சூரத் காபி கடை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7110
அது நகர்த்தக் கூடியதாக இல்லையே! அதனால் சூரியனின் வெளிச்சம் திரவம் அல்ல, நெருப்பு அல்ல, ஆவியும் அல்ல, திடப் பொருளும் அல்ல... அது- எதுவுமே அல்ல.''
அவன் தனக்குள் விவாதம் செய்தான். எப்போதும் சூரியனையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாலும், இறுதியாக அவன் தன்னுடைய இரண்டு கண்களிலும் பார்க்கும் சக்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விட்டான். அவன் முழுமையாக கண் பார்வை தெரியாத மனிதனாக ஆனவுடன், சூரியன் தோன்றுவதே இல்லை என்ற முழுமையான முடிவிற்கு அவன் வந்துவிட்டான்.
அந்த கண் பார்வை தெரியாத மனிதனுடன், அடிமை ஒருவன் வந்தான். அவன் தன்னுடைய எஜமானனை தென்னை மரத்தின் நிழலில் உட்காரச் செய்துவிட்டு, தரையிலிருந்த ஒரு தேங்காயை எடுத்து, அதை ஒரு இரவு நேர விளக்காக ஆக்குவதில் ஈடுபட்டான். தேங்காய் நாரிலிருந்து திரியைத் திரித்து, தேங்காயிலிருந்து எண்ணெய்யைப் பிழிந்து சிரட்டையில் ஊற்றி, திரியை அதில் முக்கினான்.
அந்த அடிமை உட்கார்ந்து இதைச் செய்து கொண்டிருந்த போது, கண் பார்வையை இழந்த மனிதன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டே அவனிடம் சொன்னான்.
“அடிமையே! சூரியன் ஒன்ற என்று இல்லவே இல்லை என்று நான் உன்னிடம் கூறினேனே, அதுதானே உண்மை? இப்போது எவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதை நீயே பார்க்கிறாய் அல்லவா? எனினும், மக்கள் கூறுகிறார்கள்- சூரியன் என்ற ஒன்று இருக்கிறது என்று. அப்படியென்றால், அது என்ன?''
“சூரியன் என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது.'' அந்த அடிமை. கூறினான்: “அது என்னுடைய வேலையும் இல்லை. ஆனால், வெளிச்சம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இங்கு உங்களுக்காக ஒரு இரவு விளக்கை தயார் பண்ணி இருக்கிறேன். இதன் உதவியைக் கொண்டு உங்களுக்கு நான் சேவை செய்ய முடியும். இந்தக் குடிலில் எது இருந்தாலும், என்னால் இதைக் கொண்டு கண்டு பிடித்துவிட முடியும்.''
தொடர்ந்து அந்த அடிமை தேங்காயை எடுத்து, சொன்னான்:
“இதுதான் என்னுடைய சூரியன்.''
அங்கு... அருகில் நடக்க உதவும் கருவிகளுடன் அமர்ந்திருந்த ஒரு முடமான மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு சிரித்தான்.
“நீ உன்னுடைய வாழ்க்கை முழுவதும் வெளிப்படையாக ஒரு குருடனாக ஆகிவிட்டாய்.'' அவன் கண் பார்வையற்ற மனிதனைப் பார்த்துக் கூறினான்: “சூரியன் என்றால் என்ன என்பது தெரிய வில்லையென்றால், அது என்ன என்று நான் உனக்கு காட்டுகிறேன். சூரியன் என்பது ஒரு நெருப்புப் பந்து. அது தினந்தோறும் காலையில் கடலுக்குள்ளிருந்து உதயமாகி ஒவ்வொரு மாலை நேரத்திலும் நமது தீவில் இருக்கும் மலைகளுக்குக் கீழே மறைந்து போகிறது. நாங்கள் எல்லாருமே அதைப் பார்த்திருக்கிறோம். உனக்கு பார்க்கும் சக்தி இருந்திருந்தால், நீயும் அதைப் பார்த்திருப்பாய்.''
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீனவன் சொன்னான்.
