மதிப்பிற்குரிய தலைவர் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7160
"காலனி ஆதிக்கம் உண்டாக்கி விட்டிருக்கும் பொருளாதார நிலை நம்முடைய சகோதரிகளை அடிமைகளாக ஆக்குகின்றன. உரிமைகள் இழக்கப்பட்ட நம்முடைய சமூகத்தைப் பொதுவாகவும், பெண்களை குறிப்பாகவும் இந்தப் பொருளாதார அவலத்திலிருந்து காப்பாற்றியாக வேண்டிய கடமை இந்த தருணத்தில் ஆண்களின் கைகளில்தான் இருக்கின்றது.'' (கைத் தட்டல்). "நம்முடைய பெண்களுக்கும் சில வேலைகளில் உரிமை இருக்கிறது. கல்வி கற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ள நம்முடையது போன்ற ஒரு சுதந்திர நாட்டில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே செகரட்ரிகளாகவும் விற்பனை செய்யக்கூடிய பெண்களாகவும் வேலை கிடைக்கிறது என்ற விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.'' (கைத்தட்டல்). "சகோதரிகளே, ஏன் இந்தக் கட்டுப்பாடு என்பதை அரசாங்கத்திடமும் நேஷனல் அசெம்ப்ளியிடமும் மனம் திறந்து கேட்பதற்கு நீங்கள் கூட்டத்தின் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் கூற விரும்புகிறேன். மது விடுதிகளிலும் இரவு விடுதிகளிலும் பரிமாறும் பெண்களுக்கான வேலை ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்று தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், ஐரோப்பிய பெண்களை இதிலிருந்து விலக்க வேண்டுமென்றும் சட்டத்தின் எந்த பிரிவில் கூறப்பட்டிருக்கிறது?'' (ஹாலில் இருந்து எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். இடி முழக்கத்தைப் போன்ற கைத்தட்டல் ஒலிபெருக்கியை விழுங்குகிறது). "இந்த வேலைகளின் மூலம் நம்முடைய பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய சம்பளம் வெள்ளைக்காரப் பெண்கள் வாங்கக்கூடிய சம்பளத்திற்கு நிகராக இருக்க வேண்டும்.'' (இடி முழக்கத்தைப் போன்ற கைத்தட்டல்).
"காரணம்.... உம்... உம்.... கூறியதைப்போல... அந்த மனிதர் கூறியதைப்போல... ஆமாம்... லா ஃபொண்டேன்... அது லா ஃபொண்டேன் ஆகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.'' (கைத்தட்டல்).
"நான் கூறியதைப்போல "சமமான வேலைக்கு சமமான சம்பளம்" என்று லா ஃபொண்டேன் கூறியிருக்கிறார். பாரம்பரியத்திற்கு பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்காத தந்தைகள் தங்களுடைய மூடத்தனமான எண்ணங்களை விட்டெறிய வேண்டிய நேரமிது. ஆண்களைப்போலவே பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. அதனால்தான்... சகோதரிகளே, நான் கூறுகிறேன்- இந்த ஆண்களின் கொடுமையிலிருந்து நீங்கள் விடுதலையாக வேண்டியதிருக்கிறது.'' (கைத்தட்டல்).
"கோத்ரா இனத்தைச் சேர்ந்தவர்கள் கோபத்திற்கு ஆளாகி, உலகம் முழுவதும் ஆண்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் தங்களுக்குள் ஒருவரோடொருவர் அடித்துக் கொன்று கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு முன்னால் இந்தக் கூட்டத்தில் நின்று கொண்டு கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள். கோத்ரா இன மக்களின் நன்மைகளை மீட்டெடுப்பதற்கும் பூமியில் அமைதியான சூழ்நிலையைக் கொண்டு வருவதற்கும் பெண்களால் மட்டுமே முடியும்.'' (கைத்தட்டல்).
தலைவர் ந்கோவாகு இப்படித் தொடர்ச்சியாக இருபது நிமிடங்கள் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவை முடித்து விட்டு, அவர் தன்னுடைய வியர்வை அரும்பிய நெற்றியைத் துடைத்துக் கொண்டார். கட்சி அலுவலகத்தின் சொற்பொழிவு அறையில் இருந்த மக்கள் கூட்டம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. ஆண்களும் பெண்களும் பின்பகுதியில் தட்டி ஒருவரையொருவர் பாராட்டி, வாய்விட்டுச் சிரித்து, உரத்த குரலில் கூப்பாடு போட்டார்கள். "தந்தை ந்கோவாகு... தந்தை ந்கோவாகு... அது தந்தை ந்கோவாகுதானே!''
