இராமாயணம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6940
விஜயலட்சுமி அரங்கங்களில் முழங்கிக் கொண்டிருந்தாள்.
ராஜனும் அரங்கங்களில் ஏறி பலத்த கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டிருந்தான் - ஒரு போர்க்குதிரையைப் போல.
தனது செயல்களுக்குத் தன்னுடைய தந்தை நிச்சயமாக எதிராக இருப்பார் என்று ராஜன் நினைத்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தது. அவர் மிகவும் அன்புடன் பேசினார்.
“எனக்கு வயசாயிடுச்சு. இந்த வயசுல எவ்வளவு சக்தியுள்ள கண்ணாடி அணிஞ்சாலும் மாற்றங்களின் வடிவத்தை உள்ளது உள்ளபடி பார்க்க என்னால முடியாது. உனக்கு எது சரின்னு படுதோ, அதை நீ செய்யலாம். செய்யணும். உன் தலைவர்களுக்குச் சரின்னு தோணினா போதாது. நான் சொல்றது புரியுதுல்ல...?”
“ம்...”
“புரியுதுன்னு வேகமா சொல்லக்கூடாது. எளிமையான பாதைகளைத் தேடுறவங்களோட குணம் அது. நீ சிரமங்கள் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கே. நடப்பதற்கு வேறொரு ஆளின் காலைக் கடனுக்குக் கேட்க முடியாது. அப்படியே கிடைத்தாலும், அது உன்னோட நடையா இருக்காது. உன்னோட இலட்சியமும் உன்னோட பாதையும் நீயே யோசித்து முடிவு செய்ததுதானே?”
“ஆமா...”
“ரொம்ப நல்லது. அது போதும் எனக்கு. மனசை உற்றுப்பார். நீ உன்னைப் பின்பற்றி நடக்குறியா? இல்லாட்டி கனவுல பார்த்த ஏதோ ஒண்ணைப் பின்பற்றி நடக்குறியா? பரவாயில்லை... கனவுகளும் நல்லவைதான்... புறப்படு...”
தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டபோது தனக்கு எரிச்சல் உண்டானது என்று அன்று ராஜன் சொன்னான். எனினும், அன்பு கொண்ட அவரை எதிர்த்து அவன் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை.
“ராஜன், உங்க அப்பா இப்போ...”
மீண்டும் ராஜனின் கிண்டல் கலந்த சிரிப்புச் சத்தம் உரத்து முழங்கியது. “அவரைப் பார்த்தா எவ்வளவு நல்லா இருக்கும்! ஒரு வாழ்க்கைக்குத் தேவைப்படுற கல்வியைத் தந்து பயணம் போகும்படி அனுப்பி வைக்கப்பட்ட நான் வாழ்க்கையில் அடைந்ததை என் தந்தையின் கால்களில் வைத்து வணங்கியிருக்கலாமே!”
அதைக் கூறிவிட்டு மீண்டும் ராஜன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.
அவனுடைய தாயும் அவனைத் தடுக்கவில்லை. சுவரில் சாய்ந்து கொண்டு ராமாயணத்தை வாசித்தவாறு அவள் உட்கார்ந்திருந்தாள். எந்தச் சமயத்திலும் எதற்கும் எதிர்ப்புக் கூறியிராத அவனுடைய தாய்.
அந்தத் தாய் யார்? ராஜனின் வார்த்தைகள் ஜெயாவின் நினைவில் வந்தன. “ஐந்து பிள்ளைகள் பிறந்ததில், முதல் பிள்ளை இறந்துவிட்டது. இரண்டாவது பிறந்தது பெரிய அண்ணன். அவர் தன்னுடைய முப்பத்தியிரண்டாவது வயசுல இரத்த வாந்தி எடுத்து இறந்துட்டாரு. கடைசி நிமிடம் வரை அம்மா மகனை கவனம் எடுத்துப் பார்த்தாங்க. பெரிய அண்ணன் இறந்தப்போ, அம்மா தன் கவலையை பெருசா காட்டிக்கவே இல்லை. அமைதியா அறைக்குள்ளே போயி படுத்துட்டாங்க. பல நாட்கள் அங்கேயே படுத்துக் கிடந்தாங்க. மூணாவது... அக்கா. அவங்க முதல் குழந்தையை வயித்துல வச்சிருந்தப்போ, அவங்களோட கணவர் இறந்துட்டாரு. அக்கா வீட்டுக்கு வந்தப்போ, அம்மா அழவே இல்ல. கண்ணீர் விட்டபடி நின்னுக்கிட்டு இருந்த தன் மகளின் முதுகை அம்மா தடவி விட்டாங்க. நாலாவதா பிறந்தது... சின்ன அண்ணன். தன்னோட இருபதாவது வயசுல வலிப்பு நோய் வந்து தண்ணியில் விழுந்து அவர் இறந்துட்டாரு. இறந்த உடலைக் கொண்டுவந்து படுக்க வச்சப்போ, அம்மா கொஞ்ச நேரம் வந்து பார்த்தாங்க. பெருமூச்சுகூட விடல. பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த என்கிட்ட சொன்னாங்க. “இறுதிச் சடங்குகளை ஒழுங்கா செய்...” அதைச் சொல்லிவிட்டு அவங்க உள்ளே நுழைஞ்சு கதவை மூடிக்கிட்டாங்க.
