மதிப்பிற்குரிய தலைவர் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7185
"அந்தக் குழந்தைகள் ஏன் இந்த அளவுக்கு எலும்புக் கூடுகளாக இருக்கு?''
"அது அவர்களின் குற்றம் அல்ல, மகனே.'' தாய் திருத்தினாள்.
ந்கோவாகு எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றார். சீட்டி அடித்துக்கொண்டே ஆடைகளைக் கழற்றி படுக்கையில் எறிந்தார். அவற்றை அவருடைய மனைவி பிறகு துவைத்துச் சரி பண்ணுவாள். ஒரு சாம்பல் நிற பேண்டையும் பாக்கெட்டிலும் காலரிலும் பொன்நிற லைனிங் கொண்ட அடர்த்தியான வண்ணத்திலிருந்த ஒரு லூஸான சட்டையையும் அவர் அணிந்திருந்தார். கண்ணாடியில் அவர் மிகவும் இளைஞனாக காட்சியளித்தார். ஒரு சிகரெட்டில் நெருப்பு பற்றவைத்து சீட்டி அடித்துக் கொண்டே அவர் வெளியே இருட்டில் மறைந்தார்.
நகரத்தின் எல்லையில் இருட்டில் மூழ்கியிருந்த ஒரு தெருவில்தான் "பீக் எ.பு.பார்" இருந்தது. எனினும், பாரில் மின்சாரம் இருந்தது. மிகவும் அழகியான இளம் விதவை மார்கரீட்டாதான் அதன் உரிமையாளர் என்பதுதான் அதற்குக் காரணம். அவளுக்கு உள்ளாடைக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் அழகான மார்பகங்களும் பெரிய கீழ்ப்பகுதியைக் கொண்ட செருப்புகளும் இறுக்கி ஒட்டியிருக்கும் ஆடைகளை அணியும் போது வெளியே தெரியக்கூடிய மறக்க முடியாத நீளமான கால்களும் இருந்தன.
அவள் பிறந்த காலத்திலிருந்து அவளைத் தெரிந்தவர்கள் கூறுவார்கள்- காங்கோவில் சில அமெரிக்கப் பொருட்களை விற்கத் தொடங்கியபோதிலிருந்து அவளுடைய தோல் வெளுக்க ஆரம்பித்தது என்று. மார்கரீட்டா மிகவும் புகழ்பெற்றவளாக இருந்தாள். ஒரே நேரத்தில் எல்லாரையும் தனி ஒருத்தியே திருப்தி படுத்த முடியாது என்பதால், தன்னைப்போலவே அழகிகளாக இருக்கும் உறவுக்கார பெண்களைத் தன்னுடன் அவள் தங்க வைத்தாள். எப்போதாவது ஒரு உயர்ந்த அதிகாரி, பல அதிகாரிகளுடன் "பீக்.எ.பு.பாருக்கு" வருவதாக இருந்தால், மார்கரீட்டாவின் கன்னத்துடன் கன்னத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு நடனமாட அவர்களுக்கு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்துவிட்டு, அவர் மிடுக்காக சுற்றிக் கொண்டிருப்பார். அன்று நள்ளிரவு வேளையில் அவர் மார்கரீட்டாவின் காதில் முணுமுணுத்து விட்டு "அதைச் செய்வதற்காக" சென்றார். அவளுடைய உறவுப் பெண்கள் அந்த வெளிநாட்டு அதிகாரிகளுடன் "அதைச் செய்து கொண்டிருந்தார்கள்."
இந்த சந்தோஷம் கை மாறுவதற்கிடையில் மார்கரீட்டா தனக்குத் தேவையான எல்லாவற்றையும் அடைந்துவிட்டாள். இரண்டு மாத காலம் மின்சார அமைச்சரை தொடர்ந்து கவனித்துக் கொண்டதால், அவளுடைய பாருக்கு மின்சாரம் கிடைத்தது.
நகரத்தின் அந்தப் பகுதிக்கு வருவதற்காக மேரி தெரேசா ஒரு வாடகைக் காரைப் பிடித்தாள். பாருக்குள் நுழைவதற்கு முன்னாள் அவள் சற்று சந்தேகப்பட்டு நின்றாள். முக்கியமாக கிராம ஃபோனுக்குத்தான் மின்சாரம் தேவைப்பட்டது என்றாலும், அறையில் மங்கலான வெளிச்சம் இருந்தது. பல்புகளில் சிவப்பு சாயம் பூசப்பட்டிருந்ததால், ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் நிழல்கள் அசைந்து கொண்டிருப்பதைப்போல தோன்றியது. அறைகளை மூங்கில்களைக் கொண்டு சிறிய சிறிய அறைகளாக ஆக்கியிருந்தார்கள். அந்த அறைகளில் இருந்தவர்கள் தேவையற்ற திருட்டுப் பார்வைகளிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தார்கள். மேரி தெரேசா அழகான ஒரு சிறிய பெஞ்சில் போய் உட்கார்ந்தாள். மார்கரீட்டா அவளை தன்னுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒருத்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். உறவுப் பெண் புதிதாக வந்திருந்த பெண்ணின் அருகில் வந்து, தெரேசாவின் பாதங்களைத் தடவ ஆரம்பித்தாள்.