"ஆமாம்... ஆமாம்...'' அறையின் இன்னொரு பகுதியில் பதில் வந்தது. பெண்களில் சிலர் நடனம் ஆடியபோது, தோள்களில் அவர்கள் தொங்கவிட்டிருந்த குழந்தைகள் மதியநேர தூக்கத்திலிருந்து கண்விழித்து குறும்புத்தனங்களை வெளிப்படுத்தின.
பாதுகாப்பு வீரன் தொழில்ரீதியிலான தோலாலான பட்டையைக் கழற்றி எடுத்தான். ந்கோவாகு அதில் மடித்து வைத்திருந்த சொற்பொழிவுக் குறிப்புகளை அவன் வெளியே எடுத்தான். சந்தோஷக் கடலில் மூழ்கிவிட்டிருந்த மக்கள் கூட்டத்தால் அமைதியாக இருக்கவே முடியவில்லை.
இரவு எட்டு மணிக்கு ந்கோவாகு வீட்டுக்குத் திரும்பினார். வீட்டை அடைந்தபோது வேலைக்காரச் சிறுவன் வேகமாக இறங்கிச் சென்று பெட்டியை வாங்கினான். அவர் ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
"புக்கா... புக்கா... வந்து அப்பாவிடம் ஹலோ சொல்லு...''
குழந்தை தன்னுடைய தந்தையின் மடியில் ஏறியது. ந்கோவாகு தன்னுடைய ஏழாவது ஆண் குழந்தையை பெருமையுடன் பார்த்தார்.
"அப்பா, நீங்க எனக்கு அப்போலோ ட்வெல்வ் வாங்கித் தரவில்லை!''
"அது என்ன?''
"அக்பாய்க்கிட்ட ஒண்ணு இருக்கு. அவனுடைய அப்பா வாங்கித் தந்திருக்கிறார்!''
"எமிலின்...'' ந்கோவாகு உரத்த குரலில் கத்தினார்: "எமிலின்...''
"அவள் பள்ளிக்கூடத்திற்காக ஒரு சொற்பொழிவு எழுதிக் கொண்டிருக்கிறாள்.'' சமையலறைக் குள்ளிருந்து அவளுடைய தாய் உரத்த குரலில் சொன்னாள்.
"சொற்பொழிவு எழுதுகிறாளா? கணவனை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை எழுத்து அவளுக்கு கற்றுத் தராது. என் செருப்பை எடுத்துக் கொண்டு வரும்படி அவளிடம் சொல்லு.''
"நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. அந்த அப்பிராணி பெண்கிட்ட இன்னும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்க.''
"சொல்லுடி... நீ எப்போதிருந்து கணவனிடம் எதிர்த்துப் பேச ஆரம்பிச்சே? என் மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை நீ எனக்கு கற்றுத் தரப் போறியா?''
"இங்கே இருக்கு அப்பா.... செருப்பு இங்கே இருக்கு!'' புக்கா சொன்னான்.
"நல்லது மகனே... என்னைப் பற்றி உனக்காவது கவலை இருக்கிறதே! ஆனால், இது கொஞ்சம் அதிகமாயிடுச்சு தெரியுதா? இங்கே உள்ள வேலைகளை நாம... ஆண்களா செய்வது?''
"எமிலின்...''
எமிலின் பரபரப்பாக வெளியே வந்தாள். ""இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கனுமா? உன்னை நான் எத்தனை முறைகள் அழைத்தேன்?''
"ஸாரி அப்பா... நீங்க அழைத்தது என் காதில் விழவில்லை!''
"நீ எங்கே இருந்தே?''
"என் அறையில்...''
"உன் அறையிலா? கனவு கண்டுகொண்டு இருந்திருப்பாய்!''
"இல்லை அப்பா. நான் மேத்ஸ் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தேன்!''
"கனவு காண்பதையும் கணக்கையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. கணக்கு படிக்க வேண்டுமென்றால், மிகுந்த கவனம் இருக்க வேண்டும். ஒரு ஆளுக்கு நல்ல கவனம் இருந்தால், அந்த ஆள் மற்றவர்கள் அழைப்பதைக் கேட்பான். சரி... எனக்கு கொஞ்சம் விஸ்கி கொண்டு வா!''