மதிப்பிற்குரிய தலைவர் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7160
எமிலின் சுவரில் இருந்த அலமாரியை நோக்கி இயந்திரத் தனமாக நடந்தாள். அவள் போர்டிங் பள்ளிக் கூடத்தைப் பற்றி கனவு கண்டாள். வீடுகளை விட்டு விலகி இருக்கும் தோழிகளைப் பற்றி அவளுக்கு பொறாமை உண்டானது. சொந்தக் கால்களில் நிற்பது என்ற விஷயம் எந்த அளவுக்கு இனிமையான ஒன்று! தாய்- தந்தையர் தங்களுடைய நன்மைக்காகத்தான் அவர்கள் ஒவ்வொன்றையும் செய்வதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை. ஓ... புட்டி காலியாக இருக்கிறது!
அலமாரியின் அறைகள் எல்லாவற்றையும் எமிலின் வீணாக ஆராய்ந்து பார்த்தாள்.
"என்னுடைய விஸ்கி என்ன ஆனது?''
"இதில் கொஞ்சம்கூட இல்லையே!''
"என்ன? கொஞ்சம்கூட இல்லையா? ம்ஹா! இரண்டு நாட்களுக்கு தோழிகளுடன் விளையாடுவதற்கு உன்னை நான் விட மாட்டேன்!''
"ஆனால்... அப்பா, இது என்னோட பிரச்சினை இல்லை!''
"புட்டி பாதியாகி விட்டது என்ற விஷயம் தெரிந்த உடனே நீ போயி ஒரு புட்டியை வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும். சரி... அப்படியென்றால் ஒரு பீர் தா!''
அவர் டி.வி.யை நோக்கி நகர்ந்தார். மரியம் மக்கேபா பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய பாடலைப் பொதுவாகவே அவர் ரசிப்பதுண்டு. ஆனால், அந்த சாயங்கால வேளையில் அவள் அவரை சிறிதுகூட கவரவில்லை.
நகரத்தில் நடைபெற்ற அவளுடைய மிகவும் புதிய இசை நிகழ்ச்சியின் ஒலி நாடாவைத்தான் அவர்கள் காட்டிக் கொண்டிருந்தார்கள். வாரத்தில் இரண்டு முறைகளாவது ஒளிபரப்பிக் கொண்டிருப்பதால், அது ந்கோவாகுவிற்கு மனப்பாடமாகி விட்டிருந்தது. டி.வி. தயாரிப்பாளர்கள் விஷயங்கள் கிடைக்காமல், பொதுமக்கள் ஒரு நூறு முறை பார்த்துவிட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும், மீண்டும் தங்களுடைய கையில் இருக்கும் நிகழ்ச்சியையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ந்கோவாகுவிற்கு அதிகமான வெறுப்பு உண்டானது. அவர் நேரத்தைப் பார்த்தார்.
"நாம் எப்போது உணவு சாப்பிடுவது?''
"ஐந்தே நிமிடங்களில்...'' சமையலறைக்குள்ளிருந்து அவருடைய மனைவி உரத்த குரலில் கூறினாள்.
"எனக்குப் பசிக்கிறது!''
"சாதம் வேகவில்லை!''
"எப்போதும் இதே பல்லவிதான். வேண்டிய நேரத்தில், எதுவுமே தயாராவதில்லை!''
மரியம் மக்கேபா "மலைகா" பாடிக் கொண்டிருந்தாள். ந்கோவாகு இசைக்குள் மூழ்கினார். அவருக்கு நல்ல பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பிறகு, அந்த தென் ஆப்ரிக்க பாடகி தன்னுடைய புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றைப் பாடி நடனமாடினாள். அலைகளில் சிக்கிய படகைப்போல அவளுடைய பின் பகுதி அசைந்து கொண்டிருந்தது.
"இரவு உணவு தயாராகி விட்டது.'' அவருடைய மனைவி அழைத்தாள்.
ந்கோவாகு பதில் கூறவில்லை.
"இரவு உணவு... குளிர்ச்சியாகிக் கொண்டிருக்கிறது!''
ந்கோவாகு தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டார். பாடலைக் கேட்கும்போது, யாராவது தொல்லை கொடுப்பது என்பது அவருக்கு விருப்பமற்ற ஒரு விஷயமாக இருந்தது. மரியம் பாடிக் கொண்டிருந்த டி.வி.க்கு எதிரில் அவர் உட்கார்ந்திருந்தார்.
"பிறகு... சாதமும் மாமிசக் கூட்டும்... அதுதானே?''
"இந்த நேரத்தில் சந்தையில் தேர்வு செய்து எடுப்பதற்கு வேறு எதுவுமே இல்லை!''
"வேறெதுவும் இல்லையா? அங்கே மீன் இல்லையா?''
"உணவைப் பற்றி நீங்கள் ஏதாவது கருத்து கூறுவது என்பதை நான் முதன்முறையாக கேட்கிறேன். ஒவ்வொரு நாளும் உணவு வகைகள் மாறிக் கொண்டிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அதற்கு வரையறைகள் இருக்கின்றன. இரவு உணவுக்கு என்ன தேவை என்று நான் காலையில் கேட்டபோது நீங்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு வேகமாக அலுவலகத்திற்குச் சென்று விட்டீர்கள்!''
"அதுதானே இறுதி சாக்கு! உணவைவிட பெரிதாக நான் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன என்பதை நீ புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் வேலை செய்வதற்கு நீ போவது இல்லையே! பணம் கொண்டு வருவது நான் ஒரே ஒரு ஆள்!''
"சந்தோஷத்துடன் நாம் இந்த வேலைகளை மாற்றிக் கொள்வோம்!''
"நான் செய்ய வேண்டியது பெண்களின் வேலைகளை அல்ல. எத்தனையோ பெண்கள் இதேபோல பணத்தையும் ஃபிரிட்ஜையும் கொண்டு வரக்கூடிய ஒரு கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும்!''
"அப்படியா? வாரத்திற்கு நீங்கள் தரும் பணத்தைக் கொண்டு இந்த பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு நான் எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறேன்!''
"உண்மைதான்... பணம் உண்டாக்குவது நீ அல்ல...''
டி.வி.யில் செய்தி வாசிப்பவர்கள் தேசிய செய்திகளை வாசிக்க ஆரம்பித்தார்கள்.
"எல்லாரும் வாயை மூடுங்க... நான் இதைக் கேட்க வேண்டும்!''
"தேசிய இடது சாரி மகளிர் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற மாநாடு இன்று ஆரம்பமானது. அமைப்பு உருவான பிறகு நடைபெறும் அதன் இரண்டாவது மாநாடு இது. ஆப்ரிக்காவின் பக்கத்து நாடுகளிலிருந்து அழைக்கப்பட்டவர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நட்பு நாடுகளின் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்."
ந்கோவாகுவிற்கு தாங்க முடியாத அளவிற்கு கோபம் வந்தது. செய்தி வாசித்த மனிதனை தண்டிப்பதைப் பற்றி நாளை செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சரிடம் பேச வேண்டும். அவன் தன்னுடைய சொற்பொழிவைப் பற்றி குறிப்பாகக்கூட உணர்த்தவில்லை. ந்கோவாகு ப்ளேட்டைத் தள்ளி வைத்தார்.
"எனக்கு அப்படியொன்றும் பசி இல்லை.''
செய்தி வாசிப்பவன் நைஜீரியாவில் நடைபெறும் போரைப் பற்றி சொன்னான். அவர்கள் எதற்காக எப்போதும் போரைப் பற்றிய ஒரே படங்களையே திரும்பத் திரும்ப காட்டிக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே ந்கோவாகு சிந்தித்தார்.
"பெண் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? வீட்டு வேலைகளிலும் சமையலிலும் அவர்கள் உனக்கு உதவியாக இருக்கக் கூடாதா? மார்ஸலின், நீ என்ன சொல்றே?''
"அப்பா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.''
"நீ ஒரு பெண் என்பதை மறந்து விடாதே. ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது வீட்டு வேலைதான்.''
"நீங்க மேலும் கொஞ்சம் தெரிந்து பேசுங்க.''
அவளுடைய தாய் ஞாபகப்படுத்தினாள்.
"மார்ஸலின் பள்ளிக்கூடத்தில் இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் டிப்ளமோ தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள் என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும்.''
"ஒரு டிப்ளமோவால் அவளுடைய கணவனை வீட்டில் இருக்க வைக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? நல்ல உணவு உதவியாக இருக்கும்... ஆமாம்... பிறகு... இன்னும் சில விஷயங்கள்...''
"இன்னும் கொஞ்சம் அறிவோட பேசுங்க.''
"ஓ... அப்பா, பாருங்க...'' புக்கா அழுதுகொண்டே அழைத்தான்.
தொலைக்காட்சியில் பயாஃப்ராவில் உள்ள குழந்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வயிறு வீங்கிய எலும்புக் கூடுகளாகக் காட்சியளித்தார்கள். வீடு மொத்தமும் பேரமைதியாக இருந்தது.