அந்தத் தாய் தன் கடைசி மகன் சொன்ன எல்லாவற்றையும் கேட்டாள். ராமாயணத்தை மடக்கித் தன் மடியில் வைத்துவிட்டு, சிறிது நேரம் அவனுடைய முகத்தையே உற்றுப் பார்த்தாள். பிறகு சொன்னாள்: “மற்ற எல்லாரும் போனப்போ காரணத்தைச் சொல்லல. நீ அதைச் சொல்றே. நல்லது... நான் இறக்குறதுக்கு முன்னாடி இனிமேல் உன்னை நான் பார்க்க முடியுமா?”
ராஜன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.
“சாப்பிட்டுட்டுப் போ...”
அவனுடைய தாய் ராமாயணத்தை விரித்து வைத்துக் கொண்டு தன் வாசிப்பைத் தொடர்ந்தாள். ‘வாழ்க்கை இன்பங்கள் நிறைந்தது என்பதை வாழ்ந்து காட்டு.’
வாழ்க்கை இன்பங்கள் நிறைந்தது அல்ல என்று ராஜன் எப்போதும் நினைத்தது இல்லை. வாழ்க்கையின் அலைகளையும் நுரைகளையும் தாண்டி நீந்திக் கடந்து செல்லத்தான் அவனுடைய மனம் துடித்துக் கொண்டிருந்தது.
“ஜெயா, என்ன யோசிக்கிறீங்க?” ராஜன் இடையில் புகுந்து கேட்டான்.
“ஒண்ணுமில்ல...”
“என்னைப் பற்றி ஏதாவது நினைச்சிருப்பீங்க?”
அதற்கு அவள் பதில் சொல்லவில்லை.
“எதற்காக நான் அரசியலை விட்டுட்டேன்னு நினைச்சீங்களா?”
“ஆமா...”
“கடந்த காலத்தை நான் இப்பவும் நினைச்சுப் பார்க்குறேன். நுரை தள்ளிக்கிட்டு இருக்குற கள்ளுப் பானையை அந்தக் காலத்துல நான் பார்த்து நின்னுக்கிட்டே இருப்பேன். குடிக்கணும்ன்றதுக்காக இல்ல. அந்தப் பானையைப் போலத்தான் நானான்னு அப்போ நினைப்பேன். எனக்கே நான் அடங்காத காலம் அது. ஜெயா, உங்களுக்குத்தான் அது தெரியுமே?”
“ம்... ஒருமுறை கடற்கரை வழியா நடந்து போறப்போ நீங்க சொன்னது ஞாபகத்துல இருக்குது. ‘இந்தக் கடல் என் அண்ணன்னு எனக்குத் தோணுது. நாங்க ரெண்டு பேருமே யாருக்கும் அடங்காதவங்க’ன்னு நீங்க சொன்னீங்க”
“சொல்லியிருக்கலாம். அது உண்மைதான். ஆனா, ஞாபகத்துல இல்ல. அதை நினைக்கிறதுக்கு நேரமும் இல்லாமல் போச்சு. புயலைப் போல நான் நடந்து திரிஞ்சேன். நிழல்கள் வழியா இருட்டுக்கு மத்தியில் ஆழமான குழிகள்ல ஒளிஞ்சிக்கிட்டு... யார் கையிலயும் அகப்படாம.. அப்படி அகப்படாம இருந்ததுக்காகப் பெருமைப்பட்டுக்கிட்டு... அப்போ... அப்போ மட்டும்தான் நான் வாழ்ந்தேன்.”
ராஜன் பேசாமல் இருந்தான். அவன் எதையோ நினைக்கிறான் என்பதை அவனுடைய கண்கள் தெரிவித்தன. நினைத்துப் பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கக் கூடிய ஒரு வாழ்க்கை தன்னுடையது என்பது அவனுக்கு நன்கு தெரியும். முள்ளாலான கிரீடத்தை அணிந்தபோது வாழ்க்கை மிகவும் சந்தோஷம் நிறைந்த ஒன்றாக இருந்தது. ஏதோ ஒரு மலைச் சரிவில் ஏராளமான நெருப்பு நாக்குகளை நீட்டிக் கொண்டு நின்றிருக்கும் ஒரு பெரிய மாமரம் எப்போதும் அவனுடைய மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது.
“நாங்கள் எல்லாரும் ஆபத்துகள் நிறைந்த ஒரு இடத்துல இருந்தோம். கவலைன்னா என்னன்னு தெரியாது. ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்காக நாங்க போராடிக்கிட்டு இருந்தோம். எங்களுக்குள் என்ன நம்பிக்கை! ஒரு ஆளோட பார்வையின் அர்த்தத்தை இன்னொரு ஆள் எவ்வளவு வேகமா புரிஞ்சிக்குவான் தெரியுமா? வாயில இரையை எடுத்துட்டுப் போயி முத்தம் தர்ற பறவையைப் போல, நாங்க துப்பாக்கிகள் மூலமா நெருப்புப் பொறிகளை அனுப்பினோம்.