இராமாயணம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6941
தெற்குப் பக்கமிருந்த சாளரத்தின் வழியாக சாதாரணமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் கடலும் வானமும் ஒரு காலை நேர வளையத்தில் ஒன்றொடொன்று இணைக்கப்பட்டிருப்பதைப்போல் தோன்றியது. ஓசை எழுப்பிக் கொண்டிருந்த கடல், ஒளிமயமான வானம் - இரண்டும் ராதாவையும் கிருஷ்ணனையும் போல ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன.
அந்த எண்ணமே ஜெயாவிற்குத் தமாஷாகத் தோன்றியது. ராதாவையோ, கிருஷ்ணனையோ அவள் பார்த்ததில்லை. எனினும் எதனால் அவள் அப்படி நினைத்தாள்? ராதாவை அவள் பார்த்ததில்லையா?
கிருஷ்ணனை அவள் பார்த்ததில்லையா?
அவர்கள் ஒவ்வொரு நரம்பிலும் ஊடுருவிக் கொண்டிருக்கவில்லையா? மலர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சிவந்த பூவிலும் ராதாவின் பாத அடையாளங்களை அவள் காண்கிறாள். மெல்லிய தென்றல் வீசும்போது அதோடு சேர்ந்து ராதா பெருமூச்சு விடுகிறாள். சவுக்கு மரங்களுக்கு மத்தியில் ஓசை உண்டாக்கியவாறு வீசிக்கொண்டிருக்கும் கடல் காற்று கிருஷ்ணனின் புல்லாங்குழலைத் தன்னிடம் வைத்திருக்கிறது. ராதா, கிருஷ்ணன் - கிருஷ்ணன், ராதா - எல்லா இடங்களிலும் அதுதான். திடீரென்று கீழேயிருந்து யாரோ கதவைத் தட்டுவதைப் போல இருந்தது. ஜெயா காதைக் கூர்மைப்படுத்திக் கொண்டு கேட்டாள். யாராக இருக்கும்?
எஞ்சினியர் கோபாலன்?
ரேடியோலஜிஸ்ட் கோபியின் வெளுத்த உயரமான உருவம் அவளுக்குள் தோன்றி மறைந்தது.
காளையைப் போல பருமனான சரீரத்தைக் கொண்ட வர்கீஸ் மாஸ்டரின் கனமான குரல் காதுகளில் முழங்கியது. “நீங்க எதைக் கேட்டாலும், நான் எப்பவும் தருவேன். நீங்க...” மீண்டும கதவு தட்டப்படும் ஓசை. படிகளில் இறங்கியபோது அவள் நினைத்தாள்: ‘தங்க நகை வியாபாரி குணஷேணாயியாக இருக்குமோ?’ குணஷேணாயி ஒரு நல்ல இரைதான். ஷேணாயிக்குத் தரும் ஒவ்வொரு புன்னகையும் விலை மதிப்புடையது என்பதை ஜெயா நினைத்துப் பார்த்தாள்.
சில நாட்களுக்கு முன்பு ஐந்தெட்டுப் பாம்புகளுடன் அங்கு வந்த பாம்பாட்டியைப் பற்றியும் அப்போது அவள் நினைத்துப் பார்த்தாள். அவனுடைய மகுடியிலிருந்து புறப்பட்டு வந்த ராகங்களுக்கு ஏற்றபடி அந்தப் பாம்புகள் ஆடின.
அந்தப் படம் விரித்த மரணங்களைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு, பாம்புகளை ஆடச் செய்துகொண்டிருந்த எங்கோ இருக்கும் பாம்பாட்டியை மதிப்புடன் அவள் நினைத்துப் பார்த்தாள். என்ன தைரியசாலி! அவனுக்குப் பணத்தை வீசி எறிவதில் அவள் எவ்வளவு சந்தோஷப்பட்டாள்! இப்போது அதை நினைத்துப் பார்ப்பதற்குக் காரணம் என்ன? ஒன்றுமில்லை. அவள் ஒரு பாம்பையும் அடிக்கவோ, கூடையில் அடைக்கவோ விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
படிகளில் மேலும் ஒரு படி இறங்கியபோது யோசனை தொடர்ந்தது. யாராக இருக்கும்?
வினாயக்! அந்த பிராமண இளைஞன் நல்ல திறமைசாலி. மிகவும் அருமையாகப் புல்லாங்குழல் வாசிப்பதற்கும், பாராட்டுகிற அளவிற்குக் காதல் சூழ்நிலையை உண்டாக்குவதற்கும் அவனுக்குத் தெரியும். கடந்த பவுர்ணமி நாளன்று அவன் அங்கு வந்திருந்தான் என்பதை ஜெயா நினைத்துப் பார்த்தாள். அன்று அவன் சொன்ன வார்த்தைகளும் அவளுடைய ஞாபகத்தில் வந்தன. “ஜெயா, நீ இந்த சோஃபாவில் முதுகை வளைத்து சாய்ஞ்சு படுத்திருக்கிறப்போ, எங்கோ பயணம் செய்துகொண்டிருக்கும், ஏதோ ஒரு கவலையில் மூழ்கியிருக்கும் வழிப்போக்கனிடமிருந்து புறப்பட்டு வரும் நீலாம்பரி ராகத்தின் அலைகள் என் இதயத்திற்குள் நுழையிற மாதிரி நான் உணர்றேன்” என்றான் அவன். அப்படி அவன் சொன்னதைக் கேட்டபோது, ஜெயாவிற்கு சந்தோஷமாக இருந்தது. அது முகஸ்துதியாக இருக்கலாம். எனினும், அவளுடைய கூந்தலை வருடியவாறு அவன் தொடர்ந்து சொன்னான்: “இதயத்தை பிழியும் இனிய ராக ஆலாபனை அது!”
