செகண்ட் ஹேண்ட் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7429
ஆஸ்பத்திரிக்கு வந்தேன். நான் மூணு கடிதங்கள் எழுதினேன். அவர் கடைசி கடிதத்திற்குப் பெயர் எழுதாமல் ஒரே வரியில் பதில் எழுதியிருந்தார்- "என்னோட எதிர்காலத்தை நான் பார்க்கணும்”- இதுதான் அவர் எழுதியிருந்தது! என்னோட கையில் பணம் எதுவும் இல்ல. முந்தாநாள் ராத்திரி நான் ஆஸ்பத்திரியிலேயே தற்கொலை பண்ணிக்கலாமான்னு பார்த்தேன். ஜன்னல் வழியாக கீழே குதிக்க முயற்சித்தேன். அப்போ போலிஸோட விசில் சத்தம். அதைக் கேட்டதும் நான் நடுங்கிப்போனேன். தற்கொலை முயற்சி நின்னிருச்சி. மீண்டும் வாழவேண்டியதாப் போயிடுச்சு. ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினேன். எங்கே போறதுன்னே தெரியல. மதியத்திலிருந்து நான் பாட்டுக்கு நடந்துக்கிட்டே இருந்தேன். மழை பெய்துகிட்டிருந்தது. நான் நல்லா நனைஞ்சிட்டேன். எங்கே போறதுன்னே தெரியாம அப்படி ஒரு நடை... எங்கே மழையில விரைச்சுப்போய் கீழே விழுந்திடுவோமோன்னு தோணினப்போதான் இங்கே வந்து நான் நின்னது...''
"விஷயம் இவ்வளவுதானா?'' கோபிநாதன் சொன்னார்: "பரவாயில்ல... வாழ்க்கைன்றது கவலைப்படுறதுக்காக உள்ளது இல்ல. சாரதா, உங்க வாழ்க்கையில ஒரு தப்பு நடந்திடுச்சு. பெரும்பாலான திருமணமாகாத பெண்கள் வாழ்க்கையில் நடக்குற ஒரு சமாச்சாரம்தான் இது. குறிப்பா கல்லூரி மாணவிகளுக்கு. வெளியே காண்பிச்சிக்கிட்டு இருக்குற அளவுக்கு பலரும் உள்ளே அவ்வளவு நல்லவங்க இல்ல. ஆண்கள்- பெண்கள் இரண்டு பேருக்குமே இது பொருந்தும். இனி நடந்து போன விஷயங்களை நினைச்சுப் பார்த்து என்ன பிரயோஜனம்? மகிழ்ச்சியா இருக்கணும். நான் போய் உங்களுக்காக ஏதாவது ஆடைகள் வாங்கிக்கிட்டு வர்றேன்!''
"எதற்கு?''
"சாரதா, நீங்க என்னோட மனைவியா என்கூட இருக்குறப்போ, உங்களுக்கு அணிய ஆடைகள் வேணுமே! என்னோட வேஷ்டியையும் சால்வையையும் எப்பவுமே அணிய முடியுமா என்ன?''
"வேண்டாம். இந்தக் கல்யாணம் நல்லா இருக்காது. உங்களுக்கு அப்பா, அம்மா இருக்காங்கள்ல? உங்களுக்கு நண்பர்கள் இருக்காங்கள்ல? அவங்களுக்கு நிச்சயம் இது பிடிக்காது.''
"அவங்களா உங்களைக் கல்யாணம் பண்ணப்போறாங்க? எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான் இருக்காங்க. அவங்க என்னோட சம்மதம் இல்லாமலே வேறொரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எனக்கு சகோதரர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு சகோதரி இருக்கா. அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. சுருக்கமாச் சொல்லப்போனா- இந்தப் பெரிய உலகத்துல நான் மட்டும் ஒரு தனி மனிதனாகத்தான் இருக்கேன். சொத்துன்னு ஒண்ணும் கிடையாது. நான் இன்டர்மீடியட் வரை படிச்சிருக்கேன். சொத்துன்னு சொல்லணும்னா என்னோட பத்திரிகையை மட்டும்தான் சொல்ல முடியும். ஆபிஸ் பையன், மேனேஜர், பத்திரிகை முதலாளி- எல்லாமே நான்தான். இதுதான் என்னோட வாழ்க்கை வரலாறு. இப்ப உங்களுக்கு ஏதாவது தடை இருக்குமா?''
"ஆனா என்னோட இதயத்துல காதல்னு ஒண்ணு இல்லியே! என்னால இனிமேல் யாரையும் காதலிக்க முடியாது. இதயம் ஒண்ணுமே இல்லாம சூனியமா இல்ல இருக்கு...''
"சாரதா, உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இருக்கா?''
இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிய அவள் மவுனமாக, "இருக்கு” என்பது மாதிரி தலையை ஆட்டினாள்.
அன்றே பதிவாளர் முன்பு அவர்கள் இருவரும் கணவன்- மனைவியாக ஆனார்கள். அன்று இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்தார்கள். அந்தப் புகைப்படத்தை ப்ளாக் எடுத்து பத்திரிகையில் கோபிநாதன் பிரசுரம் செய்தார். பத்திரிகையின் ஒரு பிரதியை கவிஞருக்கும், ஒரு பிரதியை சாரதாவின் தந்தைக்கும் அவர் அனுப்பி வைத்தார்.
சாரதாவின் தாயும் தந்தையும் அவர்கள் இருவரையும் வந்து பார்த்தார்கள். அவர்கள் தம்பதிகளை மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். இதற்கிடையில் கவிஞரையும் காணக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. அந்த இடத்தில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அந்தக் கவிஞர்தான் தலைமை தாங்கினார். கோபிநாதனும் அந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் முடிந்தபிறகு, ஏகப்பட்ட மாலைகளைக் கையில் வைத்துக் கொண்டு வந்த அந்தக் கவிஞர் கோபிநாதனைப் பார்த்துக் கேட்டார்:
"பத்திரிகை அதிபரான உங்களோட திருமணம் சமீபத்துலதான் நடந்தது... இல்ல...?''
கோபிநாதன் சொன்னார்:
"ஆமா...''
"அந்தப் பெண்ணை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?''
"தெரியாது!''
"அவள் எழுதிய சில காதல் கடிதங்கள் ஒரு ஆளுகிட்ட இப்பவும் இருக்கு!''
"ஒருவேளை அந்தக் காதல் கடிதங்களை அந்த ஆளு விற்பனை செய்யறதுக்காகக் கையில வச்சிருக்கலாம். இதைப் பற்றி சாரதா முன்னாடியே என்கிட்ட சொல்லியாச்சு!''
"கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பிறந்த விஷயத்தைச் சொல்லி இருக்காளா?''
"அதையும் சொல்லிட்டா!''
"அவள் ஒரு செகண்ட் ஹேண்ட் பொருள்ன்ற விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டா. அப்படித்தானே?'' அந்தக் கவிஞர் சிரித்தார். கோபிநாதன் சொன்னார்: "சாரதா எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டா...''
சிறிது இடைவெளி விட்டு கோபிநாதனே தொடர்ந்தார்: "அவளை அப்படியொரு நிலைக்கு ஆளாக்கிய அந்தக் காதலனான கவிஞரோட பேரையும் அவள் சொன்னாள்!''
அவ்வளவுதான்-
இருளடைந்துபோன முகத்துடன் அந்தக் கவிஞர் கோபிநாதனைப் பார்த்தார். லேசாகச் சிரித்த கோபிநாதன் கவிஞரிடம் விடைபெற்றுக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
கவிஞரைப் பார்த்த விஷயத்தை கோபிநாதன் சாரதாவிடம் சொல்லவில்லை. ஏன் தேவையில்லாமல் அவள் மனதை நோகடிக்க வேண்டும் என்று அவர் நினைத்ததே காரணம். அந்த விஷயத்தில் கோபிநாதன் எப்போதும் கவனமாக இருந்தார். சாரதாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. வீட்டு வேலைகளைக் கவனிப்பது, சமையல் செய்வது, பத்திரிகைகளை மடக்கி அட்டை ஒட்டி முகவரிகள் எழுதுவது- எல்லாமே சாரதாதான். ஆனால், அவளின் எல்லா வேலைகளுக்குப் பின்னாலும், "என்னோட இதயத்துல காதல்னு ஒண்ணு இல்லியே!
என்னால இனிமேல் யாரையும் காதலிக்க முடியாது. இதயம் ஒண்ணுமே இல்லாம சூனியமா இல்ல இருக்கு” என்ற அவளின் குரலும் இருந்தது.
கோபிநாதனின் மனதில் ஒரு பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பே இருந்தது. இருந்தாலும், சாரதாவின் வார்த்தைகள் அதற்கு முன் ஒரு பெரிய பாறை மாதிரி நின்று கொண்டிருந்தது.
மழையின் ஆரவாரத்திலும் காற்றின் இரைச்சலிலும் கோபிநாதனின் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது சாரதாவின் அந்த வார்த்தைகள்தாம். இப்போது அவள் அவரைப் பார்த்துக் கேட்கிறாள், "என்னை ஏன் கல்யாணம் செஞ்சீங்க” என்று.
கோபிநாதன் எழுந்து குடையையும் பேப்பர்களையும் எடுத்துக் கொண்டு அச்சகத்திற்குப் புறப்பட ஆரம்பித்தார். சாரதாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று போனால், அங்கு அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் அவள் எழுந்து நின்றாள்.