செகண்ட் ஹேண்ட் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7429
"சாரதா, உங்களுக்கு என்னைப் பற்றி ஒண்ணும் தெரியாது. அதே மாதிரி உங்களையும் எனக்குத் தெரியாது. இந்தப் பிரபஞ்சம் மிகமிகப் பெரியது. நேத்து ராத்திரிதான் நாம ஒருவரையொருவர் பார்த்திருக்கோம். சாரதா... உங்களுக்கு அம்மா, அப்பா இருக்காங்க. வீடும் இருக்கு. ஆனா, போறதுக்கு ஒரு இடமும் இல்லைன்னு நீங்க சொல்றீங்க. அதற்கான காரணம் என்னன்னு நான் விசாரிக்க விரும்பல. உங்களைப் பற்றி இனியும் தகவல் ஏதாவது வேணும்னு நான் கேட்கல. சாரதா.. நீங்க என் கூடவே எப்போதும் இருக்கணும்னு நான் கேட்டுக்குறேன்.''
சிறிது நேர அமைதி. சாரதா அதைக் கலைத்தாள்:
"நான் எப்படித் தங்குறது?''
கோபிநாதன் மகிழ்ச்சியான குரலில் சொன்னார்:
"என்னோட மனைவியா. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. இந்த நிமிடத்திலேயே உங்களை என்னோட மனைவியா ஏத்துக்கிறதுக்கு நான் தயாரா இருக்கேன்.''
"திருமணம்...!'' இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் அதிர்ச்சி அடைந்தாள். அவர் சொன்னதைத் தான் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மாதிரி மீண்டும் கேட்டாள்:
"திருமணம்...?''
"ஆமா... சாரதா, உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. நான் உங்களை விரும்புறேன்.''
கொஞ்சம்கூட பதற்றமே இல்லாமல் அவள் கோபிநாதனின் கண்களையே உற்றுப் பார்த்தாள்.
"நீங்க நல்ல மனிதர்.'' வருத்தம் கலந்த குரலில் அவள் சொன்னாள்: "உங்களோட வாழ்க்கையில் பங்குபெற எந்தக் காலத்திலும் தகுதியே இல்லாத ஒரு அசுத்தமான பெண் நான்.''
"அதைப் பற்றி பிரச்சினை இல்ல... நானும் அப்படி ஒண்ணும் பெரிய மகாத்மா இல்ல...''
"அதற்காக நான் உங்களை ஏமாற்ற விரும்பல...''
"இதுல ஏமாத்துறதுக்கு என்ன இருக்கு?''
"என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியல!''
இப்போது பதிலுக்கு அவர் ஏதாவது சொல்லியாக வேண்டும். தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார். தத்துவ ஞானம் நிறைந்த ஒரு கம்பீரமான சொற்பொழிவு அது.
"ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாத இரண்டு வெவ்வேறு படைப்புகள். ஒருவர் இதயத்திற்குள் இன்னொருவர் எப்படி எட்டிப் பார்க்க முடியும்? மனித உடம்பே ஒரு பெரிய கற்கோட்டை மாதிரிதானே! அதற்குள் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஆத்மாவைப் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது. இருந்தாலும் நான் கண்களை ஆத்மாவோட வாசல் கதவுகள்னு தீர்க்கமா நம்புறேன். அந்த வகையில் நான் சொல்ல வர்றது என்னன்னா... சாரதா, உங்களோட கண்கள் வழியாக உங்களோட சுத்தமான ஆத்மாவை என்னால பார்க்க முடியுது. அதை நான் என்னை நேசிப்பதைவிட அதிகமா நேசிக்கிறேன்.''
அவ்வளவுதான்-
சாரதா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். "நான் ஒரு அசிங்கமான பெண்.''
அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் கோபிநாதன்.
"சாரதா, நீங்க எப்படி அசிங்கமான பெண்ணுன்னு உங்களைச் சொல்றீங்க? உங்க உடம்புல அழுக்கு ஏதாவது பட்டிருக்கா என்ன?''
அவரின் கண்களையே உற்றுப் பார்த்தாள் சாரதா. பிறகு அவள் சொன்னாள்:
"இந்த உலகத்துல எனக்குன்னு இருக்க ஒரு இடமும் இல்ல. இதுதான் உண்மை. நீங்க எனக்கு எல்லாம் தரத் தயாரா இருக்குறதா சொல்றீங்க. நாம ரெண்டு பேரும் பார்த்துப் பேசியதே சில மணி நேரங்கள்தான். இந்தக் குறுகிய நேரத்துல நீங்க என்னை விரும்புறதா சொல்றீங்க. என்னைத் திருமணம் செய்யப் போறதாகவும் சொல்றீங்க...''
