ராச்சியம்மா - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9885
"என்ன ஒண்ணுமே பேசாம இருக்கீங்க?'' ராச்சியம்மா என் கையைப் பிடித்துக் குலுக்கினாள். நான் கீழே பார்த்தவாறு சொன்னேன்:
"மன்னிக்கணும் ராச்சியம்மா. உனக்கு தொந்தரவு கொடுத்ததுக்காக நான் வருத்தப்படுகிறேன்.''
நான் சொன்ன வார்த்தைகள் ராச்சியம்மாவை அதிகமாக அழ வைத்தன. நிலவின் இதழ்கள் கீழே விழ ஆரம்பித்தபோது நாங்கள் இருவரும் இரு வேறு பாதைகளில் பிரிந்தோம். நிழல்களும் பனிப்படலமும் இணைந்து காட்சியளித்த வெட்டவெளிக்குள் மறைந்து போய்க் கொண்டிருக்கும் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தபோது எனக்குள்ளிருந்து ஒரு கேள்வி எழுந்தது: "நீ யாரும்மா?"
இன்றுவரை அந்தக் கேள்விக்கு பதிலே இல்லை.
மிஸஸ் நாயரின் கதாகாலட்சேபத்திலிருந்து சிறிது தப்பிக்க வேண்டும் என்ற விருப்பத்தால்தான் மாலை நேரத்தில் நான் வெளியே இறங்கினேன். மலைச் சரிவில் வைத்து ராச்சியம்மாவை நான் பார்ப்பேனென்று நினைக்கவேயில்லை.
தடிமனான சாம்பிராணி மரத்திற்குப் பின்னாலிருந்து அவள் தோன்றினாள். குளித்துக் காய விட்டிருக்கும் தலை முடி. அவளிள் சந்தனப் பொட்டிற்கும் பற்களுக்கும் பிரகாசம் அதிகம் என்று கூறுவதற்கில்லை.
"ஏன் பொண்டாட்டியை அழைச்சிட்டு வரல?'' அவள் கேட்டாள்.
"பொண்டாட்டி இருக்குறதா யார் சொன்னது?''
"நீங்க சொல்லாட்டியும் எனக்குத் தெரியும். மகள் விஜயலட்சுமி பள்ளிக்கூடத்துக்குப் போக ஆரம்பிச்சாச்சா?''
"ம்...''
என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாள்.
"விஜயலட்சுமியை அழைச்சிட்டு வரலியே! வந்திருந்தா அப்படியே வாரி எடுத்து முத்தம் கொடுத்திருப்பேன்.''
நான் வெறுமேன சிரித்தேன்.
"பழைய மாதிரியே பணத்தைத் தண்ணியைப் போல செலவழிச்சிக்கிட்டு இருக்கீங்க, அப்படித்தானே?'' ராச்சியம்மா கேட்டாள்.
"அந்த அளவுக்கு எங்கிட்ட பணமில்ல, ராச்சியம்மா.''
"இருக்குற பணத்தைச் சொல்றேன். விஜயலட்சுமியை நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும். பாத்திரங்கள் கொடுக்கணும்ல? நகை போடணும்ல? பணம் கொடுக்கணும்ல? என்ன சிரிக்கிறீங்க?''
"ராச்சியம்மா, நீ பணம் சேர்த்து வச்சிருக்கியா?''
"ஆமா..''
"கையில எவ்வளவு பணம் வச்சிருக்கே?''
"கையில இல்ல. எல்லாம் பேங்க்லதான் இருக்கு. இங்கே இப்போ பேங்க் வந்திருக்கே! கையில பணம் இருந்தா, யாராவது கடன் கேட்பாங்க. கொடுத்தோம்னா திரும்பி வருமான்னு சொல்ல முடியாது. பேங்க்ல பணத்தைப் போட்டா, வட்டி கிடைக்கும். நம்ம ஊரு இப்போ பெரிய ஊராயிடுச்சு. பள்ளிக்கூடம் வந்திடுச்சு. கோர்ட்டு வந்திடுச்சு. போலீஸ் ஸ்டேஷன் வந்திடுச்சு. பிறகு... டூரிஸ்ட் ஆபீஸ் வந்திருச்சு. டூரிஸ்ட் ஆபீஸ்க்கு நான் பால் தர்றேன்.'' இதைச் சொன்ன ராச்சியம்மா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.
"ராச்சியம்மா, நீ கல்யாணமே பண்ணிக்கலியே?''
அதற்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.
"இப்படியே எத்தனை நாட்கள் இருப்பே?''
"சாகுறவரை.''
"உதவிக்கு ஒரு ஆள் வேண்டாமா?''
"கடவுள் இருக்கார்ல!''
"பக்கத்துல உதவிக்கு ஒரு ஆளு இருக்குறது நல்லது இல்லியா?''
ராச்சியம்மா "தேவையில்லை" என்பது மாதிரி இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினாள்.
"பிறகு யாருக்காக பணத்தை சேர்த்து வைக்கிற?''
"என் வாரிசுக்கு...''
"அது யாரு?''
"விஜயலட்சுமி... உங்க மகள். பேங்க்ல என்னோட வாரிசா அவ பேரைத்தான் நான் எழுதிக் கொடுத்திருக்கேன்.''
"என்ன சொல்ற?''
