சூரத் காபி கடை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7110
“ஆறுதல் என்பது உங்களின் மதத்தில்தான் இருக்கிறது என்று நீங்கள் எப்படிக் கூறலாம்? வேத நூலில் கிறிஸ்து கூறியபடி மனதாலும் உண்மையாலும் யார் கடவுளுக்கு சேவை செய்கிறார்களோ, அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள்.''
தொடர்ந்து காபி கடையில் அமர்ந்து குழாய் மூலம் புகைத்துக் கொண்டிருந்த சூரத்தில் இருக்கும் சுங்க அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் துருக்கியைச் சேர்ந்த ஒரு அதிகாரி உயர்வு மனப்பான்மையுடன் அந்த இரண்டு கிறிஸ்துவர்களின் பக்கமும் திரும்பினார்.
“உங்களின் உரோம மதத்தின்மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண்.'' அவர் சொன்னார்:
“உண்மையான நம்பிக்கையால் ஆயிரத்து இருநுறு வருடங்களுக்கு முன்பே அதையெல்லாம் தாண்டி வந்தாகிவிட்டது. அதாவது முஹம்மதுமீது கொண்ட நம்பிக்கையால்! உங்களால் முடியாது- அதே நேரத்தில் முஹம்மது மீது கொண்ட அந்த உண்மையான நம்பிக்கை ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்- இன்னும் சொல்லப்போனால் மாறிவிட்டிருக்கும் சீனாவிலும்கூட- எப்படி வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கடவுள் யூதர்களை வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்று உங்களுக்கு நீங்களே கூறிக் கொண்டீர்கள். அதற்கு ஆதாரமாக- யூதர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள் என்றும் அவர்களுடைய நம்பிக்கை பரவவில்லை என்றும் இருக்கக் கூடிய உண்மையைக் கூறினீர்கள். அப்படியென்றால், முஹம்ம தனிஸம் என்ற உண்மைதான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும், அது தூர இடங்களிலும்கூட பரவிக் கொண்டிருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ளுங்கள். கடவுளின் சமீபத்திய தூதரான முஹம்மதுவைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள். அவர்களைத் தவிர, வேறு யாருமே காப்பாற்றப்பட மாட்டார்கள். அவர்களில் அலியைப் பின்பற்றுபவர்கள் அல்ல- உமரைப் பின்பற்றுபவர்கள்தான் காப்பாற்றப்படுவார்கள். அலியைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள்.''
அதற்கு அலியின் பிரிவைச் சேர்ந்த பாரசீக ஆன்மிகவாதி பதில் கூற விரும்பினார். அதற்குள் அங்கிருந்த பல்வேறு நம்பிக்கை களையும் கொள்கைகளையும் கொண்ட வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கிடையே ஒரு மிகப்பெரிய சண்டை உண்டாகி விட்டிருந்தது. அபிஸினியன் கிறிஸ்துவர்கள், திபெத்திலிருந்து வந்திருந்த லாமாக்கள், இஸ்மாயிலைப் பின்பற்றுபவர்கள், நெருப்பை வழிபடுபவர்கள் என்று பலரும் அங்கு இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் கடவுளின் இயல்பைப் பற்றியும் அவரை எப்படி வழிபடுவது என்பதைப் பற்றியும் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய நாட்டில் மட்டும்தான் உண்மையான கடவுள் இருக்கிறார் என்றும், அங்கு மட்டுமே ஒழுங்கான முறையில் அவர் வழிபடப்படுகிறார் என்றும் கூறினார்கள்.
சீனாவைச் சேர்ந்த ஒரு கன்ஃபூஸியஸ் மாணவனைத் தவிர, அங்கிருந்த ஒவ்வொருவரும் விவாதம் செய்வதும் உரத்த குரலில் சத்தம் போடுவதுமாக இருந்தார்கள். அந்த மாணவன் மட்டும் அந்த காபி கடையில் ஒரு மூலையில் அந்த சண்டையில் பங்கே பெறாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அங்கு உட்கார்ந்து தேநீரைப் பருகிக் கொண்டே அவன் அங்கிருந்த மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் எதுவும் பேசவில்லை.
அங்கு அமர்ந்திருந்த அவனை கவனித்த துருக்கி நாட்டைச் சேர்ந்த மனிதர் அவனிடம் கூறினார்.