வினாயக்காக இருந்தால், இவ்வளவு நேரம் அவன் பொறுமையாக இருந்திருக்க மாட்டான். கதவை இடியோ இடி என்று இடித்திருப்பான். தனக்கு எதிரில் இருக்கும் ஒன்றை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருக்க அவனால் முடியாது. படிகளில் கடைசிப் படியை அடைந்தபோது அவளுக்கு முன்னால் கருங்கல்லாலான சிலையைப்போல நின்றிருந்தாள் வேலைக்காரி மீனாட்சி.
“அம்மா, வெளியே ஒரு ஆள் நின்னுக்கிட்டு இருக்காரு.”
“புரியுது.”
“குடிக்கிறதுக்கு ஏதாவது...?”
“தேவைன்னா சொல்றேன்.”
கற்சிலை முன்னாலிருந்து அகன்றது நிறம் கருப்பாக இருந்தாலும் அழகான பெண் என்ற எண்ணம் அவள் மனதிற்குள் அப்போது உண்டானது. மிஸ்டர் நம்பியார் அவளை ‘ப்ளாக் ப்யூட்டி’ என்று கூறுவதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
கதவைத் திறந்தாள்.
சதுரத்தில் அவளுக்கு முன்னால் வெளிச்சம் மட்டுமே இருந்தது.
போய்விட்டானா?
அவள் வெளியே வந்து பார்த்தபோது சிட் அவுட்டில் ஒரு மனிதன் முதுகைக் காட்டியவாறு நின்றிருந்தான்.
“சார்... நீங்க...?”
காதில் விழுந்திருக்குமா? சிறிதும் அசையவில்லை. ஜெயா தெளிவான குரலில் கேட்டாள்: “யாரைப் பார்க்கணும்?”
அந்த மனிதன் திரும்பி நின்று சொன்னான்:
“உங்களைத்தான்...”
“என்னையா?”
“ஆமா.”
ஜெயா அந்த மனிதனைத் தலையிலிருந்து கீழ்வரை பார்த்தாள். சிக்கப் பிடித்த தலைமுடி, தடிமனான புருவங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டு பார்க்கும் விழிகள்... அந்த விழிகள் அசையும்போது சிறுசிறு மின்னல்கள் சிதறுவதைப்போல இருந்தது.
அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவள் அந்த மனிதனைப் பார்த்தாள்.
“தெரியல... அப்படித்தானே?”
“தெரியல...”
அவன் மெதுவாகச் சிரித்தான். தொடர்ந்து கரகரத்த குரலில் சொன்னான்: “ஞாபகம் இல்லாம இருக்குறதுல தப்பு இல்ல. என் பேரைச் சொல்றேன்... எஸ்.ராஜசேகரன்...”
அவளுடைய மனதிற்குள்ளிருந்து ஒரு ஓசை எழும்பி மேலே வந்ததைப் போல் இருந்தது.
“ராஜன்!”
“அப்படித்தான் நீங்க என்னை அப்போ கூப்பிடுவீங்க. நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? உங்க பேரு இப்பவும் ஜெயாதானா?”
அடக்க முடியாத அளவிற்கு வழிந்து கொண்டிருந்த கண்ணீர்தான் அதற்குப் பதிலாக இருந்தது. எதற்காகத் தான் அப்படிக் கண்ணீர் சிந்துகிறோம் என்று ஜெயாவிற்கே தெரியவில்லை. ராஜன் அவளுடைய காதலன் இல்லை. அவளும் ராஜனுடைய காதலி இல்லை.
“உட்காருங்க...”
“அதுக்காகத்தான் நான் வந்தேன். கொஞ்ச நேரம் ஒரு இடத்துல உட்காரணும்போல இருக்கு.”
அதைச் சொன்ன ராஜன் அருகில் கிடந்த சோஃபாவில் போய் உட்கார்ந்தான்.
“குடிக்க ஏதாவது...?” அந்தச் சாதாரண கேள்வியைக்ககூட ராஜனிடம் கேட்டிருக்க வேண்டியதில்லை என்று ஜெயா நினைத்தாள்.
“மது வேண்டாம் - இருந்தாலும் ஏதாவது குடிக்கணும். சாப்பிடுறதுக்கும் ஏதாவது இருந்தா நல்லா இருக்கும். எனக்குப் பசியா இருக்கு. நான் சாப்பிட்டு ரெண்டு நாட்கள் ஆச்சு.”
“இப்பவே அதுக்கு ஏற்பாடு பண்றேன்....”
மீனாட்சியை அழைத்து அவள் உணவு தயாரிக்கச் சொன்னாள். தொடர்ந்து அவள் அவனுக்கு அருகில் போய் உட்கார்ந்தாள்.