இராமாயணம் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6940
இருந்தாலும் நண்பர்களை விட்டுப் பிரிஞ்சு, தனியா இருக்குறப்போ என் பார்வை என்னோட இதயத்திற்குள் ஆழமாக நுழைஞ்சது. ‘மனசுக்குள் பார்க்காதே. பொருளை மட்டும் பார்’ - இதுதான் எங்களுக்குச் சொல்லித் தரப்பட்ட பாடம். எனினும் குற்ற உணர்வுடன் தனிமையில் இருக்குறப்போ ஆத்மாவுக்குள்ளே நுழைஞ்சு ஆராய்ச்சி பண்ணினேன். அந்தச் சமயத்துல என் தாயின் ராமாயண வாசிப்பு மனசுக்குள்ளே இருந்து மேலே வந்தது. ‘வாழ்க்கை இன்பங்கள் நிறைந்தது என்பதை வாழ்ந்து காட்டு’. இருள் மூடியிருக்கும் கிராமப் பகுதிகளிலும், மலைச்சரிவுகளிலும் விடாது பெய்த மழையில் நனைஞ்சுக்கிட்டு அரைப் பட்டினியுடனும் முழுப் பட்டினியுடனும் அலைஞ்சு திரிஞ்சப்போ களைப்பே உண்டாகல. உள்ளே ஒரு நெருப்பு இருந்தது. அது எரிஞ்சு நரம்புகள் மூலம் பயணம் செய்துக்கிட்டு இருந்தது. வெறும் தரையில வேட்டியை விரிச்சு இருட்டைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தப்பகூட மனசுல என் தாயின் முகம் தெரிஞ்சது. மெட்டுடன் ராமாயண வாசிப்பு கூடாது. அடிபணியக் கூடாது. பாரம்பரியம் பின் கழுத்தில் ஏறி உட்கார முயற்சி செய்யுது. அதை அங்கிருந்து அகற்ற வேண்டும். உதிக்கப்போகிற ஒரு விடியலுக்காக நான் வாழறேன். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயார்...”
“இப்போ அந்த நம்பிக்கைகளை முழுசா விட்டுட்டீங்களா?”
ராஜன் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.
“எத்தனையோ ஆயிரம் மனிதர்கள் இன்று அதை நம்பி பின்பற்றிக் கொண்டுதான் இருக்காங்க. அவங்களோட அந்த உண்மையான நம்பிக்கையை நான் கேள்வி கேட்கத் தயாராக இல்லை. அப்படிப்பட்டவங்க இருக்கத்தான் செய்றாங்க. அதுதான் எனக்குக் கவலையே. என் நரம்புகளைப் போல நான் அவங்கமேல அன்பு வச்சிருகேன்றதுதான் கவலையான விஷயமே, ஜெயா...”
ராஜன் சோர்வடைந்து விட்டதைப்போல சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தான். தொடர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னான்: “அவங்களுக்கு இளம் வயது... நான் இளைஞனா இருந்ததைப் போல... ஆனா, அவங்களும் அங்கிருந்து திரும்பி வர்ற நாளை நான் பார்க்குறேன்...”
“உலகம் நல்ல நிலைக்கு வராதுன்ற எண்ணமா?”
“இல்ல... நல்லா ஆகுறதுக்கான வழி இது இல்லைன்றதுதான் என்னோட எண்ணம்.”
“அப்படின்னா அந்த இளைஞர்கள் முன்னாடி நடந்து நல்லா ஆகுறதுக்கான பாதையை அவர்களுக்குக் காட்ட வேண்டாமா?”
ராஜன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“ஜெயா, சரியான பாதை எதுன்னு எனக்கு உறுதியா தெரிஞ்சாத்தான் நான் மற்றவங்களுக்கு அதைக் காட்டித்தர முடியும். எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு, லட்சியம் இருக்குன்னு வெறுமனே சொல்லிக்கிட்டு திரியிற வயசை நான் தாண்டிட்டேன்.”
“ம்... எனக்கு இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் கொஞ்சம்கூட புரியாது. ராஜன், ஆரம்பத்துலயே அது உங்களுக்குத் தெரியும்ல?”
“தெரியும். அப்படி இருக்கறது நல்லதா, நல்லது இல்லையான்னு என்னால இப்போது உறுதியாகச் சொல்ல முடியல. வாழ்க்கைன்றது ஒரு நேர்க்கோடாக எனக்கு முன்னாடி தோணிச்சு. இப்போ அவ்வளவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைஞ்சு கிடக்கிறதா படுது, ஜெயா. வாழ்க்கைன்றது ஒரு தத்துவம்னு நான் நினைச்சேன். வாழ்க்கை நான் படைச்சது இல்ல... தத்துவம் நான் படைச்சது, இங்கேதான் குழப்பமே...”
“சரி... அதுக்காக இந்த அளவுக்கு, குறைபட்டுக் கொள்ற அளவுக்கு என்ன நடந்தது?”
“ஒண்ணும் நடக்கல. இப்போ பார்க்குறது தத்துவங்கள் இல்லை. வாழ்க்கையும் இல்ல...”
“பிறகு?”
