சூரத் காபி கடை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7110
“வேறு எந்த நாடுமே இல்லை.'' அவர் சொன்னார்: “சூரியனின் நகர்வுகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது- இங்கிலாந்தைத் தவிர. இங்கிலாந்தில் இருக்கும் எல்லாருக்கும் தெரிந்திருப்பதைப்போல சூரியன் எங்கும் உதயமாவதில்லை. எந்த இடத்திலும் மறைவது மில்லை. அது எப்போதும் பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த விஷயத்தை நாம் உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். காரணம்- நாமே உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த இடத்திலும் சூரியனுடன் மோதவில்லை. இங்கு எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதேபோல நாம் எங்கு சென்றாலும், சூரியன் காலையில் தன்னுடைய முகத்தைக் காட்டுகிறது. இரவில் தன்னைத் தானே மறைத்துக் கொள்கிறது.''
ஆங்கிலேய மனிதர் ஒரு குச்சியை எடுத்து தரையில் வட்டங்களை வரைந்தார். அதன் மூலம் சூரியன் எப்படி பிரபஞ்சத்தில் நகர்கிறது என்பதையும் உலகத்தை எப்படி சுற்றி வருகிறது என்பதையும் விளக்க முயற்சித்தார். ஆனால், அவரால் அதை தெளிவாக விளக்கிக் கூற முடியவில்லை. கப்பலின் பைலட்டைச் சுட்டிக் காட்டியவாறு அவர் சொன்னார்.
“எனக்குத் தெரிந்ததைவிட அதைப் பற்றி இவருக்கு நன்றாகத் தெரியும். இவரால் அந்த விஷயத்தை தெளிவாக விளக்கிக் கூற முடியும்.''
அறிவாளியான பைலட் தன்னைப் பேசுவதற்கு அழைக்கும் வரை பேச்சுக்கள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இப்போது எல்லாரும் அவரையே பார்த்தார்கள். அவர் சொன்னார்:
“நீங்கள் ஒருவருக்கொருவர் தவறான விஷயங்களைக் கூறி உங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். சூரியன் பூமியைச் சுற்றிச் செல்லவில்லை. ஆனால், பூமிதான் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. போகும்போதே சுற்றிக்கொண்டே செல்லும் அது ஒவ்வொரு இருபத்து நான்கு மணி நேரம் ஆனதும், சூரியனை நோக்கித் திரும்புகிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ், இப்போது நாம் இருக்கும் சுமத்ராவில் மட்டுமல்ல- ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, இன்னும் இருக்கும் எல்லா நிலப் பகுதிகளி லும்... சூரியன் ஒரு குறிப்பட்ட மலைக்காக மட்டும் ஒளி தருவதில்லை. அதேபோல ஒரு குறிப்பிட்ட தீவுக்காகவும் அல்ல... ஒரு கடலுக் காகவும் அல்ல... ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்காக மட்டும் அல்ல.... மற்ற எல்லா கோள்களுக்காகவும்போல நம்முடைய பூமிக்காகவும். நீங்கள் உங்களின் சொந்தக் காலடிகள் பதிந்திருக்கும் பூமியைப் பார்ப்பதற்கு பதிலாக மேலே இருக்கும் பிரபஞ்சத்தைப் பாருங்கள். அப்போது இது உங்களுக்குப் புரியும். அதற்குப் பிறகு சூரியன் உங்களுக்காக உதிக்கிறது என்றோ உங்களின் நாட்டிற்காக மட்டுமே உதயமாகிறது என்றோ இன்னொரு முறை கூறவே மாட்டீர்கள்.''
இவ்வாறு பேசிய உலகத்தின் பெரும் பகுதியைச் சுற்றி வந்திருக்கும் அந்த அறிவாளியான பைலட் மேலே இருக்கும் பிரபஞ்சத்தையே நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இதுதான் நம்பிக்கை பற்றிய கதைகள்.'' அந்த சீனாவைச் சேர்ந்த, கன்ஃபூஸியஸ் மாணவன் தொடர்ந்து சொன்னான்: “ஆணவம்தான் மனிதர்களிடையே தவறுகளையும் புரிதலற்ற தன்மைகளையும் உண்டாக்குகிறது. சூரியனுக்கு என்ன பொருந்து கிறதோ, அது கடவுளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு தனிப்பட்ட கடவுள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறான். குறைந்தபட்சம், ஒரு தனிக் கடவுள் தன்னுடைய நாட்டிற்காவது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். உலகத்தில் இல்லாத ஒரு கடவுளை தன்னுடைய ஆலயங்களுக்குள் மட்டும் சொந்தமாக வைத்திருக்க ஒவ்வொரு நாடும் விரும்புகிறது.