"நான் செத்துப் போனா, நான் போட்டு வச்சிருக்குற பணம் விஜயலட்சுமிக்குத்தான். சாகுறதுக்கு முன்னாடிகூட எடுக்கலாம். ஆனா, உங்களுக்கு கொடுத்து பிரயோஜனமில்ல. தண்ணியைப் போல எல்லாத்தையும் செலவழிச்சிடுவீங்க...''
நான் ராச்சியம்மாவின் கையைப் பிடித்தேன். என் பெண்ணே...
ராச்சியம்மாவிடம் எந்தவித உணர்ச்சி மாறுபாடும் உண்டாகவில்லை. அவள் கேட்டாள்:
"என் வீட்டுக்கு வர்றீங்களா?''
"கட்டாயம்...''
பழைய வீடல்ல. முன்னால் இருந்ததை விட சற்று அழகுபடுத்தி வைத்திருந்தாள். நான் தலையைக் குனிந்து வீட்டுக்குள் நுழைந்தேன். பளபளப்பு இல்லாத பலகையால் செய்யப்பட்ட பெஞ்சில் அமர்ந்தேன்.
ராச்சியம்மா தந்த இளம் சூடுள்ள எருமைப் பாலை ஊதி ஊதிக் குடித்தபோது, அவள் என்னைப் பார்த்துக்கொண்டே கடந்துபோன கதைகளைக் கூறிக் கொண்டிருந்தாள். "மூணு பேரு என்னைக் கல்யாணம் பண்ணணும்னு வந்தாங்க. மூணு பேரையுமே வேண்டாம்னு நான் சொல்லிட்டேன்.''
"காரணம்?''
"ரெண்டு பேரு என் பணத்துக்கு ஆசைப்பட்டு வந்தாங்க.''
"மூணாவது ஆளு?''
"வேண்டாம்னு சொல்லிட்டேன்.''
"காரணம்?''
"காரணம் எதுவும் இல்ல.'' அதற்குமேல் கேட்பதை விரும்பாததைப்போல அவள் விஷயத்தை மாற்றினாள். பிறகு செங்கல்லும் கரியும் கலந்த சுவரைச் சுட்டிக் காட்டியவாறு கேட்டாள்:
"அதைப் பார்த்தீங்களா?''
அருகில் சென்று பார்த்தேன். என்னுடைய ஒரு பழைய புகைப்படம் இருந்தது.
ராச்சியம்மா இடி மின்னலைப்போன்ற தன்னுடைய சிரிப்பைத் தொடர்ந்து பரவ விட்டாள். சுற்றிலும் நிலவி இருந்த கனமான இருட்டில் அந்தச் சிரிப்புச் சத்தம் தெளிவாகக் கேட்டது.
ராச்சியம்மா என் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவான குரலில் கேட்டாள்:
"என்னை மறந்துட்டீங்களா?''
"இல்ல...''
"பிறகு... இவ்வளவு காலமும் உங்களைப் பற்றி ஒரு விவரமும் எனக்குத் தெரியலியே! நான் எப்பவும் நினைப்பேன், நீங்க கட்டாயம் வருவீங்கன்னு.''
என் உடம்போடு சேர்ந்து நின்று கொண்டிருந்த ராச்சியம்மாவின் கண்களைப் பார்த்தேன். நிழலும் நிலவும் இனணந்திருக்கும் அந்த நீல விழிகளில் தெளிவற்ற ஒரு வெள்ளி மீன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது.
"ராச்சியம்மா!''
"என்னை மறந்துட்டீங்கல்ல?''
"நீ மஞ்சள் பிரசாதம் தொட்டு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேல்ல?''
"ஆமா...''
"பிறகு?''
"நான் அந்த மஞ்சள் குறியை அழிச்சிட்டேன். இங்க பாருங்க, என் நெற்றியில சந்தனக் குறிதான் இருக்கு...'' மெதுவான குரலில் அவள் சொன்னாள்: "நானும் மனிதப் பிறவிதானே? மண்ணால செஞ்சதுதானே?''
இந்தத் தத்துவ ஞானத்தை எங்கிருந்து படித்தாள் என்று நான் அவளைக் கேட்கவில்லை. மண்ணின் மணமும் யூக்கலிப்டஸின் மணமும் கலந்த காற்று எங்களைக் கடந்துபோனது. அது வைக்கோல் போரிலும் கொடிகள்மீதும் பட்டுச் சென்றது.
என் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே ராச்சியம்மா சொன்னாள்:
"என் அம்மாவோட அம்மாவை இங்கே கொண்டு வந்தது ஒரு மலையாளிதான்.''
ராச்சியம்மாவின் தலையிலிருந்த ஒன்றிரண்டு வெள்ளிக் கோடுகள் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தன. எனக்கும் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.
வீட்டை அடைந்தபோது மிஸஸ் நாயர் எனக்காகக் காத்திருந்தாள். அவள் கேட்டாள்: "நாளைக்குக் காலையில போறீங்களா?''
"ம்...''
"எங்க ஷெவர்லே கார்ல போகலாம்.''
"நன்றி... எனக்கு பஸ் போதும்.''
அதற்குமேல் அவள் எதுவும் பேசவில்லை. நான் சீக்கிரமாகப் போய் படுத்து உறங்கத் தொடங்கினேன்.