இராமாயணம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6940
திடீரென்று காலம் ஒரு ஆயிரம்கால் பூச்சியைப்போல ஊர்ந்து வந்து நிற்பதைப்போல் அவளுக்குத் தோன்றியது. அந்தக் காலத்தில் ராஜனுக்கு அருகில் இதே மாதிரி தான் அமர்ந்திருந்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள்.
அப்போது விரியாத மலரைப் போல பரிசுத்தம் நிறைந்த அழகான ஒரு இளம் பெண்ணாகத் தான் இருந்ததை ஜெயா நினைத்துப் பார்த்தாள்.
ராஜன் ஒரு நெருப்பு ஜுவாலையாக இருந்தான்.
முதல் வகுப்பில் எம்.எஸ்ஸி.யில் அவன் தேர்ச்சி பெற்றான். புகழ்பெற்ற தந்தையின் புத்திசாலி மகன். ராஜனைப் பொறுத்தவரையில் உத்தியோகம் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அன்று ராஜன் அதைச் செய்ய வேண்டுமென்று நினைக்க வேண்டும். உத்தியோகம் இருக்கவே செய்தது. ஆனால், “நான் ஒரு நுகத்தடி பூட்டிய எருமையாக இருக்க விரும்பல. என் வானத்து விளிம்பு ரொம்பவும் தூரத்துல இருக்கு. நான் அங்கே பயணம் செய்யணும்- ராஜனுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டு ஜெயா அதிர்ச்சியடைந்துவிட்டாள். அப்போது அவள் ஒரு சிறு பெண்ணாக இருந்தாள். வேலை கிடைத்து, ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வாழ ஆரம்பித்துவிட்டால், வாழ்க்கை முழுமை அடைந்ததாக அர்த்தம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அதிர்ச்சியைப் பார்த்து ராஜன் சொன்னான்: “நீ அதிர்ச்சியடைஞ்சிட்டியா? எதுக்கு? நான் என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். என் ஒவ்வொரு ரோமக் காம்பு வழியாகவும் சுற்றி இருக்குற அனுபவங்களை உறிஞ்சி எடுக்குறேன். தொழில் இல்லாத ஆண்கள்... வெட்கத்தை மறைக்கத் துணி இல்லாத தாய்மார்கள்... பள்ளிக்குப் போய் படிக்க முடியாத பிள்ளைகள்... இவர்கள் என் கவலை நிறைந்த கனவுகளா இருக்காங்க. இந்த மோசமான நிலைமையை மாற்றி அமைக்கணும். நான் ஒரு சொர்க்கத்திற்காகப் போர் செய்ய விரும்புகிறேன். அந்த சொர்க்கத்தின் நான்கு எல்லைகளும் எப்படி இருக்கும்னு எனக்கு தெளிவா தெரியாது. இருந்தாலும் அதைப் பிடிக்க முயற்சி செய்றப்போதான், அதன் நான்கு எல்லைகளும் தெரியும் ஜெயா.”
அவள் அதைக் கேட்டவாறு நின்றிருந்தாள்.
ராஜன் கூறும்போது, எதிர்த்து எதுவும் கூற முடியவில்லை. என்ன வாக்கு சாதுர்யம்! ஆயிரக்கணக்கான மனிதர்களிடம் கூறி அவர்களின் மனதை மாற்றக்கூடிய திறமை கொண்ட நாக்கு ஆயிற்றே அது!
“நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்” - ராஜன் அன்று சொன்ன வார்த்தைகளை ஜெயா நினைத்துப் பார்த்தாள். “நான் ஒரு குண்டு போடுவேன் ஜெயா. அது பலவற்றையும் சாம்பலாக்கும்.”
“அது ஒரு பிரச்சினைகளை மேலும் அதிகமாகத்தானே செய்யும்?”
“உடைக்காம வேலை செய்ய முடியாது. இப்போ கொல்றதுக்கான காலகட்டம். புரட்சி... எல்லாரையும் கொல்லணும். அதுக்குப் பிறகு ஒரு புதிய உலகம் படைக்கப்படும்...”
“ஏராளமான பாவச் செயல்களைச் செய்த பிறகு...”
“பாவம்... - ராஜன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். ‘அப்பிராணிப் பெண்ணே!’ என்று அழைப்பதைப் போல் இருந்தது அந்தச் சிரிப்பு! “பாவமும் புண்ணியமும் சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறும். அர்ஜுனன் அம்பை எடுத்து எய்து கொன்றால் புண்ணியம். அஸ்வத்தாமன் மிதிச்சுக் கொன்றால் பாவம். ரெண்டுமே கொலைதான். செய்யும்போது இருக்குற மனநிலைதான் முக்கியம்.”
