தோழி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7104
"நான் இங்கே இருக்குறப்போ இந்த மாதிரி தான்தோன்றித்தனமான காரியங்கள் நடக்குறதுக்கு நிச்சயமா சம்மதிக்க மாட்டேன். இதென்ன கூத்தா இருக்கு. அந்தப் புலையப் பொண்ணு கூட இனிமேல் பழகக்கூடாதுன்னு நீங்கதான் மகள் கிட்ட கண்டிச்சு சொல்லணும். தாய் இல்லாத பொண்ணுன்னு அவ என்ன பண்ணினாலும், கண்டபடி பிடிவாதம் பிடிச்சாலும் அதைக் கண்டிக்காம அவ போக்குலேயே விட்டுக்கிட்டு இருக்குறது நீங்கதான்.
நான் தப்பித் தவறி ஏதாவது சொல்லிட்டா... அவ்வளவு தான்- நான் அவளைப் பெத்ததாய் இல்லைன்னு என்மேல தேவையல்லாம பழி வந்து விழ ஆரம்பிச்சிடும். அங்க பாருங்க... வயல்வழியா நம்ம பொண்ணு வர்றதை! அந்தக் காளி பொண்ணோட தோள்மேல கையைப் போட்டுக்கிட்டு ஆடி ஆடி நடந்து வர்றதைப் பாருங்க. நல்லா ரசிச்சுப் பாருங்க..."
இவ்வளவையும் சொல்லிவிட்டு கழுத்தை ஒரு மாதிரி வெட்டியவாறு சமையலறைக்குள் நுழைந்தாள் மாதவியம்மா.
'பகவத் கீதை' படித்துக் கொண்டிருந்த கோவிந்த மேனன் புத்தகத்திலிருந்து கண்களை எடுத்து மூக்குக் கண்ணாடி வழியாக தனக்கு முன்னால் தெரிந்த வயல் பக்கம் கூர்மையாகப் பார்த்தார். புத்தகங்களை மார்புடன் சேர்த்துப் பிடித்தவாறு பிரபாவும் காளியும் பள்ளிக்கூடம் விட்டு வந்து கொண்டிருந்தார்கள். மாலை நேர வெயில் அவர்கள் முகத்தில் மஞ்சள் வண்ணத்தைப் பூசியிருந்தது. மூன்று பாதைகள் சந்திக்கும் இடம் வந்ததும் அவர்கள் இருவரும் பிரிய வேண்டும். காளி பிரபாவைக் கிச்சுக்கிச்சு மூட்டியபடி பின்னால் திரும்பி வேகமாக ஓடினாள். அதற்கு பதிலாக பிரபாவும் அவளை விரட்டியபடி வேகமாக ஓடினாள். இருந்தாலும் தன்னுடைய பருமனான உடலுடன் அவளால் அதிக தூரம் ஓட முடியவில்லை. அவளின் ஆங்கில நோட்டுப் புத்தகம் வயலில் போய் விழுந்தது. இடது காலில் அணிந்திருந்த கொலுசு கழன்று சேற்றில் விழுந்தது. அவள் அவற்றை எடுப்பதற்காகச் சேற்றில் இறங்கினாள். அவளின் முழங்கால் வரை சேற்றுக்குள் புதைய என்ன செய்வதென்று தெரியாமல் அவள் காளியை அழைத்தாள்.
அடுத்த நிமிடம் காளி ஓடிவந்து அவளைச் சேற்றிலிருந்து மேலே கையைப் பிடித்து தூக்கினாள். தன் தோழியின் காலில் இருந்த சேற்றை அவள் நீரால் தேய்த்து கழுவி விட்டாள்.
நேரம் அதிகமாகி விட்டதால், அதற்கு மேல் அவர்கள் விளையாடவில்லை. "மீதியை நாளைக்குப் பார்த்துக்குவோம்" என்று சொல்லியவாறு பிரபா திரும்பி நடந்தாள்.
கோவிந்தமேனன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொரு நேரமாக இருந்தால் கள்ளங்கபடமில்லாத அந்தச் சிறுமிகளின் விளையாட்டை அவர் கண்குளிர பார்த்து ரசித்திருப்பார். ஆனால், மாதவியம்மா ஏற்கனவே அவரின் மனதில் சில விஷ வித்துக்களை விதைத்து விட்டிருந்ததால், பிரபா, காளி இருவரும் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த அவருக்குக் கோபம் தான் உண்டானது. அவர் ஒரு பிரம்பைக் கையிலெடுத்துக் கொண்டு குரலைச் சற்று உயர்த்தி "பிரபா, இங்கே வா" என்று அழைத்தார்.
அவள் அஞ்சி நடுங்கும் ஒரு மான்குட்டியைப் போல தன்னுடைய கறுத்த விழிகளால் பார்த்தவாறு மெதுவாக தன் தந்தையை நோக்கி நடந்து சென்றாள். கோவிந்த மேனன் அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவர் முகத்தில் அப்போது இனம் புரியாத ஒரு உணர்ச்சி வேறுபாடு தோன்றியது. கலங்கிப் போயிருந்த பிரபாவின் நீலநயனங்களில் அவளுடைய இறந்து போன தாயின் முகத்தை அவர் பார்த்தார். அப்போது அவருடைய கண்களில் கண்ணீர் அரும்பத் தொடங்கியது. அது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய முகத்தை வேண்டுமென்றே இன்னொரு பக்கம் திருப்பிக் கொண்டு, கண்களில் இருந்த ஈரத்தை மறைக்க முயற்சித்தவாறு, கையிலிருந்த பிரம்பைக் கீழே வைத்த அவர் பிரபாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு நிமிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றார். பிறகு மெதுவாக பதறிய குரலில் அவர் சொன்னார்:
"பிரபா, நீ சொன்னபடி கேட்க மாட்டியா?"
அதைக் கேட்டு பிரபாவின் கண்கள் கலங்கின. அவள் கேட்டாள்: "நான் அப்படி என்னப்பா தப்பு பண்ணிட்டேன்?"
கோவிந்தமேனன் மகளை தன் மார்போடு சேர்த்து அணைத்தவாறு சொன்னார்: "அந்தத் தாழ்ந்த ஜாதிப் பொண்ணுகூட நீ பழகுறது அவ்வளவு நல்லது இல்ல. நீ அவளைத் தொட்டு விளையாடுறதை யாராவது பார்த்தாங்கன்னா நம்மளைப் பத்தி அவங்க என்ன நினைப்பாங்க?"
அவள் முடி வளர்த்திருந்த தன்னுடைய தந்தையின் மார்புப் பகுதியை விரல்களால் சிறிது நேரம் தடவியவாறு நின்றாள். சில நிமிடங்களுக்குப் பிறகு சாந்தம் குடிகொண்டிருந்த தன்னுடைய விழிகளை மேல்நோக்கி உயர்த்தியவாறு அவள் கேட்டாள்: "யாரும் பார்க்காத மாதிரி நான் காளிகூட சேர்ந்து விளையாடலாம்ல?"
அதற்குமேல் கோவிந்தமேனன் மகளிடம் எதுவுமே சொல்லவில்லை.
2
காளிக்குத் தற்போது ஒன்பது வயது நடக்கிறது. அவளுடைய தந்தை வடநாட்டில் சாலைத் தொழிலாளர்களின் மேஸ்திரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவன் பெயர் கண்ணன்குட்டி. ஒவ்வொரு மாதமும் அவனுக்குச் சம்பளமாக பதினோரு ரூபாய் தரப்படுகிறது. மாதமொரு முறைதான் அவன் தன் குடிசையைத் தேடியே வருவான். அவனின் ஒரே மகள் காளி. கண்ணன்குட்டி அவ்வளவாகப் படிக்காததால் தன்னுடைய மகளாவது நன்றாகப் படிக்கட்டும் என்று ஆசைப்பட்டுத்தான் அவளைப் பள்ளிக் கூடத்திற்கே அனுப்பி வைத்தான். அவன் வடநாட்டிற்கு வேலை செய்யப் போய்விட்டால், குடிசையில் இருப்பவர்கள் காளியும் அவளின் தாய் தளியாயியும்தான்.
பிரபாவும் காளியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிரென நேசித்தனர். படிப்பில் மிகவும் திறமைசாலி காளி. எப்போதும் படு சுறுசுறுப்பாக இருபபாள். யாரையும் ஆச்சரியம் கொள்ள வைக்கும் ஒரு வித அமைதியான குணமும், ஒரு அறிவாளித்தனமான களையும் அந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுமியிடம் குழந்தைப் பருவத்திலிருந்தே குடி கொண்டிருந்தன. அவளது கறுத்து மெலிந்து போன உடம்பும், சுருள் சுருளாகக் காணப்படும் தலைமுடியும், விரிந்த கண்களும், நீளமான மூக்கும் பிரகாசமான பற்களும் அவளுக்கு ஒருவித அழகைத் தந்தன.
பிரபா காளியைவிட ஒரு வயது குறைவானவள் என்றாலும் பார்ப்பதற்கு அவளை விட மூத்தவள் மாதிரி தோன்றுவாள். அவள் சதைப்பிடிப்புடன் கட்டுப்பாடே இல்லாமல் வளர்ந்திருந்ததே காரணம். பொன்னிற மேனியைக் கொண்டவள் பிரபா. ஒடுங்கிப் போன சிறிய மூக்கும், சதைப்பிடிப்பான கன்னங்களும், சிறிய நீலநிறக் கண்களும், மெலிதாக மையால் வரையப்பட்டதைப் போலிருக்கும் புருவங்களும் ஒரு ஜப்பானிய சிறுமியின் அழகை அவளுக்கு அளித்தன. எப்போது பார்த்தாலும் அவள் சல சலவென்று பேசிக்கொண்டே இருப்பாள்.