விலைமகளின் கடிதம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7071
என்னைப் பற்றிய அந்த வர்ணனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் தனியாக உட்கார்ந்து சிரித்துக்கொண்டே அந்த வார்த்தைகளை நான்கைந்து முறை திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்தேன். இன்னொரு நாள் நடுத்தர வயதைக் கொண்டவரும், பார்வைக்கு கடவுள் பக்தி நிறைந்தவர் என்று தோன்றக் கூடிய உடலமைப்பைக் கொண்டவருமான ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனிதர்- அவர் ஒரு பண்டிதர் என்று தோன்றுகிறது- தன்னுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டு திரும்பிச் செல்லும்போது என்னை நோக்கி கூறினார்: ‘கஷ்டம்! நீ இப்படி கேவலமான நிலைக்குள் விழாமல் போயிருந்தால், எந்தளவிற்கு நல்ல ஒரு மாணிக்கக் கல்லாக இருந்திருப்பாய் தெரியுமா?' என்று. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு வெறியே வந்துவிட்டது. நான் அவரை வாயில் வந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் கூறி விரட்டியடித்தேன்.
இவையெல்லாம் ஒரு சகோதரனிடம் கூறக்கூடிய வார்த்தைகளாக இல்லாமலிருக்கலாம். ஆனால், பாலு அண்ணா... ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரிகளுக்கு தந்தை இல்லை. தாய் இல்லை... சகோதரர்கள் இல்லை... வயது வேறுபாடு இல்லை... ஜாதி இல்லை. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால்- அவள் ஒரு துறவி. அவளுடைய புடவை ஒரு காவித்துணி. நகை- ருத்ராட்ச மாலை. எல்லா உலக உறவுகளையும் துறந்துவிட்டு, எல்லாவற்றிலும் சமத்துவத்தைக் கண்டு, தன்னுடைய சரீரத்தையே எப்போதும் கேவலமாக நினைக்கவும் வெறுக்கவும் செய்யக்கூடிய ஒரு உண்மையான துறவியை வேறு எங்கு பார்க்கமுடியும்?
நான் நிறுத்திக் கொள்ளட்டுமா?
நேரம் ஐந்து மணி கடந்துவிட்டது. தலைவி என்னை குளிப்பதற்காக அழைக்கிறாள். குளித்து முடித்து, கண்மை பூசி, உதடுகளுக்கு சாயம் தேய்த்து, ஆடைகளும் அலங்காரங்களும் செய்து, சாளரத்திற்கு அருகிலிருக்கும் திண்ணையில் ஏறி உட்கார்ந்துகொண்டு, யாரென்று தெரியாத விருந்தினரை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு நேரமாகிவிட்டது.
காலையிலிருந்து இதுவரை ஒரே இடத்தில் அமர்ந்து நான் இந்தக் கடிதத்தை எழுதி முடித்திருக்கிறேன். பாலு அண்ணா! உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதி முடித்தவுடன், அடுத்து எதையும் அனுபவிக்க முடியாத அளவிற்கு ஒரு நிம்மதி எனக்குள் உண்டாகிவிட்டிருக்கிறது. ஆனால், அது எந்தவொரு வகையிலும் எனக்கு மாறுதலை அளித்துவிடவில்லை. ஏதாவதொரு விதத்தில் எனக்கு உதவுவதற்கோ, என்னை இந்த கேவலமான தொழிலிலிருந்து விடுதலை பெறச் செய்வதற்கோ உள்ள ஒரு வேண்டுகோளாக இந்தக் கடிதத்தை நீங்கள் கருதிக்கொள்ளக்கூடாது. அது இயலாத விஷயம். எனக்கு உதவுவதற்கோ, என்னைக் காப்பாற்றுவதற்கோ, நீங்கள் இந்த ஆழமான கடலுக்குள் இறங்கிவந்தால், நீங்கள் என்னுடன் சேர்ந்து வீழ்ச்சியைச் சந்திப்பீர்கள். அந்த வகையில்தான் நம்முடைய சமுதாய அமைப்பு இருக்கிறது. என் தொழில் எனக்கு தற்போதைக்குத் தேவையான அளவிற்கு பணத்தைத் தருகிறது. ஆனால், சிறிது காலம் கழித்து, என்னுடைய முகத்தோலில் சுருக்கங்கள் விழுந்து, சரீரம் நோயால் பாதிக்கப்பட்டு மெலிய ஆரம்பிக்கும்போது,
எனக்கு என் தலைவி நோட்டீஸ் தருவாள். அப்போது இந்த மாளிகையின் மாடியிலிருந்து, கீழே பொருட்கள் வைக்கப்படும் அறைக்கு நான் இடம்மாறிச் செல்ல வேண்டியதிருக்கும். சில நாட்களில் என்னுடைய மெலிந்து போன சரீரம் மேலும் மெலிய ஆரம்பிக்கும். பொருட்கள் போடப்பட்டிருக்கும் அறைக்குள்ளிருந்து தெருவை நோக்கி மீண்டுமொரு இட மாறுதல் உண்டாகும். சமுதாயப் புரட்சி சூழ்நிலைக்கு மாற்றங்கள் உண்டாகாமல் இருக்கும் பட்சம், கண்ட மனிதர்களின் காரித் துப்பலையும், அடி உதைகளையும் வாங்கிக்கொண்டு, ஒரு தகர டப்பாவுடன் மெதுவாக நடந்து போகும்போது, சிறிதும் எதிர்பாராமல் உங்களை நோக்கியும் என்னுடைய தகர டப்பா நீட்டப்படலாம். பாலு அண்ணா! ஒருவேளை... இனி... நாம் அன்று மீண்டும் சந்திக்கலாம்.
இப்படிக்கு
உங்களின் சகோதரி
ஜானகி.