வாழ்க்கை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7890
அந்தச் சிறிய நதி, அந்தப் பச்சைப் பசேல் என்றிருக்கும் மலையைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. நதியின் அந்த வளைவில் ஒரு பள்ளம் இருக்கிறது. இரு கரைகளிலும் வளர்ந்திருக்கும் செடிகளும் சுற்றிலும் வளர்ந்திருக்கும் புதர்களும் பெரிய மரங்களும் அந்தத் திருப்பத்திற்கு ஒரு நிரந்தரமான இருட்டை உண்டாக்கி விட்டிருக்கின்றன. அங்கு நிலவிக் கொண்டிருக்கும் ஆழமான அமைதியைக் கிழித்துக்கொண்டு எப்போதாவது ஒரு மீன்கொத்தியோ அல்லது குருவியோ அங்கு பறந்து வரும்.
அந்த ஆற்றின் கரையும், மலைச் சரிவும் சேரும் இடத்தில் ஒரு பெரிய கரும் பாறை இருக்கிறது.
அவ்வப்போது நடக்கும் பல சம்பவங்களுக்கு அமைதியான சாட்சியாக அந்த மலையும் நதியும் பாறையும் அங்கு இருந்து கொண்டிருக்கின்றன.
ஒரு ஏழைக் குடும்பம் அந்த மலைச்சரிவில் கொஞ்சம் இடத்தை வெட்டி, சரிபண்ணி, அங்கு ஒரு சிறிய வீட்டைக் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்திற்குப் புதிய நிலம் என்ற ஒரு பெயர் எப்படியோ கிடைத்து விட்டது.
மெலிந்து, தலைமுடி நரைத்து, குறுகி, கண் பார்வை சரிவரத் தெரியாத ஒரு முரட்டுக் கிழவன், ஒரு கழியைக் கையில் வைத்துக் கொண்டு முனகிக்கொண்டும் சொறிந்து கொண்டும் அந்தக் குடிசையின் வாசற்பகுதியில் எப்போதும் வெயிலில் காய்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பான்.
ஒன்பது வயதுகொண்ட நாராயணியும், ஐந்து வயதான அம்முவும், ஒன்றரை வயதான கோபாலனும் அந்தக் கிழவனுடைய மகனின் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் தந்தை வயநாட்டிலிருக்கும் ஒரு ரப்பர் தோட்டத்தில் வேலைக்காரனாக இருந்தான். அவன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து இன்னும் ஒரு வருடம்கூட ஆகவில்லை. அந்தக் குழந்தைகளின் தாய் சிருதா அவர்களுடன் இருந்தாள். அவர்கள் சிறிது விவசாயம் செய்தும், கயிறு திரித்தும் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஓணப் பண்டிகைக் காலத்தின் ஒரு பூக்காலம். ஆண் குழந்தைகள் பூக்கூடையைக் கழுத்தில் அணிந்துகொண்டு கூட்டத்துடன் சேர்ந்து பூப்பாட்டுப் பாடியவாறு மலையின் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.
“ஒண்ணாம் மலை அம்மா ஒண்ணு அடிக்குது அம்மா
ஒண்ணல்லவோ! மங்கைமார்கள் பாலை நட்டார்கள்
பாலைக்கு இலை வந்தது, பூ வந்தது, காய் வந்தது
பாலைக்குப் பால் கொடு பார்வதியே!”
அர்த்தம் இல்லையென்றாலும் கருணையும் ஆனந்தமும் நிறைந்திருந்த அந்தப் பாடலைக் கேட்டு தெச்சிப் பூங்குலை தலையை ஆட்டியது. அரிப்பூ புன்னகை புரிந்தது. ஒடிச்சு குத்திப் பூ வெட்கப்பட்டு நின்றது.
பனி விழுந்து நனைந்திருந்த கொடிகளிலும், செடிகளின் சிறு கிளைகளிலும் சிறார்களின் கைகள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் விளையாடிக் கொண்டிருந்தன. பூவோ மலர்ந்த பூவோ என்று அவர்கள் உண்டாக்கிய பாட்டுச் சத்தம் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது.
உடனே குன்றின் அந்தப் பக்கத்திலிருந்து இன்னொரு பிள்ளைகள் கூட்டம் போட்டிப் பாட்டுப் பாடியவாறு மேல்நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவன் கேளப்பன் என்ற ஒரு சிறு போக்கிரி.
அந்தக் கூட்டம் இவர்களை நெருங்கியது. உடனே ஒரு சிறுமி எதிர் கூட்டத்தில் பட்டுச் சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்த சுமார் பத்து வயது இருக்கக் கூடிய அழகான முகத்தைக் கொண்ட ஒரு சிறுவனைச் சுட்டிக் காட்டியவாறு புதிய நிலத்தைச் சேர்ந்த நாராயணியிடம் சொன்னாள்: “பாரு... அவன்தான் குன்னத்து அதிகாரியின் மருமகன் பாலகிருஷ்ணன்.”
நாராயணி அவனைக் கூர்ந்து பார்த்தாள். அதிகாரியின் வீட்டிற்குச் சில வேளைகளில் வேலைக்குப் போயிருந்த தன்னுடைய தாயிடமிருந்து, இப்படியொரு சிறுவன் நகரத்திலிருந்து அங்கு வந்திருக்கிறான் என்பதை அவள் இரண்டு நாட்களுக்கு முன்பே அறிந்திருந்தாள்.
இரண்டு குழுக்களும் ஒன்றையொன்று திட்டிக்கொண்டு பாட்டுப் பாடினார்கள். இறுதியில் பூப்பாட்டு வசைபாடும் பாட்டாக மாறியது. இரண்டு பக்கங்களிலும் இருந்தவர்கள் தங்களுக்கிடையே ஒரு கை பார்த்தால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அங்கேயே ஓணச் சண்டை போடத் தீர்மானித்தார்கள்.
இந்தச் சண்டைக்காக கேளப்பன் ஒரு பெரிய காட்டுச் செண்பக மரத்தின் உயரமான கிளையில் ஏறி நின்றதும், கிளை ஒடிந்து அவன் கீழே ஒரு பாறையின்மீது விழுந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன. அத்துடன் எதிர்க் குழுவினரின் ஆரவாரமும் அட்டகாசமும் முழுமையாக நின்றன. இங்கிருந்த கூட்டம் கூக்குரல் எழுப்ப ஆரம்பித்தார்கள்.
வெயில் அதிகமானபோது நிறைந்த கூடைகளுடன் சிறார்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். பாலகிருஷ்ணன் மட்டும் அங்கேயே இருந்தான். அவன் தன்னுடைய வீட்டிற்குச் செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்குவதற்காகக் கால்களை எடுத்து வைத்தபோது ஒரு பூச்சி அவனுடைய காலைக் கடித்துவிட்டது. அவன் தன் கையிலிருந்த பூக்கூடயை வீசி எறிந்துவிட்டு காலைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
‘காத்துல பூத்த இளங்கொடி வெற்றிலை
நாளைக்கு ஒரு கூடை பூ தருவாயா?
தும்பைப்பூவே, பூத்த இரவே
நாளைக்கு ஒரு கூடை பூ தருவாயா?’
இனிமையான அந்தப் பாடலைப் பாடியவாறு ஒரு சிறுமி தன்னுடைய தங்கையை இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த ஒற்றையடிப் பாதை வழியாக வந்துகொண்டிருந்தாள். அவள் பாலகிருஷ்ணனை உற்றுப் பார்த்தாள். பிறகு அவனுடைய காலைப் பார்த்தாள். அவள் தன் தங்கையைக் கீழே வைத்துவிட்டு ஓடிப்போய் கொஞ்சம் மூலிகை இலைகளைப் பறித்துக்கொண்டு வந்தாள். பூச்சி கடித்த இடத்தில் அதைச் சாறு பிழிந்து விட்டாள். பாலகிருஷ்ணனுக்கு எரிச்சல் குறைந்தது மாதிரி இருந்தது.
சிறிது நேரம் சென்றதும் அவன் கேட்டான்: “உன் பேர் என்ன?”
“நாராயணி.”
“நீ எங்கே இருக்கே?”
“அதோ... அங்கே...”
அவள் புதிய நிலத்தைச் சுட்டிக்காட்டினாள். தொடர்ந்து அவள் அவனுடைய கூடையிலிருந்து விழுந்த பூக்களைப் பொறுக்கி எடுத்து அவனிடம் தந்தாள்.
அன்று, அந்த வகையில் அந்த இடத்தில் அவர்கள் இருவருக்குமிடையே நட்பு ஆரம்பமானது.
மறுநாளும் அவர்கள் பூப் பறிப்பதற்காக மலை உச்சிக்குச் சென்றார்கள். அதே ஒற்றையடிப் பாதையில் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். நாராயணி அவனைத் தன் வீட்டிற்கு விளையாடுவதற்கு அழைத்தாள்.
அவர்கள் இருவரும் சொட்டாங்கல் ஆடி விளையாடுவார்கள். இல்லாவிட்டால் ஆற்றின் கரைக்குச் சென்று மணல்வீடு உண்டாக்கவோ, குழி தோண்டி விளையாடவோ செய்வார்கள். சில நேரங்களில் பாலகிருஷ்ணன் காட்டில் கிளிக்கூடு தேடிச் செல்வான். அவனுடன் விறகு பொறுக்குவதற்காக நாராயணியும் புறப்படுவாள். அவன் அவளை ராணி என்று விளையாட்டாக அழைத்தான். அந்த அழைப்பு அதற்குப் பிறகு மாறவே இல்லை.
ஆனால், பாலகிருஷ்ணனுக்கு அந்தக் கிழவனைப் பிடிக்கவில்லை. அவன் அந்தக் கிழவனைப் பார்த்துக் கூறுவான்: “பார்த்தாயா? நத்தை மாதிரி அந்த ஆளு உட்கார்ந்திருக்கிறதை...!”