ராச்சியம்மா - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9885
அம்மை முற்றிலும் குணமாகி குளித்த நாட்களில், ராச்சியம்மா எருமைகளையும் என்னையும் எப்படி மாறி மாறி கவனித்தாள் என்பதை அப்போது நான் நினைத்துப் பார்த்தேன். ராச்சியம்மாவிடம் ஒருநாள் சொன்னேன்:
"இனி நான் என் ஊருக்குப் போறேன். விடுமுறை முடிஞ்சதும் திரும்பி வர்றேன்.''
"இப்போ சுத்தறதுக்கு நான் உங்களை விடமாட்டேன்.''
விட மாட்டேன் என்றால் விட மாட்டேன் என்றுதான் அர்த்தம். ராச்சியம்மா காலையில் வருகிறாள். வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். காப்பியும் பலகாரமும் உண்டாக்கித் தருகிறாள். மதிய உணவை சமையல் செய்து மூடி வைத்துவிட்டு, வந்த வேகத்துடனேயே திரும்பிப் போகவும் செய்கிறாள்.
"எருமைக்கு உணவு தயாரிச்சு வச்சாச்சு, இல்லியா?'' அதைக் கேட்டு ராச்சியம்மா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். புதர்களுக்கு மத்தியில் அவளின் தலை மறைந்த பிறகும், அவளின் சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.
உடல்நிலை நன்கு தேறி அலுவலகத்திற்கு நான் செல்ல ஆரம்பித்தபோது ஒருநாள் ராச்சியம்மா கேட்டாள்:
"இனிமே பையன் வர மாட்டானா?''
"வரமாட்டான்னு நினைக்கிறேன்.''
"நன்றி கெட்ட சவம்!'' ராச்சியம்மா சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டுக் கேட்டாள்:
"சகோதரிகள் இல்லையா?''
"இல்ல...''
"இல்லவே இல்லியா?''
"ஒண்ணு இருந்துச்சு... செத்துப் போயிடுச்சு.''
அதைக் கேட்டு ராச்சியம்மா என் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் ஒருவித உணர்ச்சி தோன்றியதை என்னால் பார்க்க முடிந்தது. காதுகளை ஆட்டாமல் நின்று கொண்டிருக்கும் யானையின் கண்களை அது நினைவுபடுத்தியது. சிறிது நேரம் சென்ற பிறகு ராச்சியம்மா சொன்னாள்:
"எனக்கும் ஒரு அண்ணன் இருந்தார். அவர் செத்துப் போயிட்டார்...''
அதற்குப் பிறகு ஒரே அமைதி.
திரும்பிப் போகும்போது ராச்சியம்மாவிடம் நான் கேட்டேன்: "ராச்சியம்மா, உனக்கு இப்போ யார் இருக்காங்க?''
"கடவுள் மட்டும்தான்.''
அவள் சென்ற பிறகு, முழுமையான வெறுமையை நான் உணர்ந்தேன்.
இப்போது ராச்சியம்மா போனபிறகு, அந்த வெறுமை திரும்பவும் உண்டானதைப்போல எனக்கிருந்தது.
இந்த விஷயம் எதுவும் மிஸஸ் நாயரின் பேச்சை பாதிக்கவில்லை. ஏற்றுமதி அனுமதி கிடைப்பதற்காக தன் கணவன் படும் கஷ்டங்களை அவள் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். "மாசத்துல ஒண்ணு ரெண்டு தடவை கட்டாயம் டில்லிக்குப் போகணும். ஆனா, அவர் எல்லா வகையான விமானங்கள்லயும் பயணம் செய்யக் கூடாது. அழுத்தம் உள்ள மனிதராச்சே! இப்போல்லாம் பெரிய ஆளுங்க எல்லாருக்கும் ரத்த அழுத்தம் கட்டாயம் இருக்குது'' என்று கூறிக் கொண்டிருந்த மிஸஸ் நாயர் என்னிடம் கேட்டாள்:
"பிளட் பிரஷர் இருக்கா?''
"இல்ல...''
"சர்க்கரை இருக்கா?''
"இல்ல...''
நான் பதில் கூறிக் கொண்டிருந்தாலும், என் மனம் முழுக்க ராச்சியம்மாதான் நிறைந்து நின்றிருந்தாள். நான் அவளுக்கு தொந்தரவு தந்திருக்கிறேன். அந்தக் காட்சி மனதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றியது.
அலுவலகத்திலிருந்து மிகவும் களைத்துப்போய் திரும்பி வந்தேன். எதைச் செய்யவும் மனதில் உற்சாகமில்லை. மலைச்சரிவுப் பக்கம் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம் என்று புறப்பட்டேன். அங்கு உயரமாக நின்றிருந்த சாம்பிராணி மரத்திற்குக் கீழே நிலவு மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் புள்ளி மானைப்போல நின்றிருந்தது.
நான் அங்கேயே உட்கார்ந்தேன். அமைதி குடி கொண்டிருக்கும் மலைச் சரிவுகள், நீளமாகப் பரந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள், ஒரு மேகம்கூட இல்லாத வானம்... ஒரே அமைதி!
அப்போது திடீரென்று ராச்சியம்மா அங்கு வந்தாள். நெல் வயலுக்குள்ளிருந்து வரும் ஒரு கறவை மாட்டைப்போல இருந்தாள் அவள். அவள் அங்கு வருவாளென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சிறிதுகூட பதைபதைப்பே இல்லாமல் எனக்கருகில் வந்த ராச்சியம்மா கேட்டாள்:
"கவலையா?''
"எதுக்கு?''
"ஊர்ல இருக்கிறவங்களை நினைச்சு.''
"இல்ல...''
என் தாயைப் பற்றி, தந்தையைப் பற்றி, குடும்பத்தில் உள்ளவர்களைப்பற்றியெல்லாம் ராச்சியம்மா கேட்டாள். எனக்கும் யாரிடமாவது எதையாவது சொல்ல வேண்டும்போல் இருந்தது. கூம்பி நின்றிருந்த ஆம்பல் மொட்டுகளை நிலவு தொட்டெழுப்பிக் கொண்டிருந்தது.
ராச்சியம்மா என்னைவிட்டு தூரத்தில், எனக்குச் சிறிதும் தொடர்பில்லாமல் பிறந்து வளர்ந்தவள் என்ற உணர்வு எனக்கு உண்டாகவில்லை.
ஒரே அமைதி. இதயம் துடிப்பதைக் கேட்கலாம்.
தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் நின்றிருக்கும் சில்வர் ஓக் மரங்களைத் தாண்டி "உய்"யென்று ஓசை எழுப்பியவாறு போய் கொண்டிருக்கும் காற்று. அது தூரத்தில் உள்ள பனிக் கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளும்.
ராச்சியம்மாவின் கை என்னைத் தொட்டது. அவளின் வெள்ளி வளையல்கள் ஓசை உண்டாக்கின. வெட்கத்தையோ பதைபதைப்பையோ எதிர்பார்த்தேன். படைப்புக்கும் சுய தப்பித்தலுக்குமுள்ள மோகங்கள் ஒன்றையொன்று சேர்ந்து இணைந்தன.
ஆனால், இரண்டும் உண்டாகவில்லை.
ஒரு மாலை நேரத்தின் வெளிப்பாடு முழுமையாக அந்தக் கண்களுக்குள் குடி கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.
"ராச்சியம்மா!''
அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.
நான் அவளின் கையை விட்டு தூரத்தில் நின்றேன். அப்போது என் கையைப் பற்றிய ராச்சியம்மா கேட்டாள்:
"என்மேல கோபமா?''
நான் பதில் எதுவும் சொல்லவில்லை. அப்போதிருந்த என் மனதின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"என்கிட்ட கோபப்படாதீங்க.'' ராச்சியம்மா அழுதாள்.
"என் அண்ணன் செத்துப்போன பிறகு, சந்தோஷம்னு ஒண்ணை நான் உணர்ந்தது உங்களைப் பார்த்த பிறகுதான்.''
என் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை.
"எங்கம்மா சாகுறப்போ சொன்னாங்க...''
"என்ன சொன்னங்க?''
"நான் கோவில்ல போயி மஞ்சள் பிரசாதம் தொட்டு சத்தியம் பண்ணிக் கொடுத்தேன்- தப்பே செய்ய மாட்டேன்னு.'' ராச்சியம்மா தேம்பித் தேம்பி அழுதவாறு சொன்னாள்:
"இனி விருப்பம்போல...''
அவளின் உயர்ந்து நின்ற மார்பின்மீது கண்ணீர் துளிகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நிமிடங்கள் கடந்தோடிக் கொண்டிருந்தன.
அசையாமல் நின்றிருந்த என் முகத்தை தன்னுடைய ஈரமான விழிகளால் பார்த்த ராச்சியம்மா சொன்னாள்:
"நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன். ஆனா, ஒரு விஷயம்...''
"என்ன?''
"அது முடிஞ்சிடுச்சின்னா, நான் உயிரோட இருக்க மாட்டேன். இனி விருப்பம்போல...''
மீண்டும் ராச்சியம்மா என் கையைப் பிடித்தாள். அந்தக் கையைத் தட்டி விடவோ, பிடித்து அணைக்கவோ என்னால் முடியவில்லை.
"பெண்ணே...'' என்று ஆத்மார்த்தமாக அழைக்கவும் என்னால் முடியவில்லை. ஒரு வேதனை மட்டும் மனதில் தங்கியிருந்தது. சில்வர் ஓக் மரங்களுக்கிடையே ஓசை எழுப்பியவாறு ஓடிக் கொண்டிருந்த காற்றில் அந்த வேதனை இரண்டறக் கலந்து விட்டதைப்போல் நான் உணர்ந்தேன்.