ராஜனுடன் வாதம் செய்து வெற்றி பெறுவது என்பது நடக்காத விஷயம் என்று தோன்றியது. அந்த முயற்சியில் அவள் எதற்குத் தேவையில்லாமல் ஈடபட வேண்டும்?
சிறிது நேரம் அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவனுடைய மனதை ஏதோ அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவளால் உணர முடிந்தது. சிவந்த முகத்தை அவளுக்கு நேராகத் திருப்பிய ராஜன் கேட்டான்: “ஜெயா, உன் பாலசந்திரன் உன்னைத் திருமணம் செய்துகொள்வானா?”
“எனக்கு எப்படித் தெரியும்?”
“தெரிஞ்சிருக்கணும். பொதுவாகப் பார்த்தால் அவன் மோசமானவன் இல்ல. அதே நேரத்துல அவன் வசதியானவங்க தோள்ல கைபோட்டு நடக்குறதுல ரொம்பவும் விருப்பம் உள்ளவன். அப்படிப்பட்ட பழக்கம் உள்ளவர்கள் எப்பவும் உண்மையானவர்களா இருக்கமாட்டாங்க. ஞாபகத்துல வச்சுக்கோ... நான் இப்போ சொல்றது உனக்குப் பிடிக்குமான்னு எனக்கு தெரியாது.”
தன் உள்ளத்திற்குள் பாலசந்திரனைப் பற்றி தான் நினைத்து வைத்திருந்த உண்மையை, எச்சரிக்கை என்பது மாதிரி அன்று ராஜன் சொன்னதை ஜெயா விரும்பவில்லை என்பது உண்மைதான். எனினும் அவள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது என்று நினைத்து அவள் மவுனமாக இருந்தாள்.
“உங்களோட அந்தக் கறுப்புப் பெண் இதுவரை காப்பி கொண்டு வரல” - ராஜன் தன்னுடைய தலைமுடியை விரல்களால் வருடியவாறு சொன்னான்: “என் உள்ளுக்குள் நெருப்பு எரியிற மாதிரி இருக்கு.”
அவன் சொல்லி முடிக்கும் நேரத்தில் மீனாட்சி காப்பியையும் பலகாரத்தையும் எடுத்துக் கொண்டு அங்கு வந்தாள். பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பில் விறகை எடுத்து எறிவதைப்போல ராஜன் வேகவேகமாகச் சாப்பிட்டான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“நான் வாரி எடுத்துச் சாப்பிடுறதைப் பார்த்து உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். பசின்றது ஒரு கொடுமையான அரக்கி. அவ தின்னாதது எதுவுமே இல்ல.”
சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயா கேட்டாள்: “இப்போ எங்கேயிருந்து வர்றீங்க?”
புறப்பட்ட இடத்தின் பெயரை ராஜன் சொன்னான். கடந்த இருபத்தாறு நாட்களாக ஒவ்வொரு இடமாக அவன் சுற்றித் திரிந்திருக்கிறான்.
“இப்பவும் அரசியல்தான்... அப்படித்தானே?”
ராஜனின் கிண்டல் கலந்த சிரிப்புச் சத்தம் பெரிதாகக் கேட்டது.
“போதும்... நான் அது போதும்னு நிறுத்திட்டேன்.”
அந்த வார்த்தைகளை நம்புவதற்கு ஜெயாவிற்குக் கஷ்டமாக இருந்தது.
இன்று அழுக்கடைந்த ஒரு மனிதனாகத் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் அன்றைய அந்த இளைஞனை அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அன்று பேசிக்கொண்டு நிற்கும்போது பல நேரங்களில் மனதில் ஒரு எண்ணம் கடந்து போய்க் கொண்டேயிருந்தது. இந்த அறிவாளி மனிதனுடன் வாழ வேண்டிய சூழ்நிலை உண்டானால்..? ஆனால், ராஜனுக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணமே உண்டாகவில்லை.
ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு எண்ணம் உண்டாகியிருந்தால், அது விஜயலட்சுமியை நோக்கி மட்டுமே இருந்திருக்கும். அரேபியக் குதிரையின் சுறுசுறுப்பையும் இளம் மானின் அழகையும் கொண்ட பெண் அவள். அவளுடைய சொற்பொழிவு மழை பொழிவதைப் போலிருக்கும். அவளுடைய ஒவ்வொரு செயலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருவதைப் போலிருக்கும். அந்த உதடுகளில் ஓணக்காலத்தில் மலரும் தும்பைப் பூக்கள் வாடாமல் இருந்தன.
ராஜனே பலமுறை கூறி காதில் விழுந்திருக்கிறது “அவள் ஒரு யதார்த்தமான பெண்.”
அவளைப்போல ஆவது என்பது முடியாத ஒன்று என்று ஜெயாவிற்கு ஆரம்பத்திலேயே தோன்றிவிட்டது.