ராச்சியம்மா
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 9885
பதினொரு வருடங்களுக்குப் பிறகு ராச்சியம்மாவைப் பார்த்தபோது, அவளிடம் தெரிந்த மாற்றங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டதற்குக் காரணம் - அவளிடம் மாற்றங்கள் உண்டாகி இருக்கும் என்று அதுவரை நான் நினைக்காமல் இருந்ததே.
நீலகிரியை விட்டுப்போன பிறகு பல்வேறு சமயங்களில் நான் ராச்சியம்மாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறேன். கருங்கல் சிலையைப் போல இருக்கும் அந்த உடம்பும் அந்த தைரியமும் மனதை விட்டு எப்போதும் நீங்குமென்று நான் நினைத்ததில்லை. ஆனால், காலம் என்ற அந்த பெரிய வினோதத்திற்கு மத்தியில் எல்லாம் மறைந்து, மறைந்து போகின்றன. இருந்தாலும் எப்போதாவது ஒருமுறை ராச்சியம்மாவை நான் நினைக்காமலில்லை.
இருட்டில் கையை வீசிக் கொண்டு குதித்தவாறு நடந்து வரும் ராச்சியம்மாவைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது. கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கைகளில் அணிந்திருக்கும் வெள்ளி வளையல்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்.
இளம் நீல வண்ண ஆகாயத்திற்குக் கீழே அகம்பாவத்துடன் கிடக்கும் பச்சை மலைகளின் இருட்டும் கம்பீரமும் ராச்சியம்மாவை எப்போதும் எனக்கு ஞாபகப்படுத்தின.
அந்த ராச்சியம்மாவா எனக்கு முன்னால் நின்று கொண்டுஇருப்பது?
நான் இன்னொரு முறை உற்றுப் பார்த்தேன். கருத்து நீண்ட விரல் நுனியிலிருக்கும் நிலவுத் துண்டுகளுக்கு இப்போதும் பிரகாசமும் சுத்தமும் இருக்கவே செய்கின்றன. மூக்கும் கண்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கின்றன. டார்ச் விளக்கு அடிப்பதைப் போன்ற சிரிப்பிலும் மாற்றமில்லை. டார்ச்சில் இருக்கும் பேட்டரிக்கு சிறிது சக்தி குறைவு உண்டாகியிருப்பது மட்டும் தெரிந்தது. ராச்சியம்மாவின் தலையில் ஒன்றிரண்டு வெள்ளிக் கோடுகள் தெரிந்தன. அவை மனதை என்னவோ செய்தன. தேவையில்லாத இடத்தில் அவை வந்து ஏறியிருக்கின்றன.
பதினோரு வருடங்கள் எவ்வளவு வேகமாகப் பாய்ந்தோடி இருக்கின்றன! இருந்தாலும் ராச்சியம்மாவிடம் இவ்வளவுதான் மாற்றங்களா என்பதுதான் சிந்திக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. இதற்கு மேலும் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா என்பதைப் பற்றி சிந்திக்க முடியவில்லை.
மிஸஸ் நாயர் ஞாபகப்படுத்தினாள்: "ராச்சியம்மாவை ஞாபகத்தல இருக்கா?''
நான் பதில் சொல்லவில்லை. வெறுமென புன்னகை செய்தேன். மிஸஸ் நாயர் வீட்டுச் சொந்தக்காரி என்ற முறையில் செய்ய வேண்டிய மரியாதையைச் செய்தாள். ராச்சியம்மாவை எனக்கு யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. நீலகிரி வயநாட்டிற்கு உத்தியோகம் பார்ப்பதற்காக வந்து நான்கு நாட்கள் கழிந்திருக்கின்றன. அப்போது அங்கு ஹோட்டல்கள் இல்லை. கடையில்லை என்று சொல்ல முடியாது. தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடமிருந்து பணம் பறிப்பதற்கும் கள்ளக் கடத்தல் செய்ய உதவுவதற்கும் ஒரு கடை இருக்கவே செய்தது. அங்கு வாங்கிய சோப்பை உடம்பில் தேய்த்துக் குளித்தால் அரிப்பு உண்டாகும். கடுகைப் போட்டுத் தாளித்தால் கூட்டு எலியைப்போல மணக்கும்.
நான் எங்கு தங்குவது? எங்கு உணவு உண்பது?
நண்பர்கள் ஒரு வீட்டையும் ஒரு சமையல்காரனையும் ஏற்பாடு செய்து தந்தார்கள். அந்தக் கட்டடத்தை வீடென்றும் அந்தச் சிறுவனை சமையல்காரனென்றும் அழைக்கவே நான் விருப்பப்பட்டேன்.
நான் மிகவும் மகிழ்ச்சியுள்ள மனிதனாக இருக்கவே ஆசைப்பட்டேன். உயிர்ப்பு என்ற அற்புதமும் நினைத்துப் பார்க்க முடியாத சக்தியும் கொண்ட மகாபிரவாகம், எப்படிப்பட்ட மலைச் சரிவுகள் வழியாகவும் கற்பாறைகள் வழியாகவும் அருவிகள் வழியாகவும் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையும், வானத்தின் நிற மாற்றங்கள் அதற்கு எப்படியெல்லாம் வடிவப் பரிணாமங்கள் உண்டாக்கித் தருகின்றன என்பதையும் யாரால் கூற முடியும்?
மூன்றாவது நாள் நான் என் தாய்க்கு கடிதம் எழுதினேன். "நான் இங்கு நலமாக இருக்கிறேன். நல்ல இடம். நல்ல மனிதர்கள்." எழுதி வைத்த கடிதத்தின் வெளிப்பகுதியில் வெண் கரையான்கள் நடமாடிக் கொண்டிருந்தன.
அப்போதுதான் ராச்சியம்மா வந்தாள். எல்லையில் வேலியைப் போல வளர்ந்து நின்றிருக்கும் காட்டுச் செடிகளைக் கையால் ஒதுக்கியவாறு வாசலில் வந்து நின்ற அவள் அழைத்தாள்:
"டேய் பையா!''
விறகு பிளந்து கொண்டிருந்த என்னுடைய சமையல்காரனுக்கு அவள் அப்படி அழைத்தது சிறிதும் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் பதில் சொல்வதற்கு தைரியம் வந்ததைப்போல விழித்துக் கொண்டு நின்றான்.
"உன் முதலாளி இங்கே இல்லியா?''
"என்ன வேணும்?''
"உன்கிட்ட இல்ல. உன் முதலாளிக்கிட்டத்தான் நான் சொல்லுவேன். இங்கே ஆள் இருக்கா?''
"இருக்காரு.''
"கூப்பிடு...''
ஒரு காட்டுக் கொம்பைப் பிடித்து இழுப்பதற்கிடையில் அவள் சொன்னாள்.
நான் எல்லாவற்றையும் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை ஏதோ கரும்பாறை பெற்றெடுத்து வெளியே எறிந்திருப்பதாக நான் நினைத்தேன்.
பையன் வந்து சொன்னபோது, எதுவுமே தெரியாததைப்போல நான் வாசல் பக்கம் வந்தேன். என்னைக் கண்டவுடன் அவள் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
"உங்களுக்கு பால் வேணுமா?''
"வேணும்.''
"அப்படின்னா அதைச் சொல்லாம எனக்கு எப்படித் தெரியும்? எத்தனை புட்டி வேணும்?''
"ஒண்ணரைப் புட்டி.''
"காலையில எத்தனை?''
"அரை.''
"சரி... டேய் பையா, நாளையில இருந்து வந்து வாங்கிட்டுப் போ.''
"இங்கே கொண்டு வந்து தரக் கூடாதா?''
"சுட வச்சி, சுண்ட வச்சி, சர்க்கரை போட்டுக் கொண்டு வரட்டுமா?''
பையனுக்கு என்னவோ சொல்ல வேண்டும்போல் இருந்தது. அவன் என் முகத்தைப் பார்த்துவிட்டு, விறகுக் கட்டைகளை எடுத்து சமையலறைப் பக்கம் போனான்.
அவள் பிறகும் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு நான் கேட்டேன்:
"நாளையில இருந்து பால்...''
"தர்றேன். ஆனா, உங்க பையனை வந்து வாங்கிட்டு வரச் சொல்லணும்''.
"அவனுக்கு இடம் தெரியாம இருக்கும்.''
"வாயில நாக்கு இருக்குல்ல? கேட்கட்டும். பால்காரி ராச்சியம்மான்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும். புரியுதா?''
"ஓ...''
அவள் மீண்டும் உற்றுப் பார்த்துவிட்டு, பின்பக்கம் திரும்பி காட்டுச் செடிகளைக் கையால் நீக்கியவாறு நடந்து போனாள்.
திடீரென்று புதர்களின் மறைவில் இருந்தவாறு அவளின் குரல் கேட்டது: "வடக்குப் பக்கம் இருக்குற மலைச் சரிவில்தான் நம்ம வீடு. பையன்கிட்ட சொல்லுங்க...''
பன்றி நுழைந்த நெல் வயலைப்போல காட்டின் மேற்பகுதியில் உண்டான அலை இப்படியும் அப்படியுமாய் வளைந்து சிறிது நேரத்தில் தூரத்தில் மறைந்துபோனது.
சிறு வயதில்- படிக்கும் காலத்தில் படித்த வரியை நான் நினைத்துப் பார்த்தேன். "இவளுக்கு பயந்து யாரும் நேர்வழியில் நடப்பதில்லை..."
மறுநாள் பால் வாங்கச் சென்ற பையன் ராச்சியம்மாவின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டு திரும்பி வந்தான்.
ஐந்து நிமிடம் ஆகவில்லை. காட்டுச் செடிகளுக்கு மத்தியில் இருந்து ராச்சியம்மா ஒரு அலுமினியப் பாத்திரத்துடன் வந்து கொண்டிருந்தாள்.