ஒரே நம்பிக்கை, ஒரே மதம் என்று அனைத்து மக்களையும் ஒன்றுசேர்த்து கடவுள் தானே கட்டிய ஆலயத்திற்கு இணையாக வேறு எந்த ஆலயத்தையும் ஒப்பிட முடியுமா?
கடவுளின் சொந்த உலகமான அந்த ஆலயத்தை முன்மாதிரியாக வைத்துதான் எல்லா மனித ஆலயங்களும் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் அதற்கென்று இருக்கக் கூடிய அமைப்புகள், அலங்கரிக்கப்பட்ட மேற்கூரை, அதன் விளக்குகள், அதன் ஓவியங்கள் அல்லது சிற்பங்கள், அதன் எழுத்துகள், சட்டம் பற்றிய நூல்கள், அதன் படையல்கள், அதன் பிரார்த்தனை செய்யும் இடங்கள், அதன் துறவிகள்... ஆனால் எந்த ஆலயத்தில் கடலுக்கு ஒத்த அழகு இருக்கிறது? பிரபஞ்சங்களுக்கு நிகரான மேற்கூரை இருக்கிறது? சூரியன், நிலவு, நட்சத்திரங்களுக்கு நிகரான விளக்குகள் இருக்கின்றன? அல்லது வாழ்வதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனிதர்களுக்கு நிகராக ஒப்பிட்டுக் கூறுவதற்கு யார் இருக்கிறார்கள்? மனிதர்கள் சந்தோஷ மாக இருக்க வேண்டும் என்பதற்காக கடவுள் பொழியக்கூடிய ஆசீர்வாதங்ளை எளிதாகத் தெரிந்துகொள்கிற மாதிரி- கடவுளின் கருணை யைக் காட்டும் ஆதாரங்களுக்கு நிகராக வேறெதுவும் இருக்கின்றனவா? ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எழுதப் பட்டிருப்பதற்கு நிகரான- தெளிவான சட்டம் பற்றிய நூல் எங்கு இருக்கிறது?
தன்னலமே இல்லாமல் ஆணும் பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பிற்கு நிகரான தியாகங்களை எங்கே பார்க்க முடியும்? கடவுளே ஏற்றுக்கொள்ளக்கூடிய தியாகங்களைச் செய்யும் நல்ல மனிதனின் இதயத்திற்கு நிகராக வேறு எந்த ஆலயத்தை ஒப்பிட்டுக் கூற முடியும்?
ஒரு மனிதனின் கடவுளைப் பற்றிய கற்பனை எந்த அளவிற்கு உயர்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவனுக்கு கடவுளைப் பற்றி நன்கு தெரியும். அவன் எந்த அளவிற்கு கடவுளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறானோ, அந்த அளவிற்கு அவன் கடவுளை நெருங்கிவர முடியும். கடவுளுடைய நல்ல செயல்களை, அவருடைய கருணையை, அவர் மனிதர்கள்மீது கொண்டிருக்கும் அன்பை அவன் பிரதிபலிக்க முடியும்.
அதனால், உலகத்தையே வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் சூரியனின் முழு ஒளியையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதன், அந்த விளக்கின் ஒரு கீற்றை தான் வழிபடும் சிலையில் பார்க்கும் மூடத்தனமான மனிதனைக் குறை சொல்லவோ ஒதுக்கவோ கூடாது. சொல்லப்போனால்- கண் பார்வை இல்லாத, சூரியனைப் பார்க்க முடியாத, நம்பிக்கையற்ற மனிதனைக்கூட இழிவாக எண்ணக்கூடாது.''
இவ்வாறு சீனாவைச் சேர்ந்த கன்ஃபூஸியஸ் மாணவன் பேசினான். அந்த காபி கடையில் அமர்ந்திருந்த எல்லாரும் மிகவும் அமைதியாக இருந்தார்கள். யாருடைய நம்பிக்கை உயர்ந்தது என்று அவர்கள் அதற்குமேல் விவாதம் செய்து சண்டை போடவே இல்லை.