“ஏராளமான கார்கள்...”
“நல்லதுதானே?”
“யாருக்கு நல்லது?”
ராஜன் மீண்டும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அப்போது ஒரு பையன் அங்கு வந்து ஒரு தாளை நீட்டினான்.
குணஷேணாயி நாளை தன்னுடன் பெங்க*ருக்கு வர முடியுமா என்று அவளைக் கேட்டிருக்கிறான். குணஷேணாயி நல்லவன். அழகன். தாராள மனம் படைத்தவன்.
“வருகிறேன்.”
தாளைத் திருப்பி அனுப்பினாள்.
“ஜெயா” - ராஜன் சொன்னான்: “மீனவர்கள் குடியிருக்குற இடம் பக்கமா நான் போனேன். காகங்களும் உடம்புல துணி இல்லாத வயிறு தள்ளிய குழந்தைகளும் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அங்கே மக்கள் கூட்டமா நின்னாங்க. ரெண்டு பெண்கள் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்க விபச்சாரக் கதைகளை ஒருத்தியோடு ஒருத்தி சொல்லித் திட்டிக்கிட்டு இருந்தாங்க. ஒருத்தியோட புருஷன் யாரோ ஒரு அரேபியப் பணக்காரன் உண்டாக்கிவிட்டுப் போன கர்ப்பத்திற்குத் தான்தான் காரணம்னு ஏத்துக்கிட்டவன்னு இன்னொருத்தி சொன்னா. வாரத்துல மூணு நாட்கள் நல்லா ஆடை அணிவித்து இன்னொருத்தியை ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போயும், அவ கர்ப்பம் தரிக்காததற்குக் காரணம் ‘லூப்’ மாட்டிகிட்டதுதான்றது எதிர்க்கட்சியோட வாதம். மக்கள் ரெண்டு பேரோட வாதங்களையும் கேட்டு உரத்த குரல்ல ஆரவாரம் செஞ்சாங்க. கொஞ்ச நேரம் நான் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.”
ராஜனின் வார்த்தைகள் தன்னுடைய மனதிற்குள் ஒரு ஊசியால் குத்தி நுழைவதைப் போல் ஜெயா உணர்ந்தாள்.
“வரட்டுத்தனமாக தத்துவங்களைப் பேசிக்கிட்டு ஒருவரோடொருவர் வாதமும் எதிர்வாதமும் செய்றதைக் கேட்டேன். மக்கள் கைத்தட்டுவதையும் பார்த்தேன். பலவற்றையும் பார்த்தேன். பார்த்துப் பார்த்து வெறுத்துட்டேன். என் ஜெயா, ஒண்ணை மட்டும் நான் பார்க்கல.”
“எதை?”
“மனித நேயம்... ஒரு துளியாவது...”
ராஜன் அதைச் சொன்னபோது தானே பேசுவதைப் போல ஜெயா உணர்ந்தாள்.
கொடுக்கிறார்கள். வாங்குகிறார்கள்.
வாங்குகிறார்கள். மீண்டும் கொடுக்கிறார்கள்.
அன்பிற்கு எங்கு இடமிருக்கிறது?
கோபி, வர்க்கீஸ் மாஸ்டர், குணஷேணாயி, வினாயக், வக்கீல் நம்பியார் - எல்லோரும் கொடுக்கிறார்கள்.... வாங்குகிறார்கள்.
அன்பு எங்கே?
ராஜன் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
ஒரே அமைதி.
கருங்கல் சிலை மீண்டும் தேநீர் கொண்டு வந்து வைத்தது.
“தேநீர் குடிங்க...”
அப்போதும் ராஜன் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
தேநீரை எடுத்து நீட்டியபோது, அவன் அதை வாங்கிக் குடித்து விட்டு பார்வையை எடுக்காமல் தொடர்ந்து சொன்னான்:
“பயங்கரமாக பொசுக்குற பாலைவனத்தைக் கடந்து நடந்து வந்ததைப் போல இருக்கு, ஜெயா. வெப்பக் காற்று உடம்புல இருந்த தோலை முழுசா தின்னு முடிச்சிடுச்சு. மனசும் கரிஞ்சு சாம்பலாயிடுச்சு. பாலைவனத்துல ஓடித்திரிஞ்ச தீர்க்கதரிசி யோஹன்னான் சொல்றதுக்கு ஒரு விஷயம் இருந்தது - நெருப்பு கொண்டும் பரிசுத்த ஆத்மா கொண்டும் ஞானஸ்நானம் செய்து வைக்க ஒருவன் வந்து கொண்டிருக்கிறான்னு. அப்படி ஒரு கிறிஸ்துவோட வரவை என்னால அறிவிக்க முடியல...”
ராஜன் அழுவதைப்போல தன் பேச்சை முடித்தான்.
“விஜயலட்சுமியைப் பார்த்தீங்களா?”
“இல்ல... அவளோட சாயம் பூசிய கேட்டுக்குப் பக்கத்துல கொஞ்ச நேரம் நின்னேன். மிகப் பெரிய மாளிகை வீட்டுக்கு முன்னால நின்றிருந்த காரும் ரொம்ப பெரிசுதான்.