“நான் கூறியதைப் பற்றிய உன் முடிவைச் சொல், என் இனிய சீன நாட்டைச் சேர்ந்த நண்பரே! நீங்கள் அமைதியாக இருங்க. அதே நேரத்தில் நீங்கள் வாய் திறந்து பேசினால், என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்வேன். உதவி தேடி என்னைத் தேடி வரும் உங்கள் நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் என்னிடம் கூறுவார்கள்- சீனாவில் பல மதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், சீனாக்காரர்களான நீங்கள் முஹம்மதனிஸம்தான் மற்ற எல்லா மதங்களையும்விட சிறந்தது என்று ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றும், அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்றும். என் வார்த்தைகள் உண்மையா என்பதைப் பற்றிய உங்களின் முடிவைக் கூறுங்கள். உண்மையான கடவுளைப் பற்றியும், அவருடைய தூதர்களைப் பற்றியும் உள்ள உங்களின் கருத்தை எங்களிடம் கூறுங்கள்.''
“உண்மைதான்...'' மற்றவர்கள் சீனாவைச் சேர்ந்த மாணவன் பக்கம் திரும்பினார்கள்: “இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்கிறோம்.''
கன்ஃபூஸியஸ் மாணவனான அந்த சீனாவைச் சேர்ந்தவன் தன் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் சிந்தித்தான். தொடர்ந்து அவன் கண்களை மீண்டும் திறந்து, தன் கைகளை தான் அணிந்திருந்த ஆடையின் அகலமான கழுத்துப் பகுதிகளில் இருந்து எடுத்து, நெஞ்சின் மீது மடித்து வைத்துக்கொண்டு, கீழ்க்கண்ட வாறு மிகவும் அமைதியான, தாழ்ந்த குரலில் பேசினான்.
“அய்யாமார்களே, மனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதைத் தடுப்பதே முக்கியமாக ஆணவம்தான். நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், நான் உங்களுக்கு ஒரு கதையைக் கூறுகிறேன். இந்தக் கதை ஒரு உதாரணத்துடன் உங்களுக்கு விளக்கிக் கூறும்.
நான் உலகத்தையே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலேயர் களின் நீராவிப் படகில் சீனாவிலிருந்து வந்தேன். நாங்கள் நல்ல நீருக்காக படகை, சுமத்ரா தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் நிறுத்தினோம் அது மதிய நேரம். எங்களில் சிலர் கடற்கரையில் இருந்த தென்னை மரங்களுக்கு அடியில் உட்கார்ந்திருந்தார்கள். அது ஒரு சிறிய கிராமத்திற்கு மிகவும் அருகில் இருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதர்களும் அங்கு இருந்தோம்.
நாங்கள் அப்படி உட்கார்ந்திருந்தபோது, கண் பார்வை தெரியாத ஒருவன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். சூரியனையே மிகவும் நீண்ட நேரமாகவும் கூர்ந்து கூர்ந்தும் பார்த்துக் கொண்டிருந்த காரணத்தால் அவனுக்கு காணும் சக்தி இல்லாமல் போய்விட்டிருக்கிறது என்பதை பின்னர் நாங்கள் தெரிந்து கொண்டோம். சூரியனிடமிருந்து வெளிச்சம் வருகிறதே... அந்த வெளிச்சத்தைத் தரும் சூரியன் என்றால் என்ன என்பதை அவன் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறான்.
இந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு அவன் நீண்ட நேரத்தைச் செலவிட்டிருக்கிறான். சூரியனையே தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது...
ஆனால், இறுதியாக விளைந்தது- சூரியனின் வெளிச்சம் பட்டுப்பட்டு அவனுடைய கண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டன. அவன் குருடனாகி விட்டான்.
தொடர்ந்து அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: "சூரியனின் வெளிச்சம் ஒரு திரவப் பொருள் அல்ல. அது திரவப் பொருளாக இருந்தால், அதை ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்குள் ஊற்ற முடியும். அது அசையக் கூடிய பொருளாக இருக்கும்- நீரைப்போல, காற்றைப்போல. அது நெருப்பாகவும் இருக்க முடியாது. நெருப்பாக இருந்தால், அதை நீர் அணைத்து விடும். ஆவியை ஒளி ஏற்றக் கூடிய வெளிச்சமும் இல்லை. அதைத் தான் கண்களால் பார்க்க முடிகிறதே? அது திடப் பொருளும் இல்லை.