"சொல்றது மட்டுமல்ல... உடனே செய்து காட்டவும் தயாரா இருக்கேன். குறுகிய நேரம்னு சொல்றீங்க.... வாழ்க்கை இருப்பதே குறுகிய நேரத்துக்குத்தானே! திருமணத்தைப் பற்றி மணிக்கணக்கா சிந்திச்சிக்கிட்டு இருக்கிறதுக்கும் யோசனை பண்றதுக்கும் என்ன இருக்கு?''
"இருந்தாலும்...''
"என்ன இருந்தாலும்?''
"என்னோட கடந்த காலத்தைப் பற்றி...?''
"அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குக் கூடத்தான் கடந்த காலம் இருக்கு. அங்கே பல பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யுது. நாம ரெண்டு பேருமே கடந்த காலத்தை மறந்திட வேண்டியதுதான். நமக்கு இப்போ இருக்குறது நிகழ்காலம்தான். நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கிற இந்தக் காலத்துல ஒருவரையொருவர் புரிஞ்சிக்கிட்டு, அன்பு
செலுத்தி, நம்பிக்கையுடன் வாழ்றது எப்படின்னுதான் இப்போ நாம பார்க்கணும்.''
"உங்களுக்கு ஒண்ணுமே தெரியல!'' அவள் ஏதோ சொல்ல முற்பட்டாள். வார்த்தைகள் வெளியே வரவில்லை. அடுத்த நிமிடம் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீர் விட்டவாறு அவள் சொன்னாள்: "நான் ஆஸ்பத்திரியில ஒரு குழந்தையைப் பெற்றேன்...''
சில நிமிட மவுனத்திற்குப் பிறகு கோபிநாதன் கேட்டார்:
"இப்போ அந்தக் குழந்தை எங்கே?''
"அது செத்துப் போயிடுச்சு!''
"அப்போ உங்களோட கணவர்?''
"எனக்குக் கல்யாணமே ஆகல!''
"குழந்தையோட தகப்பன்?''
"என்னோட ஒரு நண்பன்!''
"இப்போ அந்த ஆள் எங்கே இருக்கார்?'
"ஹானர்ஸ் படிச்சிக்கிட்டு இருக்கார்.''
"அதுனால?''
"அவரோட எதிர்காலத்தை அவர் பார்க்கணுமாம். என்கிட்ட சொல்லிட்டாரு!''
"என்ன எதிர்காலம்?''
"அவர் ஒரு கவிஞர். சில புத்தகங்கள்கூட எழுதியிருக்காரு. அவரோட தேர்வு போன வாரம் ஆரம்பிச்சது. தேர்வுல பாஸ் ஆயிட்டா, அதே கல்லுரியில வேலை அவருக்குக் கிடைக்கும்.''
"கவிஞரோட பேரு?''
சாரதா அந்த ஆளின் பெயரைச் சொன்னாள்:
"...''
"அந்த இலட்சியவாதி...''
"ஆமா...'' சாரதா தொடர்ந்தாள்: "நான் அவரோட கவிதைகளைப் படிச்சிருக்கேன். இந்த நிலைமையில ஒருநாள் நான் தங்கி இருந்த ஹாஸ்டலோட எதிர்ப்பக்கம் இருந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தார் அவர். அவர் எழுதிய ஒரு புத்தகத்தைப் பற்றி சில தகவல்களை அவர்கிட்ட நான் கேட்டேன். இப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் உண்டானது. அதுவே நாளடைவில் காதலா மாறிச்சு. காதல்... எல்லையைக் கடந்த காதல்... தெய்வீகக் காதல்... நாங்கள் ஒருவருக்கொருவர் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கோம். அவர் ஒரு மாதிரியான ஆள்னு என்னோட தோழிகள் பலரும் சொன்னாங்க. ஆனா, அவரோட கவிதைகள் ஒவ்வொண்ணும் உண்மைக் காதலின் புனிதத் தன்மையைப் பறைசாற்றக் கூடியவை ஆயிற்றே!
நான் அவரை முழுமையா நம்பினேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பல சத்தியங்கள் செய்தோம். நிலவு வானத்துல இருக்கிற நேரத்துல... இரவு நேரங்களில்... அவர் ஹாஸ்டலோட சுவரைத் தாண்டிக் குதிச்சு உள்ளே வருவார். தோட்டத்தில் இருந்த மாமரத்துக்குக் கீழே வச்சு...
நான் எல்லாத்தையும் யாருக்கும் தெரியாமல் மறைச்சு வச்சேன். என்னோட தோழிகள் என்னைக் குற்றம் சொன்னாங்க. நான் என் வீட்டுக்குப் போனேன். எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சு.
வீட்டைவிட்டு வெளியேறினேன். யாருமே வேண்டாம்- எதுவுமே வேண்டாம்னு கிளம்பிட்டேன்.