“நீ உன்னுடைய தீவைத் தாண்டி வேறு எங்குமே சென்றதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உனக்கு கால் ஊனமாகிப் போகாமல் இருந்து, நான் ஒரு மீன் பிடிக்கும் படகில் இருப்பதைப் போல நீயும் வெளியே பயணிப்பதாக இருந்தால், உனக்குத் தெரிய வந்திருக்கும்- சூரியன் நம்முடைய தீவில் இருக்கும் மலைகளுக்குப் பின்னால் மறையவில்லை என்று. ஆனால், அது தினமும் காலையில் கடலுக்குள் இருந்து உதயமாகிறது. அதேபோல மீண்டும் ஒரு மாலை நேரத்தில் ஒவ்வொரு இரவிலும் கடலுக்குள் போய் மறைந்துவிடுகிறது. நான் உனக்கு என்ன கூறுகிறேனோ, அது உண்மை. ஏனென்றால், நான் அதை ஒவ்வொரு நாள் காலையிலும் என்னுடைய சொந்தக் கண்களால் பார்க்கிறேன்.''
அப்போது எங்களுடைய குழுவில் இருந்த ஒரு இந்தியர் அவன் பேசிக் கொண்டிருப்பதற்கு இடையில் புகுந்து கூறினார்:
“ஒரு சிந்திக்கக் கூடிய மனிதர் இப்படி முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே என்பதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நெருப்புப் பந்து எப்படி நீருக்குள் அணையாமல் போக முடியும்? சூரியன் என்பது ஒரு நெருப்புப் பந்தே அல்ல. ஒரு ஒரு கடவுள். பெயர் தேவா. அவர் எப்போதும் ஒரு சாரட்டு வண்டியில் "மேரு’’ என்றழைக்கப்படும் பொன்னாலான மலையையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் விஷப் பாம்புகளான ராகுவும்- கேதுவும் தேவாவைத் தாக்கி அவரைச் சாப்பிட்டுவிடும். அந்தச் சமயத்தில் பூமி இருட்டாகிவிடும். கடவுள் திரும்பவும் வரவேண்டும் என்பதற்காக எங்களுடைய துறவிகள் வேண்டிக் கொள்வார்கள். அப்போது கடவுள் திரும்பவும் வந்துவிடுவார். உங்களைப்போன்ற எதுவுமே தெரியாத மனிதர்கள்- தங்களுடைய சொந்தத் தீவைத் தாண்டி வேறு எங்குமே செல்லாதவர்கள்தான் சூரியன் தங்களுடைய நாட்டில் மட்டுமே உதித்துக் கொண்டிருக்கிறது என்று கற்பனை பண்ணிக் கொண்டிருக் கிறார்கள்.''
அப்போது எங்களுடன் அங்கு அமர்ந்திருந்த எகிப்து நாட்டுக் கப்பலின் தலைவர் தன்னுடைய பங்கிற்கு கூறினார்:
“இல்லை...'' அவர் சொன்னார்: “நீங்களும் தவறாகக் கூறுகிறீர்கள். சூரியன் என்பது கடவுளே அல்ல. அது இந்தியாவையும் அதன் பொன்னாலான மலையை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கவில்லை. நான் கருடங்கடல் வழியாக எவ்வளவோ பயணித்திருக்கிறேன். அரேபியாவின் கடற்பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன்... மடகாஸ்கருக்குச் சென்றிருக்கிறேன். பிலிப்பைன்ஸுக்குப் போயிருக்கிறேன். சூரியன் இந்தியாவிற்கு மட்டுமல்ல- முழு பூமிக்கும் வெளிச்சத்தைத் தருகிறது. அது ஒரே ஒரு மலையை மட்டும் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. தூரத்துக் கிழக்கில் அது ஜப்பானின் தீவுகளைத் தாண்டி உதயமாகி தூரத்து... தூரத்து... மேற்கில் இங்கிலாந்தின் தீவுகளையும் தாண்டி மறைகிறது. அதனால்தான் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய நாட்டை "நிப்பான்' என்கிறார்கள். அதற்கு அர்த்தம் "சூரியன் பிறக்கும் இடம்’’ என்பது. எனக்கு இந்த விஷயங்கள் நன்றாகத் தெரியும். ஏனென்றால் நானே எவ்வளவோ விஷயங்களை நேரில் பார்த்திருக்கிறேன். என்னுடைய தாத்தாவிடமிருந்து எவ்வளவோ விஷயங்களைக் கேட்கவும் செய்திருக்கிறேன். அவர் கடலின் இறுதிப் பகுதிக்கே போய் வந்தவர்.''
அதற்கு மேலும் அவர் ஏதாவது பேசிக் கொண்டிருந்திருப்பார். ஆனால், எங்களுடைய கப்பலில் இருந்த ஒரு ஆங்கிலேய மாலுமி இடையில் புகுந்து கூறினார்: