செகண்ட் ஹேண்ட் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7429
அதற்கு மேல் கோபிநாதன் பேசவில்லை. அவளிடம் வேறு ஆடைகள் எதுவும் இல்லை என்று அவள் சொன்னாள்.
கம்பி அறுந்த வீணை மாதிரி இனிய குரலில் அவள் பேசினாள். அந்தக் குரலைக் கேட்டு என்னவோபோல் ஆகிவிட்டார் கோபிநாதன். வேகமாகச் சென்று பெட்டியில் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு வேஷ்டியையும் ஒரு சால்வையையும் எடுத்து அவள் கையில் தந்தார்.
"என்கிட்ட ப்ளவுஸோ புடவையோ கிடையாது. காரணம்- நான் இன்னும் கல்யாணம் ஆகாதவன்.''
அவர் அப்படிச் சொன்னதும், அவள் லேசாகச் சிரித்தது மாதிரி இருந்தது. அவள் அடுத்த அறைக்குள் சென்று ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்தாள்.
கோபிநாதன் கேட்டார்:
"ஏதாவது சாப்பிடுறீங்களா?''
அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
"எனக்கு எதுவும் வேண்டாம்.''
கோபிநாதன் சொன்னார்:
"ஏதாவது சாப்பிடணும். என்னோட வீட்டுக்கு வந்துட்டு ஒண்ணுமே சாப்பிடாம இருந்தா எப்படி? ஒரு டம்ளர் தேநீர் குடிக்கலாம்.''
அவள் அதற்கு வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ ஒன்றும் கூறவில்லை. கோபிநாதன் எழுந்து தன்னை அவளுக்குப் பரிச்சயப்படுத்தினார்.
"என் பேரு கோபிநாதன். ஒரு பத்திரிகையோட உரிமையாளர் நான். உங்க பேரு?''
"சாரதா...'' அவள் குனிந்தவாறு அமர்ந்து பதில் சொன்னாள். கோபிநாதன் தேநீர் தயாரிப்பதற்காக அடுத்த அறைக்குள் நுழைந்தார். இரண்டு ஜன்னல்களின் கம்பிகளில் புடவையின் நுனிகளைக் கட்டி காய வைத்திருந்தாள் சாரதா. அதற்குமேல் ப்ளவுஸையும் பாடியையும் பாவாடையையும் போட்டிருந்தாள். அவரின் வீட்டிற்குள் பெண்கள் அணியும் ஆடைகளே இப்போதுதான் முதல் தடவையாக நுழைந்திருக்கின்றன. பெண்...! இந்தச் சொல்லை நினைத்துப் பார்த்தபோதே அவரின் இதயத்தில் இனம் புரியாத சுகம் உண்டானது. ஆனந்த உணர்வு அங்கு அரும்பிவிட்டிருந்தது. அதற்குமேல் அவரால் சிந்திக்கவே முடியவில்லை. மறைந்து நின்று அவர் அந்தப் புடவையில் தன் உதட்டால் முத்தம் கொடுத்தார். அந்த பாடியிலும்... பெண்ணின் மணம்... பிறகு ஸ்டவ்வைப் பற்ற வைத்து தேநீர் உண்டாக்கினார். இரண்டு டம்ளர்களில் தேநீருடன் அவர் வந்தபோது, அவள் மேஜைக்குப் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
"திருமதி சாரதா... தேநீர் குடிக்கலாமா?'' கோபிநாதன் சொன்னார். அவள் களைத்துப்போன முகத்துடன் தேநீரை வாங்கிக் குடித்தாள்.
"தூக்கம் வர்ற மாதிரி இருக்கா?'' கோபிநாதன் கேட்டார்.
அவள் சொன்னாள்:
"நான் இந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக்கிறேன்.''
"சே... சே...'' கோபிநாதன் அவளைத் தடுத்தார். "எதற்கு நாற்காலியில தூங்கணும்? அடுத்த அறைக்குள் போயி கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு தூங்குங்க. நான் இந்த சாய்வு நாற்காலியில படுத்து தூங்கிக்கிறேன்.''
அவள் முதலில் தயங்கினாள். பின் என்ன நினைத்தாளோ- அடுத்த அறைக்குள் நுழைந்து உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு படுத்தாள்.
வாழ்க்கையை அவர் நினைத்துப் பார்த்தார். "யார் அவள்? ஒரு துணையே இல்லாமல் எங்கே இருந்து அவள் வந்திருக்கிறாள்? அவளின் கண்ணீருக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மைதான் என்ன?” அவர் தனக்குத்தானே இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு சிகரெட்டாகப் பிடித்துப் போட்டார். இப்படி எத்தனையோ சிகரெட்டுகள்! அப்படியே சில மணி நேரங்களில் தன்னை மறந்து தூங்கியும் போனார். அவர் கண்களைத் திறந்தபோது பொழுது நன்கு விடிந்து விட்டிருந்தது.
அவர் சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தார். அறையில் அவர் இங்குமங்குமாய் நடக்கும் ஒலியைக் கேட்டு சாரதா கதவைத் திறந்தாள்.
கோபிநாதன் அவளுக்கு காலை வணக்கம் சொன்னார்.
"குட் மார்னிங்...''
"குட் மார்னிங்...''
"நல்லா தூங்கினீங்களா?''
"நல்லா தூங்கினேன்.''
"குளிக்கணும்னா...''- அவர் நடந்து சென்று சோப், எண்ணெய், துண்டு ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார். ஒரு சீப்பு, ஒரு பேப்பரில் மடிக்கப்பட்ட கொஞ்சம் உமிக்கரி- இவற்றையும் தந்தார். குளிக்கும் அறையையும் கழிப்பறையையும் அவளுக்குக் காட்டினார். அதற்குப் பிறகு கோபிநாதன் தெர்மாஸ்ஃப்ளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் காப்பி, பலகாரத்துடன் திரும்பி வந்தார். சாரதா குளித்து முடித்து, அவளுடைய ஆடைகளை அணிந்து அழகாக நின்றிருந்தாள்.
கோபிநாதனும் குளித்து முடித்தார். இரண்டு பேரும் காப்பி குடித்தார்கள். அப்போதுதான் சாரதாவின் முகத்தையே நேருக்கு நேராகப் பார்த்தார் கோபிநாதன். அவளுடைய முகம் சாதாரணமாக இருப்பதைவிட வெளிறிப் போயிருந்தது. என்ன காரணம் என்று அவருக்குத் தெரியவில்லை. என்றைக்கும் இல்லாமல் அன்று கோபிநாதன் சூட் அணிந்தார். தவிட்டு நிறத்தில் ஷூவும், வெள்ளை நிறத்தில் சூட்டும், வெள்ளை நிற சட்டையும், ப்ளேஸர் கோட்டும்... டிப்டாப்பாக ஆடையணிந்து அலுவலகம் செல்லத் தயாரானார். சாரதாவைப் பார்த்துக் கேட்டார்:
"நீங்க எங்கே போகணும்?''
சாரதா பதிலே பேசவில்லை. அதற்குப் பதிலாக அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
கோபிநாதன் கேட்டார்.
"ஏன் அழறீங்க?''
அவள் தலை குனிந்தவாறு சொன்னாள்:
"ஒண்ணுமில்ல...''
நேத்து ராத்திரி எங்கே இருந்து வந்தீங்க?''
"ஆஸ்பத்திரியில இருந்து...''
"அப்ப நீங்க நர்ஸா?''
"இல்ல...''
"டாக்டரா?''
"இல்ல...''
"அங்கே ஏதாவது படிக்கிறீங்களா?''
"இல்ல..''
"சொந்த ஊர் எது?''
அவள் சொந்த ஊரின் பெயரைச் சொன்னாள்:
"...''
எழுபது மைல் தூரத்தில் இருக்கும் ஊர் அது.
"அங்கே என்ன பண்ணினீங்க?''
"படிச்சிக்கிட்டு இருந்தேன்.''
"எந்த க்ளாஸ்ல?''
"பி.ஏ.''
"அம்மாவும் அப்பாவும் இருக்காங்களா?''
"இருக்காங்க''
"அப்பா என்ன பண்றாரு?''
"ஹைஸ்கூல்ல ஹெட்மாஸ்டரா இருக்காரு!''
"வீட்ல இருந்து கோவிச்சிக்கிட்டு வந்துட்டீங்களா?''
அதற்கு சாரதா பதில் சொல்லவில்லை.
"ஊருக்குத் திரும்பிப் போகணுமா?''
"வேண்டாம்...''
"அப்படின்னா வேற எங்கே போகணும்?''
"எனக்கு எங்கே போகணும்னே தெரியல. போறதுக்கு ஒரு இடமும் இல்ல...''
அதைக் கேட்டதும் கோபிநாதனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெண்தானே! வேண்டுமென்றே ஏமாற்றலாம்- சதி வேலை செய்யலாம்- தன்னைக் கைக்குள் போடுவதற்கு முயற்சிக்கலாம்- இல்லாவிட்டால் ஏதாவது திருடலாம் என்று வந்திருக்கலாம். இதில் எது உண்மை? இவள் நல்லவளா கெட்டவளா? அவரால் எந்தவித முடிவுக்குமே வர முடியவில்லை. காரணம்- அவளின் குரலில் உண்மைத்தனம் தெரிந்தது. சில நிமிடங்கள் யோசித்த கோபிநாதன் இனி என்ன செய்வது என்று மண்டையைப் போட்டுக் குழப்பினார். கடவுளே! கோபிநாதனுக்கு இப்படியொரு நிலைமையா? மிகப் பெரிய மக்கள் கூட்டத்திற்கு முன் முதல் தடவையாக வாழ்க்கையில் உரையாற்றப்போகும் ஒரு ஆரம்பப் பேச்சாளனைப்போல, அவர் தயக்கமும் பரபரப்பும் கொண்ட மனிதராக மாறினார்.
"நான் இப்போ சொல்லப்போறதை நீங்க கவனமா கேட்டுக்கணும்.'' கோபிநாதன் சொன்னார்.