேண்டி இருந்தது. “போய்த் தொலையட்டும்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட முட்டைக் கண்ணன் அந்த்ரு, அந்த வைத்தியனை அழைத்துக்கொண்டு வந்து தாச்சியைக் காட்டினான். அவள் தற்போது கர்ப்பமாக இல்லை என்று கூறிய அவன் ஏதோ சில மருந்துகளைக் கொடுத்தான்.
இப்போது நாம் இந்த இடத்தைவிட்டு, எட்டுக்காலி மம்மூஞ்ஞு இருக்குமிடத்திற்குப் போவோம். மீதி கதைகளை எட்டுக்காலி மம்மூஞ்ஞிடம் இருந்துதான் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
ஒருநாள் யானைவாரி ராமன் நாயர் மண்டன் முத்தபாவின் தேநீர் கடைக்குப் போகும்போது, பயங்கர கவலையுடன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு யானைவாரி ராமன் நாயரைப் பார்த்துக் கேட்டான்.
“டேய் யானைவாரி! உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம குழந்தையைக் கொன்னுட்டாங்க...”
யானைவாரி ராமன் நாயர் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார். அவர் என்ன பதில் சொல்வார்? அவர் தன் போக்கில் நடந்தார். வழியில் தங்கச் சிலுவை தோமாவைப் பார்த்தார். வருத்தமான குரலுடன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு சொன்னான்: “டேய்... தங்கச் சிலுவை! விஷயம் தெரியுமா? அவங்க நம்ம செல்ல மகனைக் கொன்னுட்டாங்க.”
தங்கச் சிலுவை தோமாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒன்றுமே பேசாமல் மவுனமாக அவர்கள் மண்டன் முத்தபாவின் தேநீர் கடையை அடைந்தார்கள். தொண்டை அடைக்க, கண்ணீரைச் சிந்தியவாறு எட்டுக்காலி மம்மூஞ்ஞு மண்டன் முத்தபாவிடம் சொன்னான்: “டேய்.... முத்தபா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம அன்பு மகனை அவங்க கொன்னுட்டாங்க...”
மண்டன் முத்தபாவாலும் எந்த பதிலும் கூற முடியவில்லை. இந்த சம்பவத்தை ஒற்றைக் கண்ணன் போக்கர் அறிந்தான். ஊரில் இருந்த இரண்டு போலீஸ்காரர்களும் அறிந்தார்கள். எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்துப் பார்த்தும், அவர்களால் ஒரு முடிவுக்குமே வரமுடியவில்லை. இறுதியில் எட்டுக்காலி மம்மூஞ்ஞு சொன்னான்: “என் அன்பு மகனைக் கொன்னவனோட குடலை உருவி நான் மாலையா போடப் போறேன்!”
அப்போது போலீஸ்காரர்களில் ஒருவன் சொன்னான்: “க்ஷமீர்!”
அவன் அப்படி ஏன் சொன்னான் தெரியுமா? முட்டைக் கண்ணன் அந்த்ருவின் வாப்பாவின் இரண்டாவது மனைவியின் தங்கையின் கணவனின் தம்பியின் மூத்த மகன் ஒரு ஹெட் கான்ஸ்டபிளாக இருந்தவன். அதனால் முட்டைக் கண்ணன் அந்த்ருவின் குடலை எடுத்து மாலையாகப் போடும் விஷயத்தை போலீஸ்காரர்கள் பலமாக எதிர்த்தார்கள். பாருங்கள்... இங்கு என்ன நடக்கிறது என்று! உத்யோகஸ்த துஷ் பிரபுத்துவமும் முதலாளித் துவ கூட்டணியும்! முட்டைக் கண்ணன் அந்த்ருவை எட்டுக்காலி மம்மூஞ்ஞுவும், அவனுடன் இருக்கும் மனிதர்களும் என்ன செய்துவிட முடியும்? இப்படி கவலைகள் நிரம்பிய நிச்சயமற்ற நாட்கள் படுவேகமாக நீங்கிக் கொண்டிருக்க... ஒரு புதிய செய்தியுடன் எட்டுக்காலி மம்மூஞ்ஞு மண்டன் முத்தபாவின் தேநீர் கடைக்கு வந்தான். அப்போது அங்கே யானைவாரி ராமன் நாயரும் தங்கச்சிலுவை தோமாவும் மண்டன் முத்தபாவும் ஒற்றைக் கண்ணன் போக்கரும் இரண்டு போலீஸ்காரர்களும் இருந்தார்கள். அவர்களுடன் சரித்திர எழுத்தாளனான நானும் இருந்தேன். எங்கள் எல்லாரையும் பார்த்து எட்டுக்காலி மம்மூஞ்ஞு கேட்டான்:
“விஷயம் தெரியுமா?”
அடுத்த சில நிமிடங்களுக்கு எட்டுக்காலி மம்மூஞ்ஞினால் எது வுமே பேச முடியவில்லை. அவன் அந்த அளவுக்கு கவலையிலும், கோபத்திலும், வேதனையிலும் ஆழ்ந்து போயிருந்தான். இறுதியில் கண்ணீர் சிந்தியவாறு கவலை தோய்ந்த குரலில் அவன் சொன்னான்:
“அந்த முட்டைக் கண்ணன் அந்த்ரு நம்ம செல்ல மகனைக் கொன்னதோடு நிக்காம, நம்ம பொண்டாட்டி தாச்சியைக் கல்யாணம் வேற பண்ணிக்கிட்டான்...”
சரித்திர மாணவர்களே, என்ன செய்வது?