செகண்ட் ஹேண்ட்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7429
முடியை அவிழ்த்துப்போட்டு, கண்கள் சிவக்க சாரதா பயங்கர கோபத்துடன் நின்று கொண்டிருக்கும் கோலத்தைப் பார்த்த பத்திரிகை முதலாளி கோபிநாதன் தாழ்ந்த குரலில் சொன்னார்:
"சாரதா... நாளைக்குப் பத்திரிகை வெளிவர்ற நாள்னு உனக்குத் தெரியாதா? இன்னைக்கு ராத்திரி எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு. சாப்பாடு ஏதாவது இருந்தா கொடு...''
"சாப்பாடு...'' சாரதா கோபத்தில் அலறினாள். "நான் ஒண்ணுமே தயாரிக்கல. புரியுதா? வேணும்னா என்னையே சாப்பிட்டுருங்க. எனக்கு இந்த வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!''
அவள் சொன்னது ஒருவிதத்தில் சரிதான். சாரதாவிற்கு கோபிநாதனை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. அவள் அவர்மீது எந்தக் காலத்திலும் காதல் கொண்டது இல்லை. "என்னோட இதயத்துல காதல்னு ஒண்ணு இல்லவே இல்ல. என்னால யாரையும் காதலிக்கவும் முடியாது” என்றுதான் திருமணத்திற்கு முன்பே சாரதா சொன்னாள். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிமிடம் வரை சாரதாவுக்குப் பிடிக்காத மாதிரி- அவள் முகத்தைச் சுழிக்கிற மாதிரியான ஒரு காரியத்தை கோபிநாதன் செய்ததே இல்லை என்பதே உண்மை. அவளை "அன்பே...” என்று பாசத்துடன் அழைக்கவோ, முத்தம் கொடுக்கவோ, தொடவோகூட அவர் செய்ததில்லை.
கோபிநாதன் கேட்டார்:
"நீ இப்படி முணுமுணுத்து- கோபப்பட்டு ரொம்ப நாளாச்சே! சாரதா, உனக்குப் பிடிக்காதது மாதிரி நான் ஏதாவது பண்ணிட்டேனா என்ன?''
"நீங்க ஏன் என்னைக் கல்யாணம் பண்ணினீங்க?'' தன் பெரிய மார்புப் பகுதியை முன் பக்கமாய்த் தள்ளிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றவாறு ஒய்யாரமாக அவள் கேட்டாள். அவள் அப்படிக் கேட்டதும், உண்மையிலேயே ஒரு நிமிடம் கோபிநாதன் நடுங்கித்தான் போனார். ஒரு மனைவி தன் கணவனிடம், "ஏன் என்னைத் திருமணம் செஞ்சீங்க?” என்று கேட்டால், அதற்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும்? கோபிநாதன் ஒன்றுமே பதில் கூறாமல் வெறுமனே ஜன்னல் வழியே இருண்டு கிடந்த தெருவையே வெறித்துப் பார்த்தார். வேகமாக வீசிக் கொண்டிருந்த காற்று சிறிது நேரத்தில் மழைத் துளிகளை அறைக்குள் விழவைத்துக் கொண்டிருந்தது.
"தண்ணி உள்ளே விழுறது தெரியலியா? நீங்க நனையறீங்களேன்றதுக்காக நான் இதைச் சொல்லல. அறை முழுவதும் மழை நீராயிடும்.'' சாரதா சொன்னாள்.
ஜன்னலை இழுத்து மூடிவிட்டு கோபிநாதன் சாரதாவுக்கு அருகில் போய் நின்றார். அவளின் கண்களில் இருந்து வழிந்த நீரில் அறையில் இருந்த மின்விளக்கு பிரதிபலித்தது.
"எனக்கு சாகணும்போல இருக்கு.'' அவள் நெஞ்சில் அடித்தவாறு சொன்னாள்.
கோபிநாதன் அவளின் கைகளைப் பிடித்தார்.
"என்னைத் தொடாதீங்க. நான்தான் தொடக் கூடாத பொருளாச்சே!'' அவள் அலறினாள்.
கோபிநாதன் அவளின் வாயைக் கையால் மூட முற்பட்டார்.
"நான் சாகப்போறேன்.'' அவள் சுவரில் தன் தலையை மோதினாள். தன் புடவைத் தலைப்பைக் கையில் எடுத்தாள்.
"இந்த வெறுப்படைஞ்சுபோன வாழ்க்கை எனக்குத் தேவையே இல்ல.'' கையில் இருந்த வளையல்களை உடைத்தாள். உடைந்த வளையல்களை அறைக்குள் வீசி எறிந்தாள். பைத்தியம் பிடித்ததைப் போல அடுத்த அறைக்குள் ஓடினாள். படுக்கையில் விழுந்து தேம்பித் தேம்பி அழுதாள்.
கோபிநாதன் என்ன செய்வது என்று புரியாமல் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். சாரதா இப்படி நடந்து கொள்வதற்குக் காரணம் என்ன? அப்படி அவள் நடக்கிற அளவிற்கு கோபிநாதன் தவறுதலாக ஒன்றும் நடக்கவில்லை. பெண் என்பவளே ஒரு வினோதமான படைப்புதான் என்று மனதிற்குள் நினைத்தவாறு காற்றின் இரைச்சலையும் மழையின் ஆரவாரத்தையும் காதுகொடுத்துக் கேட்டவாறு அவர் வெறுமனே அமர்ந்திருந்தார்.
சாரதாவை கோபிநாதன் முதன்முறையாகப் பார்த்தது, அவர் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்திருந்த காலகட்டத்தில். உஷ்ணத்தில் சூடேறிப் போன பாலைவன மணலில் நடப்பது மாதிரி பலவித கஷ்டங்களையும் வேதனைகளையும் அவர் அனுபவித்துக் கொண்டிருந்த நேரமது. அவரின் எலும்பும் நரம்பும் சதையும் வேதனையால் துடித்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒன்றை அவை தேடிக் கொண்டிருந்தன. குளிர்ச்சியான நீர் நிறைந்த பொய்கைதான் பெண் என்பவள் என்று அவர் மனதில் தோன்றிக் கொண்டிருந்த காலம் அது. பெண்ணைப் பார்ப்பது என்பது அவரின் கண்களுக்கு ஒரு குளிர்ச்சியான விஷயமாக இருந்தது. பெண்ணொருத்தியை இறுக மார்போடு சேர்த்துப் பிடித்து அணைக்க வேண்டும், அவளுக்கு ஆசை தீர முத்தம் தர வேண்டும், ஆயிரமாயிரம் அன்பான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் மனப்பூர்வமாக
ஆசைப்பட்டார் அவர். ஆனால், கட்டிப்பிடிக்கவும் முத்தம் தரவும் ஆசைதீரப் பேசவும் யாராவது இருந்தால்தானே!
அப்போதுதான் அவரின் வாழ்க்கையில் சாரதா வந்து சேர்கிறாள். அதுவும் மழையும் காற்றும் நிறைந்த ஒரு இரவுப் பொழுதில்! கோபிநாதன் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறார். அப்போது பூட்டு போட்டுப் பூட்டப்பட்டிருந்த வாசல் கதவு அருகில் சுவரோடு சேர்ந்து யாரோ நிற்பது தெரிகிறது. கோபிநாதன் அருகில் சென்று மின் விளக்கைப் போட்டார். நிற்பது ஒரு பெண். அவள்தான் சாரதா. அவள் பெயர் சாரதா என்று அப்போது கோபிநாதனுக்குத் தெரியாது. கோபிநாதன் கேட்ட கேள்விகளுக்கு அவள் முதலில் சரியாக பதில் சொல்லவில்லை. காற்றிலும் மழையிலும் நின்று நடுங்கி கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை உள்ளே வரும்படி அழைத்தார் கோபிநாதன்.
"உங்களுக்கு குடை வேணுமா? இல்ல... போறதுக்கு ஏதாவது வண்டி வேணுமா?'' கோபிநாதன் கேட்டார்.
அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.
"நீங்க அங்கேயே நின்னுக்கிட்டிருந்தா எப்படி? உள்ளே வந்து உட்காருங்க...''
அவள் கதவருகில் வந்து நின்றாள். கையில் ஒரு சிறிய சூட்கேஸ் இருந்தது. அவளின் கண்கள் கலங்கியிருந்தன. அப்போதும் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. கட்டியிருந்த ஆடை நனைந்து உடம்போடு ஒட்டிப்போய் இருந்தது. கருப்பு பார்டர் போட்ட வெள்ளைப் புடவையும் கருப்பு புள்ளிகள் போட்ட வெள்ளை ப்ளவுஸும் அவள் அணிந்திருந்தாள். புலியைப் பார்க்கும் பசுவைப்போல அவள் கோபிநாதனைப் பார்த்தாள்.
கோபிநாதன் சொன்னார்:
"பயப்படாதீங்க. உள்ளே வந்து உட்காருங்க!''
அவள் உள்ளே வந்தாள். கோபிநாதன் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டார்.
"நீங்க எங்கே போகணும்?''
அவள் பதில் பேசவில்லை.
"நீங்க உள்ளே இருக்குற அறைக்குள் போங்க. போட்டிருக்கிற ஆடை முழுசா நனைஞ்சிருக்கு. ஆடைகளை மாற்றிக்கோங்க. இங்கே நான் மட்டும்தான் இருக்கேன். நீங்க எதைப்பற்றியும் பயப்பட வேண்டாம். நான் உங்க அப்பா மாதிரின்னு நினைச்சுக்கோங்க. நான் உங்க சகோதரன் மாதிரின்னு நினைச்சுக்கோங்க. நான் உங்க...''