"நன்றி... எனக்கு இப்போது எதுவும் வேண்டாம். நான் ஒரு மனிதருக்காகக் காத்திருக்கிறேன்.''
பணிப்பெண் பாருக்குள் திரும்பி நடந்தபோது, ஒரு மனிதன் திடீரென்று அவளைத் தாவிப் பிடித்து, இடுப்பில் கையைச் சுற்றி வளைத்து, ரும்பா நடனமாடும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அவளிடம் நிலவிய அமைதி திடீரென்று இல்லாமற் போய், இருவரும் பின்பகுதிகளை ஒட்ட வைத்துக் கொண்டு வேகமாக நடனமாடினார்கள். அவர்களுக்கு ஒருவரோடொருவர் மறைத்து வைப்பதற்கு எதுவுமில்லை. மேரி தெரேசா சிந்தித்தாள். வெளிச்சம் இந்த அளவுக்கு மங்கலாக இருந்தால், அவர்களின் கண்கள் மூடி இருப்பதை நம்மால் பார்க்க முடியாதே! அந்தக் காட்சியில் மேரி தெரேசா நிலைகுலைந்து போனாள்.
நடனம் முடிவடைந்தபோது, அவன் பாருக்குத் திரும்பி வந்த பணிப்பெண்களைப் பார்த்து ஆபாசமாக சிரித்தான். அடுத்த நடனம் ஆரம்பமானபோது, அவன் மேரி தெரேசாவின் அருகில் வந்தான். அவனுடைய கூர்மையான பார்வையும் அழகான கண்களும் அவளை தன்னை மறக்கச் செய்தன.
"நான் தயாராக இல்லை... நன்றி...''
"நான் என்ன அழகாக இல்லையா?''
அவள் தூரத்தில் தலையைச் சாய்த்துப் பார்த்தாள். அந்த நிமிடத்தில் ந்கோவாகு உள்ளே வந்து கொண்டிருந்தார்.
"ஓ... என்னை மன்னித்துவிடுங்கள், தலைவரே. என்னை மன்னித்துவிடுங்க. எனக்குத் தெரியாது.''
ந்கோவாகு எதுவும் கூறவில்லை. அவர் திரும்பி நின்று கொண்டு தனக்குத்தானே கூறிக் கொண்டார்: "அதோ... முட்டாள் பவாலா... யாரிடம் பேசுகிறான் என்பதை நான் கூறுகிறேன்!"
உறவுப் பெண் திரும்பி வந்து சிறிது நேரம் மதிப்பிற்குரிய தலைவரிடம் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள். உலகத்திலேயே மிகவும் எளிமையான ஒரு மனிதர் மதிப்பிற்குரிய தலைவர் ந்கோவாகு. தொழிலாளி வர்க்கத்தில் பிறந்தவர். அதனால் மக்களுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் அவருக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. அவர் மது வேண்டும் என்று கூறினார். உறவுப் பெண்கள் மதுவுடன் வந்தபோது, அவர் பணத்தைக் கொடுப்பதற்கு முன்வந்தார். பாரில் இருந்த மனிதன் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டான் என்று அவள் சொன்னாள்.
ஒரு பச்சான்கா பாடத் தொடங்கியபோது, மேரி தெரேசா நடனம் ஆட ஆரம்பித்தாள். நடனமாடும் இடத்தில் யாருமே இல்லை. பாரில் இருந்த எல்லாரும் அவள் ந்கோவாகுடன் சேர்ந்து நடனம் ஆடுவதைப் பார்த்து புன்னகைத்தார்கள். இசைக்கு ஏற்றபடி இடுப்பையும் கால்களையும் அசைத்து ஒரு பெண் தன்னுடைய இளமையைத் திறந்து காட்டுவதைப் பார்த்து அவர்கள் சத்தம் போட்டுச் சிரித்தார்கள். ஐம்பது வயதுள்ள ஒரு ஆணின் தொப்பை விழுந்த வயிறும் வழுக்கைத் தலையும் சுறுசுறுப்பான காலடி வைப்புகளில் இருந்து அவரை தடுக்காமல் இருந்ததைப் பார்த்து அவர்களுக்கு சுவாரசியம் உண்டானது.
பாரில் இருந்து கொண்டு அவர் தன்னுடைய கருத்தைக் கூற தயங்கவில்லை.
"ஆமாம்... சகோதரிகளே... அதுதான் ஆப்ரிக்கா... நம்முடைய நீக்ரோ இனம்... நம்முடைய கறுப்பு... நம்முடையது ஒரு நடன கலாச்சாரம்.''
ஆனால் நடனமாடிக் கொண்டிருந்த ஜோடிகள் பாரில் பார்வையாளர்களாக இருந்தவர்களை கவனிக்கவே இல்லை. அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றிப் போய்விட்டிருந்தார்கள்.
மூன்று நடனங்களுக்குப் பிறகு ந்கோவாகு புறப்படுவதற்குத் தயாரானார். "இப்பவே போகணுமா?''அவள் கேட்டாள்: "இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கு?''